கார் பெருசு... ஆனா, இன்ஜின்...?! ஃபோக்ஸ்வாகன் போலோ 1.0 - ஃபர்ஸ்ட் டிரைவ்



Sponsored



BS-VI மாசு விதிகள்... இதுதான் ஆட்டோமொபைல் துறையின் சமீபத்திய சென்செஷன். இதன் வெளிப்பாடாக, கார் உற்பத்தியாளர்கள் பலரும் தங்கள்வசம் இருக்கும் பழைய இன்ஜின்களுக்கு மாற்றாக, புதிய இன்ஜின்களை தங்களது கார்களில் பயன்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் இதற்கான ஆரம்பப்புள்ளியை, மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம்தான் போட்டது. தற்போது அதன் நீட்சியாக, மற்றொரு ஜெர்மானிய நிறுவனமான ஃபோக்ஸ்வாகன் வந்திருக்கிறது.

ஆம், தனது போலோ ஹேட்ச்பேக்கில் இருக்கும் பழைய 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினுக்குப் பதிலாக, EA211 என்ற குறியிட்டைக்கொண்ட புதிய 1.0 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை இந்த நிறுவனம் பொருத்தியுள்ளது.

Sponsored


இன்ஜினில் என்ன மாற்றம்?

Sponsored


இது முந்தைய இன்ஜினைவிட 200சிசி குறைவாக இருந்தாலும், அதற்குச் சமமான பவரையே வெளிப்படுத்துகிறது (76bhp). என்றாலும், 9.5kgm டார்க்கையே இது கொண்டிருக்கிறது. இது முந்தைய இன்ஜினைவிட 1.5kgm குறைவு! ஆனால், புதிய சிறிய இன்ஜினால் போலோவின் எடை 14 கிலோ குறைந்திருக்கிறது. மேலும், இது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 2.31 கி.மீ கூடுதல் அராய் மைலேஜைத் தருகிறது (18.78 கிமீ).

ஓட்டுதல் அனுபவம் எப்படி?

`There is no replacement for displacement' என்பார்களே... அது இந்த காருக்குப் பொருந்தும். ஆக்ஸிலரேட்டரில் என்னதான் பலத்தைக் காட்டினாலும், இந்த செக்மென்ட் கார்களில் நாங்கள் எதிர்பார்க்கும் பர்ஃபாமென்ஸ் கிடைக்கவில்லை. இந்த 1.0 லிட்டர் இன்ஜினின் லோ ரேஞ்சுடன் மிட் ரேஞ்சும் டல்லாக இருப்பதால், நெடுஞ்சாலைகளில் முன்னே செல்லும் காரை முந்துவதற்குச் சரியான திட்டமிடல் அவசியம். 6,500 ஆர்பிஎம் வரை இன்ஜின் ரெவ் ஆகிறது என்றாலும், அதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. 

புதிய இன்ஜினுடன், புதிய 5 ஸ்பீடு கியர்பாக்ஸை இணைத்துள்ளது ஃபோக்ஸ்வாகன். இதைப் பயன்படுத்துவது நல்ல அனுபவமாக இருப்பதுடன், தனது பணியைத் துல்லியமாகச் செய்கிறது. முந்தைய கியர்பாக்ஸில் ரிவர்ஸ் கியர் என்பது, க்விட் காரைப் போலவே முதல் கியருக்குப் பக்கத்தில் இருந்தது. தற்போது வழக்கமான இடத்துக்கு (5-வது கியருக்குக் கீழே) கொண்டுவந்துவிட்டது ஃபோக்ஸ்வாகன். க்ளட்ச் குறைவான எடையில் இருந்தாலும், பெடலின் டிராவல் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. முன்பைவிட காரின் எடை குறைந்திருந்தாலும், அது ஸ்டீயரிங் - சஸ்பென்ஷன் - பிரேக் இயங்கும் முறையில் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை.

