`அவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சம்பளம், உயர்பதவி?’ - பொருமுபவர்களுக்கு விளக்கம் சொல்லும் கதை #MotivationStorySponsored`வேலையில் தரம், திறமை என்பதெல்லாம் ஒருபோதும் தற்செயலாகக் கிடைப்பதில்லை. புத்திசாலித்தனமான தொடர் முயற்சியால் மட்டுமே அது கிடைக்கும்’ - அழகாகச் சொல்லியிருக்கிறார் ஆங்கிலக் கலை விமர்சகர் ஜான் ரஸ்கின் (John Ruskin). எந்தத் தொழிலாக இருந்தாலும் எல்லோருக்கும் உயர்ந்த பீடம் கிடைத்துவிடுவதில்லை. உயரம் தொட்டவர்கள் அனைவருக்கும் அந்த இடம் தானாக வந்து சேர்வதுமில்லை. தொடர் முயற்சி, கடின உழைப்பு, புத்தி கூர்மை, சூழ்நிலைக்கேற்ப செயல்படும் சாதுர்யம் இவையெல்லாம்தான் ஒருவரைப் படிப்படியாக உயர்த்தி முன்னேற்றப் பாதையில் நடைபோடவைக்கும். உதாரணமாக வழக்கறிஞர் தொழிலை எடுத்துக்கொள்வோம்... ஒரு வழக்குக்கு சில ஆயிரம் ரூபாய்களை வசூல் செய்பவரும் உண்டு; ஒரு மணி நேரத்துக்கு லட்சக்கணக்கில் ஃபீஸ் வாங்குபவரும் உண்டு. ஒரே துறை, ஒரே சட்டங்கள்... ஆனால் சிலர் மட்டும் மிக அதிகமாக சம்பாதிப்பது எப்படி?  திறமை... தொடர்ந்து தங்கள் புத்திசாலித்தனத்தால் பல முயற்சிகள் செய்து, போராடிப் பெற்ற திறமை. அதுதான் அவர்களுக்கு பணத்தோடு புகழையும் சேர்த்துக் கொடுக்கிறது. திறமைக்கு மரியாதை ஏன் தர வேண்டும் என்பதை உணர்த்தும் கதை இது. 

அது இங்கிலாந்திலுள்ள ஒரு பெரிய கப்பல் நிறுவனம். அதற்குச் சொந்தமாக பதினான்கு சரக்குக் கப்பல்கள் இருந்தன. ஐரோப்பாவிலுள்ள சில நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் அவை சரக்குகளை ஏற்றி, இறக்கிக்கொண்டிருந்தன. இரண்டு மாத காலமாக அவற்றில் ஒன்றே ஒன்றில் மட்டும் பிரச்னை. திடீரென்று ஒரு நாள் கப்பலின் இன்ஜின் ஓடாமல் நின்றுவிட்டது. எவ்வளவோ முயற்சி செய்தும் நிறுவனத்தின் இன்ஜினீயர்களால் என்ன கோளாறு என்பதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. 

Sponsored


Sponsored


அந்த நிறுவனத்துக்கு இரண்டு பேர் உரிமையாளர்கள். ஒரு சரக்குக் கப்பல் சரக்கை ஏற்றுவதற்காகவும் இறக்குவதற்காகவும் கரையில் நிற்கலாமே தவிர, சும்மா நிற்கக் கூடாது. அது நிறுவனத்துக்கு இழப்பு. கப்பல் கடலில் தொடர்ந்து பயணம் செய்தால்தான் நிறுவனத்துக்கு ஆதாயம். இப்போது பழுதாகி நின்றுபோன இன்ஜின் ஓடினால் போதும் என்றிருந்தது உரிமையாளர்களுக்கு. வேறு வழியில்லாமல் வெளியிலிருந்து இன்ஜினைச் சரிசெய்ய ஆட்களை வரவழைத்துப் பார்த்தார்கள். அவர்களும் வந்து என்னென்னவோ செய்து பார்த்தார்கள்; இன்ஜின் மட்டும் கொஞ்சம்கூட அசையாமல் அப்படியே நின்றுகொண்டிருந்தது. இன்ஜின் சரியாகவில்லையே என்கிற கவலையிலேயே நாளுக்கு நாள் நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு பிரஷர் எகிறிக்கொண்டே போனது.  

