மரியாதை என்பது ஒருவழிப் பாதையல்ல! - பாடம் சொல்லும் கதை #MotivationStorySponsored`அறிவு உங்களுக்கு அதிகாரத்தை வழங்கலாம்; குணம்தான் மரியாதையைப் பெற்றுத்தரும்’ - மறைந்த நடிகர் புரூஸ் லீ சொன்ன வைர வாக்கியம் இது. இயல்பாகவே நல்ல குணமுள்ள மனிதர்களுக்கு அவர்களுக்கான மரியாதை தானாகவே கிடைத்துவிடும். இது ஒருபுறமிருக்கட்டும். மரியாதை என்பது ஒருவழிப் பாதையல்ல... இருவழிப்பாதை. அதாவது கொடுத்து, பெறுவது. கேட்டுப் பெறுவதல்ல. இது புரிந்துவிட்டால் பிரச்னையில்லை. உறவுகள் பலமாக இருப்பதற்கான அடிப்படையே பரஸ்பர நம்பிக்கையும் மரியாதையும்தான். ஒருவருக்கு மற்றொருவர் மரியாதை கொடுக்கத் தவறுவதுகூட விரிசலுக்குக் காரணமாகலாம். இது கணவன் - மனைவி உறவுக்குக்கூடப் பொருந்தும். `முதலில் உன்னை மதிக்கக் கற்றுக்கொள். அப்போதுதான் மற்றவர்களும் உன்னை மதிப்பார்கள்’ என்பது கன்ஃப்யூஷியஸின் பொன்மொழி. தன்னை உணர்ந்தவர் வறட்டு கௌரவம் பார்க்க மாட்டார்; யாரிடமும் தனக்கான மரியாதையை கேட்டுப் பெற மாட்டார். இந்த வாழ்வியல் யதார்த்தத்தைச் சுட்டிக்காட்டும் கதை ஒன்று உண்டு. 

ஃபீல்டு மார்ஷல் சாம் மானக்‌ஷா (Sam Manekshaw) காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் சம்பவம் இது. இதை கட்டுக்கதை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இந்தக் கதை உணர்த்தும் செய்தி அபாரமானது. அவர் ஓர் இளம் ராணுவ அதிகாரி. அண்மையில்தான் லெப்டினன்ட்டாக (Lieutenant) பதவி உயர்வு பெற்று, அந்தப் படை முகாமுக்கு வந்திருந்தார். இளம் வயதிலேயே தனக்கு இப்படி ஒரு பதவி கிடைத்ததில் அவருக்குக் கொஞ்சம் பெருமிதமும் இருந்தது. ராணுவத்தில் ஒரு நடைமுறை உண்டு. தனக்கு மேலிருக்கும் அதிகாரி வந்தால், வீரர்கள் அவருக்கு சல்யூட் அடிக்க வேண்டும். இது சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியின் பதவிக்குக் கொடுக்கப்படும் மரியாதை.   

Sponsored


ஒருநாள் மாலை நேரம். அந்த இளம் ராணுவ அதிகாரி வழக்கம்போல ரவுண்ட்ஸுக்குப் போனார். படை முகாமில் எல்லாப் பணிகளும் முறையாக நடக்கிறதா என்பதைக் கண்காணிக்கும் வேலை அது. மெதுவாக நடந்தார். ஓரிடத்தில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர் (Rifleman) ஒருவர், சீருடையில் பணியிலிருந்தார். நின்றுகொண்டிருந்த அவர், இளம் ராணுவ அதிகாரி வருவதை கவனிக்கவில்லை. அதனால் சல்யூட் அடிக்காமல் விட்டுவிட்டார். 

Sponsored


அவரைக் கடந்து சென்ற லெப்டினன்ட்டுக்குக் கோபம் வந்துவிட்டது. அந்த ராணுவ வீரரை அருகே அழைத்தார். ``நான் வர்றேன்னு தெரிஞ்சும் ஏன் எனக்கு சல்யூட் வைக்கலை?’’ என்று கேட்டார். 

அந்த ராணுவ வீரர் அப்பாவித்தனமாக உண்மையைச் சொல்லிவிட்டார். ``ஆபிஸர்... உண்மையிலேயே நீங்க வந்ததை நான் கவனிக்கலை. மன்னிச்சுடுங்க...’’ 

இளம் அதிகாரிக்கு இந்த பதில் மேலும் கோபத்தைத் தூண்டியது. ``வேணும்னே சல்யூட் அடிக்காம இருந்துட்டு பொய் வேற சொல்றியா?’’ 

``இல்லை...’’

``குறுக்கே பேசாதே... உனக்கெல்லாம் பனிஷ்மென்ட் குடுத்தாதான் புத்தி வரும்...’’ என்றவர் ஒருகணம் யோசித்தார்... ``ம்... அதான் சரி... 1,000 தடவை சல்யூட் அடி!’’ என்றார். 

ராணுவ வீரர், சல்யூட் அடிக்க ஆரம்பித்தார். `ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து...’

அப்போது யதேச்சையாக அந்த வழியாக வந்தார் தளபதி மானக்‌ஷா. ராணுவ வீரர் சல்யூட் அடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தார். லெப்டினன்ட் மானக்‌ஷாவின் அருகே ஓடி வந்தார். 

``என்ன நடக்குது இங்கே?’’ 

லெப்டினன்ட் தனக்கு மரியாதை தராத வீரருக்கு தண்டனை கொடுத்துக்கொண்டிருப்பதைச் சொன்னார். 

``ரொம்ப சரி. லெப்டினன்ட்... ஒரு சோல்ஜர் உனக்கு சல்யூட்வெச்சா நீ என்ன செய்யணும்?’’ 

இளம் அதிகாரி வெளிறிய முகத்தோடு சொன்னார்... `பதிலுக்கு சல்யூட்வெக்கணும்.’’ 

``அப்புறமென்ன... ஆகட்டும். நீயும் ஆயிரம் சல்யூட் அடி...’’ 

மானக்‌ஷா போய்விட்டார். அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு அந்த முகாமிலிருந்தவர்கள் ஒரு ராணுவ வீரரும் லெப்டினன்ட்டும் மாறி மாறி சல்யூட் அடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்! 

*** Trending Articles

Sponsored