குதிரைக்குச் செயற்கை கால்... மாட்டுக்கு வீல் சேர்... ஒரு மிருகநேய சரணாலயம்!Sponsoredகுறுக்கும் நெடுக்குமாய் ஆடுகளும், மாடுகளும் பண்ணைக்குள் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றன. வாக்கி டாக்கி வைத்திருக்கும் அந்த நபர் ஆடுகளை நோக்கி நடந்து செல்கிறார். நேராக நடந்து வந்தவர் பக்கத்தில் இருக்கும் அறைக்குள் செல்கிறார். அங்கிருந்து இரண்டு சக்கரம் பொருந்திய ஸ்ட்ரெச்சர் வடிவிலான சிறிய வண்டியை இழுத்து வருகிறார். இது மனிதர்களுக்கான வண்டி அல்ல... அவர்கள் வளர்க்கும் வீட்டு விலங்குகளுக்கானது. அந்த வண்டியில் பெல்ட்டு மாட்டப்பட்டிருக்கிறது. அதில் முன்னங்காலை இழந்த வெள்ளை நிற ஆடு ஒன்று தூக்கி அமர்த்தப்படுகிறது. ஆடு வண்டியிலிருந்து விழுந்துவிடாத வண்ணம் பெல்ட்டுகள் கட்டப்படுகின்றன. பெல்ட்டுகள் கட்டப்பட்டவுடன் அந்த ஆடு நகர்ந்து சென்று புற்களை மேய ஆரம்பிக்கிறது. இதேபோல கால்களை இழந்த நாய்கள், ஆடுகள், பன்றிகள், குதிரைகள் எனப் பல விலங்குகளும் இப்படித்தான் தங்களது தினசரி வேலையைத் தொடங்குகின்றன. இப்படிப் பல விலங்குகளைப் பாதுகாத்து வருகிறது, நியூயார்க்கில் உள்ள உட்ஸ்டாக் பண்ணை விலங்குகள் சரணாலயம்.  

  இந்தப் பண்ணை விலங்குகள் சரணாலயம் 200-க்கும் மேற்பட்ட விலங்குகளைப் பராமரித்து வருகிறது. இதன் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் ஜென்னி ப்ரவுன் பேசும்போது, `இதை நான் கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை. நாம் எப்படி நல்ல வாழ்வு வாழ்கிறோமோ அதேபோல விலங்குகளும் நல் வாழ்வைப் பெற வேண்டும். அதில் ஊனமுற்ற விலங்குகளின் நிலையோ இன்னும் மோசமானதாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட விலங்குகளை மீட்டெடுத்து அவற்றுக்கு மறு வாழ்வு அளிக்கவே இந்தச் சரணாலயம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு ஒவ்வொரு விலங்குக்கும் செல்லப்பெயர் வைத்துக் கூப்பிடுவது வழக்கம். ஒட்டகச் சிவிங்கி முதல் பண்ணையில் வளர்க்கக்கூடிய பல விலங்குகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. நாங்கள் பாதுகாத்து வரும் விலங்குகள் அனைத்துமே மிக மோசமான சூழ்நிலையில் வளர்க்கப்பட்டவை. அவற்றைப் பிடித்து வரும்போது பார்க்க பரிதாபமாக இருக்கும். அவற்றுக்கு முறையான மருத்துவ சிகிச்சை கொடுத்த பின்னர் முழுமையாகப் பண்ணைக்குள் சென்று சுற்ற ஆரம்பிக்கும். இந்தச் சரணாலயப் பண்ணையின் அளவு பெரியதாக இருப்பதால் ஒவ்வொரு ஊழியருக்கும் வாக்கி டாக்கி கொடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விலங்குகளுக்குச் செயற்கை கால்கள் பொருத்துகிறோம். ஒரு கால் முழுவதுமாகச் சேதமடைந்திருந்தால் வீல் சேர் பொருத்துகிறோம். இவை எல்லாமே நாங்கள் கற்றுக்கொண்ட அறிவியலின் வெளிப்பாடுதான்.  

Sponsored


Sponsored


விலங்குகளுக்குத் தேவையான செயற்கைக் கால்களை நாங்களே தனியாக ஆய்வுக் கூடத்தை வைத்து உருவாக்கிக் கொள்கிறோம். இது 3டி முறையில் ஆடுகளுக்குப் பாதிப்பை ஏற்படாதவாறு தரமாக உருவாக்கப்படுகிறது. அதேபோல கடந்த சில நாள்களுக்கு முன்னர் இரண்டு கால்களை இழந்த ஒரு மாட்டை மீட்டுக்கொண்டு வந்தோம். அதற்கு இரண்டு செயற்கைக் கால்களை எங்கள் ஆய்வகத்தின் மூலம் உருவாக்கிக்கொடுத்திருக்கிறோம். இப்போது அந்த மாடு மற்ற மாடுகளைப் போலவும் உணவை எடுத்துக்கொள்கிறது. விலங்குகளுக்கு முழுமையான அமைதியான வாழ்க்கையைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களின் முழுமையான நோக்கம்" என்கிறார். 

இந்தப் பண்ணை சரணாலயத்தில் ஒவ்வொரு விலங்குகளும் தனித்தனியாக கவனிக்கப்பட்டு வருகிறது. அதேபோல இங்கு வளரும் விலங்குகளை ஆர்வமாகத் தத்தெடுத்து வளர்ப்பவர்கள் வளர்க்கலாம். 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தச் சரணாலயம் இப்போது வரை விலங்குகளின் நல்வாழ்விற்காகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. உள்ளே சுற்றிப்பார்க்க வாகனமும் ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த வாகனத்தின் மூலம் ஒவ்வொரு விலங்குகள் வசிக்கும் இடத்திற்குச் சென்று வரலாம். ஒவ்வொரு நாளும் பார்வையாளர்கள் அதிகரித்தபடியே இருக்கின்றன. விலங்குகளும் பார்வையாளர்களைக் கண்டவுடன் அவர்களுடன் கொஞ்சி விளையாடுகிறது. பலரும் இவ்விலங்குகளுடன்  செல்பி எடுத்து இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.  

 அனைத்து விலங்குகளையும் ஒரே இடத்தில், அதற்கேற்றவாறு சூழல்களை உருவாக்கிக் கொடுத்து வருகிறது உட்ஸ்டாக் பண்ணை விலங்குகள் சரணாலயம். இந்த மிருகநேயம் மனிதநேயத்தை விடவும் சிறந்தது. இவர்களுக்கு வாழ்த்துகளைச் சொல்லிவிடுவோம்.Trending Articles

Sponsored