``ஞாயித்துக்கிழமை ஆனா சினிமாக்காரங்க கூடி மரம் நடுவோம்..!” - மிமிக்ரி செந்திலின் பசுமை முயற்சிSponsoredஇந்தச் சிங்காரச் சென்னை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான படிப்பினையைக் கொடுக்கும். அந்தப் படிப்பினை அவர்களை ஏதாவதொரு வகையில் செயல்பட வைக்கும். அப்படி சினிமா எடுக்கும் லட்சியத்தோடு வந்த ஒருவரைச் சுற்றுச்சூழலில் அக்கறை கொள்பவராக மாற்றியிருக்கிறது. சினிமா உதவி இயக்குநர், நடிகர், ஸ்டேஜ் ஆர்ட்டிஸ்ட் என்று பல முகங்களைக் கொண்டவர் `மிமிக்ரி' செந்தில். கடந்த ஒரு வருடமாக சென்னையின் வடபழனி, விருகம்பாக்கம், கோயம்பேடு, ஆயிரம்விளக்கு, கே.கே. நகர் பகுதிகளில் மரம்  நட்டு வளர்த்து வருகிறார். சென்னையைப் பசுமையாக்கும் முயற்சியில் பங்களித்து வரும் செந்திலிடம் பேசினோம். 

                                   `மிமிக்ரி செந்தில்

Sponsored


``எனக்குச் சொந்த ஊரு காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர். எங்களுடையது விவசாயக் குடும்பம். அண்ணன், தம்பிகள் விவசாயத்தைப் பார்த்துக்கிட்டு இருக்காங்க. சின்ன வயசிலேயே சினிமா ஆசை. அதனால, பிளஸ் டூ முடிச்சதுக்கப்புறம் சென்னைக்கு இடம் பெயர்ந்துட்டேன். லயோலா கல்லூரியில் படிப்பு. என்னோட காலேஜ்மெட் இயக்குநர் வெற்றிமாறன். எத்தன், குக்கூ,  ஜோக்கர் ஆகிய படங்கள்ல உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கேன். பொல்லாதவன், கஜினி, ஆறு என சில படங்கள்ல நடிச்சிருக்கேன். ஆயிரக்கணக்கான மேடைகள்ல மிமிக்ரி ஆர்ட்டிஸ்டா தோன்றியிருக்கேன். சின்ன வயதிலிருந்தே விவசாயம்னா ரொம்ப ஆசை. சிட்டில எங்க போய் விவசாயம் செய்ய?  

Sponsored


சென்னையில எல்லோருக்கும் ஏதாவது ஒண்ணு பிடிச்சுப் போகும். எனக்கு அப்படி பிடிச்சு போனது மரங்கள். சென்னைக்கு அழகே இன்னும் மிஞ்சியிருக்கிற இந்த மரங்கள்தான். அப்படிப்பட்ட மரங்களை வர்தா புயல் வந்து சாய்ச்சு போட்டுருச்சு. மழைக்கு வீட்டுக்குள் ஒடுங்கியிருந்த நான், வெளியே வந்து பார்த்தபோது புயல் காத்துக்கு அத்தனை மரங்களும் சாய்ஞ்சு கிடந்துச்சு. நான் ரொம்பவே வருத்தப்பட்டேன். சென்னையில நடந்து போறவங்களுக்கு இளைப்பாறலே இந்த மரங்கள்தான். அப்படிப்பட்ட இந்த மரங்கள் உருவாவதற்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். 

அப்போதுதான் திரைத்துறை நண்பர்கள்கிட்ட ஆலோசனை கேட்டு, பலரை ஒன்றுதிரட்டி, `இனி ஒரு விதி செய்வோம்’ என்ற அமைப்பைத் தொடங்கி, அதுமூலமா மரக்கன்றுகள் நட ஆரம்பிச்சோம். இதைத் தொடங்கினபோது கையில் பணமும் இல்லை. நண்பர்கள், பொதுமக்கள்னு அவங்ககிட்ட இருந்து மரக்கன்றுகள், மண்வெட்டி, கடப்பாரைனு பொருள்களை வாங்கி, மரக்கன்றுகளை நட்டோம். இதை இப்படியே தொடரணும். விட்டுட கூடாதுனு வாரத்துல ஒருநாள்  ஞாயித்துக்கிழமை எங்கள் திரைத்துறை நண்பர்கள் ஒன்றுகூடி மரக்கன்றுகள நட்டுட்டு வர்றோம். மரங்கள் பத்தி எல்லோருக்கும் விழிப்புஉணர்வு வரணுங்கறதுக்காக, நடிகர், நடிகைகளை மரம் நடுற அன்னிக்கு வரவெச்சு, அவங்க மூலமா நட்டு வைப்போம். நட்ட மரங்களைப் பராமரிக்க அந்தந்த பகுதிக்கு ஒவ்வொரு ஆள நியமிச்சிருக்கோம். அவருதான் அந்த மரம் வளர்றதுக்குப் பொறுப்பு. அந்தந்த மரங்களுக்கு ஒவ்வொரு பேரு வெச்சிருக்கோம். பேரைச் சொல்லி, அவங்க எப்படி இருக்கிறாங்கனு விசாரிச்சிப்போம்.

நான் கே.கே நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்புல ஒரு சிறிய வீட்டுலதான் வாடகைக்கு இருக்கேன். வாய்ப்பு தேடிக்கிட்டும், என் வயித்துப் பாட்டுக்குச் சம்பாதிக்கிறதோடு, இந்த மரங்கள வளர்க்கிறதுக்கும் ஓடிட்டு இருக்கேன். இந்த மரங்கள் வளர்க்கிறதுக்கு என்னோட முதலீடு ஒன்னும் இல்ல. சிலர் மரக்கன்றுகள் வாங்கிக் கொடுப்பாங்க. சிலர் கூண்டு, மண்வெட்டினு உதவி செய்றாங்க. வடபழனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு உணவு போன்ற விஷயங்களுக்கு உதவி செய்றாரு. ஆர்வமுள்ள நண்பர்கள்தான் இதுல பங்கெடுத்துக்கிறாங்க. அவங்களுக்கு எந்தக் கூலியும் கிடையாது. ஞாயித்துக்கிழமை ஆனா, டான்னு எல்லோரும் கூடிடுவோம். நான் யார்க்கிட்டேயும் பணம் வாங்கிறதில்ல. பொருள்களாத்தான் வாங்கிக்கிறேன்.

கோயம்பேடு, வடபழனி, ஆயிரம் விளக்குனு இதுவரைக்கும் ஆயிரம் கன்னுகள் நட்டிருப்போம். இந்த எண்ணிக்கையைவிட, இந்த மாநகரத்துக்கு ஏதோ நம்மலாள முடிஞ்சத செய்றோம் ஒரு திருப்திதான் தொடர்ந்து செய்ய வைக்குது. என்ன மாதிரி 10 பேரு மரம் வளர்ப்புல இறங்குனா, அதுவே எனக்குச் சந்தோஷம்தான். இருங்க... ட்ரீம் வாரியர்ஸ் கம்பெனில ஸ்கிரிப்ட் கேட்டிருக்காங்க. கொடுத்திட்டு வந்திடுறேன்னு " சொல்லிட்டு நம்பிக்கையோடு கிளம்பிப் போனார் செந்தில்.
 Trending Articles

Sponsored