வாஷிங்டன்னில் பெய்த 'ஜெல்லி’ மழை... 24 ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத மர்மம்!Sponsoredநள்ளிரவு மூன்று மணி. வாஷிங்டனின் ஓக்விலில் இரவுநேர ரோந்துப் பணியில் இருந்தார் ஒரு காவலர். காரில் அமர்ந்து ஊரைச் சுற்றிக் கொண்டிருந்த அவர், மழை பெய்யத் தொடங்கியதால் கார் கண்ணாடியைச் சுத்தம் செய்யத் துடைப்பானைத் தட்டிவிட்டார். கண்ணாடியில் சிந்திக்கொண்டிருந்தது மழைநீர் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள அவருக்கு வெகுநேரம் பிடிக்கவில்லை. அதற்குக் காரணம் துடைப்பான் துடைக்கத் துடைக்கக் கண்ணாடியில் படிந்துகொண்டிருந்த திரவம் கண்ணாடி முழுக்கப் பரவி வெளியே எதுவும் தெரியாதபடி மறைத்துவிட்டது. என்னவாக இருக்கும் என்ற கேள்வியோடு வெளியேறியவர் அதைக் கையில் எடுத்துப் பார்க்க ஜெல்லி போல கொழகொழவென்று இருந்தது. அது மழைநீரைப் போல் அந்தப் பகுதி முழுக்கப் பெய்துகொண்டிருந்ததை அப்போதுதான் கவனித்தார்.

இது நடந்தது ஆகஸ்ட் ஏழாம் தேதி. 1994 ம் வருடம். வாஷிங்டனில் இருக்கும் ஓக்வில் என்ற ஊரில் மட்டுமே பெய்த மழை இது. அன்றிலிருந்து அடுத்த மூன்று வாரத்திற்குள் ஆறு முறை பெய்த அந்த மழை அவ்வூர் மக்களுக்குக் குமட்டல், தலை சுற்றல், கண் பார்வைக் குறைபாடு, மூச்சுத் திணறல் போன்ற தொந்தரவுகளைத் தந்தது. பூனைகள், நாய்களில் பலவும் இதன் தாக்கத்தால் இறந்தும் போயின. சன்னி பார்க்ளிஃப்ட் ( Sunny Barclift) என்பவரின் தாய் டாட்டி ஹெர்ன் ( Dotty Hearn) தனது வீட்டு வாசலில் விறகுகள் அடைத்து வைத்திருந்த பெட்டியைத் திறக்கப் போனபோது அதில் படிந்திருந்த திரவ மழையின் துளிகளைத் தன் கையால் சுத்தம் செய்திருக்கிறார். அதன்பிறகு சில மணிநேரங்களில் அவருக்குக்  குமட்டல், மயக்க உணர்வு ஏற்படவே அவரை பார்க்ளிஃப்ட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மாதிரிக்கு அந்த ஜெல்லி திரவத்தைக் கையோடு கொண்டு சென்றுள்ளார். இதனால் அவருக்கும் அதே போன்று ஏற்பட்டுள்ளது.

Sponsored


Sponsored


அவர்களைப் பரிசோதித்த டாக்டர் டேவிட் லிட்டில் என்பவர் அந்த திரவத்தைப் பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பினார். அதைப் பரிசோதித்த மைக் என்பவர் அந்தத் திரவத்தில் மனிதர்களுக்கு இருக்கும் வெள்ளை ரத்த அணுக்கள் இருப்பதும், இரண்டு பாக்டீரியாக்கள் இருப்பதும் அதில் ஒன்று மனிதர்களின் ஜீரண மண்டலத்தில் வழக்கமாக இருக்கக்கூடிய ஒன்று என்றும் பதிவு செய்தார். ஆனால், அணுக்களில் அடிப்படையாக இருக்கும் மையக்கரு (Nucleaus) மட்டும் இல்லை என்று கூறியிருந்தார். பரிசோதனை முடிவுகளை ஆராய்ந்த டாக்டர் லிட்டில் அதை வாஷிங்டனின் சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்பினார். அந்த மாதிரியைப் பரிசோதித்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கூறிய கூற்றை உறுதிப்படுத்தினார்கள் ஒன்றைத் தவிர. மையக்கருவும் அதில் இருப்பதை உறுதி செய்தார்கள். அது மட்டுமன்றி அது ஓர் இறந்த உயிரினமாக இருப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம் என்றும் பதிவு செய்திருந்தனர். அதை ஆய்வுசெய்தவர்களில் ஒருவரான ஆஸ்விலர் என்பவர் அது விமானப் பயணிகளின் பதப்படுத்தப்பட்ட கழிவுகள் என்றும் அதுவே அவ்வூர் மக்களுக்கு உடல் உபாதைகளைக் கொடுத்தது என்றும் கூறினார்.

