உலோகத் தொழிற்சாலைகளுக்கு மேலை நாடுகளின் கட்டுப்பாடுகளும், நாம் கற்றுக்கொள்ள வேண்டியதும்!Sponsored"கேட்குதா, கேட்குதா? தமிழர் குரல் கேட்குதா?" 

சமீபத்தில், லண்டனின் பிரதான வீதி ஒன்றில் ஒலித்த அந்தக் குரல்கள், தமிழகத்தின் தூத்துக்குடியில் தற்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் எதிர்ப்பலைகளின் எதிரொலி. கடந்த சனிக்கிழமை, சிதம்பரம் நகர் பேருந்து நிலையத்தின் அருகே உருவான இந்த எதிர்ப்பலைகளுக்கு தற்போது சொந்தக்காரர்கள் எத்தனை பேர் என்று பார்த்தால், கணக்கு பல ஆயிரங்களைத் தாண்டி நிற்கிறது. ஆயுள் 45 நாட்கள். இன்னமும் போராடவும் மக்கள் தயார். இவர்கள் போராடுவது வாழ்வாதாரத்தைக் காத்துக்கொள்ள அல்ல, தங்கள் வாழ்வை காத்துக்கொள்ள மட்டுமே! ஆம், 'இன்று வீசும் காற்றில் நஞ்சு இருக்குமோ?' என்ற பயத்துடனேயே மக்கள் கண்விழிக்க வேண்டிய நிலை அங்கே உருவாகியிருக்கிறது. காரணம், ஸ்டெர்லைட்! 

Sponsored


அனில் அகர்வால் என்ற லண்டன் வாழ் இந்தியருக்குச் சொந்தமான வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானதுதான் இந்த ஸ்டெர்லைட் நிறுவனம். காப்பர் உலோகத் தாதுகளை உருக்கி, காப்பரை உருவாக்குவதுதான் இதன் முக்கியப்பணி. காப்பரை உருக்கினால் சல்ஃபர் டைஆக்ஸைடு என்ற நச்சுப்புகை வெளியேறும் என்பது பள்ளி மாணவர்கள் கூட அறிந்த ஓர் எளிய வேதியியல் பாடம். அந்தக் காற்றை சிறிது நேரம் நுகர்ந்தால் மூச்சுத் திணறல், பல காலம் இது தொடர்ந்தால் பல்வேறு சுவாச நோய்கள், கண் மற்றும் தோல் பாதிப்பு, புற்றுநோய், மரபணு பிரச்னைகள், மரணம் என ஆபத்துகளை அடுக்கிக்கொண்டே போகலாம். 

Sponsored


மற்ற நாடுகள் என்ன செய்கின்றன?

இதை உணர்ந்த பல்வேறு மேற்கத்திய நாடுகள், இவ்வகை ஆலைகள் சுற்றுச்சூழலை பாதிக்கும் என்று அவற்றை ஒதுக்கி வைத்துள்ளன. ஒரு சில நாடுகள், ஆலையிலிருந்து இந்த அளவுதான் புகை வெளியேற வேண்டும் என்று வரையறை விதித்து, கட்டுப்பாடுகள் பல கொண்டு வந்து ஊருக்கு வெளியே இடம் கொடுத்துள்ளன..இதனாலும் தீங்குதான் என்றாலும், இது மக்களை நேரிடையாக பாதிக்கும் திறனற்றது. அதிலும் கூடுதலாக எண்ணற்ற விதிமுறைகள் உண்டு. உதாரணமாக அயர்லாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில், ஓர் உலோகத் தாது உருக்கும் தொழிற்சாலையை நிறுவ வேண்டுமென்றால், இங்கே இருப்பது போன்றே அங்கிருக்கும் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் முறையான அனுமதிச் சான்றிதழ் பெற வேண்டும். அதைப் பெற, அங்கே நிபந்தனையின் கீழ் வருபவை, ஆலையிலிருந்து வெளிவரும் நச்சுப்புகையின் அளவு, கழிவுகளை வெளியேற்றும் முறை மட்டுமல்ல. "ஆலையில் இருந்து வெளியேறும் ஒலியின் அளவு என்ன? அதனால் ஒலி மாசு ஏற்படுமா? மக்களுக்குத் தொல்லை கொடுக்குமா? ஆலை இயங்குவதால் அதீத அதிர்வுகள் ஏற்படுமா? அதை அருகில் இருக்கும் கட்டடங்கள் மற்றும் நிலங்கள் தாங்குமா? கழிவுகளால் நாற்றம் ஏதேனும் உண்டாகும் நிலை ஏற்படுமா? அதை எப்படித் தடுப்பது? தூசுப்படலம் உருவாகாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும்?" என்று அந்தப் பட்டியல் நீள்கிறது.

