நிர்மலா தேவி பங்கேற்ற புத்தாக்கப் பயிற்சியில் நடந்தது என்ன?!Sponsoredஉதவி பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை பல்கலைக்கழகத்தில் புத்தாக்கப் பயிற்சியில் கலந்துகொண்டபோதுதான் அதிகாரிகளுக்காக மாணவிகளிடம் பேசி மாட்டிக்கொண்டார். நிர்மலா தேவி கலந்துகொண்ட புத்தாக்கப் பயிற்சியில் என்ன நடந்தது, புத்தாக்கப் பயிற்சியின் நோக்கம் என்ன என்பது குறித்து பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் விசாரித்தோம்.

நிர்மலா தேவி கலந்துகொண்ட புத்தாக்கப் பயிற்சி மார்ச் மாதம் 9-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடந்தது. இதில் கலந்துகொள்ள மார்ச் 8-ம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்துக்கு வந்த நிர்மலா தேவி மார்ச் 15-ம் தேதி வரை மாணவிகளிடம் பல்வேறு வகையில் பேசி இருக்கிறார். நிர்மலா தேவி பேசிய ஆடியோவில், 'இன்று வியாழக்கிழமை. இன்னும் இரண்டு நாள்களில் யோசித்து முடிவெடுங்கள்' என்று பேசியுள்ளார். அந்த மாணவிகள் தேவாங்கர் கல்லூரி நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்தனர். 

Sponsored


இந்தப் புகாரின் பேரில், கல்லூரி பேராசிரியர்கள் குழுவை அமைத்து விசாரித்த கல்லூரி நிர்வாகம், மார்ச் 19-ம் தேதி நிர்மலா தேவியை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலிருந்து தேவாங்கர் கல்லூரிக்கு அழைத்திருக்கிறது. ஆனால், நிர்மலா தேவியை புத்தாக்கப் பயிற்சியிலிருந்து விடுவிக்க மறுத்துவிட்டது மதுரை பல்கலைக்கழகம். நிர்மலா தேவியை தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்படுகிறது என்ற தகவலுக்குப் பின்னரே, பல்கலைக்கழகத்திலிருந்து அவர் அனுப்பப்பட்டார். 21-ம் தேதி கல்லூரிக்கு விரைந்தவரிடம் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்படுவதற்கான கடிதத்தை வழங்கி வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது கல்லூரி.

Sponsored


தற்போது புத்தாக்கப்பயிற்சியில் கலந்துகொண்டவர்களிடம் விசாரித்து வருகிறது சி.பி.சி.ஐ.டி. இவர்களிடம், மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் நிர்மலா தேவி தங்கியிருந்த இரண்டு வாரத்தில் அவர் என்ன செய்தார் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

அந்தப் புத்தாகப் பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியர்களிடம் பேசினோம்.

''பொதுவாக புத்தாக்கப் பயிற்சியைத் தொடங்கும்போது பிரபலமானவர்களைக் கொண்டு தொடங்குவது வழக்கம். அந்த வகையில் முதல் நாள், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான துறை  சார்ந்தவர்களும் கலந்துகொண்டோம். இந்த நிகழ்வில் முன் வரிசையில்தான் நிர்மலா தேவி அமர்ந்திருந்தார். 

புத்தாக்கப் பயிற்சி என்பது தனி வகுப்பறையில் நடைபெற வேண்டும். ஆனால், இங்கு பல்கலைக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் எங்களை தினமும் கலந்துகொள்ளவே வைத்தனர். பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் மட்டுமே வருகைப் பதிவு வழங்கி, மதிப்பெண் வழங்கப்படும் என்று முன்னரே ஆலோசனை வழங்கப்பட்டது. இதனால் பல்கலைக்கழகத்தில் நடந்த எல்லா நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டோம். இதன்மூலம் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரியிலிருந்து ஆசிரியர்கள் கலந்துகொண்டார்கள் என்ற கணக்குக் காண்பித்தனர்.

புத்தாக்கப் பயிற்சியில் கலந்துகொள்ள நாங்கள் தங்குவதற்கும், பயணம் செய்வதற்கும், உணவுக்கும் என்று எல்லாச் செலவுகளையுமே பல்கலைக்கழகமே செய்வதால் அவர்கள் என்ன சொல்கிறார்களே அதை அப்படியே கேட்கவேண்டியதாகி விட்டது. எங்களுக்கு எந்த வகையிலும் பயனில்லாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நேரத்தை வீண் செய்திருக்கிறோம். சான்றிதழ் கிடைக்கும் என்பதை தவிர யாரும் எந்தப் பயனும் இல்லை. நிர்மலா தேவி எங்களுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் என்பதுமட்டும்தான் மறக்க முடியாத அனுபவம்" என்றனர்.

