குட்டி யானை நலம்பெற காணிக்கை செலுத்திய மாவூத்..! - ஒரு கும்கி உருவாவது எப்படி? அத்தியாயம் 8Sponsoredதாய் யானை குட்டி யானையை விட்டுப் பிரியவே பிரியாது, எப்போதும் தன்னுடைய கால்களுக்குள் வைத்துப் பாதுகாத்து அழைத்துச் செல்லும். தாய் யானையோடு இருக்கிற மற்ற யானைகளும் கவனத்துடன் குட்டி யானையைப் பார்த்துக்கொள்ளும். எதிரிகளால் ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் மொத்த யானைகளும் குட்டி யானையை நடுவில் வைத்துச் சுற்றி நின்று பாதுகாக்கும். எதிரிகளை எச்சரிக்கை குழுவில் இருக்கிற ஒரு யானை மட்டும் முன்னோக்கி வந்து தும்பிக்கையை தூக்கி எச்சரிக்கும்.

முதுமலையில் ஒரு காட்டு யானைக் கூட்டத்தைச் சந்திக்கும்படியான சூழ்நிலை அமைந்தது. நான்கு காட்டு யானைகள் கூட்டமாக அங்கிருந்த தண்ணீர்த் தொட்டியில் நீர் அருந்திவிட்டு வந்திருந்தன. நாங்கள் சென்றிருந்த வாகனத்தைப் பார்த்ததும் இயல்புக்கு மாறாக நடந்துகொண்டன. நன்கு கவனித்துப் பார்த்ததில் கூட்டத்தில் குட்டி யானை ஒன்று இருந்தது. மொத்தக் கூட்டமும் குட்டி யானையைப் பாதுகாப்பதில் கவனமுடன் இருந்தன. கூட்டத்திலிருந்த ஒரு யானை எங்களை எச்சரிக்கும் விதமாக முன்னோக்கி வந்து தும்பிக்கையை தூக்கி எச்சரித்துவிட்டு மீண்டும் கூட்டத்தோடு போய்ச் சேர்ந்துகொண்டது. குட்டி யானை தாயின் கால்களுக்கு இடையே பாதுகாப்பாய் இருந்தது. அவற்றைத் தேவையில்லாமல் அச்சுறுத்த வேண்டாமென்பதால் நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம். அப்போது எங்களை எச்சரித்த அதே யானை "பயப்படாத ஒண்ணும் இல்லை" என்பது போல குட்டி யானையின் கண்களை தன்னுடைய தும்பிக்கையால் மூடி மறைத்தது. குட்டி யானை கூட்டத்துக்கு மத்தியில் பாதுகாப்பாய் இருந்தது.

Sponsored


Sponsored


முந்தைய அத்தியாயம்

குடும்பத்தைப் பாதுகாப்பதில் பெண் யானைகளுக்கே முக்கிய பங்கு இருக்கிறது. ஆண் யானையாகவே இருந்தாலும் ஒன்பதிலிருந்து பன்னிரண்டு வயது வரை கூட்டத்தில்தான் இருக்கும். ஆண் யானை பருவம் வந்ததும் கூட்டத்திலிருந்து துரத்திவிடப்படும் அல்லது தனியாக கிளம்பிவிடும். அது வரை தாய் மற்றும் குடும்பத்தால் பாதுகாக்கப்படும். ஒருவேளைத் தாய் யானை, குட்டி யானையைப் பிரிந்து விட்டால் வனத்துக்குள் தேட ஆரம்பிக்கும். குட்டி யானையின் வாசனையை முகர்ந்து அதன் பயண வழியில் பயணித்து தேடும். தாயிடமிருந்து பிரிகிற குட்டி யானை வழித் தவறி தோட்டத்துக்குள்ளும், கிராமங்களுக்குள்ளும் வந்துவிடும். அப்படியான நேரங்களில் குளத்திலும், குழியிலும் விழுந்து விடும். யானைக் குட்டி குழியில் விழுந்த தகவல் அறிகிற வனத்துறையினர் குட்டியை மீட்டு சிகிச்சையளித்து மீண்டும் வனத்துக்குள் விடுவார்கள். தாயைத் தேடி வனத்துக்குள் செல்கிற குட்டி யானையை எந்த யானைக் கூட்டமும் சேர்த்துக்கொள்ளாது. காரணம் குட்டி யானையின் மீது வரும் மனித வாசனை. இதனால் வனத்தில் தனியாக திரிகிற குட்டி யானையைக் காட்டு விலங்குகள் தாக்க ஆரம்பிக்கும், அவற்றிலிருந்து தப்பிக்கிற குட்டி யானை மீண்டும் கிராமத்துக்குள் வந்துவிடும். அப்படி தாயிடமிருந்து பிரிந்து செந்நாய்களிடம் சிக்கிப் பலத்த காயங்களுடன் கிராமத்துக்குள் வந்த குட்டி யானையைப் பார்த்துக்கொள்ளத்தான் பொம்மன் என்கிற மாவூத்தை முதுமலையிலிருந்து தேன்கனிக்கோட்டைக்கு அனுப்பியிருந்தார்கள். 

