இன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான்... ஒரு சுவாரஸ்ய வரலாறு!மனித இனம் அழிந்துகொண்டே வருகிறது. உலகின் ஆறாவது பேரழிவு தொடங்கிவிட்டது. அதை ஒட்டுமொத்தமாகத் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், தாமதப்படுத்தலாம். அதற்கு உலகம் முழுவதும் மக்கள் அனைவரும் செய்யவேண்டிய முழுமுதற் காரியமாக உலக நாடுகள் கூறுவது, ``உலகின் பசுமைப் போர்வையை அதிகப் படுத்துங்கள்.'' காடுகளும் செடிகொடிகள் போன்ற தாவரங்களுமே மனிதர்களின் சூழலியல் நாசங்களைச் சரிசெய்வதற்கும், புவி கல்லறை ஆவதைத் தடுப்பதற்கும் இருக்கும் ஒரே மருத்துவர். அத்தகைய தாவரங்கள் புவி உருவான தொடக்கத்தில் எப்படி இருந்தன தெரியுமா? அவை தம்மை இந்தப் பூமியில் தக்க வைத்துக்கொள்ள என்ன வகையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன தெரியுமா?

தாவரங்கள் ஒளிச்சேர்க்கை செய்து வாழும் உயிரினமாகவே முதலில் தோன்றிவிடவில்லை. அவை ஆரம்ப கட்டத்தில் நிலவாழ் உயிரினமே கிடையாது. கேம்பிரியன் காலம் (Cambrian period) வரைக்கும் கடலில் வாழ்ந்துகொண்டிருந்த தொல் உட்கரு உயிரி எனப்படும் ஆல்கே (Algae) மாதிரியான ஓரணு உயிரிகள் காலப்போக்கில் கடல் மட்டக்குறைவு காரணமாக நிலத்துக்கு வரத்தொடங்கின. அவை நிலத்தில் வாழத் தேவையான ஊட்டச்சத்துகள் கடலில் இருந்ததுபோல் கிடைக்கவில்லை. அதனால் அவை அங்கு இருக்கும் பாறைகளில் படிந்து அப்பாறையைச் சார்ந்து வாழத்தொடங்கின. அத்தகைய காலத்தில் கடல் மட்டம் மீண்டும் உயரவே கடல் மட்டம் உயர்ந்த பகுதிகளில் வாழ்ந்துகொண்டிருந்த ஓரணு உயிரிகள் மீண்டும் மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டன. அவ்வாறு மாற்றத்துக்கு உள்ளான உயிரினங்கள் நீர்நில வாழ் உயிரினமாக வளர்ச்சி அடையவே அவை தனது இனப்பெருக்கத்துக்காக நீரைச் சார்ந்து வாழத் தொடங்கியது. எப்படி நீரைச் சார்ந்து இனப்பெருக்கம் செய்யமுடியும்?

Sponsored


Sponsored


ஆண் உயிரிகளின் உயிரணுக்களான கேமட்ஸ் (Gametes) நீரில் நீந்தும் திறன் கொண்டவை. அவை நீந்திச் சென்று ஆர்க்கிகோனியா (Archegonia) என்ற அமைப்புக்குள் இருக்கும் பெண் கேமட்டை அடையும். அவ்வாறு மிகுந்த சிரமங்களைச் சந்தித்து இனப்பெருக்கம் செய்து தன்னைத் தக்கவைத்துக்கொண்டு வளர்ந்த நுண்ணுயிரிகள் எப்படித் தாவரங்களாக பரிணாம வளர்ச்சியடைந்தன?

Sponsored


இயற்கை என்றுதான் அமைதியாக இருந்திருக்கிறாள். அவளின் தொடர்ச்சியான மாற்றங்களே புவியை அழகானதொரு பல்லுயிர் வாழ்விடமாக மாற்றியுள்ளது. அதையே அவள் அன்றும் செய்தாள். தொடங்கியது பனி யுகம். பனி யுகம் தொடங்கிய காலத்தில் நீர்நில வாழ்விகளாக மாறிய உயிர்கள் தமக்குத் தேவையான உணவுகளை நீரிலிருந்தோ நிலத்திலிருந்தோ எடுத்துக்கொள்ள இயலாமல் ஒரே இடத்தில் இருந்துகொண்டு குறைவின்றிக் கிடைக்கும் சூரிய ஒளியைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தன. அவ்வாறு வந்தவைதான் பிரையோஃபைட்ஸ் (Bryophytes) மற்றும் ட்ராக்கியோஃபைட்ஸ் (Tracheophytes) என்ற இரண்டு வகைத் தாவரங்கள். இவை இரண்டுமே மைக்ரோ எனப்படும் நுண்ணிய வகைத் தாவரங்கள். பிரையோவில் அதற்குத் தேவையான ஊட்டச்சத்துகளை வெளியில் இருந்து எடுத்து உட்புற உறுப்புகளுக்குக் கொடுப்பது, இன்றைய தாவரங்களில் இருப்பதுபோல் பட்டையம், மரவியம் போன்ற உட்புற உறுப்புகளால் நிகழவில்லை. அதற்கு அந்த உறுப்புகளே இல்லை. அதன் அணுச்சுவர்கள் உயிர்பிழைக்க வேண்டி ஏற்படுத்திய அழுத்தம் காற்றைச் சுவாசிக்க வைத்தது. எந்நேரமும் உயிருக்கான போராட்டத்தோடே வாழ்ந்துகொண்டு இருந்ததால் இவை பெரிதளவில் வளர முடியவில்லை. இன்றைய பாசிகளைப்போல் நுண்ணுயிரிகளாகவே வாழ்ந்தன.

