”200-க்கு 155 சரியான பதில்கள்..!” - க்ரூப் 2A தேர்வில் கலக்கிய திருநங்கை ஸ்வப்னாSponsored``எங்களை `அதிர்ஷ்டத்தின் தேவதை'னு சொல்வாங்க. ஆனா, எங்க வாழ்க்கை அதிர்ஷ்டம் இல்லாமதான் இருக்கு" மென்மையான புன்னகையுடன் சொல்கிறார் ஸ்வப்னா. முதன்முறையாக பதிவுத் துறையில் உதவியாளராகப் பொறுப்பேற்கவிருக்கும் திருநங்கை என்கிற பெருமைக்குரியவரான ஸ்வப்னா, குரூப்-2A (non-interview) தேர்வில் 200-க்கு 155 கேள்விகளுக்கு சரியான பதில் அளித்ததன் மூலம் அரசுத்

துறையில் அதிகாரியாக தடம் பதிக்கிறார்.

குரூப் தேர்வில் வெற்றி பெறுவது அவ்வளவு பெரிய சாதனையா என்றால், ஸ்வப்னா போன்ற திருநங்கைகள் குரூப் தேர்வில் வெற்றிபெறுவது மிகப்பெரிய சாதனைதான். இரவு-பகல் பாராமல் படித்து, சகநண்பர்கள் வேலைக்குச் சென்றுகொண்டிருக்கும்போது புத்தகமும் கையுமாக பல வருடங்களாகவே கிடந்து, தேர்வுக்கான அழைப்பு வரும் வரை காத்திருந்து, தேர்வு எழுதி, ரிசல்ட்டுக்காகக் காத்திருந்து பிறகு நேர்முக அழைப்புக்காகக் காத்திருந்து, அதில் போஸ்ட்டிங் கிடைக்கும்பட்சத்தில்தான்   வேலை கிடைப்பது உறுதியாகும். இதற்கே சில வருடங்கள் கடந்துவிடும். இவையெல்லாம், தேர்வில் வெற்றி பெற்றதற்குப் பிறகான சம்பவங்கள். ஒருவேளை தேர்வில் தோல்வியடைந்துவிட்டால், பிறகு ஆறு மாதங்களோ, எட்டு மாதங்களோ தேர்வுக்கான அழைப்பு வரும் வரை TNPSC  வெப்சைட்டைப் பார்த்துக்கொண்டிருப்பது வலி தரும் வேதனையான அனுபவங்கள்.

போட்டித்தேர்வுகளில், தற்போதைய சூழலில் `கடுமையான' போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு தேர்வையும் லட்சக்கணக்கானோர் எழுதுகிறார்கள். அப்படி பல லட்சக்கணக்கான போட்டியாளர்களை வென்றுள்ளார் ஸ்வப்னா. இதுவரை இரண்டு V.A.O தேர்வுகள், இரண்டு குரூப்-4 தேர்வுகள், நீதிமன்றத்  தேர்வு ஒன்று, குரூப்-2A தேர்வுகள் இரண்டு ஆகியவற்றில் வெற்றி பெற்றுள்ளார்!

Sponsored


மதுரையில் உள்ள ஆண்டாள்புரத்தில் வசித்துவரும் ஸ்வப்னா, நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் திருநங்கை என்றதும் வீட்டைவிட்டுத் துரத்தாமல் `படிச்சு பெரிய ஆளா வரணும்' என அவரை ஊக்கப்படுத்தி, போட்டித்தேர்வுகளுக்கு அனுப்பியுள்ளனர் ஸ்வப்னாவின் பெற்றோர். 

Sponsored


மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை  தமிழ் இலக்கியம் படித்த ஸ்வப்னா, தற்போது தொலைதூரக் கல்வி மூலம்  முதுகலை தமிழ் இலக்கியம் பயின்றுவருகிறார். முதன்முதலில் 2013-ம் ஆண்டு போட்டித்தேர்வுகளில் பங்கேற்க விண்ணப்பித்தபோது திருநங்கைகள், பெண்கள் பிரிவில் எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, அவரும் மற்ற திருநங்கைகள் பலரும் சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தியுள்ளனர். வழக்குரைஞர் சஞ்சீவ்குமார் மற்றும் தற்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள பவானி சுப்பராயன் போன்றோர் உறுதுணையாக இருந்துள்ளனர். அதன்பிறகு நீதிமன்றத் தீர்ப்பும் சாதகமாக வர, தேர்வு எழுதத் தொடங்கியுள்ளார் ஸ்வப்னா.

