ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்ன இந்த அறிவுரையையும் மார்க் கேட்டிருக்கலாம்! #FacebookDataBreachவிலைமதிப்பில்லாத ஒன்று ஒருவரிடம் கணக்கில்லாமல் இருந்து அவர் அதனை முறையாகக் கையாளாமல் கவனக்குறைவாகக் கையாண்டால் விளைவு எப்படி இருக்கும்? அதைத்தான் தற்பொழுது அனுபவித்துக்கொண்டிருக்கிறார் மார்க் ஸக்கர்பெர்க். கேம்பிரிட்ஜ் அனலிடிகா விவகாரம் தொடர்பாகப் பல தரப்பினரின் கேள்விகளுக்குப் பதில் கூற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருக்கிறார். தனிநபர் தகவல் தொடர்பாக ஃபேஸ்புக்கின் மறுபக்கத்தை அதன் பயனாளர்களுக்கு எடுத்துக்காட்டியிருக்கிறது இந்த விவகாரம். 

Sponsored


ஃபேஸ்புக்கே கதியெனக் கிடந்தவர்கள் அனைவருமே தற்பொழுது அதிலிருக்கும் விஷயங்களை எச்சரிக்கை உணர்வோடு அணுகத்தொடங்கியிருக்கிறார்கள். ஒரு மனிதனின் தனிநபர் தகவல்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இந்தச் சம்பவம் உலகிற்கு மற்றொரு முறை உணர்த்தியிருக்கிறது. முன்னெப்போதையும் விட தற்பொழுது இந்த விஷயம் உலகம் முழுவதிலும் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ்  ஜாப்ஸின் வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாக வலம் வரத்தொடங்கியிருக்கிறது. இறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்னால் 2010-ம் ஆண்டில் அவர் பேசிய இந்த வீடியோ வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நடத்திய ஒரு மாநாட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த மாநாட்டில் மேடையில் ஸ்டீவ் அமர்ந்திருக்கும் பொழுது அங்கு கீழே மார்க் ஸக்கர்பெர்க்கும் பார்வையாளர்களில் ஒருவராக அமர்ந்திருந்தார் என்பதும் இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம். 

Sponsored


தனியுரிமை - வாடிக்கையாளனுக்கு மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டிய ஒன்று

Sponsored


2010-ம் ஆண்டில் இந்த வீடியோ எடுக்கப்பட்ட சமயத்தில்தான் ஃபேஸ்புக் தனது தனியுரிமைக் கொள்கைகளில் சில மாற்றங்களைச் செய்திருந்தது, கூகுளோ அமெரிக்காவில் என்கிரிப்ஷன் செய்யப்பட்ட வைஃபைகளிலிருந்து தரவுகளைப் பெற முயன்றதாகச் சர்ச்சையில் சிக்கியிருந்தது. அதுபோன்ற ஒரு சமயத்தில்தான் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நடத்திய ஒரு மாநாட்டில் பத்திரிகையாளர் ஒருவர் ஃபேஸ்புக், கூகுள் மற்றும் இதர நிறுவனங்களின் தனியுரிமைக் கொள்கைகளைப் பற்றி ஸ்டீவ்  ஜாப்ஸிடம் கேள்வி எழுப்புகிறார். பத்திரிகையாளரின் கேள்விக்கு அவர் அளித்த பதில் இதுதான். ``தனியுரிமையைப் பொறுத்தவரையில் சிலிக்கான் வேலியில் இருக்கும் அனைவருமே ஒத்த கருத்துடையவர்கள் என்று நினைக்காதீர்கள், மற்ற நிறுவனங்ளோடு ஒப்பிட்டால் நாங்கள் அதில் மிகப்பெரிய அளவில் வேறுபட்டிருக்கிறோம்". 