செயல்பாட்டில் இருக்கும் ஆலையில், கூடுதலாக ஓர் உலையை நிறுவ வேண்டும் அல்லது ஏற்கெனவே இருக்கும் உலையில் மாற்றம் செய்யவேண்டும் என்றால்கூட, முறையான அனுமதி முன்னரே பெற வேண்டும். எந்த ஓர் உலையும் குறிப்பிட்ட அளவை மீறி கரும்புகையை கக்கக்கூடாது. கழிவுகள் மற்றும் தூசிகளை வெளியேற்ற மாற்று வழி ஒன்று ஒவ்வொரு உலைக்கும் இருக்க வேண்டும். புகைப்போக்கிகள் நிர்ணயிக்கப்பட்ட உயரத்தில் கட்டாயம் இருக்க வேண்டும். 

உபயோகிக்கப்படும் எரிபொருள்களில் சல்ஃபரின் அளவு குறிப்பிட்ட சதவீதத்தைத் தாண்டக்கூடாது. ஒருவேளை, உலை மிகவும் பழையது, அதன் எரிபொருளில் சல்ஃபரின் தேவை அவசியம் என்றால், அதற்கும் தனியே அனுமதி பெற வேண்டும். உலையின் கழிவுகளை அகற்ற எரிக்க வேண்டும் என்றால், அதற்கும் அனுமதி பெற வேண்டும். இது நிபந்தனைகளின் ஒரு பகுதி மட்டுமே. 

உலகின் முன்னணி எஃகு தயாரிப்பு நாடான சீனா, பத்து ஆண்டுகளுக்கு முன்பே கச்சா எஃகு உற்பத்தியில் 500 மில்லியன் டன் என்ற மாபெரும் இலக்கை எட்டியிருந்தது. இதற்காகச் சீனா கொடுத்த விலை என்ன தெரியுமா? 1.73 மில்லியன் டன் சல்ஃபர் டைஆக்ஸைடு மற்றும் 1.07 மில்லியன் டன் மாசு காற்றில் கலந்தது; 228.5 மில்லியன் டன் திடக் கழிவுகள் மற்றும் பாயக் கட்டத்தைத் தொட்ட கழிவு நீர் உற்பத்தி பெரிய அளவிலான நில மாசை ஏற்படுத்தின. சுதாரித்த சீனா அடுத்த வருடமே பல புதிய கட்டுப்பாடுகளை அனைத்து நிறுவனங்களுக்கும் விதித்தது.

எரிபொருள் பயன்பாட்டில் மாற்றங்கள், தூய நீர் பயன்பாடு குறைப்பு உள்ளிட்ட பல விதிமுறைகள் கொண்டுவரப்பட்டு சல்ஃபர், தூசு மற்றும் புகை உற்பத்தியை, கவனிக்கத்தக்க வகையில் குறைத்து காட்டியது. அதுமட்டுமின்றி, முன்னணி எஃகு உற்பத்தி நிறுவனங்கள் பல, சுற்றுச்சூழல் நலத்திட்டங்களை தங்கள் நிறுவனம் சார்பாக முன்னெடுத்துச் செய்தன. அன்ஷன் ஸ்டீல் என்ற நிறுவனம் மட்டும் ஒரே வருடத்தில் பதினோறு நலத்திட்டங்களை முன்னெடுத்து நடத்தியது. இவ்வகைத் திட்டங்களால், ஒரு வருடத்திற்கு, 2,20,000 டன் மின் ஆற்றல் சேமிக்கப்பட்டது. ஆனால், இவ்வகை மாற்றங்கள் மற்றும் புதிய நிபந்தனைகளின் பிரச்னை என்னவென்றால் அவை காலத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கப் படுவதில்லை. சீனாவில் பத்து வருடங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட மாற்றங்கள், அதன் பின்னர் பரிணாம வளர்ச்சி அடையாமல் ஏனோ தேங்கிப் போயின. உலோகத் தொழிற்சாலைகள் ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு மிக முக்கியம் என்றாலும் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு முக்கியக் காரணியே அவைதான். தற்போது வளிமண்டலமே புகை மண்டலமாகிப் போன சீனா அதற்கு ஒரு நல்ல உதாரணம்.

