என் ஆடையைச் செய்தது யார்... ஃபேஷன் புரட்சி வரலாறு தெரியுமா?ஏப்ரல் 23 முதல் `ஃபேஷன் புரட்சி வாரம் (Fashion Revolution Week). 90 நாடுகள் பங்குபெறும் இந்தப் புரட்சி வாரம், மிகவும் கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது. `ஃபேஷன்கிற பேர்ல பலரும் பண்ற அட்டகாசமே தாங்க முடியல. இதுல புரட்சி வேறயா?' என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. ஆனால், இந்தப் புரட்சியின் நோக்கம், மாற்றம் அனைத்தும் மனதை நிச்சயம் நெகிழவைக்கும்.

Sponsored


சம்பவம் நடைபெற்ற ஆண்டு : 2013
நாள் : 23, 24.
இடம் : சவர் உபாஸிலா (Savar Upazila), டாக்கா மாவட்டம், பங்களாதேஷ்.

Sponsored


ஆடை தொழிற்சாலைகள், வங்கி, குடியிருப்புகள், மேலும் பல கடைகள் நிரம்பிய `ராணா பிளாசா' எனும் கட்டடம் அது. சிறுவர்கள் ஆனந்தமாக ஒருபுறம் விளையாடிக்கொண்டிருக்க, மறுபுறம் வங்கிக்கும் அங்கு இருந்த கடைகளுக்கும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அங்கே இருந்த ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையோ மூவாயிரத்துக்கும் அதிகம்.

Sponsored


இந்தப் பரபரப்பான நாளில்தான் சிறியளவு விரிசலை கண்டது அந்தக் கட்டடம். விரிசலைக் கண்டதும், அடிதளத்தில் அமைந்திருந்த வங்கியும், கடைகளும் மூடப்பட்டன. மாலை நேரம், வேலை முடிந்து அனைத்து ஊழியர்களும் சந்தோஷமாக வீடு திரும்பினர். குடியிருப்புகளில் துள்ளி விளையாடிய குழந்தைகளின் கூட்டமும் கலைந்தது. அமைதியான இரவில் கைக்குழந்தையின் அழுகை மற்றும் அலறல் கேட்டுக்கொண்டே உறங்கியது, விரிசலுடைய கட்டடம்.

அடுத்த நாள் காலை 7 மணி. நேரம் ஆகிவிட்டதே என்ற பரபரப்புடன் ஊழியர்கள் அனைவரும் தங்களின் தொழிற்சாலையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர். கடிகாரத்தில் நேரமும் இவர்களுடன் போட்டிபோட்டுக்கொண்டு ஓடியது. சிலரின் கைகளில் கைக்குழந்தைகள் வேறு. 8:57 நிமிடம். அனைவரின் ஓட்டமும் நின்றது. கொஞ்சமும் எதிர்பாராதவிதமாக அந்தக் கட்டடம் முழுவதும் இடிந்து தரைமட்டமானது. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம், ஒட்டுமொத்த உலகையும் உலுக்கியது. கட்டடத்துக்குள் சிக்கி உயிரிழந்தவர்களை மீட்கும் பணி, ஏப்ரல் 24-ம் தேதி தொடங்கி மே 13-ம் தேதி வரை நீடித்தது. இதில் 1,134 பேர் உயிரிழந்தனர். 2,500 பேர் பலத்த காயங்களோடு உயிருடன் மீட்கப்பட்டனர். விரிசல் இருப்பது தெரிந்தும், அதைப் பொருட்படுத்தாமல்போன இந்தக் கட்டடத்தின் உரிமையாளரை என்ன சொல்வது!

இந்தச் சம்பவத்தின் நினைவாகத் தொடங்கியதுதான், `ஃபேஷன் புரட்சி தினம்'. இது லாபமில்லா உலகளாவிய இயக்கம். 2014-ம் ஆண்டு முதல் ஏப்ரல் மாதம்தோறும் பல நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கி, மக்களுக்கு விழிப்புஉணர்வையும் ஏற்படுத்திவருகிறது.