``எங்கள் வாடிக்கையாளரின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதில் மிகக் கவனமாக இருக்கிறோம், எடுத்துக்காட்டாக ஒரு ஆப் ஒருவரது இருப்பிடத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் நேரடியாக அந்தத் தகவலை அவரிடமிருந்து பெற்றுவிட முடியாது மாறாக எங்களிடம் அனுமதியைப் பெற்ற பிறகே அந்தத் தகவலை அவர்கள் பெற முடியும்.``ஒரு ஆப் எப்படிச் செயல்படுகிறது என்பதை அதைப் பயன்படுத்தும் எங்கள் வாடிக்கையாளர் தெரிந்திருக்க வேண்டும் என விரும்புகிறோம், அது தவிர பயனர்களிடமிருந்து தேவையில்லாத தகவல்களைச் சேகரிப்பதால் பல ஆப்களை நாங்கள் நிராகரித்திருக்கிறோம். தனியுரிமையைப் பொறுத்தவரையில் நாங்கள் மிகவும் பழைய நடைமுறைகளைப் பின்பற்றுவதாகப் பலர் கூறுகிறார்கள்...அது உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால், நாங்கள் இதில் மிகக் கவனமாக இருக்கிறோம்"  இவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக விளக்கும் ஸ்டீவ்  ஜாப்ஸ் தனியுரிமை என்றால் என்ன என்பதற்குத் தெளிவான விளக்கத்தை முன் வைக்கிறார், உண்மையாகவே அவரது கருத்து எந்தக் காலத்திற்கும் பொருத்தமானது என்பதை தற்போழுது பலர் உணர்ந்திருப்பார்கள்.

``தனியுரிமை கொள்கை என்றால் ஒருவர் நம்முடன் எந்தத் தகவல்களை எல்லாம் பகிர்ந்துகொள்ள உடன்பட்டிருக்கிறாரோ அதை மட்டுமே செய்ய வேண்டும். அதுகுறித்து அவர்களுக்குத் தெளிவான எளிமையான ஆங்கிலத்தில் விளக்கப்பட வேண்டும். அது மீண்டும் மீண்டும் அவர்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு அளவில் தகவல்களை அளிப்பதற்கு முன் வருகிறான், ஒருவர் குறைவாக அளிப்பார்; மற்றொருவர் அதிகமாக அளிப்பார். எனவே, ஒவ்வொரு முறை தகவல் சேகரிக்கப்படும் பொழுதும் மீண்டும் மீண்டும் அவர்களுக்குத்  தெரியப்படுத்தப்பட வேண்டும், அவர்கள் சோர்வடையும் வரை அல்லது அவர்கள் போதும் என்று கூறும் வரை " என்று கூறும் ஸ்டீவ்  ஜாப்ஸ் ஒருவரிடமிருந்து பெறப்படும் தகவலை நாம் எதற்காகப் பயன்படுத்துகிறோம் என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும் எனக் கூறுகிறார்.   

எட்டு வருடங்களுக்குப் பின்னரும் கூட அவர் சொன்ன கருத்துகள் எவ்வளவு முக்கியமானதாக இருக்கின்றன என்று தற்போது கூறி வருகிறார்கள் இணையவாசிகள். தொடக்கக் காலங்களில் ஃபேஸ்புக்கை கைவிட்டுவிடலாம் என்று மார்க் ஸக்கர்பெர்க் ஒரு முடிவில் இருந்தாராம். அப்பொழுது ஸ்டீவ் ஜாப்ஸ்தான் இந்தியாவுக்குச் சென்றுவா என அறிவுரை கூறினாராம். அதன் பின்புதான் ஃபேஸ்புக் நிறுவனத்தை வெற்றிகரமாக மாற்றிக்காட்ட முடிந்தது எனக் கூறுவார்கள். அப்படியே ஸ்டீவ் ஜாப்ஸின் இந்த அறிவுரையையும் கொஞ்சம் கடைப்பிடித்திருந்தால், இவ்வளவு சிக்கல்களைச் சந்தித்திருக்க வேண்டியதில்லை.Trending Articles

Sponsored