இந்தநிலையில்தான் ஓர் அதிகாரி தகவல் ஒன்றைத் தயங்கித் தயங்கிச் சொன்னார்... ``சார்... நார்விச் (Norwich) நகரத்துல வயசானவர் ஒருத்தர் இருக்காராம். சின்ன வயசுலருந்தே பல கப்பல் இன்ஜின்களைச் சரி பண்றதையே தொழிலா செஞ்சவராம். ஓடாம நிக்கிற எப்பேர்ப்பட்ட இன்ஜினையும் ஓடவெச்சுடுவாராம்... அவரை வேணா வரச் சொல்லலாமா?’’ 

ஓர் உரிமையாளர் கேட்டார்... ``ரொம்ப ஃபீஸ் வாங்குவாரோ?’’ 

``கொஞ்சம் அதிகமாத்தான் கேட்பாருனு சொல்றாங்க...’’ 

இன்னோர் உரிமையாளர் சொன்னார்... ``அதனால பரவாயில்லை. இன்ஜின் ஓடினா போதும். வரச் சொல்லுங்க.’’ 

அந்த முதிய இன்ஜினியரை அழைத்துவர நிறுவனத்திலிருந்து இரண்டு ஊழியர்கள் உடனே கிளம்பிப் போனார்கள். அடுத்த நாளே அவரும் வந்துவிட்டார். அவருடைய தோளில் ஒரு பெரிய பை தொங்கிக்கொண்டிருந்தது. பார்த்தாலே உபகரணங்களை வைத்திருக்கும் பை (Tool Bag) என்பது புரிந்தது. அவர் யாரிடமும் எதுவும் பேசாமல் நேராக கப்பல் இன்ஜினுக்கு அருகே போனார். இன்ஜினின் தலை முதல் கால் வரை அங்குலம் அங்குலமாக கவனமாக ஆராய்ந்தார். 

நிறுவனத்தின் உரிமையாளர்கள் இருவரும் அவரின் நடவடிக்கைகளையே கவனித்துக்கொண்டிருந்தார்கள். அவர் நடவடிக்கைகளைப் பார்க்கப் பார்க்க இன்ஜின் கோளாறை அவர் சரிசெய்துவிடுவார் என்றே அவர்களுக்குத் தோன்றியது. எல்லாவற்றையும் ஆராய்ந்த பிறகு அந்த முதியவர் தன் உபகரணப் பையைத் திறந்தார். அதிலிருந்து ஒரு சின்ன சுத்தியலை எடுத்தார். இன்ஜினின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சுத்தியலால் லேசாக ஒரு தட்டுத் தட்டினார். உடனே சுத்தியலை பின்னுக்கு இழுத்தும்விட்டார். அவ்வளவுதான்... கப்பல் இன்ஜின் பழையபடி சீராக ஓடத் தொடங்கிவிட்டது. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கப்பல் நிறுவன உரிமையாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் ஆச்சர்யம் தாங்கவில்லை. 

அந்த முதியவர் ``நான் வீட்டுக்கு போய் பில் அனுப்புறேன்...’’ என்று சொன்னார். கிளம்பிவிட்டார். 

இரண்டே நாள்களில் அவர் இன்ஜினை சரி செய்ததற்கான பில் வந்தது. மொத்தம் 10,000 யூரோ பணம் கேட்டிருந்தார் அவர். கப்பல் உரிமையாளர்கள் அதைப் பார்த்துக் கடுப்பாகிவிட்டார்கள். பலரால் சரிசெய்ய முடியாத கோளாறுதான். ஆனால், ஒரு சின்ன சுத்தியலால் ஒரேயோர் இடத்தில் தட்டியதற்கு 10,000 யூரோ என்பது அதிகமில்லையா? இதை அப்படியே ஒரு கடிதமாக எழுதி, முதியவருக்கு அனுப்பி விளக்கம் கேட்டார்கள். 

அடுத்த இரண்டு நாள்களில் அந்த முதிய இன்ஜினியரிடமிருந்து பதில் வந்தது. ``நீங்கள் கேட்டிருக்கும் விளக்கம் நியாயமானதுதான். விளக்கம் இங்கே... சுத்தியலால் தட்டியதற்கு கூலி வெறும் 2 யூரோதான். ஆனால், எங்கே தட்ட வேண்டும் என்று நான் தெரிந்துவைத்திருப்பதற்கான கூலி 9,998 யூரோ.

***  
 Trending Articles

Sponsored