அதிகாரிகளிடம் பிடிபடுகிற கடத்தல் தந்தங்களும் எறும்புத்தின்னிகளும் என்னவாகின்றன? - இறுதி அத்தியாயம் #AnimalTrafficking



யானைத் தந்தம், காண்டாமிருக கொம்பு, புலித்தோல்,  எறும்புத்தின்னி, குரங்கு, பாம்பு, தேவாங்கு, கரடி என ஒவ்வொரு உயிரினத்தையும் ஒரு காரணத்திற்காக கடத்துகிறார்கள். பணத்தின் பின்னணியில் சட்டவிரோதமாகச் செய்கிற முக்கியசெயல்களில் ஒன்று விலங்கு கடத்தல். விலங்குகள் கடத்தலில் போலீசாரிடம் சிக்காமல் இருக்கிற விலங்குகளும், உறுப்புகளும் என்னவாகிறது என்பது குறித்து அதிகம் பேசியிருக்கிறோம். ஆனால் போலீசார் பறிமுதல் செய்கிற விலங்குகள் என்னவாகின்றன என்பது குறித்து இந்த வார அத்தியாயம் பேசுகிறது. 

பொதுவாகக் கைப்பற்றப்படுகிற விலங்குகளின் உடல் உறுப்புகள் எல்லாம் தீயிட்டு கொளுத்திவிடுகிறார்கள். யானைத் தந்தம், மற்றும் காண்டாமிருக கொம்புகள் உலகளவில் டிமாண்டான பொருட்களாக இருப்பதால் அரசு அவற்றைச் சேகரித்து வைத்து மொத்தமாக எரித்து விடுகிறார்கள். 2017, ஜூலை மாதம் 7-ம் தேதி மலேசியாவிலிருந்து ஹாங்காங் துறைமுகத்திற்கு வந்த கப்பலில் ஒரு கன்டெய்னரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் சுமார் 7.2 டன் எடையுள்ள யானைத் தந்தங்கள் அதில் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இந்த யானைத் தந்தங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு சுமார் 60 கோடி ரூபாயாகும். உலகிலேயே ஒரே இடத்தில் இவ்வளவு தந்தங்கள் கைப்பற்றப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை. பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தந்தங்களும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. 

Sponsored


Sponsored


முதன்முதலில் 1989-ம் ஆண்டு அப்போதைய கென்யா அதிபர் டேனியல் அராப் பொது மக்கள் முன்னிலையில் தந்தங்களுக்கு தீ வைத்தார். 2010-ம் ஆண்டிலிருந்து கென்யாவிற்கு ‌கடத்தி வரப்பட்ட 5 டன் எடையுடைய தந்தங்களை கென்ய அரசு பறிமுதல் செய்தது. பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்த மொத்த தந்தங்களையும் துப்பாக்கியேந்திய போலீசார்  பாதுகாத்து வந்தனர். 2011, ஜூலை 21-ம் தேதி சுமார் 5 டன் எடையுடைய அத்தனை  தந்தங்களையும்  ஒரே இடத்தில் வைத்து, கென்யா அதிபர் மிவாய் கிபாகி தீ வைத்துக் கொளுத்தினார்.

Sponsored


அதற்குப் பிறகு 2016, ஏப்ரல் 30 தேதி தற்போதைய கென்யா அதிபர் உஹுரு கென்யாட்டா 105 டன் யானைத் தந்தங்களையும் ஒரு டன் காண்டாமிருக கொம்புகளையும் தீயிட்டு கொளுத்தினார். சுமார் பதினோரு மலை குவியலாக குவிக்கப்பட்ட 105 டன் தந்தங்களுக்கு பின்னால் 8000 யானைகள் கொல்லப்பட்டிருப்பதை அறிந்த உலக நாடுகள் எல்லாம் மிகப் பெரிய அதிர்வை உணர்ந்தன. அனைத்து விலங்குகள் கடத்தலுக்கு பின்னாலும் இருக்கிற சீன அரசு  2017-ம் ஆண்டு  டிசம்பர் மாதம் யானைத் தந்தத்திற்கு தடை விதித்தது. நேபாள அரசு விலங்கு கடத்தலில் பறிமுதல் செய்த புலி தோல், தந்தம், காண்டாமிருக கொம்பு  பொருட்களையெல்லாம் கடந்த இருபது ஆண்டுகளாக சேமித்து வைத்திருந்தது. அவற்றையெல்லாம் கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் 24 தேதி மொத்தமாக தீ வைத்து எரித்தது. 

