தரவரிசையில் அண்ணா பல்கலைக்கழகத்தை பின்னுக்குத் தள்ளிய அழகப்பா பல்கலைக்கழகம்!Sponsoredஇந்தியாவில் உள்ள 60 உயர் கல்வி நிறுவனங்களுக்கு முழு தன்னாட்சி வழங்கி இருக்கிறது மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை. முழு தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் அண்ணா பல்கலைக்கழகத்தை பின்னுக்குத் தள்ளி அழகப்பா பல்கலைக்கழகம் தரவரிசையில் முதல் இடம்பிடித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. 


மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள முழு தன்னாட்சி அங்கீகாரம் பட்டியலில், மாநில அளவிலான பல்கலைக்கழகங்களில் அழகப்பா பல்கலைக்கழகம் முதல் தர வரிசைப்பட்டியலில் இடம்பிடித்து இருக்கிறது. அதேநேரத்தில், அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாவது தர வரிசைப்பட்டியலில் இடம்பிடித்து அதிர்ச்சியும் அளித்திருக்கிறது. 

Sponsored


முழு தன்னாட்சி அதிகாரம் பெற்றதில், ஐந்து மத்திய பல்கலைக்கழகங்கள், 21 மாநில பல்கலைக்கழகங்கள், 24 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், இரண்டு தனியார் பல்கலைக்கழகங்கள் என 52 உயர் கல்வி நிறுவனங்களும், எட்டு கல்லூரிகளும் முழு தன்னாட்சி அதிகாரத்தைப் பெற்றிருக்கின்றன. 

Sponsored


இந்தப் பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த அழகப்பா பல்கலைக்கழகம் முதல் தர வரிசைப்பட்டியல் இடம்பிடித்திருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகமும் சென்னை பல்கலைக்கழகம் இரண்டாவது தரவரிசைப்பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் வரிசையில் ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும், தஞ்சாவூரில் உள்ள சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (சாஸ்த்ரா) முதல் தரவரிசைப்பட்டியலிலும், வேலூரில் அமைந்துள்ள வி.ஐ.டி. கல்லூரி, கோவையில் அமைந்துள்ள அமிர்தா விஸ்வா வித்யாபீடம், சென்னையில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். எஜுகேஷனல் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் கல்வி நிறுவனம் இரண்டாவது தர வரிசைப்பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

இதுவரை, மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்கள், இதர உயர் கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழக மானியக்குழு அமைப்பின் (UGC) கீழ் அதிகாரத்தின் செயல்பட்டன. இவை, பல்கலைக்கழகத்திலும், கல்லூரிகளிலும் புதிய படிப்புகள் ஆரம்பிக்கவும், புதிய வளாகங்கள் தொடங்கவும், பேராசிரியர்களுக்குச் சம்பள உயர்வு போன்ற விஷயங்களுக்காகவும் பல்கலைக்கழக மானியக்குழுவின் அனுமதியைப் பெற வேண்டியது அவசியம். இனி, முழு தன்னாட்சி அதிகாரம் பெற்றிருப்பதால் பல்கலைக்கழக மானியக்குழுவின் அனுமதிக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. 

``உயர்ந்த தரத்தை பராமரிப்பதால் 62 கல்வி நிறுவனங்களுக்கு, முழு தன்னாட்சி அதிகாரம் வழங்கி இருக்கிறது பல்கலைக்கழக மானியக்குழு. முழு தன்னாட்சி பெற்றுள்ள கல்வி நிறுவனங்கள் இனி, புதியதாக பாடத்திட்டங்களை வடிவமைப்பது, புதிய படிப்புகளைத் தொடங்குவது, வளாகங்களைத் தொடங்கவது, ஆராய்ச்சி பூங்கா அமைப்பது போன்றவற்றை ஏற்படுத்திக்கொள்ளலாம். மேலும், வெளிநாட்டு பேராசிரியர்களைப் பணியில் அமர்த்திக் கொள்ளவும், வெளிநாட்டு மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளவும் முடியும். 

அத்துடன், இதர கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளவும், தொலைநிலை கல்வி படிப்புகள் ஆரம்பிக்கவும் இதற்காகப் பல்கலைக்கழக மானியக்குழுவின் அனுமதியைப் பெற வேண்டிய அவசியமில்லை. இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு முழு தன்னாட்சி அதிகாரம் வழங்கினாலும் பல்கலைக்கழக மானியக்குழுவின் வரைமுறைக்குள்ளே செயல்படும். 

தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (NAAC) ஆய்வு மதிப்பீட்டில் 3.26 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருக்கும் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழக மானியக்குழுவின் அனுமதி இல்லாமல் புதிய படிப்பை அல்லது துறையை உருவாக்கிக்கொள்ளலாம். இதற்காக அரசின் நிதி உதவிக்காகவும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை" என்று அறிவித்திருக்கிறார் மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். 

முழு தன்னாட்சி அதிகாரம் பெற்ற மத்திய பல்கலைக்கழகங்களில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகமும் (JNU), ஹைதராபாத் பல்கலைக்கழகமும் முதல் தரவரிசையிலும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (BHU), அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் (AMU), மற்றும் தெலுங்கானாவில் அமைந்துள்ள ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பல்கலைக்கழகம் இரண்டாவது தரவரிசையிலும் இடம்பிடித்துள்ளன. 

மாநில பல்கலைக்கழகங்களில் கோல்கத்தாவில் அமைந்துள்ள ஜாதாப்பூர் பல்கலைக்கழகம், காரைக்குடியில் அமைந்துள்ள அழகப்பா பல்கலைக்கழகம், தெலுங்கானாவில் அமைந்துள்ள நல்சர் சட்டப் பல்கலைக்கழகம், விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ஆந்திரா பல்கலைக்கழகம், திருப்பதியில் அமைந்துள்ள ஶ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், ஹைதராபாத்தில் அமைந்துள்ள உஸ்மானியா பல்கலைக்கழகம், ஜம்முவில் அமைந்துள்ள ஜம்மு பல்கலைக்கழகம் உள்பட 12 கல்வி நிறுவனங்கள் முதல் தர வரிசையிலும், மைசூர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், பஞ்சாப் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட 9 பல்கலைக்கழகங்கள் இரண்டாவது தரவரிசைப்பட்டியலில் இடம்பிடித்துள்ளன. 

நிகர்நிலை அளவில் மும்பையில் அமைந்துள்ள ஹோமி பாபா நேஷனல் இன்ஸ்டிட்யூட், திருப்பதியில் அமைந்துள்ள ராஷ்ட்ரிய சமஸ்கிருத வித்யாபீடம், சென்னையில் அமைந்துள்ள ராமச்சந்திர மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தஞ்சாவூரில் உள்ள சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (சாஸ்த்ரா), டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் முதல் தர வரிசைப்பட்டியலிலும், வேலூரில் அமைந்துள்ள வி.ஐ.டி., கர்நாடகாவில் உள்ள மணிபால் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் கல்வி நிறுவனம், கோவையில் அமைந்துள்ள அமிர்தா விஸ்வா வித்யாபீடம், சென்னையில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். எஜுகேஷனல் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் உள்பட 13 கல்வி நிறுவனங்கள் இரண்டாவது தர வரிசைப்பட்டியலில் இடம்பிடித்துள்ளன. தனியார் பல்கலைக்கழகங்களில் சோனாபூரில் உள்ள ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகம், குஜராத்தில் உள்ள பாண்டிட் டீன் தயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகமும் இரண்டாவது தர வரிசையில் இடம்பிடித்திருக்கின்றன. 

பல்கலைக்கழக மானியக்குழு, மாணவர்களுக்கான வசதிகள், ஆராய்ச்சிக்கான வாய்ப்புகள், பேராசிரியர்கள் தரம், மாணவர்கள் - ஆசிரியர்களின் எண்ணிக்கை விகிதம், மாணவர்களின் சேர்க்கை, நிதி பயன்பாடு, துறைகளின் எண்ணிக்கை, பொதுமக்களின் பயன்பாடு என பல்வேறு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு தரவரிசை மதிப்பை வழங்கி இருக்கிறது. இதில் அழகப்பா பல்கலைக்கழகம் மத்திய பல்கலைக்கழகங்களுக்கு இணையாகத் தரவரிசைப் புள்ளியில் ஐந்துக்கு 3.64 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. 3.50 புள்ளிக்கு மேல் பெற்ற பல்கலைகள் முதல் தர வரிசைப்பட்டியலிலும், 3.26-யில் இருந்து 3.50-க்கு குறைவாகப் பெற்ற உயர் கல்வி நிறுவனங்கள் இரண்டாம் தரவரிசைப்பட்டியலிலும் இடம்பிடித்திருக்கின்றன. அண்ணா பல்கலைக்கழகம் 3.46 புள்ளியும், சென்னை பல்கலைக்கழகம் 3.32 புள்ளி மதிப்பையும் பெற்றிருக்கின்றன.Trending Articles

Sponsored