ஆங்க்ரி விஜய், மிரட்டல் சுஜய்... அபூர்வ யானை சகோதர்கள்! - ஒரு கும்கி உருவாகும் கதை அத்தியாயம்-11Sponsoredஆறு மாதங்கள் கூண்டிலிருந்த சுள்ளிக் கொம்பன் யானை கொடுக்கப்பட்ட எந்தப் பயிற்சிகளையும் முழுமையாக உள்வாங்கவில்லை. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை யானைக்கு மாவூத்துக்களை மாற்றிப் பார்த்தார்கள், ஆனால் எந்த மாற்றமும் இல்லை. யானையின் குண நலன்களைப் பொறுத்தே மாவூத் நியமிக்கப்படுவார். ஆனால் பிடிக்கப்பட்ட காட்டு யானைக்குச் சரியான மாவூத்தை நியமிக்க முடியாமல் போகவே யானைக்குச் சரியான பயிற்சி கொடுக்க முடியாமல் போனது. இரண்டு மாதங்களுக்கு ஒரு மாவூத் என மாற்றியதால் யாராலும் யானைக்கு முழுமையான பயிற்சி கொடுக்க முடியாமல் போகிறது. கொடுக்கப்பட்ட பயிற்சி முழுமையடையாததால் யானையை வேறொரு முகாமுக்கு மாற்றுவது என முடிவு செய்து யானையை வெளியே கொண்டு வந்தார்கள்.

பயிற்சியைச் சரியாக உள்வாங்காத சுள்ளிக் கொம்பன் பிடிக்கப்பட்ட ஐம்பது நாளுக்குப் பிறகு இரவெல்லாம் கூண்டில் அடைத்தும் பகலில் வெளியே கட்டி வைத்தும் பராமரிக்கப்பட்டது. கூண்டிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட யானை மீண்டும் கரோலுக்குள் கொண்டு செல்ல கூடாது. ஆனால், சுள்ளிக் கொம்பன் பகலில் வெளியேவும், இரவில் கரோலிலும் இருந்ததால் யானை ஒரு வித இறுக்கமாகவே இருந்தது. இப்படியே இருந்தால் யானையை எதற்கும் பழக்கப்படுத்த முடியாது, இப்படியே தொடர்ந்தால் யானை எதற்கும் பயன்படாமல் போய் விடும் என்பதை உணர்ந்த வனத்துறை சுள்ளிக் கொம்பனை பாம்போஸ் முகாமுக்குக் கொண்டு செல்வது என முடிவு செய்தது. அதாவது ஏப்ரல் மாதம் பிடிக்கப்பட்டு கரோலில் அடைக்கப்பட்ட சுள்ளிக் கொம்பன் அதே வருடம் நவம்பர் மாதம் 18-ம் தேதி நிரந்தரமாக வெளியே கொண்டு வரப்பட்டது. பாதுகாப்புக்கு முகாம் யானைகள் கரோலுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டன. 

Sponsored


ஏழுக்கு ஏழு என்ற அளவில் அடைக்கப்பட்டிருந்த யானை பயிற்சியை உள்வாங்காமல் இருந்ததற்கு இன்னொரு காரணமும் இருந்தது. யானையின் வலது கண்ணில் குறைபாடு  இருப்பது கால்நடை மருத்துவரின் சோதனையில் தெரிய வந்தது. கரோலில் அடைக்கப்பட்டபொழுது யானையின் குறைபாடு யாருக்கும் தெரியாமல் இருந்தது. யானை பயிற்சியை முழுமையாக உள்வாங்க முடியாமல் போனதற்கு அதுவும் ஒரு காரணம். அப்போதும் யானையின் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது. யானைக்கு சீனிவாசன் எனப் பெயர் வைக்கப்படுகிறது. சீனிவாசன் என்பவர் முதுமலையில் கள இயக்குநராக இருந்தவர். அவரது தலைமையில்தான் சுள்ளிக் கொம்பன் பிடிக்கப்பட்டது. தெப்பக்காட்டில் இருந்த சீனிவாசன் மூன்று கும்கி யானைகளின் உதவியுடன் பாம்போஸ் முகாமுக்குப் பயிற்சிக்காக கொண்டு செல்லப்பட்டது. பாம்போஸ் முகாமில் திறந்த வெளியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் முழுமையான பயிற்சியை சீனிவாசன் பெற்றுவிடவில்லை. 