காப்பர் போன்ற உலோகங்களின் பயன்கள், அதன் வர்த்தகம் இவற்றைக் கருத்தில் கொண்டு பல்வேறு நாடுகளும், இவ்வகை ஆலைகளை நிறுவ அனுமதித் தரவேண்டிய நிர்பந்தத்தில் உள்ளன. இந்த வர்த்தக மோகம், காப்பர் அத்தியாவசியம் போன்ற கூற்றுகளுக்கு பெரும்பாலும் அடிபணிந்து போவது என்னவோ இந்தியா போன்ற வளரும் நாடுகள்தான். இங்கேயும் நிபந்தனைகள் இருக்கின்றன. முறையான சான்றிதழ்கள் பெற வேண்டும், வெளியேறும் மாசின் அளவு என்பது இவ்வளவுதான், நிலம், நீர்நிலைகள் போன்றவற்றை வெளியேறும் கழிவுகள் பாதிக்கக்கூடாது என இங்கேயும் பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன. மேலே சொன்ன விதிமுறைகளைப் படிக்கும்போதுகூட, இதெல்லாம் இந்தியாவிலும்தானே இருக்கிறது என்றுகூட உங்களுக்கு தோன்றியிருக்கலாம். 

ஆனால், அதைவிட, அவற்றையெல்லாம் மீறவும், சட்டதிட்டங்களை வளைக்கவும் புதிய சட்டங்கள் கொண்டு வரவும் இங்கே வழிமுறைகள் இருக்கின்றன. இல்லையென்றால், மகாராஷ்ட்ராவில் சுற்றுச்சூழல் பாதிப்படையும் என்று துரத்திவிடப்பட்ட ஒரு நிறுவனம், தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் எப்படி இவ்வளவு காலம் காலூன்றிச் செயல்பட முடியும்? தமிழ்நாடு என்ன இந்தியாவின் பரிசோதனைக் கூடமா? ஏற்கெனவே தூத்துக்குடியின் நிலை பரிதாபமாக உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் வாழத்தகுதியற்ற இடமாக மாறினாலும் அதிர்ச்சி அடைவதற்கில்லை. இப்படி ஒரு சூழ்நிலையில்தான் ஆலையை விரிவுபடுத்த வேறு எத்தனித்துக் கொண்டிருக்கிறது ஸ்டெர்லைட்.

இங்கே சட்டம் இருக்கிறதா என்றால், இருக்கிறது; ஆனால், அதனை சரியாக அமல்படுத்துபவர்கள் இருக்கிறார்களா என்றால் இல்லை. இதுதான் இந்தியாவின் தலையாய பிரச்னை.

ஆரம்பம் முதலே, பல பிரச்னைகள், அவ்வப்போது விபத்துகள், கசிவுகள், அதனால் உயிர்ப்பலி, நிலம், காற்று மாசு, அனுமதிச் சான்றிதழ்கள் பெறுவதில் முறைகேடு, அனுமதி பெறுவதற்கு முன்னரே புதிய திட்டங்களை செயல்படுத்துவது எனப் பல்வேறு சிக்கல்களை தாண்டித்தான் ஸ்டெர்லைட் இங்கே இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் மையத்தில் இருப்பவர்கள், 'இந்த தமிழ்நாடு எந்தத் தொழிற்சாலை வந்தாலும் எதிர்க்கிறார்கள், போராட்டம் நடத்துகிறார்கள், ஆலைகள் வந்தால் வேலைவாய்ப்புகள் அதிகமாகுமே, பொருளாதாரம் உயருமே?' என்று கேள்விகளை அடுக்கலாம். ஆனால், அதையெல்லாம் அனுபவிக்க மக்கள் முழு ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமே?

அணுமின் நிலையம் ஆகட்டும், அதி நவீன நியூட்ரினோ ஆய்வகம் ஆகட்டும், எல்லாம் வளர்ச்சிதான். ஆனால், அதனால் பின் விளைவுகள் மற்றும் பக்கவிளைவுகள் ஏற்படாதவாறு தடுக்க நம்மால் முடியுமா? ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்கும் திறன் நமக்கு உள்ளதா? விண்வெளியைத் தொட்டுவிட்டதே நம் அறிவியல்... என்று சமாளிக்கும் முன், ஆழ்துளைக் கிணறுகளும், இன்னமும் மனிதக்கரங்களை தேடிக்கொண்டிருக்கும் சாக்கடைகளும் ஒரு நொடியாவது உங்கள் கண்முன்னே வந்து போகட்டும். ஒகியில் உயிரிழந்த மீனவர்களின் ஓலங்கள் உங்கள் செவிப்பறையை எட்டட்டும்!Trending Articles

Sponsored