தாவரங்களில் சுமார் 430 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தாவர வகைகளில் முதலில் தோன்றிய இந்தப் பாசி வகைப் பிரையோ உயிரினங்களில் இருந்துதான் இரண்டாவதான ட்ராக்கியோ வகைத் தாவரங்கள் பரிணாம வளர்ச்சி அடையத் தொடங்கின. இதற்கு ஆதாரமாகக் கூறப்படுவது என்னவென்றால் காற்றைச் சுவாசிக்கவும் ஒளிச்சேர்க்கை செய்யவும் தேவையான துளைகள் இரண்டிலுமே இருக்கின்றன. பிரையோ வகைத் தாவரங்களின் தொல்லெச்சங்கள் சுமார் 430 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையதாகவும், ட்ராக்கியோ வகைத் தாவரங்களின் தொல்லெச்சங்கள் சுமார் 350 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையதாகவும் கிடைத்திருப்பதன் மூலம் பிரையோ வகை தான் பிந்தைய வகையின் மூதாதை என்பது புரிகிறது. அதற்காக ட்ராக்கியோ வகைத் தாவரங்கள் வளர்ச்சி அடைய அடையப் பிரையோ முழுமையாக அழிந்துவிட்டதாகக் கூறமுடியாது. முந்தையதில் இருந்து இரண்டாவது பரிணாம வளர்ச்சி அடைந்து இருந்தாலும் இரண்டுமே சம காலத்தில் வாழ்ந்ததற்கான தொல்லெச்சங்களும் கிடைத்திருக்கிறது.

பிரையோவில் இருந்து பிரிந்து வந்த ட்ராக்கியோ வகைத் தாவரங்களே இன்றைய தாவரங்களின் உடல் அமைப்புக்கு மூதாதை என்று கூறலாம். ஏனென்றால், இதில் பட்டையம் மற்றும் மரவியம் போன்ற ஊட்டச்சத்துகளைக் கடத்தும் திசுக்கள் இருக்கிறது. அது மட்டுமின்றி இவற்றின் வளர்ச்சியும் சில மில்லியன் ஆண்டுகள் கடந்த பிறகு கணிசமாக இருந்துள்ளது. காலப்போக்கில் பலவகைகளாகப் பிரிந்து பல்வேறு தாவரங்களாக வளர்ச்சி அடைந்தது இந்த ட்ராக்கியோஃபைட் தாவரங்கள் தான்.

உலகின் முதல் தாவரமான பிரையோஃபைட்கூட நீரில் இருந்து நிலத்துக்கு வந்த ஓரணு உயிரியான தொல் உட்கரு உயிரிகளில் இருந்து தான் பரிணாம வளர்ச்சியடைந்தன. ட்ராக்கியோவில் இருந்து பல்கிப் பெருகிய தாவர வகைகள் காலத்துக்கு ஏற்ப ஆதிக்க உயிர்களாகவும் சார்ந்திருக்கும் உயிர்களாகவும் மாறி மாறிப் பல மாற்றங்களுக்கு உட்பட்டு இன்று பல்லாயிரம் வகைகளில் உலகம் முழுவதும் பரவி பூமியின் கவசமாக விளங்குகிறது. பல மில்லியன் ஆண்டுகளாகப் பல அபாயங்களையும், பல்லாயிரம் மாற்றங்களையும் கண்டு வந்த இந்தத் தாவரங்கள் இன்று மனிதர்கள் கையால் வீழ்ந்துகொண்டிருப்பது ஒரு சோக காவியம். அத்தகைய கவசத்தை நமக்களித்த இயற்கையை மனித இனம் மதிக்காதது மட்டுமன்றி பாதுகாக்கவும் தவறியது வேதனைக்குரியது. சூழலியலாளர் ஒவ்வொருவர் மனதிலும் வேள்வியாய் வெந்துகொண்டிருக்கும் இயற்கை வளச்சுரண்டலுக்கு எதிரான கோபக்கனல் புவியின் மடியைச் சுரண்டுவதால் அவள் படும் வேதனையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.Trending Articles

Sponsored