சுஸூகி - டொயோட்டா, மஹிந்திரா - ஃபோர்டு... இந்தியாவின் புதிய ஆட்டோமொபைல் கூட்டணிகள்!Sponsoredஉலகளவில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதுபோல, இந்தியாவில் தற்போது பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள், புதிதாக கூட்டணி அமைத்துக்கொண்டிருக்கின்றன. ஜப்பானிய நிறுவனங்களான டொயோட்டா - சுஸூகி, மஹிந்திரா - ஃபோர்டு ஆகியவை இதில் லேட்டஸ்ட்டாக இணைந்திருக்கின்றன என்பதுதான் சமீபத்திய சிறப்புச் செய்தி. 

இந்தியாவில் இதற்கு முன்பு இருந்த கூட்டணிகள் எவை?

Sponsored


1960-களில் இந்திய ஆட்டோமொபைல் சந்தை, உலகமயமாக்கலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்துஸ்தான் மோட்டார்ஸ் - மோரிஸ் மோட்டார்ஸ், ப்ரீமியர் மோட்டார்ஸ் - ஃபியட், ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் - ட்ரையம்ப் மோட்டார்ஸ், பஜாஜ் - டெம்போ, அசோக் மோட்டார்ஸ் - லேலண்ட் மோட்டார்ஸ், TELCO - மெர்சிடீஸ் பென்ஸ்,  மாருதி - சுஸூகி, ஐஷர் - மிட்சுபிஷி, Sumitomo - பஞ்சாப் டிராக்டர்ஸ் லிமிடெட், ஐஷர் - Massey Ferguson என கார் மற்றும் கமர்ஷியல் வாகனப் பிரிவில் புதிய கூட்டணிகள் உதயமாகின. 

Sponsored


1970-களில் பஜாஜ் - கவாஸாகி, டிவிஎஸ் - சுஸூகி, யமஹா - எஸ்கார்ட்ஸ், ஹீரோ - ஹோண்டா, கைனடிக் மோட்டார்ஸ் - ஹோண்டா, மெட்ராஸ் மோட்டார்ஸ் - என்ஃபீல்டு, ஜாவா - யெஸ்டி, பஜாஜ் - பியாஜியோ, Automobile Products of India - Innocenti, எஸ்கார்ட்ஸ் - CEKOP, மொபெட்ஸ் இந்தியா லிமிடெட் - Motobecane என டூ-வீலர் பிரிவும் பல கூட்டணிகளைப் பெற்றது. ஆனால், கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதன்முறையாக உலகக்கோப்பையை முத்தமிட்ட அந்த 1983-ம் ஆண்டில்தான், புதிய கூட்டணியின் தயாரிப்புகள் வரிசைகட்டின. 

1990-களில் இந்தியாவின் நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங், இந்தியாவின் பொருளாதாரத்தை முன்னேற்றும்விதமாக, அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். இதன் வெளிப்பாடாக டாடா - ஃபியட், மஹிந்திரா - ஃபோர்டு, இந்துஸ்தான் - மிட்சுபிஷி - இசுஸூ, டொயோட்டா - கிர்லோஸ்கர், ஐஷர் - வால்வோ, மஹிந்திரா - நவிஸ்டார், ஃபோர்ஸ் - MAN, அசோக் லேலண்ட் - நிஸான்/ஹீனோ,Kamaz/Tatra - Vectra என, கால ஓட்டத்தில் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களுடன், உலக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கைகோத்தன. Peugeot - Citroen நிறுவனம், இந்தியாவில் தனது கார்களை அறிமுகப்படுத்தும்விதமாக, சி.கே.பிர்லா குழுமத்துடன் கூட்டணி வைத்துள்ளது. 


ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் கூட்டணி(கள்):

முன்னதாக, ஜெர்மனியைச் சேர்ந்த ஃபோக்ஸ்வாகன் நிறுவனம், கடந்த 2009-ம் ஆண்டில் சுஸூகியுடன் கூட்டணி அமைக்க முடிவுசெய்தது. இது உலகச் சந்தையை மனதில்வைத்து முடிவுசெய்யப்பட்டது என்றாலும், இந்தியாவில் இது அப்போது மிகப்பெரிய அதிர்வலையை உண்டாக்கியது. முதல் நாளிலிருந்தே பிரச்னைகள் எழுந்த நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே (2011-ம் ஆண்டில்) இந்தக் கூட்டணி முடிவுக்கு வந்தது. இரு நிறுவன உயர் அதிகாரிகளிடையே மனஸ்தாபம் மற்றும் கொள்கைகளில் குழப்பம் ஆகியவையே இதற்கான காரணங்கள்.

