"ராமாயணத்தை வட மொழியில் சொற்பொழிவாற்றியவர்!" - தீரர் சத்தியமூர்த்தி நினைவுதினப் பகிர்வு



ன்னுடையக் கல்லூரிக் காலத்தைப் பலநேரங்களில் கல்லூரிக்குள் இருக்கும் நூலகத்துக்குள்ளேயே கழிப்பது அந்த இளைஞருடைய வழக்கம். எவ்வளவு பெரிய புத்தகங்களையும் படிப்பதற்காக வீட்டுக்கு எடுத்துச் செல்லும் அந்த இளைஞர், அதை இரண்டு மூன்று நாள்களில் படித்து முடித்துவிட்டு மீண்டும் நூலகத்தில் ஒப்படைத்துவிடுவார். இதை, வாடிக்கையாகவே செய்துகொண்டிருந்தார் அந்த இளைஞர். இவருடைய செயலைத் தினந்தோறும் பார்த்த அந்த நூலகத்தின் நூலகர் அந்த இளைஞர்மீது தவறான எண்ணத்தை வைத்திருந்தார். அதாவது, பெரிய புத்தகங்களை எடுத்துச் செல்லும் அந்த இளைஞர், எப்படி இரண்டு மூன்று நாள்களில் அதைப் படிக்க முடியும்? ஏதோ, இது கெளரவத்துக்காக அந்த இளைஞர் அப்படிச் செய்கிறார் என்று நினைத்துக்கொண்டிருந்தார். 

Sponsored


இந்த நிலையில், கல்லூரியின் முதல்வர் ஒருநாள் அந்த நூலகத்துக்கு வருகை தருகிறார். அப்போது வருகைப் பதிவேட்டில் அந்த இளைஞரின் கையொப்பமுமே அதிகம் இடப்பட்டிருப்பது தெரிய வருகிறது. தொடர்ந்து, அந்த இளைஞரே அதிக நூல்களை எடுத்துச் சென்றிருக்கிறார் என்பதையும் புரிந்துகொள்கிறார். ஆச்சர்யப்பட்ட கல்லூரி முதல்வர் அதுகுறித்து அந்த நூலகரிடம் விளக்கம் கேட்கிறார். நூலகரோ... அந்த இளைஞரைப் பற்றி தான் மனதில் வைத்திருந்த எண்ணத்தை அவரிடம் தெரிவிக்கிறார். ஆனால், அந்தக் கருத்தை முதல்வர் ஏற்றுக்கொள்ளவில்லை. 

Sponsored


புத்தகம் கொடுக்கப் பரிந்துரை!

Sponsored


அந்த நேரத்தில், நூலகத்துக்குள் நுழைகிறார் அந்த இளைஞர். அவரைச் சுட்டிக்காட்டி, ‘நீங்கள் கேட்ட நபர் அவர்தான்’ என்கிறார் நூலகர். அவரை அழைத்த முதல்வர், அவர் கையில் இருந்த புத்தகத்தை (ஏற்கெனவே எடுத்துச் சென்ற புத்தகம்) வாங்கி, அதிலிருந்து சில கேள்விகளைக் கேட்கிறார். அவருடைய கேள்விகளுக்குச் சளைக்காமல் பதில் சொல்கிறார் இளைஞர். பூரிப்பில் அந்த இளைஞரைப் பாராட்டிய கல்லூரி முதல்வர்... நூலகரிடம், “இனிமேல் இந்த இளைஞன் எப்போது, எந்தப் புத்தகம் கேட்டாலும் மறுக்காமல் கொடுக்க வேண்டும்” என்று அன்புக் கட்டளையிட்டுவிட்டுச் செல்கிறார். அந்த நிகழ்வைப் பார்த்த நூலகர், ‘இப்படிப்பட்ட புத்திசாலி மாணவனைத் தவறாக நினைத்துவிட்டோமே’ என்று வருந்துகிறார். அந்த இளைஞர் வேறு யாருமல்ல... ஆங்கிலேயர்களைப் பலமுறை கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்த வீரரும் தீரருமான எஸ்.சத்தியமூர்த்திதான். அவருடைய நினைவு தினம் இன்று. 

