''நான் ஃபேஷன் டிசைனிங் மாணவிதான்... அதற்காக இப்படியெல்லாம் பேசாதீர்கள்!''Sponsored''ஒல்லியான தேகம், மாநிறம், தெற்றுப்பல், முகத்தில் எப்போதும் புன்னகை, பூக்களைக் கிள்ளப் பயப்படும் கள்ளமில்லா மனம், தாய், தந்தை, சகோதரர்களின் அன்புக்கு அடிமையானவள், சமூகத்துக்கு நல்லது செய்ய வேண்டும் எனத் துடிப்பவள். இதுதான் அவளின் உண்மை முகம். ஆனால் சமூகத்துக்கோ, 'அவள் ஃபேஷன் படிப்புப் படித்தவள். அதனால், புகை மற்றும் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகியிருப்பாள். நிச்சயம் 10 காதல் கதைகளாவது இருக்கும். பல பேருடன் கள்ளத்தொடர்பு...' இப்படி விஷ நாக்குகளின் சொற்களுக்கு தினம் தினம் பலியாகிக்கொண்டிருப்பவள்.

MeToo, TimesUp, Speakup எனப் பல்வேறு பிரசாரங்கள், பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக உலகமெங்கிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் திரைத் துறை வட்டாரங்களில், 'Casting Couch' என்பது நடந்துகொண்டுதான் இருக்கிறது என்று, இந்தியத் திரை நட்சத்திரங்கள் (ரன்வீர் சிங், ஆயுஷ்மான் உள்ளிட்ட நடிகர்களும்) உண்மையை உடைத்து உரக்கப் பேசி, விழிப்பு உணர்வை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர். நிர்மலா தேவி போன்ற பேராசிரியர்களால் கல்லூரியிலும் இதுபோன்ற பிரச்னைகள் இருப்பது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சொல்லப்போனால், 'எல்லா இடங்களிலும் இந்தப் பிரச்னை இருக்கும்போல! அப்போ, இது சகஜமான ஒன்றோ?!' எனப் பலரின் கருத்துப் பதிவுகளைக் கேட்டு உறக்கம் மறந்துபோனது. அவளின் மனமும் மரத்துப்போனது.

Sponsored


விதவிதமான ஆடைகளுக்கு அடிமையாகாத பெண்கள் குறைவுதான். ஆடை மீதான ஈடுபாடு, மற்றவர்களைவிட அவளுக்கு அதிகம். அவளுடைய ஆடைகளை அவளே டிசைன் செய்து உடுத்திக்கொள்ள வேண்டும் என்பது அவளின் நீண்ட நாள் கனவு. 12-ம் வகுப்பு முடித்ததும், அதற்கான சந்தர்ப்பமும் அமைந்தது. இன்ஜினீயரிங் படிப்பு சிகரத்தில் இருந்த சமயம். வாய்ப்பு கிடைத்தும் இன்ஜினீயரிங்கைப் புறக்கணித்துவிட்டு, தன் கனவுப் படிப்பான 'ஃபேஷன் டிசைனிங்' கோர்ஸைத் தேர்ந்தெடுத்தாள். அமைதியான சிறு டவுனில் உள்ள அந்தக் கல்லூரியில் மூன்று வருடப் படிப்பு, டிஸ்டிங்ஷன் (Distinction), யுனிவர்சிட்டி ரேங்க் என, புகழின் உச்சிக்கே கொண்டுசென்றது அவளின் கனவு. மேற்படிப்புக்காக விண்ணப்பித்து தேர்வு, கலந்துரையாடல், நேர்காணல் என அத்தனையையும் கடந்து, டாப் கல்லூரியைப் பெறுகிறாள். அப்பா, அம்மா, சகோதரர்கள் என அனைவரும் கண்ணீருடன் வழியனுப்பிவைக்கின்றனர். பின்னாளில் அவளுக்கு அரக்கனாக மாறும் அந்தச் செம்மையான ந(ர)கரத்துக்கு.