இதைத் தொடர்ந்து, இந்தியாவைச் சேர்ந்த டாடா மோட்டார்ஸுடன் கூட்டணி அமைத்தது ஃபோக்ஸ்வாகன். இதனால் `போட்டிமிகுந்த இந்திய கார் சந்தையில் தனது மதிப்பை அதிகரித்துக்கொள்ளலாம்' எனக் கணக்குபோட்ட இந்த நிறுவனம், டாடாவின் Advanced Modular Platform (AMP) பிளாட்ஃபார்மைப் பயன்படுத்தி ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வாகன் பிராண்டில் கார்களைத் தயாரிக்க முடிவுசெய்திருந்தது. ஃபோக்ஸ்வாகனின் MQB பிளாட்ஃபார்மைவிட இது விலை குறைவாக இருந்ததோடு, தரமான கார்களை உற்பத்தி செய்வதும் இந்தக் கூட்டணியின் பிரதான நோக்கமாக இருந்தது. 

ஆனால், சில மாதங்களிலேயே இந்தக் கூட்டணியும் மூடுவிழா கண்டது. அதற்கு ஃபோக்ஸ்வாகன் குழுமம் எதிர்பார்த்த லாபம் கிடைக்காததே காரணம் எனச் சொல்லப்பட்டது. இதற்கான தீர்வாக, இந்தக் கூட்டணிக்காக தான் முதலீடு செய்யவிருந்த 1,000 கோடி ரூபாயை, சிறிய கார்களைத் தயாரிக்கக்கூடிய MQB-A பிளாட்ஃபார்மில் செலவழித்து, அதை அடிப்படையாகக்கொண்ட விலை குறைவான பிளாட்ஃபார்மை வடிவமைக்கும் முடிவில் இருக்கிறது ஃபோக்ஸ்வாகன். 

ஃபோர்டு நிறுவனத்தின் புதிய (பழைய) கூட்டாளி:

கடந்த 1995-ம் ஆண்டில் இந்தியச் சந்தையில் கால் பதித்த ஃபோர்டு நிறுவனம், மஹிந்திராவுடன் கூட்டணி வைத்தது. இதன் வெளிப்பாடாக, அமெரிக்கச் சந்தைகளில் விற்பனை செய்யப்பட்ட எஸ்கார்ட் செடான், இந்தியாவில் டயர் பதித்தது. ஆனால், வெறும் மூன்று ஆண்டுகளிலேயே இந்தக் கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டது. ஆக, 1998-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையிலான 20 ஆண்டுகாலத்தில், ஃபோர்டு நிறுவனம் சீரற்ற நிலையில்தான் இருந்தது. என்றாலும், புதிய கார்கள், கார்கள் சார்ந்த தொழில்நுட்பங்கள், எலெக்ட்ரிக் கார்கள் ஆகியவற்றுக்காக இதே நிறுவனங்கள் தற்போது மீண்டும் ஒன்றுசேர்ந்திருக்கின்றன.  

இதைத் தவிர, மற்றொரு காரணமும் இருக்கிறது. ஆம், எக்கோஸ்போர்ட் மற்றும் எண்டேவர் ஆகிய கார்களுக்கு இடையே ஒரு எஸ்யூவி-யை பொசிஷன் செய்ய ஃபோர்டு நிறுவனம் விரும்புகிறது. உலகச் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் Kuga அதற்கான தீர்வாகத் தெரிந்தாலும், அதை கச்சிதமான விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்துவது என்பது சற்றே கடினமான விஷயம். எனவே, மஹிந்திராவின் புதிய XUV5OO மற்றும் ஸாங்யாங் ரெக்ஸ்ட்டன் ஆகிய கார்களை அடிப்படையாகக்கொண்டு, ஒரு மிட்-சைஸ் எஸ்யூவியை ஃபோர்டு தயாரிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை! 

அதேபோல ஆஸ்பயரை அடிப்படையாகக்கொண்டு, E-வெரிட்டோவுக்கு மாற்றாக ஒரு எலெக்ட்ரிக் செடானைத் தயாரிப்பதற்கு மஹிந்திரா முயற்சிக்கும் எனத் தெரிகிறது. பின்னாளில் தேவைப்பட்டால், ஃபோர்டு நிறுவனம் தனது பேட்ஜுடன்கூட களமிறங்கலாம். தவிர, தான் எவ்வளவு முயற்சித்தாலும் ஃபோர்டு நிறுவனத்தின் தாயகமான அமெரிக்கச் சந்தையில் மஹிந்திராவால் சாதிக்க முடியவில்லை. எனவே, ஃபோர்டின் அனுபவத்தைப் பயன்படுத்தி, அங்கே வலுவாகக் காலூன்றும் எண்ணத்தில் மஹிந்திரா இருக்கிறது. 

