தேனீக்கள் மீதான ரசாயனப் போர்... முடித்து வைக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் புதுமுயற்சி!Sponsored"எது சரியான மகிழ்ச்சி என்பதை நாம் எவ்வாறு கண்டறிவது? தோட்டங்களுக்குச் சென்று பாருங்கள். தேனீக்களுக்குத் தேவையான பூந்துகளைத் (மகரந்தம்) தருவதில் பூக்கள் மகிழ்கின்றன; தனக்கான தேவை கிடைத்துவிட்ட மகிழ்ச்சி தேனீக்களுக்கு! பூக்களின் இனப்பெருக்கத்திற்குத் தேவையான மகரந்தச் சேர்க்கைக்கு உதவுவதில் தேனீக்களுக்கு மகிழ்ச்சி. அதன் உதவி கிடைத்ததில் பூக்களுக்கு மகிழ்ச்சி. தேவையைத் தருவதிலும் தேவையானது கிடைப்பதிலும்தான் மகிழ்ச்சி. ஆகவே உதவுங்கள். ஆப்பிள், மாம்பழம், சிட்ரஸ் பழங்கள் போலப் பல தாவரங்களின் வம்சம் தழைப்பதற்குத் தேனீக்கள் உதவுகின்றன. அதன் மூலம் உலகின் உணவுத்தேவைக்குப் பேருதவி புரிகின்றன. அதுபோல் நாமும் அடுத்தவரின் வாழ்க்கை வளம்பெற உதவுவதில், ஒருவரது பசியைப் போக்குவதில் இன்பம் காண்போம்" - இந்த உலகிற்கு மிகப்பெரிய உதவியைச் சத்தமின்றிச் செய்துவரும் தேனீக்களின் பெருமையைக் கூறும் இந்த விளக்கம், கவிஞர் கலீல் ஜிப்ரான் எழுதிய "தி பிராஃபட்" கவிதைத் தொகுப்பில் வரும் ஒரு கவிதை.

அவர் கூறுவது போல் தேனீக்கள் உலகின் உணவுத்தேவைக்குப் புரிந்துவரும் பேருதவிக்காக அவற்றுக்கு நாம் செய்த நன்றிக்கடன் மிகக்கொடூரமானது. மனிதர்களின் உணவுப் பட்டியலில் 100-ல் 70 சதவிகிதம் தாவர உணவுகள் பூச்சிகளால் அயல் மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்டுப் பெருகும் தாவரங்களால் ஆனது. அதில் 90 சதவிகிதம் உலகில் உள்ள தேனீ குடும்பத்தைச் சேர்ந்த 20,000 பூச்சி இனங்களால் செய்யப்படுகிறது. ஆனால் அவற்றுக்கு நாமளித்த பரிசோ பூச்சிக்கொல்லிகள். அதில் மிகவும் அபாயமானது இந்த நியோநிகோட்டினாய்டு (Neonicotinoid) என்ற ஒருவகைப் பூச்சிக்கொல்லி. இதனால் தனது திசைகாட்டும், மணம் நுகரும் திறன்கொண்ட உணரிகள் செயல் இழந்து சேகரிக்கப்பட்ட பூந்துகளைச் சரியாகக் கொண்டுசேர்க்க முடியாமல் பசியால் அழிந்துபோன தேனீக் காலனிகள் எண்ணிலடங்காது. மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு பக்கவாதம் வந்து அழிந்துபோன தேனீக்கள் அதிகம்.

Sponsored


இப்படியாக மிகப்பெரிய அளவில் கொத்துக்கொத்தாக இனப்படுகொலையை நிகழ்த்திக்கொண்டு இருந்த நியோநிகோட்டினாய்டு பூச்சிக்கொல்லி நிறுவனத்திற்குத் தடைவிதித்து, அதற்குப் பலியான அனைத்து தேனீக்களுக்கும் நீதி வழங்கியிருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம். கடந்த சில ஆண்டுகளாக 'காலனி அழிப்பு' என்ற பதம் ஐரோப்பா முழுவதும் ஒலித்துக்கொண்டு இருந்தது. கொத்தாகச் செத்து மடிந்துகொண்டிருந்தன தேனீக்கள். அவற்றின் வாழ்விடமே அழிக்கப்பட்டு அங்கிருந்த அனைத்து உயிர்களும் ராணித் தேனீயோடு சேர்ந்து மடிவது வாடிக்கையாக நடந்துகொண்டு இருந்தது. இது எதனால் என்பதை அறியவும் அதற்கு முடிவு கட்டவும் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு குழுவை முடுக்கிவிட்டது. அந்தக் குழு பல்வேறு ஆய்வுகள் செய்து உண்மையைக் கண்டறிந்தனர். மொத்த உலகமும் தேனீக்களின் மீது சத்தமே இல்லாமல் ஒரு ரசாயனப் போர் தொடுத்து அவற்றை அழித்துக்கொண்டு இருந்தது. அந்தப் போரில் பயன்படுத்தப்பட்ட ரசாயன ஆயுதம் தான் இந்த நியோநிகோட்டினாய்டு.

