12 குண்டுகள் துளைத்த மக்னா யானை... காசுபார்த்த தொண்டு நிறுவனம்! - ஒரு கும்கி உருவாகும் கதை - அத்தியாயம் 2Sponsoredயக்க ஊசியின் மூலம்  பிடிக்கப்பட்ட மக்னா கும்கிகள் உதவியுடன் முதுமலையிலுள்ள கரோலில் அடைக்கப்படுகிறது. இருபதுக்கும் மேலான குண்டுகள் யானையின் உடலைத் துளைத்திருந்தன; உடலெங்கும் காயங்கள். குண்டுபட்ட இடங்களில் சீழ் வடிகிறது. வலியும் வேதனையுமே மக்னாவை ஆக்ரோஷமாக மாற்றியிருக்கிறது. மேலும் கும்கி யானைகளின் தாக்குதல்களும், சங்கிலியால் கட்டி இழுத்து வந்ததாலும் மக்னாவின் உடலில் காயங்கள் அதிகமாயிருந்தது. அத்தனை காயங்களையும் குணப்படுத்தினால் மட்டுமே மக்னாவால் நடக்கவே முடியும். அவ்வளவு எளிதில் மக்னாவை குணப்படுத்திவிட முடியாது. ஆறு மாதங்களுக்குக் கட்டாய சிகிச்சை அளித்தாக வேண்டும். மக்னாவை குணப்படுத்தும் பொறுப்பை, வனத்துறை வன கால்நடை அலுவலர் அசோகன் வசம் ஒப்படைக்கிறது. கரோலில் மக்னா இருந்த முதல் 15 நாட்களும் மருத்துவர் அசோகனும் அவரது உதவியாளர்களும் மக்னாவின் பார்வையில் படும்படி இருக்கிறார்கள். அறிமுகம் இருந்தால் மட்டுமே எந்த யானையாக இருந்தாலும் தொட அனுமதிக்கும்; சிகிச்சைக்கும் ஒத்துழைக்கும்.

Sponsored


பதினைந்து நாட்களுக்குப் பிறகு மக்னாவிற்கு சிகிச்சை ஆரம்பிக்கிறது. சிகிச்சைக்கு மக்னா தனது முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது. சதையைத் துளைத்து உள்நுழைந்த ஒவ்வொரு குண்டும் மக்னாவின் உடலை நாசமாக்கியிருந்தது. உடலிலிருந்து ஒவ்வொரு குண்டுகளும் ஏர்கன் மூலமாகச் செலுத்தப்பட்டவை. யானையைச்  சுடுவதற்கு பால்ரஸ் குண்டுகளை பயன்படுத்தியிருந்தார்கள். காயங்களைக் குணப்படுத்தும் பொழுது அதன் உடலிலிருந்து எட்டிலிருந்து பத்து லிட்டர் அளவிற்குச் சீழ் வெளியேறியது. 12 குண்டுகள் வரை மக்னாவின் உடலிலிருந்து எடுக்கப்படுகிறது. குண்டு பாய்ந்த இடங்களெல்லாம் குழியாக இருக்கிறது. காயம்பட்ட இடத்திற்கு ஆன்டி பயாடிக் மருந்து, மற்றும் இன்ன பிற மருந்துகளும் செலுத்தப்படுகின்றன. மக்னாவிற்கு மாவூத்தாக சின்னியா என்பவர் நியமிக்கப்படுகிறார்.

Sponsored


யானைக்கு ஆரம்பகட்ட பயிற்சி கொடுக்கப்படுகிறது. யானையின் மருத்துவ செலவுகள் மட்டும் நாளொன்றுக்குப் பல ஆயிரங்களைத் தாண்டுகிறது. மக்னாவை குணப்படுத்த நாளொன்றுக்குக் கிலோ கணக்கில் மருந்து தேவைப்படுகிறது. மக்னாவின் மருத்துவ செலவுகள் வனத்துறையால் சமாளிக்க முடியாமல் போக  தொண்டு நிறுவனம் ஒன்று மக்னாவின் மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொள்ள முன் வருகிறது.  மருத்துவர் அசோகன் தொடர்ந்து சிகிச்சையைத் தொடர்கிறார். ஆறு மாதங்கள் சிகிச்சை தொடர்ந்தால் மட்டுமே மக்னா முழுமையாக குணமடையுமென்று மருத்துவ குழு வனத்துறைக்கு பரிந்துரைக்கிறது. ஒரு பக்கம் மக்னாவிற்கு  சிகிச்சை நடந்து கொண்டிருக்க மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொண்ட தொண்டு நிறுவனம் வனத்துறைக்கு தெரியாமல் வேறு ஒரு வகையில் தனது சதுரங்க வேட்டையைத்  தொடங்குகிறது. 