இன்ஜின் பர்ஃபாமென்ஸ்

சரியாகச் சொல்வதென்றால், முந்தைய 1.2 லிட்டர் இன்ஜினுக்குச் சமமான பர்ஃபாமென்ஸையே, புதிய இன்ஜினும்கொண்டிருக்கிறது. 0 - 100 கிமீ வேகத்தை, பொறுமையாக 16.5 விநாடியில்தான் எட்டிப்பிடிக்கிறது போலோ 1.0.

ஆனால், கார் ஐடிலிங்கில் இருக்கும்போது, இன்ஜின் ஆன் ஆகியுள்ளதா என்பதைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது. அந்த அளவுக்கு ஸ்மூத்தாக இயங்குகிறது இந்த இன்ஜின். மிதமான வேகத்தில் செல்லும்போதுதான் இன்ஜின் சத்தம் லேசாக காருக்குள் வருகிறது. ஆனால், காரை விரட்டி ஓட்டும்போது, முந்தைய இன்ஜினைப்போலவே, இந்த மூன்று சிலிண்டர் இன்ஜினும் சத்தம்போடுகிறது.

என்னென்ன சிறப்பம்சங்கள்?

நாங்கள் ஓட்டிய போலோ, டாப் வேரியன்ட்டான ஹைலைன் ப்ளஸ். இதில் வழக்கமான ஆல் ப்ளாக் கேபின் இருந்தாலும், பிரவுன் - பிளாக் லெதரெட் அப்ஹோல்சரி புதிது. டிரைவர் ஆர்ம்ரெஸ்ட் வழங்கப்பட்டிருந்தாலும், அது கியரை மாற்றும்போது கைகளில் இடிக்கிறது. டேஷ்போர்டின் ஃபிட் அண்டு ஃப்னிஷ் சிறப்பாக இருப்பதுடன், பாகங்களின் தரமும் அற்புதம்.  

இரண்டு காற்றுப்பைகள், ஏபிஎஸ் மற்றும் இபிடி, ஆட்டோ டிம்மிங் மிரர், க்ரூஸ் கன்ட்ரோல், ஆண்ட்ராய்டு ஆட்டோ - ஆப்பிள் கார்பிளே - மிரர் லிங்க் உடனான டச் ஸ்க்ரீன், ஒன் டச் அப்-டவுன் பவர் விண்டோ, ரியர் ஏசி வென்ட், கிளைமேட் கன்ட்ரோல், ரியர் வைப்பர், பார்க்கிங் சென்சார், 16 இன்ச் அலாய் வீல்கள் என சிறப்பம்சங்களின் பட்டியல் நீள்கிறது. ஆனால், இதைவிட விலை குறைவான ஸ்விஃப்ட் போன்ற கார்களில் இருக்கும் சாட்டிலைட் நேவிகேஷன், ரிவர்ஸ் கேமரா, புரொஜெக்டர் ஹெட்லைட், கிலெஸ் என்ட்ரி கோ போன்ற வசதிகள் மிஸ்ஸிங் என்பது மைனஸ்.

முதல் தீர்ப்பு

சின்னச் சின்ன பேஸ்லிஃப்ட்களைத் தாண்டி, போலோ பெற்றிருக்கும் மிகப்பெரிய மாற்றம் புதிய இன்ஜின்தான். அது மாருதி சுஸூகி மற்றும் ஹூண்டாய் அளவுக்கு இல்லை என்பதே உண்மை. மேலும் 8 ஆண்டுகளாக கிட்டத்தட்ட ஒரே தோற்றத்தில் தொடர்ந்து விற்பனையில் இருப்பதும் நெருடல். கேபின் தரமாக இருந்தாலும், இடவசதி மற்றும் சிறப்பம்சங்களில் போட்டியாளர்களிடம் பின்தங்கிவிடுகிறது. எனவே, `போலோதான் வேண்டும்; அதில் பெட்ரோல் இன்ஜின் இருக்க வேண்டும்' என்றால், தோராயமாக 2 லட்சம் ரூபாய் செலவழித்து, GT TSI காரை வாங்குவது நல்ல முடிவாக இருக்கும். 



Trending Articles

Sponsored