உயிரோடு பிடிபடுகிற எல்லா விலங்குகளையும் அந்தந்த நாட்டுச் சுங்க அதிகாரிகள், வனத்துறை மற்றும் தேசிய பூங்காக்களின் வசம் ஒப்படைத்துவிடுகிறார்கள். தேசிய பூங்காக்களில் விடப்படும் பாதி விலங்குகள் தட்ப வெப்ப நிலை, காலநிலை மாறுதல் ஆகியவற்றால் சமாளிக்க முடியாமல் இறந்து போய் விடுகின்றன. விலங்குகளை உயிரோடு கடத்துவதுதான் முக்கிய குறிக்கோள். ஏனெனில் பல விலங்குகள் வீடுகளில் வளர்ப்பதற்காகக் கடத்தப்படுபவை. குருவிகளின் முகத்தைத் துணியால் முடியும்,  தேவாங்கு மற்றும் குரங்குகளின் பற்களைப் பிடுங்கியும் கடத்துகிறார்கள். பெரும்பாலும் அட்டைப்பெட்டிகளில்தான் கடத்துகிறார்கள். கடத்தலின் பொழுது காயம்படுகிற விலங்குகளில் சில பயணத்தின் போதே இறந்துவிடுகின்றன.  அவற்றை உணவகங்களுக்கு விற்பனை செய்து அதிலும் காசு பார்த்து விடுகிறார்கள். 

பறிமுதல் செய்த விலங்குகளை வைத்து எப்படியெல்லாம் காசு பார்க்கலாம் என நினைக்கிற நோய் எல்லா நாடுகளிலுமே இருக்கிறது. 2014-ம் ஆண்டு வியட்நாமில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் உயிரோடு இருந்த 42 எறும்புத் தின்னிகளை உயிரோடு கைப்பற்றுகிறார்கள். அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார்  காட்டுக்குள் விட முடிவெடுத்து வனத்துறை அதிகாரி ஒருவரின் வசம் ஒப்படைக்கிறார்கள். எறும்புத்தின்னியின் சர்வதேச விலை எவ்வளவு என்பது வனத்துறை அதிகாரிக்கு நன்கு தெரிந்திருக்கிறது. மொத்த எறும்புத்தின்னிகளையும்  வாங்கிய வனத்துறை அதிகாரி அவற்றைப் பக்கத்திலிருந்த உணவகத்தில் 11,000 அமெரிக்க டாலர்களுக்கு விற்றுவிடுகிறார். இன்றைய தேதியில் கறுப்பு சந்தையில் எறும்புத்தின்னி ஒன்றிற்கு நிர்ணயித்திருக்கிற விலை 15,000 அமெரிக்க டாலர்கள். 

மருத்துவத்தைக் காரணமாக வைத்தே உலகின் பல விலங்குகளும் வேட்டையாடப்படுகின்றன.ஒரு நோய் வருவதற்கு  அடிப்படை காரணம் என்னவென்பதை  ஆராய்ந்து அதற்குப் பதில் தேடுவதை விடுத்து, அந்த நோய்க்குக் குறிப்பிட்ட விலங்கின் கல்லீரல் தீர்வு என நினைப்பதெல்லாம் எவ்வளவு பெரிய சுயநலம். காடுகளில் இருக்கிற விலங்குகளை வீட்டில் வளர்க்கிறேன் என்று நினைப்பதே குரூர புத்தி என்கிறார்கள் விலங்கு நல  மருத்துவர்கள். செல்லப் பிராணிகளாக இருக்கிற நாய், பூனை, ஆடு வளர்த்த சமூகம், தேவாங்கு, குரங்கு, ஆமை வளர்க்கிறேன்  என மாறிப் போய் சிந்திப்பதே இயற்கைக்கு எதிரான மனநிலை என்கிறார்கள். 

காசு பணம் போதை புகழ் என நிலையில்லாத ஒன்றுக்காக  மனிதன் ஓடி ஓடி வேட்டையாடிய மிருகங்களின் இன்றைய நிலை பற்றி என்றேனும் யோசித்திருக்கிறீர்களா? கடந்த ஜனவரி மாதம் பூமா எனும் சிறுத்தை  இனம் முற்றிலும்  அழிந்துவிட்டதாக உறுதி செய்திருக்கிறார்கள்.  உலகின் கடைசி வெள்ளை ஆண்  காண்டாமிருகம் மூன்று நாட்களுக்கு முன்பு  இறந்துபோயிருக்கிறது. இரண்டு இனங்களும் முற்றிலும் அழிந்து போனதிற்கு பின்னால் இருக்கிற  காரணங்களுள் ஒன்று கடத்தல். எப்போதும் எழுப்புகிற கேள்வியையே இப்போதும் எழுப்ப வேண்டியிருக்கிறது.

“எல்லா விலங்குகளையும் ஏதோ ஒரு காரணத்திற்காக அழித்துவிட்டு, மனிதன்  யாரோடு இணைந்து  வாழப் போகிறான்?”  

முந்தைய அத்தியாயங்களுக்கு...

1.பாம்பு  2.எறும்புத்தின்னி  3.காண்டாமிருகம் 4.ஆமை  5.புலி  6.தந்தம்  7.யானை  8.பறவை  9.கடல் அட்டை  10.பல்லி  11.தவளை  12.சிலந்தி 13.கரடி  14.குரங்கு



Trending Articles

Sponsored