Sponsored


ஒரு யானைக்கு மாவூத்தாக இருப்பவர்தான் அதற்கு எல்லாமே. யானையின் பலம் எது பலவீனம் எது என்பதை அவரே நன்றாக அறிந்தவர். அவரது கட்டுப்பாட்டில்தான் யானை எப்போதுமே இருக்கும். அப்படியிருக்கையில் ஒரு யானைக்கு இருக்கிற மாவூத்தை இன்னொரு யானைக்கு மாற்றுவதால் யானை பெரிய பிரச்னைகளைச் சந்திக்கும். சுப்பிரமணி யானை இறந்து போனதற்கும் மாவூத்தை மாற்றியதே முக்கிய காரணம். மனிதர்களின் குண நலன்கள் வேறு வேறு என்பதால் யானைக்கு வழங்கப்படும் பயிற்சிகளும் வேறுபடும். அப்படி மாவூத் மாறியதால் பல யானைகள் பல இன்னல்களைச் சந்தித்திருக்கின்றன. அப்படியொரு யானை சுஜய். 1971-ம் ஆண்டு யானைகள் முகாமிலிருந்த தேவகி என்கிற பெண் யானை ஒரே பிரசவத்தில் இரண்டு குட்டிகளை ஈன்றது. ஒன்றின் பெயர் சுஜய், இன்னொன்று விஜய். சுஜய் பிறந்த 30 நிமிடங்கள் கழித்து விஜய் பிறந்தது. அண்ணன் தம்பிகளான இரண்டுமே எப்போதும் ஒன்றாகவே இருக்கும். இரண்டு குட்டிகளும் முதுமலை முகாமில் கும்கி பயிற்சி பெற்றவை. இரண்டு யானைகளுக்கும் வேறு வேறு கதைகள் இருக்கின்றன. இப்போது இரண்டு யானைகளும் முதுமலை தெப்பக்காட்டில் 500 மீட்டர் இடைவெளியில் கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. இப்போதும் இரண்டுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது, அண்ணன் தம்பி  இரண்டு யானைகளுக்கும் மதம் பிடித்திருக்கிறது.  

இரண்டு யானைகளும் கட்டப்பட்டிருக்கிற இடத்துக்கு வர பல பயணங்களைக் கடந்து வந்திருக்கின்றன. அதில் சுஜய் யானையின் பயணம் சுவாரஸ்யமானது. முதுமலையில் இருக்கிற கும்கி யானைகளில் முக்கியமானது சுஜய். பல ஆண்டுகளாக முதுமலையில் இருந்தாலும் சுஜய்யும் பல மாவூத்துக்களை பார்த்திருக்கிறது. 2006-ம் ஆண்டில் சரியான கவனிப்பில்லாமல் இருந்த சுஜய் மிகுந்த சோர்வாக இருந்தது. சுஜய்யிடம் சரியான புரிதல் இல்லாத காரணத்தால் மாவூத்துக்கும் சுஜய்க்குமான இணக்கம் நெருக்கமாக இல்லாமல் இருந்தது. உடல் மெலிந்து உற்சாகமிழந்து காணப்பட்டது. பலம் பொருந்திய சுஜய்யின் நிலையைக் கண்ட கால்நடை மருத்துவர் யானையை அனுபவம் வாய்ந்த  கிருமாறனின் கைகளில் ஒப்படைத்தார். அப்போது கிருமாறன் சுப்பிரமணி யானைக்கு மாவூத்தாக இருந்தார். கிருமாறனின் அனுபவம் காரணமாக அவரிடம் சுஜய் ஒப்படைக்கப்பட்டது. சுமார் 17 வருடங்கள் சுப்பிரமணிக்கு மாவூத்தாக இருந்த கிருமாறன் பிரிந்த ஒரே வருடத்தில் சுப்பிரமணி யானை இறந்தது கிருமாறனை மனதளவில் பெரிய பாதிப்பை உருவாக்கி இருந்தது. எல்லாவற்றையும் கடந்து சுஜய்யை மூன்று வருடங்களில் மீண்டும் பழைய பன்னீர் செல்வமாக மாற்றி வேறொரு மாவூத்திடம் கொடுத்தார். அப்போது முதுமலையில் இருந்த தேவராஜ் என்கிறவர் சுஜய்க்கு  மாவூத்தாக நியமிக்கப்பட்டார். 

