அடுத்த கதை எப்ப வரும் ரியா? யூ-டியூபில் கதை சொல்லி அசத்தும் குட்டிப்பெண்! #StoryTellerSponsoredபாட்டி சுட்ட வடையைக் காக்கா தூக்கிச் செல்லும் கதையை உங்களால் எத்தனை நிமிடங்கள் சுவையாகச் சொல்ல முடியும்? அதிகபட்சம் 3 நிமிடங்கள். ஆனால், ஒன்றாம் வகுப்பிலிருந்து இரண்டாம் வகுப்புக்குச் செல்லும் குட்டிப் பெண் ரியா அந்தக் கதையை எட்டு நிமிடங்களுக்குச் சொல்கிறாள். ஒரு நொடிகூட நாம் வேறு பக்கம் திரும்பி விட முடியாமல், அவ்வளவு சுவாரஸ்யமாக, அவளே உருவாக்கிய புதிய திருப்பங்களுடன் அசத்துகிறாள் புதிய கதை சொல்லி ரியா.  ' Rea Svm Stories' எனும் பெயரில் யூ டியூப் சேனல் தொடங்கி, தனது குட்டிக்குட்டிக் கதைகளை ஷேர் செய்திருக்கிறாள். 

ஒரு கதையைச் சொல்வது பெரிய விஷயமல்ல. ஆனால், பார்வையாளர்களை அக்கதையைக் கேட்கும் மனநிலைக்குத் தயார் செய்வது ரொம்பவே முக்கியம். ரியா தனது வீடியோக்களில் அதைத்தான் முதலில் செய்கிறாள். 

Sponsored


`என்ன.... எல்லோரும் கதை கேட்க வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க போல... சரி..சரி. கதை சொல்லட்டா.... " என விழிகளை அகலத்திறந்துகொண்டே கேட்பது அவ்வளவு அழகு. அதன்பின், `ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்தார்களாம்....' எனத் தொடங்கி, 'ஆனா இந்தக் கதை... காக்கா வடையைத் தூக்கிட்டு போன கதைன்னு நினைச்சிடாதீங்கன்னு..." என்கிறார். நாமும் புதிய கதையோ என நினைத்துக்கேட்டால், காக்கா வடையைத் தூக்கிட்டு போன கதையைத்தான் சொல்கிறாள். ஆனால், அதில் ஏராளமான மாற்றங்கள். முதல் மாற்றமே காக்காவால் பாட்டியை ஏமாற்றி வடையைத் தூக்க முடியவில்லை. நரியின் துணையோடு பாட்டிக்கு உதவி செய்துதான் வடையைப் பெற்றுக்கொள்கிறது. சரி அவ்வளவுதான் என நினைத்தால், கதையை நீட்டுகிறாள் ரியா. பாட்டியோட கடையில் காக்காவும் நரியும் வேலைக்குச் சேர்கின்றன. காக்காவின் வேலை என்னவென்றால், பாட்டி வடையைச் சுட்டு வைத்து நேரமானால் ஆறிவிடும் அல்லவா.... அதனால், காக்கா கடையைச் சுற்றி பறக்க வேண்டும். வடை வாங்க யாரேனும் வருவதுபோல இருந்தால் பறந்து வந்து பாட்டியிடம் சொல்லிவிட வேண்டும். பாட்டி உடனே வடையைச் சுட்டு, வாடிக்கையாளருக்குச் சுடச் சுடக் கொடுப்பார். நரிக்குக் கொடுத்திருக்கும் வேலையோ ரொம்ப சுவாரஸ்யமானது. அதை நீங்கள் வீடியோவில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 

Sponsored


ரியா கதை சொல்லும் விதம் நமக்கு அவரை ரொம்பவே பிடிக்க வைத்துவிடுகிறது. கதை இப்போது முடிந்துவிடும் என நினைத்தால் நீட்டிக்கொண்டே செல்வது, கதையின் போக்கிலிருந்து வேறு பக்கம் சென்றுவிடாமல் நேர்த்தியாகச் சொல்வது இடையிடையே எச்சில் விழுங்குவதற்கு இடைவெளிவிடும் அழகு.... எனச் சொல்லிக்கொண்டே போகலாம். சென்னையில் வசிக்கும் ரியாவிடம் பேசுவதற்கு என அவரைத் தொடர்புகொண்டால், அவரின் அம்மா ராதா பேசினார். நேரில் வந்தால்தான் ரியா பேசுவாள்; என்று சொல்லிவாறே பேசுகிறார் ராதா. 

"தினமும் தூங்கும் கதைகள் கேட்பது அவளது வழக்கம். ஒரு நாளைக்கு மூன்று கதைகள் எனக் கணக்கு வைத்திருக்கிறாள். எனக்கும் சில கதைகள்தான் தெரியும். சொன்ன கதைகளையே திரும்ப திரும்பச் சொல்வது எனக்கே அலுப்பாக இருந்தது. அதனால், சிறுவர்களுக்கான கதை புத்தகங்களைத் தேடி படித்தேன். அந்தக் கதைகளை கொஞ்சம் மாற்றிச் சொன்னது அவளுக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. 

ஒருநாள், என்னுடைய மொபைலில் செல்ஃபி வீடியோவில் ரியாவே கதை ஒன்றைச் சொல்லி பதிவு செய்திருந்தாள். வீட்டில் உள்ள எல்லோருக்கும் அந்த வீடியோ பிடித்துவிட்டது. அதனால் அதை யூ டியூபில் பதிவேற்றினேன். அதைப் பார்த்ததும் என் உறவினர்கள், ஆபிஸில் பணிபுரியும் நண்பர்கள் என எல்லோரும் பாராட்டினார்கள். அந்த உற்சாகத்தில் அடுத்தடுத்த வீடியோக்களைப் பதிந்துவருகிறேன். 

இப்போது புதிய அப்பார்ட்மெண்டில் குடிவந்துள்ளோம். இங்கும் ரியா கதை சொல்லும் வீடியோ பற்றிக் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். 'அடுத்த கதை எப்ப ரியா?' என்பதைத் தினமும் நான்கைந்து முறையாவது அவளைப் பார்த்து கேட்டுவிடுகிறார்கள். அவளும் ஆர்வமாக இருக்கிறாள். தமிழில் ஆர்வமாக கதைகளைப் படிக்கிறாள். அதனால் இன்னும் சூப்பரான கதைகள் சொல்வாள் என நானும் எதிர்பார்க்கிறேன்" என்றார். 

ரியாவின் அம்மா ராதா வங்கிப் பணியிலும் அப்பா செந்தில் வேல்முருகன் தனியார் நிறுவனத்திலும் வேலைபார்க்கிறார்கள். ரியாவின் மூன்று வயது தம்பி கிருஷ், அவனும் கதைகள் கேட்க ஆர்வமாக இருக்கிறாராம். ஆக, ரியா வீட்டில் இன்னொரு கதை சொல்லியும் தயாராகி வருகிறார்.

ரியாவின் கதை பயணம் இன்னும் பலரை இணைத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் செல்லட்டும். Trending Articles

Sponsored