நிர்மலா தேவி விவகாரமும் நோபல் விருது வழங்கும் அமைப்பின் குற்றச்சாட்டும்!Sponsoredஅருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலா விவகாரத்தில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கு தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது. இதைப்போலவே, சர்வதேச அளவில் புகழ்பெற்ற நோபல் அமைப்பும் பாலியல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளால் அதிர்ந்திருக்கிறது. 

ஸ்வீடன் அரசரின் நேரடி நன்கொடையால் தொடங்கப்பட்டதுதான் ஸ்வீடிஷ் அகாடமி. இந்த அமைப்பு, இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்குகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு, ஸ்வீடன் மற்றும் நார்வே அமைப்புகளால்  வழங்கப்படுகிறது.

Sponsored


நிர்மலா விவகாரத்தைப்போல ஸ்வீடிஷ் அகாடமியும் பாலியல் புகாரில் சிக்கியுள்ளது. இந்த விவகாரம் வெளியே தெரிந்தவுடன், இலக்கியத்துக்கான நோபல் விருது பரிந்துரைக் குழுவின் தலைவர் சாரா டானீஷ் பதவி விலகியுள்ளார். இவர், 1786-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஸ்வீடிஷ் அகாடமியின் முதல் பெண் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. ``அகாடமி விரும்பினால், என்னுடைய நிரந்தரச் செயலாளர் பதவியிலிருந்தும் விலகத் தயாராக இருக்கிறேன்" என்று டானீஷ் அறிவித்துள்ளார். இவருக்கு பதிலாக தற்காலிக புதிய தலைவராக, எழுத்தாளரும் பேராசிரியருமான ஆண்டர்ஸ் ஓல்ஸன் நியமிக்கப்பட்டுள்ளார். 

Sponsored


நோபல் அகாடமி கமிட்டியின் உறுப்பினராக உள்ள கட்டாரினா ஃப்ரோஸ்டின்சனின் கணவர் ஜோன் குளோட் அர்னால்ட், நோபல் அகாடமி அமைப்பில் பணியாற்றும் பெண்களுக்கு பாலியல்ரீதியான தொந்தரவு கொடுப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இந்தக் குழுவில் ஆயுள்கால உறுப்பினராக உள்ள ஜோன் குளோட்டின் மனைவி கட்டாரினா ஃப்ரோஸ்டின்சன், ``நோபல் விருது குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து நிரந்தரமாக விலகிக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார். 

ஸ்வீடிஷ் அகாடமி குழுவில் நியமிக்கப்படுபவர்கள், `ஆயுள்காலம் வரை உறுப்பினர் பதவியில் தொடரவே செய்யலாம். பணியிலிருந்து விலக முடியாது. இவர்கள், குழுக் கூட்டத்திலும், முக்கிய முடிவெடுக்கப்படும் கூட்டங்களிலும் பங்கேற்காமல் இருக்கலாம்' என்று விதிமுறை இருக்கிறது. 

கட்டாரினா கணவர் நீண்டகாலமாக ஸ்வீடிஷ் அகாடமியின் துணை அமைப்பான கலாசாரக் குழுவில் உறுப்பினராக இருக்கிறார். இவர் குறித்து புகார் வந்தவுடன், ஸ்வீடிஷ் அகாடமியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஜோன் குளோட்டை நீக்கியிருக்கிறார்கள். உடனடியாக இவர் மீதான குற்றச்சாட்டு குறித்து புலனாய்வு விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளனர். 

``இந்த விவகாரம், நோபல் அமைப்பின் புகழை சீர்குலைக்கும் வகையில் இருக்கிறது" என்கிறார் ஸ்வீடிஷ் ரேடியோ நிறுவனத்தின் கலாசாரப் பிரிவைச் சேர்ந்த மாட்டீயஸ் பெர்க். இவர், ``இலக்கியத்துக்காக வழங்கப்படும் நோபல் பரிசு, உலக அளவில் மிக முக்கியமான பரிசாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில், அகாடமியின் முடிவிலும் ஒருங்கிணைப்பிலும் எந்தவிதமான பின்புல அழுத்தமும் இல்லாமல் செயல்படவேண்டியது அவசியம்" என்று வலியுறுத்தியுள்ளார். 

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நிர்மலா விவகாரத்தில், தேவாங்கர் கல்லூரியில் மாணவிகள் மார்ச் மாதம் 19-ம் தேதி புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், மாணவிகள் பிரச்னை கல்லூரிக்கு வெளியே தெரியாமல் ஒரு மாதமாக கிடப்பில் கிடந்த நிலையில், ஊடகத்தில் ஆடியோ வெளியான பிறகுதான் இந்த விவகாரம் வெளியே தெரியவந்திருக்கிறது. இந்தப் பிரச்னைக்கு தார்மிகப் பொறுப்பேற்று  மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரோ அல்லது வேந்தரோ பதவி விலக முன்வரவில்லை. மாறாக, இருவருமே அவசர அவசரமாக விசாரணைக் குழு அமைக்கவே முனைந்தனர். ஒரு பக்கம் தமிழக காவல் துறையின் மூலம் விசாரணை, இன்னொரு பக்கம் தமிழக ஆளுநர் நியமித்துள்ள முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி விசாரணை என நீண்டுகொண்டிருக்கிறது விவகாரம். 

இரண்டு விசாரணைகளும் முடிந்த பிறகு, `உதவி பேராசிரியர் நிர்மலா மீது எந்தக் குற்றமும் இல்லை. அவர் கணிதப்பாடம் குறித்துதான் மாணவிகளிடம் பேசியிருக்கிறார். அதை நாம்தான் தவறாகப் புரிந்துக்கொண்டிருக்கிறோம்' என்று விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படலாம். தமிழக மக்களுக்கும், அடுத்தடுத்த பரபரப்புக்குள் நிர்மலாவை மறந்துவிடுவார்கள். இங்கு யாருக்கும் தார்மிகப் பொறுப்பு கிடையாது என்பது மட்டும் நிதர்சனம்.

நோபல் அமைப்பில் மட்டுமல்ல, தமிழக உயர்கல்வித் துறையில் நடக்கும் அவலங்களை, தகுந்த நடவடிக்கையின் மூலம் அகற்றவேண்டிய தருணம் இது!Trending Articles

Sponsored