மாவூத்தின் குச்சிக்கு அடிபணியும்போது, கும்கியாகிறது ஒரு கொம்பன்! - ஒரு கும்கி உருவாகும் கதை- அத்தியாயம் 4



Sponsored



கும்கிகள் வரலாற்றில் சுப்பிரமணியின் பங்கு மிகப்பெரியது. ஆக்ரோஷமான பல காட்டு யானைகளைப் பிடிக்க காரணமாயிருந்த சுப்பிரமணியின் இழப்பு மொத்த முதுமலையையும் துக்கம் அனுசரிக்க வைத்தது. 20 பேருக்கு மேலாகக் கொலை செய்த காட்டு யானை மக்னாவை பிடிக்கக் காரணமாயிருந்ததும் சுப்பிரமணிதான். சுப்பிரமணியின் இழப்பு கிருமாறனை மனதளவில் வெகுவாகப்  பாதித்திருந்தது. அதன் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்திருக்கிறார். ``கடைசியாக ஒருமுறை வந்து சுப்பிரமணியைப் பார்த்துவிட்டு வாருங்கள்” என அழைத்த குடும்பத்தாரின் வேண்டுகோளை நிராகரித்திருந்தார். 

தொடரின் முந்தைய அத்தியாயம்

Sponsored


அவருடைய மொத்தக் குடும்பமும் சுப்பிரமணியின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டார்கள். சுப்பிரமணியின் இறுதி நிகழ்வில் ஊர் கிராம மக்கள், வனத்துறை, முதுமலை முகாம்களிலிருந்த ஒன்பது யானைகள் என மிகப்பெரிய மரியாதை கொடுக்கப்பட்டது. எல்லோரும் சுற்றியிருக்க இரண்டு யானைகள் கயிறு மூலமாகச் சுப்பிரமணியை வெட்டப்பட்ட ஆழ்குழிக்குள் தள்ளிவிட்டதைப் பார்த்த கிருமாறனின் குடும்பத்தார் அவ்வளவு அழுதிருக்கிறார்கள். சுப்பிரமணி அவர்களின் குடும்ப உறுப்பினராகவே இருந்திருக்கிறது. கிருமாறனின் மகன் மாண்பன் இப்போது வசிம் என்கிற கும்கி யானைக்கு மாவூத்தாக இருக்கிறார். அவர், மாவூத்  ஆவதற்கான கனவுகள் சுப்பிரமணியிடமிருந்தே தொடங்கியிருந்தது. சுப்பிரமணியின் இழப்பிலிருந்து கிருமாறன் மீண்டு வருவதற்கு வெகு காலம் ஆகியிருக்கிறது. பல நாள்களுக்குத் துக்கம் அனுசரித்திருக்கிறார். இப்போது சுப்பிரமணியைப் பற்றி அவரிடம் பேசினாலும் அதிக உணர்ச்சிவசப்படுகிறார். ``தங்கமான யானைங்க, அது மாதிரி இன்னொரு யானையை என்னால நினைச்சிக் கூட பார்க்க முடியாது, பார்த்துப் பார்த்து வளர்த்தேன். சுப்பிரமணிக்குக் கண்ணு அவ்வளவா தெரியாது, ஏட்டிக்குப் போட்டியா அத பாத்துகிட்டது கூட அதோட இறப்புக்கு ஒரு காரணம்" என்று சொல்கிற கிருமாறனின் கண்களில் கசிந்த கண்ணீரால் இப்போதும் கூட சுப்பிரமணிக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறார். 