நோக்கம்:

நீங்கள், அன்றாடம் உடுத்தும் உடைகளை யார் செய்திருப்பார்கள் என என்றைக்காவது சிந்தித்ததுண்டா? அப்படிச் சிந்திக்கவைக்கும் முயற்சிதான் இந்தப் புரட்சியின் நோக்கம். உலகின் டாப் 20 பணக்காரர்களில் 6 பேர், ஆடை தொழில்முனைவோர்கள். அந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் தங்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்திசெய்வதற்குக்கூட அவர்களின் தினக்கூலி போதாது. பருத்தி விவசாயிகள், நூல் நூற்பவர்கள், நெசவாளர்கள், சாய தொழிலாளர்கள், துணி தைப்பவர்கள் என இத்தனை தொழிலாளர்களை கடந்துதான் துணி விற்பனையாளர்களின் கைகளுக்கு வந்தடைகிறது. இதில், 80 சதவிகிதத் தொழிலாளர்கள், 18 முதல் 24 வயதுடைய பெண்களே. இதில் பெரும்பாலானவர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள்.  இப்படி வந்தடைந்த ஆடைகளிலிருந்து நாம் தேர்ந்தெடுப்பது எத்தனை? அதிலும் சிறு கடைகள் என்றால் பேரம் பேசாமல் வாங்குவோமா? பொதுமக்கள் இவற்றைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்பதற்காக, ஃபேஷன் புரட்சி இயக்கம், #whomademyclothes எனும் பிரசாரத்தை ஒவ்வோர் ஆண்டும், ஏப்ரல் மாதத்தில் நடத்திவருகிறது. இதில், தங்களின் ஆடை எவ்வாறு உற்பத்தியாகிறது என்பது முதல், தொழிலாளர்களின் நிலைமை வரை அனைத்தும் மக்கள் பார்வைக்குக் கொண்டுவரப்படுகின்றன.

`Who made my Clothes?' அதாவது `யார் என்னுடைய துணியைச் செய்தது?' என்ற பொதுமக்களின் ஹேஷ்டேக் கேள்விக்கு, `I made your clothes.' அதாவது `உங்கள் துணியைச் செய்தது நான்' என்று தொழிலாளர்கள் பலர் பதிலளிப்பதும் இந்தப் பிரசாரத்தின் ஓர் அங்கம்.

அந்த வகையில், 2015-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் நாள் நடைபெற்ற பிரசாரம், சற்று வித்தியாசமானது. `The 2 Euro T-Shirt - A Social Experiment' எனும் டைட்டில்கொண்ட அந்தப் பிரசார வீடியோவில், `இரண்டு யூரோவுக்கு டீ-ஷர்ட் இங்கு இருக்கிறது' என்று எழுதியிருக்கும் ஓர் இயந்திரம், மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் வைக்கப்படுகிறது. `2 யூரோக்கு டீ-ஷர்ட்டா!' என்ற ஆச்சர்யத்துடன் வைக்கப்பட்டிருந்த இயந்திரத்தை நோக்கிச் சென்ற மக்களுக்கு மேலும் ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது. 

அந்த ஆச்சர்யம் என்னவென்று காண, கீழுள்ள காணொலியைக் காணவும். 

இதில், ஆடை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களின் வாழ்க்கைமுறையைப் படமாக்கப்பட்டக் காட்சிகள் அமைந்திருக்கும். `இதன் பிறகும் இந்த ஆடைகளை 2 யூரோவுக்கு வாங்க ஆசைப்படுகிறீர்களா?' என்ற கேள்வியையும் முன்வைத்திருப்பார்கள். அதற்குக் கிடைத்த ஒரே பதில், `இல்லை' என்பதுதான். 6.5 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று இந்தக் காணொலி குறிப்பிட்ட ஆண்டின் `கேன்ஸ் லயன்ஸ் விருதையும்' தட்டிச் சென்றது.

இதேபோல் இந்த ஆண்டும், ஏப்ரல் 23 முதல் 29 வரை `Fashion Revolution Week' கொண்டாடப்பட உள்ளது. #whomademyclothes பிரசாரமும் அமைதியாகத் தொடங்கியது.Trending Articles

Sponsored