கடப்பாறைப் பாதை... ஏணிப்படி... கம்பிப்பாலம்... பர்வத மலையில் த்ரில் ட்ரெக்கிங்!Sponsoredகோடைக்காலம் வந்தாலே மக்கள் `ஊர் சுத்தலாம் வாங்க' மோடுக்கு வந்துவிடுவது வழக்கம். ஏப்ரல், மே மாதங்களில் சூரியன் ஓவர் டைம் செய்து தன் உஷ்ணத்தை ஊர் முழுக்கப் பாய்ச்சும். அதிலிருந்து தப்பிக்க, குளிர்ப்பிரதேசங்களுக்கு வனப்பகுதிகளுக்குச் சுற்றுலா செல்வது வழக்கம். ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் போன்ற ரெகுலர் சம்மர் லொக்கேஷன்களைத் தாண்டி, தற்போது நண்பர்களுடன் சேர்ந்து `டிரெக்கிங்' செல்வதுதான் டிரெண்டாகிவருகிறது. டிரெக்கிங் கொஞ்சம் த்ரில்லிங்காக இருந்தால்...! ஆம், அப்படி ஓர் இடம்தான் பர்வத மலை. ஆன்மிகப் பயணமாகப் பலர் அங்கு செல்கிறார்கள். பலர் த்ரில்லான டிரெக்கிங் அனுபவத்துக்காகச் செல்கிறார்கள். அப்படி என்னதான் இருக்கிறது பர்வத மலையில் எனத் தெரிந்துகொள்ள, பர்வத மலைக்கு ஒரு விசிட் அடித்தோம்.

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

Sponsored


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர், செங்கத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பர்வத மலை. மலை உச்சிக்குச் செல்ல, மொத்தம் மூன்று வழிகள் உள்ளன. தென்மாதிமங்கலம் (தென்மகாதேவ மங்கலம்), மாம்பாக்கம் மற்றும் கடலாடி போன்ற ஊர்களிலிருந்து வழிகள் தொடங்கும். பெரும்பாலும் மக்கள் தென்மாதிமங்கலம் மற்றும் கடலாடி வழியைத்தான் தேர்ந்தெடுத்தனர். காரணம், தென்மாதிமங்கலம் வழி, படிகளுடன் நடக்க சற்று எளிதாக இருக்கும் என்பதுதான். நாங்களும் அந்த வழியையே தேர்வுசெய்தோம்.

Sponsored


திருவண்ணாமலையிலிருந்து தென்மாதிமங்கலத்துக்கு ஒரு மணி நேரப் பயணம். மலை அடிவாரம் வந்து சேர்ந்தோம். வழியில் சிறு சிறு கோயில்கள் இருந்தன. பச்சையம்மன், வீரபத்திரர், ஆஞ்சநேயர் மற்றும் வனதுர்க்கை அம்மன் எனப் பல கோயில்கள் இருந்தன.

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

இருள் சூழ்ந்தது! நாங்கள் சென்றதோ பௌர்ணமிக்கு இரண்டு நாள் கழித்து. அதனால் நிலா வெளிச்சம் ஓரளவுக்கு இருந்தது. இருப்பினும் அடிவாரக் கடைகளில் 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிறிய டார்ச்லைட் ஒன்றை வாங்கிக்கொண்டோம். தூரத்திலிருந்து பார்க்கும்போது ஒரு நந்தியின் வடிவில் தெரிகிறது இந்த மலை. மலைப்பாதை, காட்டு வழிப்பாதை போன்ற பாதைகள்தாம் இருக்கும். எங்களுக்கு த்ரில்லான ஒரு பயணத்தைத் தொடங்கப்போகிறோம் என்ற ஆர்வம் அதிகரித்தது. 

ஒரு சிறிய மண்டபம் போன்ற அமைப்பில் இருக்கும் மலையடிவாரத்திலிருந்து படிக்கட்டுகள் தொடங்குகின்றன. அங்கே ஒரு பலிபீடமும், அதன் முன்னே ஒரு நந்திச் சிலையும், இடதுபக்கம் விநாயகர் சிலையும், வலதுபக்கம் சுப்ரமணியர், வள்ளி-தெய்வானை சிலைகளும் இருந்தன. அவர்களை வணங்கிவிட்டு மலையேறத் தொடங்கினோம். அப்போது 7:30 மணி இருக்கும். நாங்கள் பேசிக்கொண்டே நடந்து செல்லத் தொடங்கினோம். முறையாகக் கட்டப்பட்டிருந்த படிக்கட்டுகளில் கொஞ்சம் தூரம் ஏறினோம். அதன் பிறகு, ஒரே இருட்டு வழிதான். சுமார் 1,300 படிக்கட்டுகளைக் கடந்து வந்த பிறகு படிக்கட்டுகள் முடிந்தன. 

