``சூழலியல்தான் நிரந்தரப் பொருளாதாரம்!" - இந்திய அரசுக்குப் பாடம் சொன்ன பெண்கள் #ChipkoMovementSponsoredன்றைக்கு கூகுள் செய்த எல்லாரும் அந்த டூடுலை பார்த்திருப்பீர்கள். சூழலியலைக் காக்க தங்கள் உயிரையும் விடத்துணிந்த வீரமங்கைகளின் போராட்டம்தான் சிப்கோ போராட்டம். அதனை இன்று நினைவுகூரும் வகையில்தான் அந்த டூடுலை வெளியிட்டுள்ளது கூகுள். 

1974-ம் ஆண்டு மார்ச் 26-ம் தேதி உத்தரகண்ட் மாநிலத்தின் (அன்றைக்கு உத்தரப்பிரதேசம்) சமோலி மாவட்டத்தில் உள்ள ரேனி கிராமத்தில் மரங்களை வெட்ட வந்த கான்ட்ராக்டர்களிடமிருந்து மரங்களைக் கட்டிப்பிடித்து தங்கள் உயிரைப் பணயம் வைத்து அப்பகுதி மரங்களைக் காப்பாற்றினர் அக்கிராமத்துப் பெண்கள். இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புஉணர்வையும் மரங்களின் முக்கியத்துவத்தையும் ஏற்படுத்தியது. அதற்கு முன்பு வரை பல்வேறு களப்பணிகளில் ஈடுபட்டு வந்த சிப்கோ இயக்கத்தின் முதல் போராட்டம் இது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போராட்டம் நிகழ்ந்து இன்றோடு 45 ஆண்டுகள் கடந்துவிட்டன. 

Sponsored


இந்தியா சுதந்திரம் பெற்று 25 ஆண்டுகளைக் கடந்திருந்த காலம். தொழில் வளர்ச்சியில் அசுர வேகத்தில் முன்னேறுவதை முனைப்பாய்க் கொண்டு தொழிற்புரட்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் சுற்றுச்சூழல் குறித்த பார்வையைப் பல்வேறு சிறு இயக்கங்கள் முன்வைத்தன. அவற்றில் ஒன்றுதான் சிப்கோ இயக்கம். இமயமலைப்பகுதியில் இருக்கும் காடுகளின் மரங்களை வெட்டுவதைத் தடுக்கவும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புஉணர்வை மக்களிடையே உண்டாக்கவும் காந்தியவாதியான சன்டி பிரசாத் பட் என்பவர் சிப்கோ இயக்கத்தை ஆரம்பித்து இமயமலைப்பகுதியின் காடுகளையொட்டிய கிராமங்களில் களப்பணியினை மேற்கொண்டார். சிப்கோ இயக்கத்தின் மற்றொரு முன்னோடியான சுந்தர்லால் பகுகுணா அப்பகுதி கிராமத்து பெண்களிடம் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்த ஆரம்பித்தார். 

Sponsored


1970 ஜூலை 20-ம் தேதி சமோலி மாவட்டம் அலக்நந்தா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குப் பல்வேறு கிராமங்களைக் காவு வாங்கியது. மரங்களை வெட்டுவதனால் ஏற்பட்ட மண் அரிப்பே வெள்ளத்திற்குக் காரணம் என விழிப்படைந்தனர் கிராமத்து மக்கள். மக்களின் முதல் போராட்டம்தான் ரேனி கிராமத்தில் நடந்த போராட்டம். வழக்கம்போல மரங்களை வெட்ட வந்த கான்ட்ராக்டர்களை அன்று திக்குமுக்காடச்செய்தனர் பெண்கள். மரங்களை அணைத்தபடி வெட்டவிடாமல் தடுத்த அந்தப் பெண்களை கான்ட்ராக்டர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. கான்ட்ராக்டர்கள் எவ்வளவு முயன்றும் ஒரு மரத்தைக்கூட வெட்ட முயவில்லை. மிரட்டிக்கூடப் பார்த்தனர். உயிருக்கு அஞ்சாத வீரமங்கைகள் மரங்களின் அணைப்பை விடவில்லை. கடைசியில் ஏமாற்றத்தோடு கான்ட்ராக்டர்கள் திரும்பினர்.

