நீரூற்று... இல்ல இல்ல எரிமலை வெடிப்பு... வைரல் ஆன 1969-ன் புகைப்படம்!



Sponsored



பார்ப்பவர்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் வகையில் கடலுக்கு நடுவே ஆரஞ்சு நிறத்தில் குமிழ்களால் நிறைந்த நீருற்று போன்ற ஒளிப்படத்தை யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் கணக்கெடுப்பு மையம் (U.S. Geological Survey) தனது ட்விட்டர் பக்கத்தில் சென்ற வாரம் பதிவிட்டது. பழைய நினைவுகளை நினைத்துப் பார்க்கும் வகையில் த்ரோபேக் தர்ஸ்டே (Throwback Thursday #TBT) எனும் ஹேஷ்டேகில் இந்த ஒளிப்படத்தைப் பகிர்ந்திருந்தது USGS. உண்மையில் அது ஆரஞ்சுக் குமிழ்களாலான நீருற்று இல்லை. அது ஒரு எரிமலை வெடிப்பு. 48 ஆண்டுகளுக்கு முன்பு ஹவாய்த்தீவின் கிலாயூ எரிமலையில் (Kilauea Valcano) ஏற்பட்ட வெடிப்பு. 

ஹவாய்த்தீவானது சுற்றுலாவுக்குப் பெயர் பெற்ற அளவுக்கு எரிமலைகளுக்கும் பெயர் பெற்றது. பெரியத்தீவான ஹவாய்த்தீவை சுற்றிலும் எரிமலைகள் நிறைந்திருக்கின்றன. அவற்றில் ஒன்றான கிலாயூ எரிமலை 24 மே, 1969-ல் வெடிக்கத் தொடங்கியது. அதன் மாக்மாவும் எரிமலைக்குழம்பும் எரிமலையில் இருந்து வெடித்துத் திரண்டு ஓடின. ஆனால் மற்ற எரிமலைகளைப் போல அல்லாமல் ஒரே சீராக வெடித்து வழிந்து ஓடின. அதனால் கிலாயூ எரிமலையைத் தூரத்தில் இருந்து பார்க்கும்போது ஆரஞ்சுக்குமிழ்களாலான நீருற்று போன்று காட்சி தந்தன. அப்போது எடுக்கப்பட்ட படம்தான் இப்போது வைரல் ஆகியுள்ளது. எரிமலை முகட்டில் இருந்து மாக்மாவும் எரிமலைக்குழம்பும் சீராக வழிந்தோடியதால்தான் இந்தத் தோற்றம் கிடைத்ததும் என்றும் இப்படி ஒரு சீரான எரிமலை வெடிப்பு அரிதாகத்தான் நிகழக்கூடியது எனவும் எரிமலைகளைக் கண்காணிக்கக்கூடிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

24 மே, 1969-ல் தொடங்கிய எரிமலை வெடிப்பு ஜூலை 22, 1974 வரை நீண்டது. ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள், சரியாக சொல்லப்போனால் 1774 நாள்கள் எரிமலை வெடிப்பு தொடர்ந்து நிகழ்ந்தது. அப்போது, அதிக நாள்கள் தொடர்ந்து எரிமலை வெடிப்பை ஏற்படுத்திய நிகழ்வு இதுதான். ஆனால் இந்தச் சாதனையை அடுத்த 9 வருடங்களில் வெடிக்க ஆரம்பித்த 'புஒ' எரிமலை முகப்பு (Pu‘u ‘Ô‘ô eruption) கைப்பற்றிக்கொண்டது. 1983-ல் வெடிக்கத் தொடங்கிய அந்த எரிமலை இன்று வரை அணையாமல் இருக்கிறது. ஆனால், இதைவிட கிலாயூ எரிமலையில் ஏற்பட்ட வெடிப்புதான் இன்றும் நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் இருக்கிறது. அதற்குக் காரணம் புகைப்படத்தில் பார்ப்பதுபோல அப்போதைய நாள்களில் இந்த எரிமலை வெடிப்பை பொதுமக்கள் பலரும் தூரத்தில் இருந்து பயமில்லாமல் கண்டு களித்திருக்கிறார்கள். படத்தில் நாம் பார்ப்பதுபோல எரிமலையில் இருந்து வழிந்தோடிய எரிமலைக்குழம்புகள் கடலுக்குப் போகவில்லை அதற்குக் கீழே நிலப்பரப்பு இருக்கிறது. ஆனால், கடல் மட்டத்தில் அது மட்டும் தனியாக இருப்பது போன்ற தோற்றம் புகைப்படத்தை இன்னும் அழகாக்கியுள்ளது. 

Sponsored


Sponsored


ஐந்து வருடங்களாக கிலாயூ எரிமலையில் ஏற்பட்ட வெடிப்பு மௌனா உலு வெடிப்பு (Mauna Ulu Eruption) என்றும் அறியப்படுகிறது. இப்படியான தொடர்ச்சியான எரிமலை வெடிப்பு கடந்த 2,200 ஆண்டுகளில் நிகழ்ந்ததே இல்லை என்கின்றனர் எரிமலை ஆய்வாளர்கள். ஐந்து வருடங்களில் ஏற்பட்ட இந்த எரிமலை வெடிப்பின் மூலம் 350 மில்லியன் கியூபிக் மீட்டர் எரிமலைக் குழம்பு வெளியாகியது. இது ஏறக்குறைய 1,40,000 ஒலிம்பிக் போட்டிக்கான நீச்சல் குளங்களின் கொள்ளளவு. அதன்பின் ஏற்பட்ட 'புஒ' எரிமலை வெடிப்புகூட இவ்வளவு சீராகவும் மக்கள் பார்ப்பதற்கு ஏதுவாகவும் இருக்கவில்லை. 

ஒரு எரிமலையானது வெடிக்க ஆரம்பித்தப் பிறகு அதன் எரிமலைக்குழம்புகள் பல அடி உயரத்துக்கும் செல்லக்கூடியது. ஏறக்குறைய 500 மீட்டர் உயரத்துக்குக்கூட செல்லும். அதற்கு நேர் எதிராக பத்து, இருபது மீட்டர் உயரத்துக்குக்கூட செல்லும். மௌனா உலு வெடிப்பில் 12 எரிமலை ஊற்றுக்கும் மேற்பட்ட வெடிப்பு நிகழ்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஏறக்குறைய 70 மீட்டர் அளவுக்கு எரிமலைக்குழம்பு உயர்ந்து வழிந்தோடியுள்ளது. இந்தப் புகைப்படத்தில் எரிமலைக்குழம்பு 20 மீட்டர் உயரத்துக்கு உயர்ந்துள்ளது. 

எரிமலை வெடிப்பு என்றாலே ஆக்ரோஷமான, பயத்தை ஏற்படுத்தக்கூடிய பிம்பங்கள்தான் நம்மிடையே இருக்கின்றது. ஆனால், எரிமலை வெடிப்பைப் பற்றிய அழகியலான ஒரு பிம்பத்தை இந்தப் புகைப்படம் நமக்குத் தருகிறது. இப்போதும் ஹவாய்த்தீவானது ஆரஞ்சு அலர்ட் எனப்படும் பதற்ற சூழ்நிலையில்தான் இருக்கிறது.



Trending Articles

Sponsored