``மாடு மாதிரி அசைபோட எங்கிட்ட நிறைய கதைகள் இருக்கு!'' - சைக்கிளில் ஊர் சுற்றும் குமார் ஷாSponsoredமுகத்தின் முக்கால்வாசியை மறைத்த தாடி, தூக்கிச் சீவிய கொண்டை, கதை சொல்லி, மிமிக்ரிக் கலைஞன், பயணக் காதலன், நடிகன் - 30 வயது குமார் ஷாவிடம் நிறைய கதைகள் இருப்பது தெரிந்ததும் பேசினேன். 

``உங்க பயணம் பற்றிச் சொல்லுங்க?'' என்றதும், ``ஒருநாள் சாயங்காலம் குழந்தைகளுக்குக் கதை சொல்லி முடிச்சுட்டு, சைக்கிள்ல வீட்டுக்குப் போயிட்டிருந்தேன். அப்போ வந்ததுதான் சைக்கிள்லயே காஷ்மீர் வரைக்கும் சுத்துற இந்த ஐடியா. இன்னொருவாட்டி யோசிக்கல. கிளம்பிட்டேன்'' என்று சிரிக்கிறார்.

Sponsored


பேருந்து, ரயில் என ஏற்கெனவே நாடு முழுக்கச் சுற்றியிருந்தாலும், இந்த முறை தன் `சைக்கிள் கருப்பி’யோடு நாட்டைச் சுற்றக் கிளம்பியிருக்கிறார் குமார். கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா எனச் சுற்றி முடித்து, இப்போது சென்று சேர்ந்திருக்கும் இடம் அகமதாபாத். ``அம்மாவும் அப்பாவும் நான் சின்னப் பையனா இருக்கும்போதே பிரிஞ்சுட்டாங்க. அம்மா இருக்காங்க. நான் என் கதைகளை நம்பியிருக்கேன். அதனால, அப்பா வீட்டுப்பக்கம் சொந்தக்காரங்க யாரையும் எனக்குத் தெரியாது. இங்க அகமதாபாத்ல ஒரு ஃப்ரெண்ட் வீட்ல தங்கியிருந்தேன். சும்மா டீ குடிக்கப் போனபோது, அவர் வேற ஒரு நண்பர்கிட்ட அறிமுகப்படுத்தினார். அப்படியே ஊரைப் பற்றிப் பேசினோமா! என் அப்பாவுடைய தங்கை மகன் அவர்! ஆச்சர்யமா இருந்துச்சு. சூப்பர்ல... சொந்த ஊரைவிட்டு இவ்வளவு தொலைவு வந்து, சினிமா டைப்ல ஒரு குடும்பம் ஒன்றுகூடல்” - பேக்ரவுண்டில் வயலின் மியூசிக் இசைப் பின்னணியோடு சொல்லப்படும் சில விஷயங்களை அநாயாசமாகப் பேசுகிறார்.

Sponsored


``போன வருஷம் ஜூலை மாசம், பொள்ளாச்சிகிட்ட இருக்குற ஆழியாறுல இருந்து கிளம்புறப்போ, என்கிட்ட 200 ரூபாதான் இருந்துச்சு'' என்றபடி சிரித்த குமாரிடம், ``பணம் இல்லாத பயணம் எப்படியிருந்தது?'' என்றேன்.

