ஜில்லுனு... ஜாலியா... கார்ல ஒரு லாங் டிரைவுக்கு சூப்பர் டிப்ஸ்!Sponsoredபிரசவத்துக்கு இலவசம் என்பதுபோல 'லிவ் டு ரைடு' என்று ஸ்டிக்கர் ஒட்டும் கார் ப்ரியர்கள், இப்போது லாங் டிரைவுக்குத் தயாராகியிருப்பார்கள். வெயில் கொளுத்துவதால் ஏதாவது குளிர்ப்பிரதேசத்துக்குப் போவோமே என்று ஆசையாகக் கிளம்புவீர்கள். ஆனால், முதல்முறை என்பதால் லாங்  டிரைவின்போது சில தவறுகள் நிகழலாம். பொதுவாக, ஒரு நீண்ட பயணம் போகும்போது என்னென்ன தவறுகள் நடக்கும், அதை எப்படி சரிசெய்யலாம் என்பதைப் பார்ப்போம்!

1. ப்ளானிங் இல்லையென்றால், டிரிப்பில் நொந்து நூடுல்ஸ் ஆகிவிடுவோம். எங்கு போகப்போகிறோம் என முடிவுசெய்துவிட்டால், அந்த இடத்தைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். உதாரணத்துக்கு, ஊட்டிமலை பெருசுதான். ஆனால், மேட்டுப்பாளையம் வழியாகப் போனால் மொத்தம் 15 ஹேர்பின் பெண்டுகள்தான். இரவில் சத்தியமங்கலம் காடு வழியே மலை ஏற முடியும். ஆனால், பந்திபூர் காடு வழியே போக முடியாது. கொல்லிமலை, ஊட்டியைவிட சிறியது. ஆனால், தமிழகத்தில் செம ட்ரிக்கான மலைப்பாதையைக்கொண்டது. மொத்தம் 70 கொண்டை ஊசிகள். கார் பழகுபவர்கள், அதிலும் செடான் வைத்திருப்பவர்களுக்கு இது மரணக் கிணறு ட்ரிப்பாக அமைந்துவிடும். நீங்கள் போக நினைக்கும் இடத்தைப் பற்றி அந்தப் பகுதி நண்பர்களிடமோ அல்லது முன்பு அங்கு சென்றவரிடமோ கேட்டுத் தெரிந்துகொள்வது அவசியம்.

Sponsored


Sponsored


2. உணவைப் பற்றி முன்கூட்டியே திட்டமிடுவதும் அவசியம். இப்போது டெக்னாலஜி வளர்ந்துவிட்டதால் ஸோமாட்டோ, ஃபேஸ்புக், கூகுள் போன்ற வலைதளங்களைப் பயன்படுத்தி எங்கு நல்ல ஹோட்டல் இருக்கும், எவ்வளவு நேரம் திறந்திருக்கும்... போன்ற தகவல்களைத் தெரிந்துகொண்டு அதற்கு ஏற்ப டிரிப்பைத் திட்டமிட்டுக்கொள்ளவேண்டும்.

3. நீண்ட தூரப் பயணம் என்றாலே, சிப்ஸ் பாக்கெட், கோலா, சாக்லேட் என அள்ளிப் போட்டுக்கொண்டு கிளம்புவதை முதலில் நிறுத்துங்கள். சிப்ஸ், கோலா, சாக்லேட் ஆகியவற்றைச் சாப்பிடும்போது, முதலில் உற்சாகமாக இருக்கும். ஆனால், இவை உடலை விரைவில் மந்தமாக்கி தூக்கத்தை வரவழைக்கும்.

4. பயணத்தின்போது நீண்ட நேரம் காரில் உட்கார்ந்துகொண்டே இருப்பதால், உடலில் வெப்பம் அதிகரிக்கும். வெப்பத்தைத் தணிக்க ஃப்ரெஷ் ஜூஸ், இளநீர் உதவும்.

5. டோல்கேட்டில் பல நேரம் சில்லறை இருக்காது. டோல்கேட், சாலையோர உணவு, டீ, காபி போன்றவை நம் பயணத்தில் கூடவே வரும். அதனால் எத்தனை டோல் உள்ளன எனப் பார்த்து அதற்கேற்ப தேவையான சில்லறையை எடுத்துவைத்துக்கொள்வது நல்லது.

6. மேப் பார்த்துப் போகிறேன் என்று நெடுஞ்சாலைக்குப் பதிலாக முட்டுசந்து உள்ள ரூட்டில் காரை விடுவதைத் தவிர்க்கவும். பெங்களூரில் மேப்பைப் பார்த்து கார் ஓட்டிக்கொண்டிருந்தோம். திடீரென நாங்கள் அரபிக்கடலில் பயணித்துக்கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டு அங்கிருந்து ரூட்டைக் காட்ட ஆரம்பித்துவிட்டது கூகுள் மேப். முடிந்தளவுக்கு சாலைக் குறிகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். 