முதுமலையில் முப்பது ஆண்டுகளாக மாவூத்தாக இருப்பவர் பொம்மன். முதுமலை கள இயக்குநர் குட்டி யானையைப் பார்த்துக்கொள்ள பொம்மனை அய்யூருக்கு அனுப்பி வைக்கிறார். பொம்மன் போய்ப் பார்த்தபொழுது குட்டி யானை உடல் முழுதும் செந்நாய்கள் கடித்த காயங்களுடன் இருந்தது.

செந்நாய்கள் கடித்ததில் குட்டி யானையின் கால்கள் உடல் பகுதி இடங்களில் காயம் இருந்தது. யானைக்குச் சிகிச்சையளித்து அதன் உடல் ஆரோக்கியத்தைச் சீராக்கினால் மட்டுமே மேற்கொண்டு குட்டி யானையை வேறு இடத்துக்கு அழைத்துச் செல்ல முடியும். குட்டி யானைக்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் பொம்மன் கவனித்துக்கொள்கிறார்.  கால்நடை மருத்துவர் பிரகாஷ் என்பவரும் உடனிருந்து சிகிச்சையை மேற்கொள்கிறார். குட்டி யானை மிகவும் சோர்வாக காணப்படுகிறது. தன்னுடைய அம்மா மற்றும் குடும்பத்தை பறிகொடுத்த சோகம் அதன் கண்களில் இருக்கிறது. குட்டியின் நிலையைப் பார்த்து வருந்துகின்ற பொம்மன், குட்டி யானையின் மொத்த காயங்களையும் குணப்படுத்தி தன்னோடு முதுமலைக்கு அனுப்பி வைத்தால் நேர்த்திக்கடன் செலுத்துவதாக கடவுளிடம் வேண்டிக்கொள்கிறார். இரவு பகலென கண்விழித்து குட்டியானையை கண்ணும் கருத்துமாக பொம்மன் பார்த்துக்கொள்கிறார். 

சுமார் ஒரு மாத சிகிச்சையில் குட்டி யானை ஆரோக்கியமான நிலைக்குத் திரும்பி வருகிறது. குட்டி யானை பொம்மனிடம் நெருங்கிப் பழக ஆரம்பித்ததும் குட்டி யானையை லாரியின் மூலம் முதுமலை தெப்பக்காடு முகாமுக்குக் கொண்டு வருகிறார்கள். கால்நடை மருத்துவர் பிரகாஷும் உடன் வருகிறார். ஆரோக்கியத்தோடு குட்டி யானையை முதுமலைக்கு அழைத்து வந்ததும் முதல் வேலையாக நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார். ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு வேல் ஒன்றை வாங்கி அவர்களின் குலதெய்வமான பொம்ம தேவருக்குக் காணிக்கை செலுத்துகிறார். 