தேர்வுக்குப் படித்ததைப் பற்றி அவர் கூறியதாவது, ``மதுரை ஊமச்சிக்குளத்துல இருக்கும் சமத்துவ இளைஞர் நற்பணி இயக்கம் நடத்திய போட்டித்தேர்வுக்கான இலவசப் பயிற்சி மையத்துலதான் படிச்சேன். வாரவாரம் சனி, ஞாயிறுக்கிழமை அந்தப் பயிற்சி மையத்துல தேர்வுகள் நடக்கும். மற்ற  நாள்ல மதுரை மாநகராட்சிப் பூங்காவுல நண்பர்களோடு சேர்ந்து படிப்பேன். மதுரையில அரசுத் தேர்வுக்குப் படிக்கும் பலருக்கும் அந்தப் பூங்காதான் தாய்வீடு மாதிரி. கஷ்டம் இல்லாமல்லாம் படிச்சேன்னு சொல்ல முடியாது. நிறைய கஷ்டங்களைத் தாண்டி வந்துட்டேன். படிச்சு பெரிய ஆளா வரணும்னு நினைச்சப்ப, உதவி செஞ்சவங்க ரொம்ப கம்மி. நான் படிச்ச அந்த மையத்துல க்ளாஸ் எடுக்கிற நிறைய பேர், பரீட்சை எழுதி க்ளியர் பண்ணவங்கதான். நானும் போஸ்ட்டிங் வர்ற வரைக்கும் அங்க `அரசியலமைப்பு மற்றும் பொருளாதாரம்' பாடம் நடத்திக்கிட்டிருக்கேன்.

வேலைக்குப் போனப்புறம் பாலினப் பாகுபாடு பார்க்காம எல்லாருக்கும் உதவணும்கிறதுதான் என் ஆசை. வேலை கிடச்சிருச்சுனு இதோட நிக்காம, யூ.பி.எஸ்.சி தேர்வுகள் எழுதி அதுலயும் வெற்றி பெறணும்கிறதுதான் என் கனவு. திருநங்கைகளுக்கு மட்டுமில்ல, புறக்கணிக்கப்படுற யாரா இருந்தாலும் அவங்களுக்கு உங்களால முடிஞ்ச உதவிய செய்ங்க"   என்கிறார் ஸ்வப்னா.

``UPSC எக்ஸாம் எழுதணும். 2012-லயிருந்து அதுக்காக முயல்றேன். ஆனா, அதுக்கு அப்ளை பண்ணக்கூட எங்களுக்கு அனுமதியில்லை. ஆர்.டி.ஐ போட்டுப் பார்த்தும், `சென்ட்ரல் கவர்ன்மென்ட்ட கேளுங்க'னு பதில் வருது. அப்ளை பண்ணவே அனுமதி இல்லாதப்போ, எப்படி எக்ஸாம் எழுத முடியும்? கல்லூரிகள்ல படிக்க அனுமதி குடுக்குறாங்க. வேலைக்கு என்ன பண்றது? எனக்கு பெருசா சலுகை கொடுக்கச் சொல்லி கேட்கலை. எக்ஸாமுக்கு அப்ளை பண்றதுக்காவது வழி பண்ணுங்கனுதான் கேக்கிறேன். பல போராட்டங்களுக்கு அப்புறம் அப்ளை பண்ணி, படிச்சு எக்ஸாம்ல பாஸாகி  வேலைக்குப் போறதுக்குள்ள எவ்வளவு சிரமம் பாருங்க!" என்று கூறும் ஸ்வப்னாவுக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியவில்லை. 

ஸ்வப்னா பெற்றுள்ள வெற்றி, மூன்றாம் பாலினத்தினருக்கு மட்டுமின்றி அனைவருக்குமே பெரும் நம்பிக்கை அளிக்கக்கூடியது. அவரது நம்பிக்கைப் பயணம் தொடர வாழ்த்துவோம்!Trending Articles

Sponsored