படிக்கும்போதே எந்தத் தலைப்பாக இருந்தாலும் சிறப்பான முறையில் சொற்பொழிவாற்றும் பேராற்றலைப் பெற்றிருந்த சத்தியமூர்த்தி, ஒருமுறை வட மொழி மாநாட்டில் பாரதத்தின் தலைசிறந்த இதிகாசமான ராமாயணம் பற்றி உரையாற்றச் சென்றிருந்தார். வழக்கமாக ஆங்கிலம் அல்லது தமிழில் சொற்பொழிவாற்றும் அவர், அந்த மாநாட்டில் அனைவரும் வியக்கும்படி வட மொழியில் சொற்பொழிவாற்றினார். இந்த நிகழ்வு வட மொழியிலும் அவருக்கு புலமை இருந்ததை எடுத்துக்காட்டியது. 

மகளுக்கு எழுதிய கடிதம்!

இதுதவிர, வெளியூர்ச் சுற்றுப்பயணங்கள் செல்லும்போதெல்லாம், தன்னுடைய மகளையும் உடன் அழைத்துச் செல்வார், சத்தியமூர்த்தி. காரணம், பல ஊர்களைப் பார்ப்பது, பலதரப்பட்ட மக்களைச் சந்திப்பதுதான், சிறந்த படிப்பு என்று அவர் நம்பினார். அத்துடன், மகளுக்கு அடிக்கடி புத்தகங்களைப் பரிசாகக் கொடுக்கும் வழக்கத்தையும் வைத்திருந்தார். நேரு, தன் மகள் இந்திராவுக்குக் கடிதங்கள் எழுதியதைப் போன்று சத்தியமூர்த்தியும் தன் மகளுக்குக் கடிதங்கள் எழுதியுள்ளார். ஒருமுறை அவர் தன் மகளுக்கு எழுதிய கடிதத்தில், “பி.ஆர்.ராஜமய்யர் எழுதிய ‘கமலாம்பாள் சரித்திர’த்தை நீ படிக்க வேண்டும். இந்த நாவல் தனிச்சிறப்பு வாய்ந்தது” என்று குறிப்பிடுகிறார். புத்தகங்கள் மீது அவருக்கிருந்த காதலை தன் மகளுக்கும் எடுத்துரைத்தவர் சத்தியமூர்த்தி. 

ஒருசமயம், நேருவுக்கு சத்தியமூர்த்தி காபி கலந்து கொடுக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாகப் பால் தவறிக் கொட்டிக் கீழே ஓடுகிறது. அதனால் சற்று மனவருத்தத்துக்கு ஆளாகிறார் சத்தியமூர்த்தி. பால் ஊற்றி ஓடுவதையும், அவர் கலங்கி நிற்பதையும் கண்டுகொண்ட நேரு, “என்ன சத்தியமூர்த்தி, உங்கள் ஊரில் பாலாறு ஓடத் தொடங்கி விட்டதே” என்று அவரைச் சிரிக்கவைக்கும் தொனியில் சொல்ல... அதைக் கேட்டு சத்தியமூர்த்தி நடந்ததை மறந்து சிரிக்கிறார். மிகவும் சாதாரண சிறு செயலானாலும் தவறு என்கிறபோது அதற்காக வருந்தக்கூடியவர் அவர். அதேவேளையில், ஆங்கிலேயர் நம்மை அடக்கியாள்வதை நினைத்துப் பொங்கியெழுந்தவர். 

ஆங்கிலேயரை அதிரவைத்த பதில்!