தெப்பக்காட்டில் இருக்கிற முகாமில் குட்டி யானை வைத்துப் பராமரிக்கப்படுகிறது. குழந்தையைப் பராமரிப்பதைப்போல மிகுந்த கவனமுடன் குட்டி யானை பராமரிக்கப்படுகிறது. பொம்மனுடனே இருக்கிற குட்டி யானைக்குக் காய்ச்சிய பால் கொடுக்கப்படுகிறது. பால் காய்ச்சுவதைப் பார்த்துவிட்டால் குட்டி யானை துள்ளிக் குதிக்க ஆரம்பித்துவிடும். தேங்காயைத் துருவி அதன் துருவலை கலந்து குட்டி யானைக்கு உணவாகக் கொடுக்கிறார்கள். பொம்மனோடு எப்போதும் இருப்பதால் குட்டி யானை எந்தத் தொந்தரவுகளையும் கொடுப்பதில்லை. பொம்மனின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கிறது. காலை மாலை எனக் குட்டி யானையைக் குளிக்க வைக்கிறார்.  காட்டு யானையைப் பிடித்து வந்து கட்டி வைக்கிற கரோலில் குட்டி யானை இரவு நேரங்களில் அடைத்து வைக்கப்படுகிறது. பொம்மன் அதற்குப் பக்கத்திலேயே படுத்துக் கொள்கிறார். குட்டி யானைக்கு ஏதாவது தேவை என்றால் பொம்மன் இருக்கிற இடம் பார்த்து பிளிறும். அல்லது பொம்மனின் கையையும் காலையும் பிடித்து இழுத்துத் தெரியப்படுத்தும். ஒன்றரை வயதை நெருங்கும் குட்டி யானைக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. போதிய பயிற்சியளிக்கப்பட்டு ஐந்து வயதை நெருங்கும்போது குட்டி யானைக்குப் பெயர் வைக்கப்படும். 

முதுமலையில் இருக்கிற பெண் யானை ரதி. அதுவாக இதுவரை குட்டிகளை ஈன்றதில்லை. ஆனால், முதுமலைக்கு வருகிற குட்டி யானைகளை வளர்த்தது ரதி யானைதான். முதுமலையில் வளர்ப்பு யானைகளை இரவில் அவிழ்த்து விட்டு விடுவார்கள். காலையில் அதன் மாவூத் சென்று அழைத்து வருவார். ரதி யானையும் இரவு நேரங்களில் காட்டுக்குள் சென்று விடும். விடியற்காலையில் மீண்டும் முகாமுக்குத் திரும்பி விடும். பல நாள்களாகக் காடுகளுக்குள் போவதும் வருவதுமாக இருந்த ரதி யானை ஒரு நாள் திரும்பி வரும் பொழுது மூன்று வயது ஆண் காட்டு யானை குட்டி ஒன்றை அழைத்துக்கொண்டு வந்தது.

வன அதிகாரிகள் அந்தக் குட்டி யானையை மீண்டும் காட்டுக்குள் அனுப்பி வைக்கிறார்கள். காட்டுக்குள் போகிற குட்டி யானை மீண்டும் அடுத்த நாள் ரதியோடு திரும்பி வந்தது. ரதி யானை குளிப்பது, உணவருந்துவது என வேடிக்கை பார்க்கிற குட்டியானையை மீண்டும் வனத்துக்குள் அனுப்புகிறார்கள். ரதியோடு காட்டுக்குள் போகிற குட்டி யானை காட்டுக்குள் போகாமல் அடுத்த நாள் மீண்டும் ரதியோடு வந்துவிட்டது. வனத்துறை அதிகாரிகள் முதுமலையிலிருக்கிற மாவூத்துகளை அழைத்துப் பேசுகிறார்கள். அப்போது மாறன், குட்டி யானை மீண்டும் மீண்டும் ரதியோடு முகாமுக்கு வந்து விடுவதால் குட்டி யானையை முகாமில் வைத்து வளர்க்கலாம் என்கிறார். குட்டி யானை முகாமில் வளர ஆரம்பிக்கிறது. அதற்குக் கும்கி பயிற்சியும் கொடுக்கப்படுகிறது. மாவூத்துகளின் குலதெய்வமான பொம்ம தேவரின் நினைவாகப் பொம்மன் என்று குட்டி யானைக்குப் பெயர் சூட்டுகிறார்கள். காட்டு யானை என்பதால் அதற்குத் தகுந்த பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

கூடலூர் அருகே உள்ள பிதர்காடு அருகே காட்டு யானை ஒன்று விவசாய நிலங்களுக்குள் புகுந்து  அட்டகாசம் செய்தது. கும்கியை வைத்துப் பிடிக்க வேண்டுமென மக்கள் போராடுகிறார்கள். எத்தனையோ கும்கிகள் முதுமலையில் இருக்க அந்தக் காட்டு யானையைப்  பிடிக்கிற அசைன்மெண்ட்  பொம்மனுக்குக் கிடைக்கிறது. பொம்மனுக்குத் துணையாக சுஜய் மற்றும் உதயன் கும்கி யானைகள் அனுப்பப்படுகின்றன. மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் காட்டு யானையைப் பிடிக்க அதன் மாவூத் மாதனுடன் பிதர்காட்டுக்கு கிளம்புகிறது பொம்மன்.Trending Articles

Sponsored