Sponsored


இதுவரை நகர வாழ்க்கைக்கு பரிச்சயம் இல்லாததால், அத்தனையும் புதிதாக இருந்தன.  குறிப்பாக, வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கைதான் அங்கு அதிகம். அதனால், நட்பு ஏற்படுத்திக்கொள்வதில் சிறு தயக்கம்கொண்டாள். ஆனால், அவளின் வகுப்பில் உள்ள சக மாணவர்களோ, அவர்களுள் ஒருத்தியாகவே அவளைப் பார்த்தனர். ஓரளவுக்கு அவர்களுடன் பேசத் தொடங்கினாள். படிப்பு, நண்பர்கள், மாதம் ஒருமுறை சொந்த ஊருக்குச் செல்வது  என அவளின் வாழ்க்கை சந்தோஷமாகவே நகர்ந்துகொண்டிருந்தது. வகுப்பில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், சமுதாயத்தால் அவளுக்கு ஏற்பட்ட துன்பங்களும் மன உளைச்சல்களும் ஏராளம்.

அதிகாலை 5 மணி. சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு, கைநிறைய பலகாரம், தின்பண்டங்கள் என உங்கள் வீட்டு சராசரி பெண்ணைப்போலதான் அவளும் நகரத்தை வந்தடைந்தாள். நீண்ட நேரம் ஆட்டோவுக்காகக் காத்திருந்து, இறுதியில் ஒரு ஆட்டோவில் ஏறினாள். '' 'குறிப்பிட்ட' கல்லூரிக்குப் போகணும் அண்ணா" என்றாள். ''ஓ... அந்தக் கல்லூரியா? நீ தண்ணி தம்முனு அடிப்பியாமா? பொண்ணுங்க அப்படிப் பண்றதை அங்கே பார்த்திருக்கேன்; அதனால கேட்கிறேன். அப்பப்போ பண்ணுவ, கரெக்ட்டா?" என்றவரிடம் வண்டியை நிறுத்தச்சொல்லி இறங்கி, என்ன செய்வது எனத் தெரியாமல் அழுதாள்.

இது, முதல் சரிவுதான். உறவினர்களின் பேச்சு அதைவிடக் கொடுமை. ''இத்தனை ஆண் நண்பர்களா? ஃபேஷன் டிசைனிங் படிப்பு வேற. துணியே இல்லாம மனுஷங்களோட ஒடம்பு அப்படியே புத்தகத்துல அச்சிட்டிருக்காங்க. இதையெல்லாம் பார்க்கிறப்போ, அவங்க ஒழுக்கமாவா இருப்பாங்க? நிச்சயமா தப்பான உறவும் இருக்கும்" என்று சிறுவயதிலிருந்து தன்னைத் தூக்கி வளர்த்தவர்கள் கூறும்போது, அவள் அடைந்த வேதனை இறப்பின் உச்சம்.

''10 மணிக்கு ஹாஸ்டலுக்கு வர்றா. எங்கேயோ ரூம் போட்டிருக்கா!" என்று வேலைப்பளுவால் சோர்ந்து நலிந்து விடுதிக்கு வரும்போது, உங்கள் காதுகளை இந்தச் சொற்கள் நிரப்பினால் தூக்கம் வருமா? அதுவும் அப்படிச் சொன்னது, உங்கள் ஆருயிர் தோழியென்றால்?

சமூக வலைதளங்கள், ஆரோக்கியமான கண்டுபிடிப்பு என நம்பிக்கொண்டிருந்த அவளுக்கு, எமனாய் வந்து குவிந்தன குறுஞ்செய்திகள். உண்மையான காதலுக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் சராசரி பெண்தான் அவளும். ஆனால் அவளுக்கு வந்ததோ, உல்லாச உரையாடலுக்கான அழைப்புகள் மட்டுமே.'' 'ஃபேஷன் டெக்' படிக்கிறவதான நீ. உனக்கு இதெல்லாம் புதுசாவா இருக்கும். எத்தனை பேரோடு போயிருப்ப... ஏன் என்னை மட்டும் ஒதுக்குற? பெரிய உத்தமி மாதிரி சீன் போடாத *****" என்ற வசனங்கள்தான் அவள் வாழ்வில் அதிகமாகக் கேட்டன.