பேராசிரியர்களுக்குப் பயிற்சி வழங்க பல்கலைக்கழக மானியக்குழு  நிதி உதவியுடன் தனி மையத்தை (University Staff College) அமைத்துள்ளது. இந்த மையத்தில்தான் அனைத்துப் பயிற்சிகளும் நடைபெறுகின்றன. சென்னை பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள  பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தின் இயக்குநர் முனைவர் கோதண்டராமனிடம் புத்தாக்கப்பயிற்சி குறித்துப் பேசினோம்.

''கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுபவர்கள் தங்களுடைய அறிவை விசாலப்படுத்திக்கொள்ளவும், அடுத்த நிலைக்குச் செல்லவும், இரண்டு விதமான பயிற்சி வழங்கப்படுகிறது. 

இதில் ஒன்று, ஒரியன்டேஷன் கோர்ஸ் (Orientation Course)  என்றழைக்கப்படும் புத்தொளி பயிற்சி. இந்தப் பயிற்சி 28 நாள்கள் நடக்கும். இந்தப் பயிற்சியில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்கள் பயிற்சி பெறுவார்கள். இவர்களுக்கு, எப்படி வகுப்பெடுப்பது, மாணவர்களின் கவனத்தை எப்படி ஈர்ப்பது, உயர்கல்வி முறை, சுற்றுச்சூழல் மேம்பாடு, கல்வித் தர மேம்பாடு, பல்வேறு துறைகளுடன் இணைந்து எப்படி ஆய்வு மேற்கொள்வது, தகவல் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்துப் பல்வேறு பயிற்சி வழங்கப்படும். இந்தப் பயிற்சியில் பல பாடப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்வார்கள்.

புத்தொளி பயிற்சி முடித்தவர்கள்தாம் ரெஃப்ரஷர் கோர்ஸ் (Refresher Course) என்றழைப்படும் புத்தாக்கப் பயிற்சியில் கலந்துகொள்ள முடியும். இது இரண்டாவது நிலை பயிற்சி. இது, குறிப்பிட்ட பாடத்தின் மேம்பாடு குறித்து பயிற்சி வழங்கப்படும். குறிப்பிட்ட பாடத்தில் என்ன மாதிரியான முன்னேற்றங்களும் வளர்ச்சியும் கொண்டிருக்கின்றன என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை நிபுணர்கள் வகுப்பெடுப்பார்கள். அவர்கள், அந்தத் துறையில் என்ன மாதிரியான வளர்ச்சியும், சம்பந்தப்பட்ட துறையில்  என்ன மாதிரியான ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்தும், இத்தகைய ஆராய்ச்சியில் பங்குபெற என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பது குறித்தும் விவரிப்பார்கள். இந்தப் பயிற்சி 21- நாள்கள் நடக்கும்.

இந்தப் பயிற்சியில் கலந்துகொள்பவர்கள் அனைவருக்கும் தங்கும் வசதியும், வந்து செல்ல போக்குவரத்துக் கட்டணம், உணவு மற்றும் இதரச் செலவினங்களுக்குக் குறிப்பிட்ட தொகை என அனைத்துக்கும் பல்கலைக்கழக மானியக்குழு நிதி உதவி வழங்குகிறது.  

இந்தப் பயிற்சியில் முன்னாள் துணைவேந்தர்கள், நீதிபதிகள், ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் அதிகாரிகள், இதரப் பாடத்திட்டத்தைச் சேர்ந்த நிபுணர்கள் என அனைவரையும் அழைத்து வகுப்பெடுக்க வைப்போம். பயிற்சி வகுப்பு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். வகுப்பறை சார்ந்த பயிற்சியாக இருக்கும். ஞாயிற்றுகிழமை விடுமுறை என்றாலும் அசைன்மென்ட் வழங்குவோம். வருகை பதிவு, அசைன்மென்ட்கள், செமினார் பிரசன்டேஷன், திட்டப்பணி போன்றவற்றின் அடிப்படையில்தான் மதிப்பெண் வழங்கப்படும். ஒரு பேராசிரியர் அடுத்த நிலைக்கான பதவி பெறவும், சம்பள உயர்வு பெறவும் ஒரு ஓரியன்டேஷன் பயிற்சியையும் இரண்டு ரெஃப்ரஷர் கோர்ஸிலும் கலந்துகொள்ள வேண்டியது அவசியம்" என்றார். 

முறையாகப் பயிற்சி நடக்க வேண்டிய இடத்தில் என்னென்ன மாதிரியான விஷயங்கள் நடக்கிறது என்பதற்கு ஒவ்வொரு பேராசிரியருமே சாட்சி!Trending Articles

Sponsored