ஆனால், விமானப் பயணிகளின் கழிவுகள் அவ்வாறு நடுவானில் திறந்துவிடப்படுவதில்லை என்றும், அது மட்டுமன்றி அவை பதப்படுத்தப்பட்ட பிறகு நீலச் சாயம் போடப்பட்டுத்தான் வெளியேற்றப் படுவதாகவும் பெடரல் ஏவியேஷன் ஏஜென்ஸி கூறியது.

இது எதனால் மழையாகப் பெய்தது. எங்கிருந்து வந்தது என்ற கேள்விகளுக்கு ஆதாரபூர்வ விடை இதுவரை கிடைக்கவில்லை. பசிபிக் கடல் பகுதியில் ராணுவம் நிகழ்த்திய வெடிகுண்டுப் பரிசோதனைதான் காரணம் என்கிறார்கள் சிலர். அதாவது, அந்த ஊருக்கு அருகில் இருக்கும் பசிபிக் பிராந்தியத்தில் ஏதேனும் ஜெல்லி மீன்கள் கூட்டத்தின் மத்தியில் இந்தப் பரிசோதனை நிகழ்ந்திருக்க வேண்டும். அதனால் பலியான ஜெல்லி மீன்களே இவ்வாறு மேலே காற்றால் கொண்டு செல்லப்பட்டு மழையாகப் பெய்தது என்கிறார்கள். ஆனால் அவ்வாறு அவ்வளவு உயரத்திற்குக் கொண்டு செல்லமுடியுமா என்பதே இன்றுவரை தெரியவில்லை. அதுமட்டுமன்றி அந்த மழை அடுத்த மூன்று வாரங்களில் ஆறு முறை பெய்திருந்தது. ஆயுதப் பரிசோதனை நிகழ்த்தியது உண்மைதான். ஆனால், தொடர்ச்சியாக அப்படி எதுவும் நிகழவில்லை என்றும் பரிசோதனையின் போது மேலே சொன்னது போன்ற மீன்கள் இறப்பு இல்லை என்றும் ராணுவம் உறுதிசெய்தது.

ஒருவேளை அரசாங்கமே ஏதேனும் ரசாயனக் குண்டுகளை ஓக்வில் மீது வீசி பரீட்சித்துப் பார்த்திருக்குமோ என்றுகூட சிலர் சொன்னார்கள். அப்போது அந்தப் பகுதியில் வாழ்ந்த லேஸி என்பவர், ''நான் அதைக் கையில் கூடத் தொடவில்லை, கிளவுஸ் போட்டுக்கொண்டுதான் சுத்தம் செய்தேன். ஆனாலும்கூட என்னை அது பாதித்தது" என்கிறார். சுமார் மூன்று மாதங்களுக்கு ஓக்வில் மக்களுக்கு இதுபோன்ற உடல் உபாதைகள் இருந்துகொண்டே இருந்தது. நாய் மற்றும் பூனைகள் கூடப் பெருமளவில் இறந்தும் போயின. இது நடந்து 24 வருடங்கள் ஆகின்றன. இன்றும் அந்த ஜெல்லி மழைக்கான காரணம் தெளிவாக அறியப்படவில்லை. இனி அந்தக் காரணத்தை அறியவும் முடியாது. ஏனென்றால் அந்த ஜெல்லி திரவத்தின் மாதிரி இப்போது இல்லை. மீண்டும் அப்படியொரு மழை வந்தால்தான் உண்டு.Trending Articles

Sponsored