7. காரில் போகும்போது சீட் பெல்ட் கட்டாயம். முன்பக்கம் உட்கார்ந்திருக்கும் இருவரும் சீட் பெல்ட் போட வேண்டும். ரூல்ஸ் என்பதைத் தாண்டி பாதுகாப்பு மிகவும் முக்கியம். உங்கள் கார் 7 ஏர்பேக் உள்ள பாதுகாப்பான காரக இருந்தாலும் சீட் பெல்ட் போட்டால்தான் காற்றுப் பை திறக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

8. 'நெருப்புடா... கபாலீஈஈஈஈஈ' என்று காரில் பாட்டை அலறவிட்டுக்கொண்டு சென்றால், வாகனங்களின் ஹார்ன் சத்தம் காதில் விழாமல்போக வாய்ப்பு உண்டு. அதனால், மிதமான சத்தத்திலேயே பாட்டை ஒலிக்கவிட வேண்டும். யாரையாவது எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதைத் தவிர, வேறு எதற்காகவும் ஹார்னைப் பயன்படுத்தாதீர்கள்.

9. களைப்பாக உணர்ந்தால் service ரோட்டில் வண்டியைவிடுங்கள். தூக்கம் வந்தால் காரை நிறுத்திவிட்டு 'வார்னிங் லைட்ஸ்’ ஒளிரவிடுங்கள். அனைத்து கதவு, ஜன்னல்களையும் மூடிவிட்டு ஒரு சின்ன தூக்கம்போட்ட பிறகு காரை ஓட்டலாம்.

10. டயர்களுக்குக் காற்று நிரப்பும்போது மறக்காமல் ஸ்டெப்னி வீலுக்கும் காற்றை நிரப்புங்கள். டியூப்லெஸ் டயர்களாக இருந்தாலும்கூட ஸ்பேர் டியூப் இருப்பது நல்லது. காரணம், டியூப்லெஸ் டயரில் சைடு வாலில் பஞ்சரானால் காற்று நிற்காது. டியூப்லெஸ் டயருக்கான பஞ்சர் கிட், சீலன்ட் கிட் காருக்குள் எப்போதும் இருக்க வேண்டும்.

11. அதிநவீன கார்களிலேயே அதிகப்படியான ஹெட்லைட் தூரம் 600 மீட்டர்தான். பழைய கார்களில் இது இன்னும் குறைவு. இரவில் பயணிக்கும்போது ஹெட்லைட் ஒளி தெரியும் தூரத்தைவிட 100 மீட்டர் முன்பு கார் நிற்கும் அளவு வேகத்தில் மட்டுமே போக வேண்டும். குறைவான ஹெட்லைட் தூரத்தை வைத்துக்கொண்டு அதிக வேகத்தில் போகவே கூடாது.

12. சரிவான பாதையிலும் அதிக வேகத்திலும் போகும்போது கிளட்சை மிதித்துக்கொண்டு காரை ஓட்டவே கூடாது. டயர்களுக்கு டிராக்‌ஷன் தேவை, அதற்கு டயர்களுக்கு பவர் இருந்துகொண்டே இருக்க வேண்டும். வேகமாகப் போகும்போது கிளட்சைப் பிடித்துக்கொண்டு வளைவுகளில் திரும்பும்போது டயரில் டிராக்‌ஷன் குறைந்து கார் கவிழ வாய்ப்புகள் உள்ளன. இன்ஜினை ஆஃப் செய்துவிட்டு சர்ர்ர்ர்ரென காரை கீழே இறக்கி விளையாடுவது கூடாது. இன்ஜின் ஆஃப் செய்த பிறகு பிரேக்குகள் 25 சதவிகிதம் மட்டுமே வேலைசெய்யும். ஸ்டியரிங்கும் லாக் ஆகிவிடும். மசனகுடி போன்ற மலைப்பாதையில் பிரேக்கை அதிகம் பயன்படுத்துவதும் ஆபத்து.

13. வேகமாக ஓட்டவும் என்ஜாய் பண்ணவும் ஆர்வம் இருக்கும். ஆனால், தேவையில்லாமல் ஓவர்டேக் செய்வது கூடாது. நீங்கள் பொறுமையாகப் போகிறீர்கள் என்றால், வேகமாக வரும் காருக்கு வழிவிடுவது அவசியம். ஒருவர் ஓவர்டேக் செய்யும்போது அவரிடம் மல்லுக்கட்டிக்கொண்டு நிற்பது இருவருக்குமே ஆபத்து.

14. கார் சாவியின் மீது எப்போதும் ஒரு கவனம் தேவை. மலைகளுக்கோ, நீர்வீழ்ச்சிக்கோ போகும்போது தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். சாவியை எங்கே வைத்தோம் என நினைவுவைத்துக்கொள்வது ரொம்பவே முக்கியம். இல்லையென்றால், என்ஜாய் பண்ண வந்த இடத்தில் மெக்கானிக்கைத் தேடித் திரியும் நிலைமை வந்துவிடும்.

தமிழ்நாட்டைச் சுற்றி பல சுற்றுலாத்தலங்கள் உள்ளன. ஒவ்வோர் இடத்தில் பயணிப்பதும் ஓர் அனுபவம். நீங்கள் போக நினைக்கும் இடம் நாங்கள் போன இடங்களில் ஒன்றாகக்கூட இருக்கலாம். லிங்க்கை க்ளிக் செய்து எங்கள் அனுபவத்தைப் படித்துப்பாருங்கள்.
ஊர் சுத்தலாம் வாங்க.Trending Articles

Sponsored