சுஸூகி - டொயோட்டா: இது ஜப்பான் கூட்டணி!

சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்திய கார் சந்தை ராஜாவும் உலக கார் சந்தை ராஜாவும் ஒன்றுசேர்ந்திருக்கிறார்கள். பலத்த எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் இந்தக் கூட்டணி, அதிரடியான திட்டங்களை தன்வசம் வைத்திருக்கிறது. 5-10 லட்சம் ரூபாய் பிரிவில், லிவோ மற்றும் எட்டியோஸ் ஆகிய கார்களை டொயோட்டா வைத்திருக்கிறது. இவை பிராக்டிக்கலான கார்களாக இருந்தாலும், அவற்றின் விற்பனை அவ்வளவு சிறப்பாக இல்லை. எனவே, டொயோட்டா நிறுவனம் சுஸூகியின் பெலினோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா ஆகிய கார்களில் சிற்சில மாற்றங்களைச் செய்து, தனது பிராண்டில் வெளியிட முடிவுசெய்துள்ளது.

அதேபோல சுஸூகி நிறுவனம், பட்ஜெட் செக்மென்ட்டில் பெற்ற அசூர வெற்றியை ப்ரீமியம் செக்மென்ட்டில் பெற முடியவில்லை. இதனாலேயே சிறப்பான காராக இருப்பினும், கிஸாஷியால் இந்திய கார் சந்தையில் சாதிக்க முடியவில்லை. எனவே, உலகளவில் அதிகமாக விற்பனையாகும் கார்களில் ஒன்றான கரோலா ஆல்ட்டிஸ் செடானை அடிப்படையாகக்கொண்டு, தனது வெர்ஷனை சுஸூகி கொண்டுவரும் எனத் தெரிகிறது. மேலும், தன்வசம் SHVS தொழில்நுட்பம் இருந்தாலும், எலெக்ட்ரிக் கார்கள், தானியங்கி கார்கள், மாற்று எரிபொருளில் இயங்கும் கார்கள் ஏரியாவில் சுஸூகி கொஞ்சம் பின்தங்கியே இருக்கிறது. எனவே, டொயோட்டாவின் தொழில்நுட்பத் திறனை சுஸூகி பயன்படுத்திக்கொள்ளும். ஆக, இந்த இரு நிறுவனங்களும் தமது பலவீனங்களை, இந்தக் கூட்டணியால் சரிப்படுத்திக்கொள்ளும் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், இது அவ்வளவு ஈஸியாக அமையாது என்பதே நிதர்சனம்.

ஏதேனும் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றனவா?

இரண்டுமே ஜப்பானிய நிறுவனங்கள்தான் என்றாலும், வித்தியாசமான கொள்கைகளைக்கொண்டிருக்கின்றன. இந்தியச் சந்தையை சுஸூகி கரைத்துக் குடித்திருக்கிறது என்றால், டொயோட்டா ஜப்பானில் கொடிகட்டிப் பறக்கிறது. ஆனால், ஃபோக்ஸ்வாகன் குழுமம் உடனான கூட்டணி விரைவாகவே முடிவுக்கு வந்ததால், அதில் செய்த தவறுகளை சுஸூகி நிச்சயமாகச் செய்யாது. அதேபோல `உலகின் மூன்றாவது பெரிய கார் சந்தை' என அறியப்படும் இந்தியாவில், அதிக மூதலீட்டைச் செய்திருக்கிறது டொயோட்டா. அதற்கேற்ற லாபத்தையோ வருமானத்தையோ அந்த நிறுவனம் இன்னும் பெறவில்லை. மேலும் தன் நாட்டைச் சேர்ந்த சுஸூகி நிறுவனத்தின் மீது, நல்ல அபிமானத்தைக்கொண்டிருக்கிறது டொயோட்டா. இந்த இரு நிறுவனங்களும் ஒன்றிணைந்து, தங்கள் பலங்களைச் சரியாகப் பிரயோகிப்பார்கள் என நம்பலாம்.

Badge Engineering என்றால் என்ன?