``பணம் தேவைதான். பணம் இல்லாம சில சமயம் சாப்பிட முடியலை. தண்ணி குடிச்சுட்டு சைக்கிள ஓட்டவேண்டியதுதான். பணம் இல்லாம நிறைய கிடைக்கும்கிற நம்பிக்கையில, நான் அதைப் பற்றியெல்லாம் பெருசா கவலைப்படலை. அரசுப் பள்ளியோ, தனியார் பள்ளியோ எதுவோ, கூப்பிடுற இடத்துல கதை சொல்லிக்கிட்டிருப்பேன். இந்தப் பயணத்துலயும் அப்படித்தான். அந்தக் கதைகளைக் கேட்டுட்டு, எனக்கு பணம் கொடுக்கலாம், கொடுக்காமயும் போகலாம். அதுக்கும் கவலையில்லை. என் சைக்கிள் கருப்பி, குளிருக்கு ஒரு ஜாக்கெட், துணிமணி, யானை, ஆமை, புத்தர் பொம்மைங்க. இதுதான் என் சொத்து. நிறையபேர், `நீங்க ஏன் ஒரு கதை எழுதக் கூடாது?'னு கேட்கிறாங்க. என்னடா இது நமக்கு வந்த சோதனைன்னு, நானும் முயன்றேன். ஆனா, எதுவுமே நடக்கலை. கதை சொல்றதுலயும் கதை எழுதுறதுலயும் நிச்சயமா வித்தியாசம் இருக்கு. நான் புக்கெல்லாம் படிச்சு கதை சொல்றதில்லை. என் அனுபவங்கள், நான் பார்த்த, கேட்ட சம்பவங்கள்தான் என் கதையில இருக்கும். ரெண்டாவது படிக்கிற குழந்தைக்கும், ஆறாவது படிக்கிற குழந்தைக்கும் எப்படி நான் ஒரே கதையைச் சொல்ல முடியும்? கதையை வாய்லயே பேசிக்குவோம். எழுதவெல்லாம் வேணாம்னு முடிவுபண்ணிட்டேன். அதை எனக்குப் பதிலா வேற யாராவது செஞ்சுக்கட்டும். என்ன சொல்றீங்க?” மறுபடியும் அதே கிகிகி சிரிப்பு.

``சைக்கிள் பயணத்தின் வழியா சில பிரசாரங்களை முன்னெடுக்கிறவங்களைப் பார்த்திருக்கேன். அப்படி பிரசாரம் ஏதாவது..?'' என இழுக்க ஆரம்பித்தவுடன், ``ஐயய்யோ... பிரசாரம்லாம் இல்லீங்க. இதுக்கு முன்னாடி ரெண்டு முறை பஸ்லயும் டிரெயின்லயும் பயணம் பண்ணப்ப, டிராவல் ஸ்கூல் ஒண்ணு ஆரம்பிக்கணும்னு நினைச்சேன். ஆழியாறு நண்பர்கள் உதவியோட `டிராவல் ஸ்கூல்’ ஒண்ணு ஆரம்பிச்சாச்சு. சான்ஸ் கிடைக்கும்போது, அது மூலமா குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரி, நிறைய கதைகள் சொல்லுவேன். கதை சொல்றதுல ஆர்வமிருக்கிற ஆசிரியர்களை இணைச்சுவெச்சிருக்கோம். கதை சொல்லல் நடந்துக்கிட்டேதான் இருக்கும். இந்த முறை சைக்கிள்  பயணத்துல, இன்னொரு கனவு கண்டுக்கிட்டிருக்கேன். கேரளாவுல சில கதை சொல்லி, நாடகக் கலைஞர்களைச் சந்திச்சேன். அவங்களையும் மற்ற இடங்கள்ல சந்திக்கிற கலைஞர்களையும் ஆழியாறுக்குக் கூப்பிட்டு ஒரு விழா நடத்தப்போறேன். குழந்தைகளுக்கு இன்னும் நிறைய கலைகளும் கதைகளும் கிடைக்குமே” என்கிறார்.

``எதிர்காலத்துல வேற என்ன திட்டமெல்லாம் இருக்கு குமார்?''

``திட்டமா? காமெடி பண்ணாதீங்க. எதையும் திட்டம்லாம் போட்டுப் பண்ண முடியாது. நாளைக்கே போதும்னு தோணுச்சுன்னா, பயணத்தை நிறுத்திட்டு வீட்டுக்குப் போயிடுவேன். ரூல்ஸா இருக்கு? இப்போ 30 வயசு. இன்னும் ரொம்ப வயசாகிடுச்சுன்னா, டிராவல்லாம் பண்ண முடியாது. அப்போ மாடு மாதிரி அசை போடுறதுக்கு, என்கிட்ட நிறைய கதைகள் இருக்கும். நானே ஒரு கதைதான்.”Trending Articles

Sponsored