அத்தியாயம் 1 அத்தியாயம் 2 அத்தியாயம்3 அத்தியாயம் 4 அத்தியாயம் 5 அத்தியாயம் 6 அத்தியாயம் 7 அத்தியாயம் 8 அத்தியாயம் 9 

கோவை மாவட்டம்  போளுவாம் பட்டி வனச்சரகத்தில் காட்டு யானைகள் தொல்லையைக் கட்டுப்படுத்த சாடிவயலில் வனத்துறை முகாம் ஒன்றை அமைத்தது. அங்கு நஞ்சன், பாரி என்ற இரண்டு கும்கிகள் பராமரிக்கப்பட்டன. 2014-ம் ஆண்டு மேட்டுப்பாளையம் நலவாழ்வு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நஞ்சன், மதம் பிடித்ததால் யானைகளுடன் ஏற்பட்ட மோதலில் உடல்நலம் குன்றியது. மருத்துவர்கள் அளித்த சிகிச்சை தோல்வியில் முடிய பிப்ரவரி மாதம் 25 தேதி நஞ்சன் உயிரை விட்டது. சாடிவயல் முகாமில் பாரி யானையை மட்டும் வைத்துக் காட்டு யானைகளை விரட்ட முடியாது என்பதால் நஞ்சனின் இடத்துக்கு சுஜையை அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது. சுஜய் யானைக்கு முதுமலையில் லாரியில் ஏறி இறங்கும் பயிற்சி கொடுக்கப்பட்டது. 2015 மே மாதம், முதுமலை தெப்பக்காடு முகாமிலிருந்து, சுஜய் லாரியில் ஏற்றி சாடிவயலுக்கு அனுப்பி வைத்தார்கள்.  

காட்டு யானைகளை விரட்டுவதிலும் பிடிப்பதிலும் சுஜய் யானை அனுபவம் பெற்றது. பல காட்டு யானைகளைப் பிடிக்க காரணமாயிருந்தது. தெரிந்தோ தெரியாமலோ யானைகள் குறித்த கறுப்பு பக்கத்தில் இடம் பெரும் துர்பாக்கிய நிலைக்குக் காலம் சுஜையைக் கொண்டு சென்றது. கோவை மதுக்கரை பகுதியில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த ஒற்றைக் காட்டு யானையைப் பிடிக்க “மதுக்கரை மகாராஜா” என்கிற பெயரில் மிஷன் ஒன்றை வனத்துறை தொடங்கியது. அந்தப்  பணியில் நான்கு கும்கி யானைகள் பயன்படுத்தப்பட்டன. அதில் சுஜய்யும்  ஒன்று. நான்காவதாக முதுமலையில் இருந்து கொண்டு வரப்பட்டு குழுவில் இணைந்தது சுஜய்யின் தம்பி விஜய். மிஷன் ஆரம்பித்து ஒற்றை யானையைப் பிடிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. கும்கி யானைகள், வனத்துறை அதிகாரிகள், மக்கள் என ஒற்றை யானையைக் குறி வைத்து பின் தொடர்ந்தார்கள். 

காட்டு யானையான மகாராஜாவை ஒரு வித பதற்றத்துக்கு கொண்டு வந்து அதன் பிறகு பிடிப்பதென யானையைப் பயமுறுத்த ஆரம்பித்தார்கள். யானையைப் பதற்றப்படுத்துவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதை சாந்தப்படுத்துவது. சம்பவ இடத்தில் கும்கி யானையிடம் எவ்வளவு ஆக்ரோஷம் இருக்கிறதோ அதே அளவுக்குக் காட்டு யானையிடம் ஒரு துயரம் இருக்கும். மிகப் பெரிய படை பலத்துக்கு முன் துயரங்களை காலம் ஒருபோதும்  கணக்கில் கொள்வதே இல்லை. பல நூறு பேருக்கு முன்னால் நான்கு கும்கி யானைகளின் உதவியுடன் மயக்க ஊசி மூலம் மகாராஜ் பிடிக்கப்பட்டது. பிடித்த பிறகு மகாராஜாவை ஒரு பூச்சியைப் போல வழிநடத்தினார்கள். யானைக்கு இரு புறமும் கும்கிகள் அதை முட்டித் தள்ளிக் கொண்டிருந்தன. கழுத்தில் கட்டப்பட்ட கயிற்றை லாரிக்கு பக்கத்திலிருந்த சுஜய்  யானை பலம் கொண்டு இழுத்துக்கொண்டிருந்தது. பயமுறுத்தி, பதற்றப்படுத்தி, காயப்படுத்திக் காட்டு யானைக்கு எதிராக அங்கே தொடுக்கப்பட்ட எல்லாமே துயரம்தான். சுற்றியிருந்த மக்கள் ஏதோ கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பது போல ஆரவாரம் செய்து கொண்டிருந்தார்கள். தொலைக்காட்சிகள் சம்பவத்தை நேரலைச் செய்துகொண்டிருந்தனர். யானை பிடிக்கப்பட்டு லாரியில் ஏற்றும் வரை ஒட்டுமொத்த தமிழகமும் பதற்றத்தில்தான் இருந்தது. ஒட்டு மொத்த அழுத்தமும் வனத்துறையின மீது திணிக்கப்பட்டதால் யானையைப் பிடிப்பதில் மட்டுமே வனத்துறை தீவிரமாக இருந்தது. வெற்றிக் கொண்டாட்டத்தில் காட்டு யானை மிகப் பெரிய பதற்றத்தில் இருந்ததை யாரும் கவனிக்காமல் விட்டனர். உளவியலாகவும் மகாராஜா பாதிக்கப்பட்டிருந்தது. 