Sponsored


மூர்த்தியைப் பிடிக்க காரணமாயிருந்த கிருமாறனிடமே 2012-ம் ஆண்டு மூர்த்தி யானை ஒப்படைக்கப்பட்டது. அதுவரை மாவூத்தின் குச்சியை மட்டுமே எடுக்க மூர்த்தி பழகியிருந்தது. முன் காலகட்டத்தில் பயிற்சிகள் எதையும் மூர்த்தி சரியாக உள்வாங்காமல் இருந்தது. மூர்த்தியின் மீது அமர்வதற்குக் கூட மாவூத்திற்கு அதன் கால்களைக் கொடுத்தது ஒத்துழைக்காது. மாவூத்துக்களை தவிர வேறு யாரையும் கிட்டவே நெருங்க விடாது. ``20 பேருக்கு மேல் கொன்றிருக்கிறது, இனி இதை நீ தான் பார்த்துக்கொள்ள வேண்டும்" எனச் சொன்னால் யாராக இருந்தாலும் ஒரு பயம் வரவே செய்திருக்கும். அப்படித்தான் இங்கும். பயத்தின் காரணமாகவே அதற்கான பயிற்சிகள் தளர்த்தப்பட்டிருந்தன. இப்படியே இருந்தால் மூர்த்தி எதற்கும் பயன்படாமல் போய்விடும் என்கிற காரணத்தால் மூர்த்தி கிருமாறன் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகான காலம் மூர்த்திக்கு மிக முக்கியமான காலம்.

மெள்ள மெள்ள அதற்கான பயிற்சிகளை வழங்க ஆரம்பிக்கிறார். கால்களைத் தூக்குவது, செடிகளை எடுத்துச் செல்வது எனச் சிறு பயிற்சிகள் மூலமாகக் கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்க ஆரம்பிக்கிறார்.பக்கத்து ஊர் திருவிழாக்களுக்கு அழைத்துச் செல்வது, கோவிலுக்கு அழைத்துச் செல்வது என மூர்த்தியின் சுதந்திரத்தை கொஞ்சம் கொஞ்சமாக உணர வைக்கிறார். உண்மையில் யானைகள் உருவத்தில்தான் பெரியது. அதனுடைய நடவடிக்கைகள் குழந்தைகளுக்கு ஒப்பானது. உடல் நிலை சரியில்லாமல் சோர்வாக இருக்கிற மூர்த்தி முகாமிற்கு யானை மருத்துவர் வருவது தெரிந்துவிட்டால் உடனே ஆரோக்கியமாக இருப்பது போல நடிக்க ஆரம்பித்துவிடும். உடலை ஆட்டி தும்பிக்கையைத் தூக்கியும் நான் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறேன் என்பதை மருத்துவருக்குத் தெரியப்படுத்துமாம். மருந்து, ஊசி, என்றால் குழந்தை என்ன செய்வார்களோ அதையே மூர்த்தியும் செய்திருக்கிறது. 1998-ல் பிடிக்கப்பட்ட மூர்த்தி இன்றைய தேதியில் முதுமலையில் இருக்கிற 23 யானைகளில் சாதுவான ஒரே யானை. அதன் அருகில் யார் வேண்டுமானாலும் போகலாம் உணவு கொடுக்கலாம் அவ்வளவு சாந்தப்படுத்தி வைத்திருக்கிறார் கிருமாறன். 

காட்டிலிருக்கிற ஒரு யானையை, நான்கு கால்களிலும், கழுத்திலும் செயினை மாட்டி, கும்கி யானைகள் பாதுகாப்புடன் லாரியில் ஏற்றி முகாம்களுக்குக்  கொண்டு வந்து, பின்பு கும்கியாய் மாற்றுவதற்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது. நீங்கள் படித்தது போலவோ கேட்டது போலவோ இல்லை. ஆறேழு மாவூத்துகளின் குச்சிகளைக் கீழே போட்டு விட்டு யாருடைய குச்சியை யானை எடுக்கிறதோ அவர்தான் அன்று முதல் யானையின் மாவூத் என்பதெல்லாம் யானைகள் குறித்து சொல்லப்படுகிற கட்டுக்கதைகள் என்கிறார்கள் முதுமலை மாவூத்துகள். ஆசியாவில் மிகப்பெரிய டஸ்கர் கொண்ட யானை எனப் பெயரெடுத்த யானை சந்தோஷ். அதன் தந்தங்கள் இரண்டும் அவ்வளவு பெரிதாக இருக்கும். பார்க்கிற ஒவ்வொரு மனிதருக்கும் அச்சத்தைக் கொடுக்குமளவுக்கு இருக்கும் அதன் உடலமைப்பும், தந்தமும். ஆனால் இப்போதும் முதுமலையில் இருக்கிற சந்தோஷ் ஒரு கும்கி யானை கிடையாது. மற்ற யானைகளைப் பார்த்தால் பயந்து விலகிப் போகிற யானை அது. யானையின் பலம் அதற்குத் தெரியாது என்பார்களே அப்படியான யானை சந்தோஷ்.