உயிரைப் பணயம் வைக்கும் இத்தகைய போராட்டத்திற்கு அம்ரிதா தேவி என்ற பெண்மணியின் போராட்டமே உந்துசக்தியாக இருந்திருக்கிறது. கிபி 1730-ல் ராஜஸ்தானில் ஜோத்பூர் மன்னன் அஜய்சிங் அரண்மை கட்டுவதற்காக மரங்களை வெட்ட  உத்தரவிட்டான். அப்போது 84 கிராமங்களைச் சேர்ந்த பிஷ்னோய் இனமக்கள் அம்ரிதா தேவியின் தலைமையில் மரங்களை வெட்டவிடாமல் கட்டிப்பிடித்துத் தடுத்தனர். மரங்களை வெட்ட வந்தவர்கள் அவர்களைக் கொன்று மரங்களை வெட்டினர். இந்த உயிர்த்தியாகமே ரேனி கிராமத்து மக்களின் போராட்ட வடிவத்திற்கு முன்மாதிரியாக இருந்துள்ளது. சிப்கோ என்பதற்கு `கட்டியிருத்தல்' எனப் பொருள். இந்த சிப்கோ போராட்டத்தின் வெற்றி பக்கத்து கிராமங்களுக்கும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது. பெண்கள் அனைவரும் சுற்றுச்சூழலைக் காக்க போராட்டத்தில் இறங்கினர். முக்கியமாக உத்தரகண்டின் இமயமலைப்பகுதியில் பெண்களின் தொடர்ச்சியான போராட்டத்தால் மரங்களை வெட்டத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து பல்வேறு ஊடகங்கள் இப்பெண்களை ``லேடி டார்சான்கள்" என அழைத்தது. அதோடு நில்லாமல் சிப்கோ இயக்கத்தினை பல்வேறு கிராமங்களுக்கும் பரப்பும் வகையில் 5000 கி.மீ தூரத்திற்கு நடைப்பயணம் மேற்கொண்டனர். சுந்தர்லால் பகுகுணா இதனை ஒருங்கிணைத்தாலும் பெண்களே அதிகளவில் கலந்துகொண்டனர். நடைப்பயணத்தின் முடிவில் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியைச் சந்தித்தனர். 

``சூழலியலே நிரந்தரப் பொருளாதாரம்" என்பதே சிப்கோ இயக்கத்தின் முழக்கமாக இருந்தது. காடுகளையும் இயற்கையையும் பாதிக்காதவாறு புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை மக்களிடையே எடுத்துச் சென்றனர். சிப்கோ இயக்கம் சுற்றுச்சூழலைத் தாண்டி கிராம மக்கள் நகரத்திற்கு இடம்பெயராமல் இருக்க கிராமமங்களிலேயே வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதையும் செய்தனர். தொடர்ச்சியான போராட்டங்களின் விளைவாக 1980-ல் இந்திராகாந்தி இரண்டாவது முறையாகப் பிரதமராக பொறுப்பேற்றபோது சுற்றுச்சூழலுக்கென ஒரு துறையை உருவாக்கினார். சில ஆண்டுகளில் தனி அமைச்சகமாவும் அது மாற்றப்பட்டது. இப்போதுவரை இந்தியச் சுற்றுச்சூழல் குறித்தான விழிப்பு உணர்வுக்கு முன்னோடியாக சிப்கோ இயக்கம் சொல்லப்படுகிறது. உலகம் முழுவதிலும் பெண்கள் களம்கண்ட போராட்டங்கள் மற்ற போராட்டங்களைவிட வலுவானவையாகவே இருந்திருக்கின்றன. அதற்கு சிப்கோ இயக்கமும் ஓர் உதாரணம். சூழலோடு அதிகம் நெருக்கமானவர்கள் பெண்களே என்பதால் சூழலியலுக்கான போராட்டங்களிலும் அவர்களது பங்கு முக்கியமானது. 

அதன் விளைவாகவே பல்வேறு ஏக்கர் பரப்பிலான காடுகள் அப்போது காப்பாற்றப்பட்டன. ஆனால், இன்றைய நிலைமையில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களுக்காக காடுகளையும் அதைச் சார்ந்தே வாழக்கூடிய மக்களையும் வெளியேற்றுவது வாடிக்கையாக நிகழ்ந்துவருகிறது. சுற்றுச்சூழல் குறித்த அரசின் கொள்கை முடிவுகள் பெரியளவில் மாறாமல் இருப்பதும் அதுகுறித்த தெளிவான பார்வைகளும் இல்லாததே இதுபோன்ற செயல்பாடுகளுக்குக் காரணமாய் இருக்கின்றன. எப்படி அம்ரிதா தேவியின் போராட்டங்களை தேவியின் போராட்ட வடிவம், ரேனி கிராம மக்களுக்குப் பாடமாக இருந்ததோ, அதேபோல ரேனி கிராம மக்களின் போராட்டத்திலிருந்து தமிழகமும் கற்க சில பாடங்கள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானது, ``உங்கள் சூழலியலைக் காக்க நீங்கள்தான் போராட வேண்டும்". நெடுவாசலோ, தூத்துக்குடியோ... எல்லா இடங்களிலும் இந்தப் பாடம் நமக்கு முக்கியமானது.Trending Articles

Sponsored