ஓடும் காரில் மொபைலை சார்ஜ் செய்வது பழசு... காரையே சார்ஜ் செய்வது புதுசு! #ElectrifiedRoadSponsoredகாலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் இந்த இரண்டு வார்த்தைகளும்தான் மனித இனத்தின் தற்போதைய சவால்கள். இவற்றின் விளைவுகளைச் சமாளித்து பூமியைச் சீராக வைக்க வேண்டிய கடமை ஒவ்வொரு நாட்டுக்கும் இருக்கிறது. ஆனால், இதற்கான முன்னெடுப்புகளை எடுப்பது என்னவோ சில நாடுகள்தான். அந்த சில நாடுகளில் எப்போதும் சுவீடன் முன்னணியில் இருக்கிறது. காலநிலை மாற்றத்தைக் கணக்கில் கொண்டு சுவீடன் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அப்படியான ஒரு முயற்சிதான் மின்சார வாகனங்கள் இயங்கும்போதே சார்ஜ் செய்துகொள்ளும் வகையில் மின்மயமாக்கப்பட்ட சாலைகள். 

உலகிலேயே முதன்முறையாக இப்படியான சாலைகளை உருவாக்கியுள்ளனர். மின்சார கார், லாரி போன்ற வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கும்போதே வாகனத்துக்குத் தேவையான மின்சாரத்தை சார்ஜ் செய்துகொள்ளும் வகையில் இந்த மின்மயமாக்கப்பட்ட சாலைகளை வடிவமைத்து வருகின்றனர் சுவீடன் நாட்டின் போக்குவரத்துத் துறையினர். முதற்கட்டமாக ஸ்டாக்ஹோம் விமானநிலையத்துக்கும் லாஜிஸ்டிக் நிலையத்துக்கும் இடையில் 2 கிமீ தூரத்துக்கு மின்மயமாக்கப்பட்ட சாலைகளை அமைத்துப் பரிசோதித்துள்ளனர். இந்த முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளனர். இதற்காக சாதாரணமான சாலைகளின் நடுவே சார்ஜர்களை உடையச் சிறிய மின்மய தண்டவாளங்களைப் பதித்துள்ளனர். இதற்கென மின்சார வாகனங்களின் கீழ்ப்பகுதியில் நகர்ந்து இயங்கக்கூடிய ஒரு கருவியானது பொருத்தப்படுகிறது. மின்சார வாகனங்கள் சாலையின் ஒரு பகுதியில் பதிக்கப்பட்டுள்ள மின்மய தண்டவாளங்களின் அருகே வந்ததும் லொகேஷனைக் கணித்து வாகனங்களின் கீழே பொருத்தப்பட்ட கருவியானது தானியங்கியாக மின்மய தண்டவாளத்துடன் இணைந்து மின்சாரத்தைச் சார்ஜ் செய்துகொள்ள ஆரம்பித்துவிடுமாம். 

Sponsored


Photo - dailymail

Sponsored


இந்த மின்மய தண்டவாளங்கள் சாலையில் 50 மீட்டர், என்ற அளவில் பிரித்து அமைக்கப்பட்டுள்ளன. இதனால் சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் மின்மய தண்டவாளங்களைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த மின்மயமாக்கப்பட்ட தண்டவாளங்கள் அருகிலுள்ள மின்சார கிரிடுகளுடன் இணைக்கப்படுகின்றன. இதனால் மின்சாரமானது தடையின்றி கிடைக்கிறது. எந்நேரத்திலும் வாகனங்கள் சார்ஜ் செய்துகொள்ளலாம். சார்ஜ் செய்யப்படும் மின்சாரத்தின் அளவானது கணக்கிடப்பட்டு அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்குக் கட்டண விவரங்களை அனுப்பிவிடும் மென்பொருள் அமைப்பும் இதனுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. மின்சாரம் சார்ஜ் செய்யப்படும் இந்த மொத்தச் செயல்பாடுகளும் தானியங்கியாகவே நிகழ்வதால் யாருக்கும் எந்தச் சிரமமும் இல்லை. 

``தற்போது நம்மிடையே இருக்கும் மிக முக்கியமான பிரச்னை மரபு சார் எரிபொருள்கள் பயன்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்தி மரபு சாரா எரிபொருள் பயன்பாட்டை அதிகப்படுத்துவதும்தான். முக்கியமாகப் போக்குவரத்தில் மரபு சாரா எரிபொருள்களைப் பயன்படுத்துவதற்கு இருந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்கு இப்போது ஒரு வழி கிடைத்திருக்கிறது" என்கிறார்  eRoadArlanda consortium என்ற நிறுவனத்தின் தலைவர் ஹான்ஸ் சேல். eRoadArlanda consortium இந்த நிறுவனம்தான் மின்மயமாக்கப்பட்ட சாலைகளை சுவீடன் போக்குவரத்துத் துறையின் நிதி உதவியுடன் அமைத்து வருகிறது. 2 கிமீ அளவில் பரிசோதிக்கப்பட்ட இந்த மின்மயமாக்கப்பட்ட தண்டவாளங்கள் சுவீடன் முழுவதும் பதிக்கப்பட இருக்கிறது. வேண்டுமானால் மற்ற நாடுகளுக்கும் இதைச் செய்துகொடுக்கத் தயாராக இருக்கின்றனர். உலக நாடுகளின் மத்தியில் மாசில்லாத ஆற்றலை (Clean Energy) உருவாக்கிப் பயன்படுத்தி வரும் நாடாக இருக்கிறது சுவீடன். சுவீடனின் பிரதமர் ஸ்டீபன் லோஃவென் ( Stefan Löfven), ``முழுவதும் மரபுசாரா எரிபொருள்களைப் பயன்படுத்தும் நாடாக ஸ்வீடன் விரைவில் மாறும்" என்ற அறிவிப்பை 2015ல் வெளியிட்டார். இத்தகைய மிகப்பெரிய முன்னெடுப்பின் பல்வேறு முயற்சிகளின் ஒரு விளைவே இந்தச் சாலைகள். 