Sponsored


இது ஒரு வகைப் பூச்சிக்கொல்லி. இதைச் செடிகள் வளரும் பருவத்தில் தூவுவதால், வேர்வரை சென்று பரவிவிடுகிறது. தேனீக்கள் சேகரிக்கும் பூந்துகளில் கூட இவை அதிகமாகப் பரவி இருக்கின்றன. அதனால் தேனீக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் சொல்லிலடங்காது. இதில் 2 நானோ கிராம் போதும் ஒரு தேனீயைக் கொல்வதற்கு. லிட்டர் லிட்டராகத் தூவப்படும் இது நிகோடின் மூலக்கூறுகளை அதிகமாகக் கொண்டிருப்பதால் அதிக விஷத்தன்மை கொண்டுள்ளது. மொத்தம் ஏழு வகைப் பூச்சிக்கொல்லிகள் இதன் கீழ் வருகின்றன. அனைத்துமே உலகளவில் அதிகமாகப் பயன்படுத்தப்படுபவை. 18-22 நானோ கிராம் இருந்தாலே அது 50% தேனீக்களைக் கொல்லப் போதுமானது. உதாரணமாக 7.4 நானோ கிராம் இருந்தால் நூறு கோடித் தேனீக்களை நம்மால் கொல்ல முடியும். அத்தோடு இவற்றால் தாக்கப்பட்ட தேனீ இனங்கள் அதன்பிறகு வேறு எங்கு அமர்ந்தாலும் அதிலும் இதன் விஷத்தன்மை ஒட்டிக்கொள்ளும்.

ஐரோப்பாவில் சில தேனீக்கூடுகளில் தேன் சேகரித்துச் சோதனை செய்ததில் அந்தத் தேனிலும் கூட இந்த ரசாயனத்தின் அளவு அதிகமாக இருந்தது. அதன்மூலம் அது மனிதர்களுக்கும் பரவும் வாய்ப்புகள் உண்டு. செடிகளுக்குத் தூவப்படுவதால் சாதாரணமாகவே நாம் உண்ணும் உணவில் இவை கலந்துவிடுகின்றன. நமக்குப் பெரிய தீங்குகளை உடனடியாக இவை வழங்காததால் அதன் தாக்கத்தை நாம் புரிந்துகொள்ள முயலவில்லை. அழிந்துபோன தேனீக் காலனிகளை ஆராய்ந்தபோது அதில் குறைந்தது 554 நானோ கிராம் நியோநிகோடினாய்டு இருந்துள்ளது. இதனால் 2013-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் பூக்கும் தாவரங்களில் மட்டும் இவற்றைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அது எந்த மாறுதலையும் ஏற்படுத்தாத காரணத்தால், தற்போது அந்த வகையைச் சேர்ந்த ரசாயனப் பூச்சிக்கொல்லிகளுக்கு முழுவதுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

"நியோநிகோட்டினாய்டை அங்கீகரித்ததே ஒரு மிகப்பெரிய தவறு. அது தற்போது மிகப்பெரிய சூழலியல் பேரழிவினை நிகழ்த்திவிட்டது. இப்போதாவது விழித்துக்கொண்டோம். இந்த முடிவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது" என்கிறார் பூச்சிகொல்லிகள் குறித்த ஆய்வுக்குழுவில் ஒருவரான மார்டின் டெர்மின் என்பவர்.

இந்த முடிவை எதிர்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். "ஐரோப்பாவின் விவசாய உற்பத்தி மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்திக்கப் போகிறது. இன்றோ நாளையோ அல்ல காலப்போக்கில் விவசாய உற்பத்தி இந்த முடிவால் வீழும். விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்" என்கிறார் ஐரோப்பிய பயிர் மேலாண்மை நிறுவனத்தைச் சேர்ந்த கிரேம் டெய்லர்.

ஆனால் இந்தப் பூச்சிக்கொல்லியைத் தடைசெய்வதால் விவசாய உற்பத்தியில் எந்தப் பெரிய மாறுதலும் ஏற்படாது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதை எதிர்ப்பவர்கள் ஒருபக்கம் இருந்தாலும் அறிவியலின் முன்னேற்றம் இயற்கையோடு முரண்பட்டுவிடக் கூடாது என்பதைப் புரிந்துகொண்டு செயலாற்ற முனைவதை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும். அறிவியல் என்றும் இயற்கையோடு முரண்பட்டது என்ற தவறான கருத்து உலவும் இந்த 21ஆம் நூற்றாண்டில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த முடிவு நிச்சயம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததே. இது தேனீக்களுக்கு மட்டுமே கிடைத்த வெற்றியல்ல. மனித இனம் குறைவின்றி வாழப் பல ஆயிரம் ஆச்சர்யங்களைக் கொட்டிக் கொடுத்த இயற்கை எவ்வளவு முக்கியம் என்பதை மனிதன் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டான். ஆம், இது இயற்கைக்குக் கிடைத்த வெற்றி.

இந்த வெற்றி இந்தியாவிலும் சாத்தியப்பட வேண்டும். வளர்ந்த நாடுகளில் தடை செய்யப்படும் அனைத்து நிறுவனங்களுமே, வளரும் நாடுகளில் அகதிகளாகப் புகுந்து கரையான் புற்றுகளாகப் பெருகி அவற்றின் பேராசைக்கு நாட்டு மக்களை இரையாக்குவது சமீப காலங்களில் அதிகமாக நடக்கிறது. அதுபோல் இதுவும் இருந்துவிடக் கூடாது. இதன் இறக்குமதி இந்தியாவிலும் இருப்பதால் அது நிகழ வாய்ப்புகள் அதிகம். அதுமட்டுமின்றி இந்த ரசாயனத்தால் அழிவது ஐரோப்பியத் தேனீக்கள் மட்டுமில்லை இந்தியாவிலும் தேனீக்களின் அழிவுக்கு இவையும் ஒரு முக்கியக் காரணம். ஆகவே ஐரோப்பாவின் தடை இந்தியா வரை நீளவேண்டும்.Trending Articles

Sponsored