ஒரே காரை அடிப்படையாகக்கொண்டு, அதைத் தயாரித்த நிறுவனமும் - அவர்களின் கூட்டாளியும் சேர்ந்து இரண்டு கார்களைக் களமிறக்கும் முறைக்குப் பெயர்தான் `Badge Engineering'. அந்த இரண்டு கார்களும் மெக்கானிக்கலாக ஒன்றுதான் என்றாலும், பம்பர்கள் - கிரில் - ஹெட்லைட் - டெயில் லைட் - பேட்ஜ் - வீல் கவர்/அலாய் வீல் - ரியர் வியூ மிரர் - ஸ்டீயரிங் வீல் - இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் - சென்டர் கன்சோல் என ஒரு காரில் கழற்றி மாட்டக்கூடிய பாகங்களில்தான் வித்தியாசங்கள் தென்படும்.  

ஆனால், உலகளவில் Badge Engineering வெற்றி பெற்றிருந்தாலும், இந்தப் பாணியிலான கூட்டணி மற்றும் தயாரிப்புகளுக்கு, இந்திய மக்கள் அவ்வளவு ஆதரவு அளிக்கவில்லை என்பதே உண்மை. கடந்த காலத்தில் விற்பனை செய்யப்பட்ட மோரிஸ் ஆக்ஸ்ஃபோர்டு - இந்துஸ்தான் அம்பாஸடர், ஃபியட் 1100 - ப்ரீமியர் பத்மினி, VauxHall VX - இந்துஸ்தான் கான்டெஸா, ட்ரையம்ப் ஹெரால்டு - ஸ்டாண்டர்டு ஹெரால்டு, ரோவர் SD1 - ஸ்டாண்டர்டு 2000, தேவு மாட்டீஸ் - செவர்லே ஸ்பார்க் ஆகியவை வெற்றி பெற்றிருக்கின்றன. 

ஆனால், பின்னாளில் வெளிவந்த நிஸான் மைக்ரா - ரெனோ பல்ஸ், ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ - ஸ்கோடா ரேபிட், நிஸான் சன்னி - ரெனோ ஸ்காலா, ரெனோ லோகன் - மஹிந்திரா வெரிட்டோ, ரெனோ டஸ்ட்டர் - நிஸான் டெரானோ, சுபாரு பாரஸ்டர் - செவர்லே பாரஸ்டர், நிஸான் எவாலியா - அசோக் லேலண்ட் ஸ்டில்லே, Zotye 2008 - ப்ரீமியர் ரியோ, டாடா இண்டிகா - சிட்டி ரோவர் என, பல உதாரணங்கள் விற்பனையில் சொதப்பியுள்ளன.  

ஜப்பான் கூட்டணியின் ப்ளஸ், மைனஸ் என்ன?

குவாலிஸ், கரோலா, இனோவா, ஃபார்ச்சூனர் என ப்ரீமியம் கார்களால் அறியப்படும் டொயோட்டா நிறுவனம், பெலினோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா ஆகிய பட்ஜெட் கார்களை அடிப்படையாகக்கொண்டு, இரண்டு கார்களை அறிமுகப்படுத்தப்போகிறது. எனவே, இந்த பட்ஜெட் கார்களின் வணிகம் மற்றும் பராமரிப்பு முறைக்கு ஏற்ப டொயோட்டா தன்னை தகவமைத்துக்கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. 

போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, சற்றே அதிக பராமரிப்புச் செலவுகளைக்கொண்டிருக்கும் டொயோட்டா நிறுவனத் தயாரிப்புகளில் ஒன்றான கரோலா ஆல்ட்டிஸ் செடானை அடிப்படையாகக்கொண்டு, குறைவான பராமரிப்புச் செலவுகளுக்குப் பெயர்பெற்ற சுஸூகி நிறுவனம் ஒரு காரைத் தயாரிக்கப்போவது, அந்த நிறுவனத்துக்கு கடும் சவாலாக இருக்கும். 

Badge Engineering கார்களைப் பொறுத்தவரையில், அதன் உதிரிபாகங்கள் மற்றும் சர்வீஸ் விஷயத்தில் வாடிக்கையாளர்கள் மிகவும் கவனமாக இருத்தல் அவசியம். மேலும், கார் டீலர்கள், ஆட்டோமொபைல் துறையைச் சேர்ந்த மொத்த வியாபாரிகள், உதிரிபாக உற்பத்தியாளர்கள், மெக்கானிக்குகள், சேல்ஸ் எக்ஸிக்யூட்டிவ்கள் ஆகியோரிடம், அந்தந்த நிறுவனங்கள் இதுகுறித்த விழிப்பு உணர்வை முறையாக வழங்க வேண்டும். 

எது எப்படியோ, வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான ஆப்ஷன்களை இந்தக் கூட்டணி வழங்குகிறது என்பதே பெரிய ப்ளஸ்தான்!Trending Articles

Sponsored