மரபுசாரா எரிபொருள்களில் பேட்டரியின்  மூலம் இயங்கும் வாகனங்கள் மட்டுமே தற்போது பரவலாகப் பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால், இத்தகைய வாகனங்களில் நீண்ட தூரத்துக்குப் பயணிப்பதற்கு சார்ஜ் செய்வதில் பிரச்னை இருந்தது. அந்தப் பிரச்னையை இந்த மின்மயமாக்கப்பட்ட சாலைகளின் மூலம் முடிவுக்குக் கொண்டுவரலாம் என்கிறார் ஹான்ஸ் சேல். சுவீடன் முழுக்க 5,00,00 கிமீ தூரத்துக்கு சாலைகள் இருக்கின்றன. இவற்றில் 20,000 கிமீ தூரத்துக்கு இருக்கும் நெடுஞ்சாலைகளில் இந்த மின்மயமாக்கப்பட்ட தண்டவாளங்களைப் பொருத்தினால் வாகனங்களால் நெடுந்தொலைவுக்குப் பயணிக்க முடியும். ஒரு நெடுஞ்சாலைக்கும் மற்றொரு நெடுஞ்சாலைக்கும் உள்ள தூரம் 45கிமீட்டருக்கும் குறைவாகவே இருப்பதால், இதைச் சமாளிக்க முடியும் என்கின்றனர். இன்னும் சிலர் 5000கிமீ தூரத்துக்கு மின்மயமாக்கப்பட்ட தண்டவாளங்களை அமைத்தால் போதும் என்றும் சொல்கின்றனர். 

சாலையின் மேற்பரப்பில் இந்த மின்மயமாக்கப்பட்ட தண்டவாளங்கள் காணப்பட்டாலும் யாருக்கும் மின்சாரத் தாக்கம் ஏற்படாது. ஏனென்றால் மின்மயமாக்கப்பட்ட தண்டவாளங்களின் உள்ளே 6 செமீக்கும் கீழேதான் மின்சாரமானது பாய்கிறது. வெள்ளமோ, உப்புத்தண்ணீரோ சாலையை சூழ்ந்தால் கூட 1 வோல்ட் அளவுக்குத்தான் மின்சாரம் இருக்கும். இதனால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. பேட்டரி  வாகனங்களைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு உகந்தது எனப்  பேசிவரும் நிலையில், அதன் பயன்பாட்டை இன்னும் அதிகப்படுத்தும் முயற்சியாக இதைப் பார்க்கலாம். வாகனங்களிலும் சாலைகளிலும் சிறுசிறு மாற்றங்களைச் செய்வதன் மூலம் கார்பன் உமிழ்வைப் பெருமளவில் கட்டுப்படுத்தலாம். 2030க்குள் சுவீடனின் 70% போக்குவரத்தை மரபுசாரா எரிபொருளைப் பயன்படுத்தும் போக்குவரத்தாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. சுவீடன் காற்றாலை, நீர்வழி ஆற்றலை எடுத்தல், சூரிய ஒளி என மாற்றுச் சக்தியின் மூலமே மின்சாரத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு வழிகளில் வெளியேறும் கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துவதன் மூலம் புவி வெப்பமயமாதலைக்  கட்டுப்படுத்த முடியும். 

Photo - inhabitat

பல்வேறு நாடுகளும் தங்களின் வளர்ச்சிக்காக ஆற்றலையே நம்பியுள்ளன. ஆனால், ஆற்றலை உருவாக்கும் முயற்சியில் புவியை மாசுபடுத்தி வருகிறோம். அதன் விளைவே காலநிலை மாற்றமும், புவி வெப்பமயமாதலும். ஆற்றலைப் பயன்படுத்தி வளர்ந்த நாடுகள்தான் இதற்குப் பொறுப்பு. காலநிலை மாற்றத்துக்கான பாரிஸ் ஒப்பந்தமும் இதைத்தான் கூறுகிறது. ஆனால், அந்தப் பொறுப்பில் இருந்து வளர்ந்த நாடுகள் எளிதாக நழுவிக்கொண்டன. ஆனால், சுவீடன் இதற்கெல்லாம் முன்மாதிரியாக இருக்கிறது. மரபு சாரா எரிபொருள்களைப் பயன்படுத்துவதன் மூலம் கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துவதில் உலகிலேயே தனித்து நிற்கிறது சுவீடன்.Trending Articles

Sponsored