இதற்கிடையில் மக்னாவிற்கு 'மூர்த்தி' என பெயர்  வைக்கப்படுகிறது. மூர்த்தி யார் என்பதைத் தெரிந்துகொண்டால் மட்டுமே யானைகள் பற்றிய இத்தொடரில் முழுமையாகப் பயணிக்க முடியும். 1953-ம் வருடம். வனத்திற்குள் செல்ல  வாகனங்கள், பாதைகள் எதுவும் இல்லாத காலகட்டம். அடர்ந்த காடுகளுக்குள் நடந்து செல்வது என்பது கடினமான காரியம். அதுவும் அடர்வனத்திற்குள் சென்று இறந்த யானைகளுக்குப் பிரேத பரிசோதனை செய்து திரும்பி வருவதெல்லாம் கரணம் தப்பினால் மரணம் வகையில் வருகிற வேலை. 1953-56 ஆகிய மூன்று ஆண்டுகளில் மட்டும் 18 யானைகளுக்குப் பிரேத பரிசோதனை செய்திருக்கிறார். அதில் 12 யானைகள் தந்தத்திற்காக வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டவை. நினைத்துப் பார்க்க முடியாத அந்தப் பணியை இன்முகத்துடன் செய்தவர் அவர். இந்தியாவின் முதல் 'யானை டாக்டர்'. இந்தியாவின் முதல் யானை  பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா எனத் தென்னிந்திய காடுகளுக்குள் அலைந்து திரிந்தவர். கடைசியாக முதுமலையில் பணிபுரிந்தவர். யானைகளின் நூறாண்டு வரலாற்றை விரல் நுனியில் வைத்திருந்தவர். யானைகளின் உளவியலை அணு அணுவாய் ஆராய்ந்தவர். யானைக்கு எது தேவை என்பதைப் பார்த்ததும் கனிந்துவிடுகிறவர். அவர் வி. கிருஷ்ணமூர்த்தி. சுருக்கமாக மிஸ்டர் கே. அவரது பெயரையே மக்னாவிற்கு வைக்கிறார்கள். அப்போதிலிருந்து மக்னா மூர்த்தியாக மாறுகிறது! 
 
இந்நிலையில், யானையின் சிகிச்சையை தனக்குச் சாதகமாக பயன்படுத்த அந்த தொண்டு நிறுவனம் முடிவு செய்கிறது. அதற்கென தனி ப்ளான் ஒன்றை வடிவமைக்கிறது. அதன்படி கரோலில் மூர்த்திக்கு சிகிச்சையளிக்கும் காட்சிகளை யாருக்கும் தெரியாமல் தொண்டு நிறுவனம் புகைப்படங்களாவும், வீடியோக்களாவும் பதிவுசெய்து கொள்கிறது. மூர்த்தியின் மருத்துவ சிகிச்சைக்கு பின்னால் நடக்கிற அரசியல் பற்றி மருத்துவருக்கும் வனத்துறைக்கும் அப்பொழுது  தெரியாமல் இருக்கிறது. பதிவு செய்த மொத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் தொண்டு நிறுவனம் அதனுடைய இணையதளத்தில் பதிவேற்றி அதன் மூலம் யானையின் சிகிச்சைக்கு உலகமெங்கும்  உதவி கோருகிறது. மூர்த்தியின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் பார்ப்போரை பதற வைக்குமளவிற்கு இருக்கிறது. யானையின் நிலையறிந்த விலங்குநல ஆர்வலர்கள் தொண்டு நிறுவனத்திற்கு பணத்தை அள்ளிக் கொடுக்கின்றனர். அப்படிச் சேர்ந்த தொகை மட்டும் 70 லட்சங்கள். இந்தத் தகவல் வனத்துறைக்கு தெரிய வரும்போது ஒட்டு மொத்த முதுமலை உயிரியல் சரணாலயமும் அதிர்ந்து போகிறது.