இயல்பிலேயே சண்டையெல்லாம் நமக்கெதுக்குப்பா நாம ஓரமா போவோம் என்கிற சாதுவான யானை சந்தோஷ். அப்படிப்  பிடிக்கிற எல்லா யானைகளையும் கும்கியாக மாற்றிவிட முடியாது. அதனுடைய இயல்பு மற்றும் நடவடிக்கைகளைப் பொறுத்தே அவை கும்கிகளாக மாற்றப்படும். பிடித்து வரப்படுகிற காட்டு யானைகளை 14-க்கு 14 என்கிற அளவில் இருக்கிற கரோலில் அடைத்து விடுவார்கள். கரோல் என்பது உடைத்து விடவே முடியாத தேக்கு மரங்களாலும், கற்பூர மரங்களாலும் செய்யப்பட்டது. கும்கியாக மாற்ற மாவூத்துகளுக்குக் கொடுக்கப்படுகின்ற நாள்கள் 48. கரோலில் இருக்கிற யானைகளுக்கு முதல் 15 நாள்கள் எந்தவிதப் பயிற்சிகளோ, கட்டுப்பாடுகளோ இல்லை. அந்தப் பதினைந்து நாள்களும் யானைக்கு உணவும் தண்ணீரும் நேரத்திற்கு வழங்கப்படுகிறது. 15 நாள்கள் இடைவெளியில் அந்த யானைக்கான மாவூத் யார் என்பது முடிவு செய்யப்படும். ஆக்ரோஷமான யானையாக இருந்தால் அதற்கு ஏற்ற அனுபவமான மாவூத் நியமிக்கப்படுவார். 

14-க்கு 14 என்ற அளவு இருக்கிற கரோலின் உள்புறம் இரு அறைகளாகப் பிரிக்கப்படும். ஓர் அறையில் மாவூத்தும், இன்னோர் அறையில் யானையும் அடைத்து வைத்திருப்பார்கள். காலை ஆறு மணிக்கு கரோல் இரு அறைகளாகப் பிரிக்கப்பட்டு மாலை ஆறு மணிக்கு யானை தூங்குவதற்கு வசதியாக மீண்டும் ஓர் அறையாக மாற்றப்படும். ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 10 கிலோ மீட்டர்கள் உணவிற்காகப் பயணித்த யானை ஒரே இடத்தில் அடைத்துவைத்திருப்பதால் மனதளவில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுவிடும். அதனுடைய ஆக்ரோஷமான மனநிலையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுக்குள் வரும். காட்டுக்குள் தனி ராஜாவாக வலம் வந்த காட்டு யானைக்கு முதலில் வழங்கப்படுகிற பயிற்சியே மண்டியிட வைப்பதுதான். அவ்வளவு எளிதில் யானை மனிதனுக்கு முன்பு மண்டியிட்டு விடாது. அதன் குணநலன்கள் அப்படி. பிறகு மாவூத்தின் குச்சியைத் தும்பிக்கையில் எடுக்கும் பயிற்சியும் வழங்கப்படும்.

மாவூத்தின் கட்டளைகளை யானை ஏற்றுக் கொள்ளவேண்டுமானால் முதலில் யானைக்கு ஆசையைத் தூண்டுவார்கள். எப்படி?

- தொடரும்



Trending Articles

Sponsored