“இங்கிலாந்துப் பேரரசின் அதிகாரத்தின்கீழ் இருக்க விரும்பவில்லை என்றால், யாருடைய அதிகாரத்தின்கீழ் இருக்க விரும்புகிறீர்கள்” என்று சத்தியமூர்த்தியிடம் கேட்கிறார், ஓர் ஆங்கிலேயர். அதற்கு சத்தியமூர்த்தி, “யாருடைய அதிகாரத்தின் கீழும் நாங்கள் வாழ விரும்பவில்லை. நாங்கள் சுதந்திரமாகவே வாழ விரும்புகிறோம். அதுமட்டுமல்ல... அந்நியர்களாகிய உங்களை உதைத்து வெளியே தள்ளவும் விரும்புகிறோம்” என்று துணிச்சலுடன் பதில் கூறினார். அவருடைய பதிலைக் கேட்டு அதிர்ந்து நின்றார் அந்த ஆங்கிலேயர். அப்படியான துணிவால் அவர், ஒருமுறை... இருமுறை மட்டுமல்ல, பலமுறை ஆங்கிலேய அரசாங்கத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தார்.  அதனால்தான் மகாத்மா காந்தியடிகள் அவரை, “இதுபோன்ற பல சத்தியமூர்த்திகள் இருந்தால், ஆங்கிலேயர் என்றோ நாட்டைவிட்டு ஓடியிருப்பர்” என்று புகழ்ந்தார்.

“அவருடைய நாடி எப்படியிருக்கிறது?” 

பிற்காலத்தில், அரசியலில் கால்பதித்த சத்தியமூர்த்தி... ஒரு தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து நீதிக்கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளரும் தேர்தல் பிரசாரத்தின்போது, இருவரும் எதிரெதிரே சந்தித்துக்கொள்ள நேர்ந்தது. சத்தியமூர்த்தி, அவருடைய கையைப் பற்றிக் குலுக்குகிறார். இதுகுறித்து, சத்தியமூர்த்தியிடம் விளக்கம் கேட்கின்றனர், சிலர். அதற்கு அவர், “ஒன்றுமில்லை. அவருடைய நாடி எப்படியிருக்கிறது என்று பிடித்துப் பார்த்தேன்” என்றார் நகைச்சுவை உணர்வுடன். அப்படியான பண்பை வளர்த்துக்கொண்ட சத்தியமூர்த்தி, எந்த நேரத்திலும் தன்னைத் தேடி வந்தவர்களின் மனம்கோணாதபடி வாழ்ந்தவரும்கூட.

வயலின் வாசிக்கவைத்தார்!

நாடு முழுவதும் சத்தியாக்கிரகப் போராட்டம் தீவிரமாகிக் கொண்டிருந்த வேளையில், சத்தியமூர்த்தியும் அதில் கலந்துகொள்ளத் தயாரானார். அவருடைய வீட்டிலிருந்து போராட்டத்துக்குப் புறப்பட சில மணி நேரத்துக்கு முன்பு தயாராக இருந்த நிலையில், அவரைக் காண பிரபல வயலின் இசைமேதை பாப்பா வேங்கடராமய்யா வந்திருந்தார். அவரிடம், “மறுபடி உங்கள் கச்சேரியை எப்போது கேட்பேனோ என்று தெரியவில்லை. சற்றுநேரம் எனக்காக வயலின் வாசியுங்களேன்” என்று கேட்டார். அவரும் மறுப்பு தெரிவிக்காமல், வயலின் வாசிக்க... அதைக் கேட்டுவிட்டே போராட்டக் களத்துக்குச் சென்று சிறைவாசம் அனுபவித்தார். 

தான் கைபிடித்து அழைத்துக் கட்சியில் சேர்த்த காமராஜரை, தலைவராக உயர்த்தி அழகு பார்த்ததுடன், அவரது தலைமையின்கீழ் காரியதரிசியாகப் பணியாற்றிய சத்தியமூர்த்தி போன்ற தலைவர்களைக் காலன் அழைத்துக்கொண்டதுதான் கொடுமையான விஷயம்.



Trending Articles

Sponsored