தொண்டு நிறுவனத்தின் நோக்கம் தெரிந்த முதுமலை சரணாலய அதிகாரிகள் தொண்டு நிறுவன உதவியை நிராகரிக்கிறார்கள். தொடர்ந்து மூர்த்திக்கு  சிகிச்சையளிக்கும் பொறுப்பை சரணாலயம் ஏற்றுக்கொள்கிறது. ஆறு மாத சிகிச்சைக்கு பின் யானையின் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாகத் தேறி வருகிறது. ஒரு கட்டத்தில் யானையின் எடையறிய முதுமலைக்குப் பக்கத்திலிருக்கிற தொரப்பள்ளியிலிருக்கும் எடை பார்க்கும் மையத்திற்கு நடக்க வைத்து அழைத்துச் செல்கிறார்கள். மாவூத்தின் குச்சியைத் தும்பிக்கையில் பிடித்துக் கொள்கிற மூர்த்தி சமத்தாக எடை மேடைக்குச் செல்கிறது.  பிடிக்கும் பொழுது 6 டன்னாக  இருந்த மூர்த்தி மருத்துவம், டயட் எனச் சிகிச்சைக்கு பிறகு  4.5 டன் இருக்கிறது. மீண்டும் முகாமிற்குத் திரும்பும் பொழுது மூர்த்தியைக் காட்டிற்குள் சிறிது தூரம் அழைத்துச் செல்லலாம் என மருத்துவர் அசோகன் முடிவு செய்கிறார். மருத்துவரும் உதவியாளரும் முன் செல்ல மாவூத் மூர்த்தியை அழைத்துக் கொண்டு பின்செல்கிறார். காட்டிற்குள் நுழைந்த பத்தாவது நிமிடம் மூர்த்தி குச்சியை வீசிவிட்டு காட்டிற்குள் ஒட ஆரம்பிக்கிறது.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத மாவூத் "டாக்டர் ஒரமா போங்க யானை ஒடி வருகிறது"  எனக் கத்துகிறார். மூர்த்தி ஓடி வருவதைப் பார்க்கிற டாக்டரும் உதவியாளரும் பயந்து ஒரு மரத்திற்குப் பின்னால் மறைந்து கொள்கிறார்கள். ஒடுகிற மூர்த்தியை ஒட்டு மொத்த குழுவும் பின் தொடர்கிறது. ஒடிப்போகிற மூர்த்தி அங்கிருக்கிற ஆற்றில் சிறு குழந்தையைப் போல விழுந்து புரள்கிறது. ஆறு மாதங்களுக்கு மேல் கரோலிலிருந்த யானை காட்டையும், ஆற்றையும்   பார்த்ததும் குதூகலிக்க ஆரம்பித்தது. மருத்துவர் அசோகன் நெகிழ்ந்து போகிறார். ஒரு மணி நேரத்திற்கு மேல் மூர்த்தியைக் குளிக்க வைத்து மீண்டும் முகாமிற்கு அழைத்து வருகிறார்கள். மருத்துவர் மற்றும் சின்னியா  மாவூத்தையும்  மூர்த்தி முழுதாக நம்ப ஆரம்பிக்கிறது.  
 
முதுமலை வன அலுவலராக இருந்த உதயன் பணி மாறுதல் பெறுகிறார். பிறகு வன அலுவலராக வருகிறவர்களுக்கும் வன ஊழியர்களுக்கும் நடக்கிற ஈகோ பிரச்சனையில் மூர்த்தி பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கிறது. நடக்கிற பிரச்சனையில் மருத்துவர் அசோகனை வனத்துறை சிவகங்கைக்கு இட மாற்றம் செய்கிறது அரசு . 2002-ம் ஆண்டுக்கு பிறகு முதுமலைக்கு கலைவாணன் என்கிற மருத்துவர் பணியமர்த்தப்படுகிறார். ஆண்டுகள் பல கடந்தது. மூர்த்தியின் மாவூத் சின்னியா உடல் நலக்குறைவால் ஓய்வு பெறுகிறார். அவருக்கு பிறகு பழனிசாமி என்பவர் மாவூத்தாக நியமிக்கப்படுகிறார். ஆனாலும் மூர்த்தியை முழுதாக பழக்கமுடியவில்லை.  பல மாவூத்கள் மூர்த்திக்கு பயிற்சியளிக்கிறார்கள். ஆனாலும் மூர்த்திக்கு முழு பயிற்சியும் கொடுக்க முடியவில்லை. மூர்த்தி யாருக்கும் முழுமையாகக் கட்டுப்படவுமில்லை. அப்போது முதுமலையில் சிறந்த மாவூத்தாக இருந்தவர் கிருமாறன். எந்த யானையாக இருந்தாலும் கிருமாறன் அவற்றைப் பழக்கி கும்கியாக்கி விடுவார் என்கிற நம்பிக்கை முதுமலை முழுமைக்கும் இருக்கிறது.காட்டு யானையை பிடிப்பதாக இருந்தாலும் முதல் சாய்ஸ் கிருமாறன்தான். தமிழ்நாடு, கேரளா என வனத்துறை அதிகாரிகள் கூட  கிருமாறனுக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். முதுமலையில் டாக்டர்களாக இருந்தவர்கள் கூட கிருமாறன் இருந்தால் எந்தக் காட்டு யானையையும் பிடித்து விடலாமென சான்றிதழ் கொடுத்திருந்தார்கள். மூர்த்தியை கிருமாறன் கட்டுப்பாட்டில் விடுவதென முடிவு செய்கிறார்கள். அந்த முடிவு நினைத்துப் பார்க்க முடியாத சம்பவம் ஒன்றிற்கு வழி வகுக்கிறது. இங்கிருந்துதான் சுப்பிரமணிக்கு பிரச்னையும் ஆரம்பமானது.

(சுப்பிரமணியை பற்றித் தெரிந்து கொள்ள முதல் அத்தியாயத்தைப் படிக்கவும்)

(தொடரும்)
 
 Trending Articles

Sponsored