எந்தப் படிப்பின்மீது தன் லட்சியங்களைக் கொட்டிக் குவித்தாளோ, அந்தப் படிப்பே அவள் நிம்மதியின் எமனாக மாறியது. அனைத்தையும் சமாளித்து முன்னேறிவிட வேண்டும் என எவ்வளவோ முயன்றும், அனைத்திலும் தோற்றுபோனாள். காரணம், பயம். தான் இந்தக் கல்லூரியில் படிக்கிறாள் என்று சொல்வதற்குப் பயம். தான் ஒரு ஃபேஷன் டெக் மாணவி என்று வெளியில் சொன்னால், எங்கே தன்னைச் சீண்டிவிடுவார்களோ என்கிற பயம். நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் தவறாய் பார்க்கிறார்களே, பெற்ற அம்மா-அப்பா, உடன் பிறந்தவர்கள் என்னவென்று நினைத்திருப்பார்கள் என்ற அச்சம் புதிதாய் உருவாகியது. இதனால், அவளின் கனவும் பாதியில் சிதைந்தது. படிப்பு முடிந்து வேலைக்குப் போகவும் தைரியமில்லை. சமூகத்தின் மனநிலை புரிந்து, போராடத் தயாராகும் நேரத்தில், வயதும் மீறிப்போனது. இன்று வரை அவளின் கனவான அவளுக்கென்று ஓர் ஆடையைக்கூட தைத்துக்கொள்ளவில்லை. சமூகத்தின் பேச்சு, அவளை கோழையாக்கிவிட்டது.

திருமண வயதை எட்டியதும் மாப்பிள்ளை தேடும் போராட்டம் ஆரம்பமானது. ஃபேஷன் படிப்பு என்பதால் ஏராளமான நிராகரிப்பு, அதிகாரம், சந்தேகம் எனப் பலவற்றைச் சந்தித்தாள். திருமணத்தையும் வெறுத்தாள். இதில் யாரை குறை கூறுவதென அறியாமல் நின்றாள். அப்பாவிப் பெற்றோர், அவள் படித்த படிப்பைப் பற்றி பெருமையுடன் வெளியில் சொல்லிக்கொள்வதைக் கண்ட அவளுக்கு, அவளின் திருமணத் தடங்கலுக்குக் காரணம், அவளின் படிப்புதான் என்று சொல்லும் தைரியம் இல்லை.

இது, அத்தனையும் எனக்கு நடந்தவை என்று தைரியமாய்ச் சொல்லக்கூட துணிவு இல்லாமல், என் மனசாட்சியின்மூலம் சொல்கிற கோழையாகத்தான் இன்றும் இருக்கிறேன்" என்று தன் மனக்கவலையை நம்மிடம் பகிர்ந்துகொண்டாள், முன்னாள் 'ஃபேஷன்' மாணவி.

ஃபேஷன் என்பதும் ஒருவகையான படிப்பு. அதை வெறும் படிப்பாக மட்டும் பார்க்காமல், அவர்களின் குணத்தோடு ஒப்பிட்டு, பெண்களைக் கொச்சைப்படுத்துவதும், அவர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்குவதும் பாலியல் துன்புறுத்தல்தான். இந்தத் துறையில் உள்ளவர்கள் தீய பழக்கங்களுக்கு அடிமையானவர்கள் என்ற கருத்து மிகவும் தவறானது. நீங்கள் பார்த்த அந்த ஒருவரை வைத்து அனைவரையும் எடைபோட்டுவிடாதீர்கள். இந்த நிலை எப்போது மாறுமோ!Trending Articles

Sponsored