எவ்வளவோ காட்டு யானைகளைப் பிடித்திருந்தாலும் இந்த அளவுக்கு ஒரு போராட்டத்தை சுஜய் எதிர்கொண்டதில்லை. சூழ்நிலை கும்கி யானைகளை மூர்க்கமாக்கி வைத்திருந்தது. பிடிக்கப்பட்ட காட்டு யானையை சாந்தப்படுத்தாமல் அதை உடனே டாப்சிலிப் கொண்டு போகும் முயற்சியில் வனத்துறை இறங்கியது. லாரியில் ஏற்றப்பட்ட மகாராஜாவுக்கு மேலும் ஒரு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. ஊசி செலுத்தியதும் யானையின் உடல் சிலிர்த்து அடங்கிய காட்சியை அதன் இடத்திலிருந்து பார்த்தால் ஈரக்குலையே நடுங்கும். மிஷனுக்கு மகாராஜா எனப் பெயர் வைத்த வனத்துறை அந்தப் பெயருக்கேற்ற மரியாதையைச் செய்யவில்லை என்பதற்குப் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் சாட்சியாக இப்போதும் இருக்கின்றன. எல்லாம் முடிந்து மகாராஜா லாரியில் டாப்ஸ்லிப் கொண்டு செல்லப்பட்டது.  டாப்ஸ்லிப்பில் தயார் செய்யப்பட்டிருந்த கரோலில் மகாராஜ் அடைக்கப்பட்டது. கரோலிலிருந்து வெளியே வரவே முயற்சி செய்தது. காட்டிலிருந்த எந்த யானையும் கரோலில் அடைத்தால் அதைத்தான் செய்யும். மகாராஜா மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் முடிவுக்கு வந்தது. பிடிக்கப்பட்ட இரண்டாவது நாள் 2016-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி மகாராஜா இறந்து போனது. கரோலில் முட்டி மோதியதால் மகாராஜா இறந்து போனதாக வனத்துறை கூறியது. இறப்புக்கு ஏதேதோ காரணங்கள் சொல்லப்பட்டது. ஆனால், அவை மட்டுமே காரணம் எனச் சொல்லிவிட்டு கடந்து விட முடியாது. 

முந்தைய அத்தியாயம் 

சம்பவம் நடந்த பிறகு சுஜய் மீண்டும் சாடிவயலுக்கு கொண்டு செல்லப்பட்டது. பல யானைகளைக் காட்டுக்குள் விரட்ட வனத்துறைக்கு உதவியது.  2017 ஜனவரி மாதம் 17-ம் தேதி எப்போதும் போல  சாடிவயல் முகாமில் சுஜய் மற்றும் பாரி யானைகள் இரண்டும் கட்டி வைக்கப்பட்டிருந்தன. அன்றைய இரவு இரண்டு யானைகளுக்கும் உணவு கொடுக்கப்பட்டது. மாவூத்துகள் எல்லாவற்றையும் சரிபார்த்துவிட்டு யானைகளுக்குச் செடி கொடிகளைப் போட்டுவிட்டு தூங்கச் சென்றனர். அன்றைய காலை 4 மணி வரை   எல்லாம் நன்றாக  போய்க்  கொண்டிருந்தது. அதன்பிறகு நடந்த அந்த  ஒரு சம்பவம்  சுஜய்யின் வாழ்க்கையைத் திருப்பி போட்டுவிட்டுப் போனது. 

-தொடரும்.Trending Articles

Sponsored