பிறகு காட்டுக்குள் செல்லும் வழிபோல் மலைப்பாதைகள்தாம். மரங்கள் மொத்தமாக நிலா வெளிச்சத்தை மறைத்துக்கொண்டன. இருட்டான காட்டுக்குள் வெறும் கல் பாதைகள் மேல் நடந்துகொண்டிருந்தோம். டார்ச்லைட் பயன்படுத்தும் நேரம் வந்தது. இருளையும் கரடுமுரடான மலைப்பாதையுமே எங்கள் கண்களும் கால்களும் உணர்ந்தன. வழிகளில் இருக்கும் கற்கள் மேல் அம்புக்குறிகள் வரையப்பட்டு அவை வழிநடத்துகின்றன. மேலே ஏற ஏற பாதை  மிகவும் கரடுமுரடானது. சோர்ந்துபோன நேரத்தில் ஆங்காங்கே உட்கார்ந்து மீண்டும் நடக்கத் தொடங்கினோம். 

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

கல் பாதை, சற்றுச் செங்குத்தாக ஏறத் தொடங்கியது. கற்களின் நடுவே ஏறுவதற்கு எளிதாக, கைப்பிடிகள் அமைக்கப்பட்டிருந்தன. நடந்து செல்லும்போது  காற்று வீசத் தொடங்கியது. எங்களின் சோர்வை, அந்த மூலிகைவாசம் நிறைந்த காற்று சற்று போக்கியது. புத்துணர்ச்சி கூடியதுபோல் இருந்தது. வழியில் நாங்கள் சிறு சிறு தற்காலிகக் கடைகளைப் பார்த்தோம். 

``எத்தனை வருஷமா அக்கா, இங்கே கடை போட்டிருக்கீங்க?''

``24 வருஷமா கடை போடுறோம். நானும் என் கணவரும் சேர்ந்து பௌர்ணமி நாள்ல இந்தக் கோயிலுக்கு வருவோம். மேல வரும் மக்களுக்கு இந்த மாதிரி தண்ணீர் குடுத்து உதவ ஆரம்பிச்சோம். அப்படியே கடை போட்டுட்டோம்'' என்ற அந்த அக்கா, மலையைப் பற்றி அவருக்குத் தெரிந்த கதையைச் சொன்னார்.

``இந்தக் கோயில் எப்போ கட்டினாங்கனுலாம் தெரியலை. ஆனா, ராஜா காலத்துல இருந்து இருக்குனு சொல்றாங்க. சில பேரு ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும்போது ஒரு சின்னத் துண்டு விழுந்தது. அதுதான் இந்தப் பர்வத மலைனு சொல்றாங்க. `பர்வதம்’ என்றால் மலை என்றும் `பர்வத மலை’ என்றால் மலைகளுக்கெல்லாம் மலை என்றும் சொல்வாங்க. 

கி.பி 300-ம் ஆண்டு `நன்னன்' என்ற ஒரு மன்னர் அடிக்கடி இந்த மலைக் கோயிலுக்குச் சென்று, சுவாமி வழிபாடு செய்தார் என்று மலைபடுகடாம் என்னும் நூலில் ஒரு குறிப்பு உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெரும் யோகிகள் தியானம் செய்வதற்காக இந்தக் கோயில் கட்டப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.

இந்த மலை, சுமார் 4,500 அடி உயரம். செங்குத்தான இந்த மலையில கடப்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படிகள் எல்லாம் இருக்குது. எந்த நேரமும் மூலிகைக் காற்று வீசும். படி ஏறவும் இறங்கவும் கடப்பாறைப் பாதை மாட்டும்தான் இருந்தது. 10 வருஷத்துக்கு முன்னாடிதான் இந்த ஏணிப்படிகள்லாம் போட்டாங்க. அதனால கடப்பாறைப் பாதை, ஏற இறங்கும் ஏணிப்படி ஆகிடுச்சு. வயசானவங்க வரும்போது, ஏணிப்படியிலேயே ஏறிப் போவாங்க. இந்த மலையிலேயே, கடப்பாறைப் பாதைதான் கடினமான பாதை. அதை ஏறிட்டா உச்சிக்குப் போயிடலாம்.''

``இதுவரைக்கும் உங்களுக்கு இங்கே ஏதாவது பிரச்னை வந்திருக்கா?”

``24 வருஷமா எதுவும் இல்லை. ஆனா, இந்தக் குரங்கணி மலையில வந்த காட்டுத்தீயால பயந்து இங்கேயும் வனத்துறை அதிகாரிங்க வந்து, இப்போ கடையைக் காலி பண்ணச் சொல்றாங்க. வேற என்ன பண்ண முடியும்? பௌர்ணமி நாள்கள், விசேஷமான நாள்கள்ல மட்டும் இனி கடை போடலாம்னு இருக்கோம்'' என்றார் சற்று தயக்கத்துடன்.

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

மலை உச்சியை நோக்கிப் பயணத்தை மீண்டும் தொடங்கினோம். இங்கேதான் அபாயகரமான கம்பிப்பாறை எனச் சொல்லக்கூடிய கடப்பாறைப் பாதை தொடங்குகிறது மற்றும் தண்டவாளப் பாறைப்படிகள், ஆகாசப்படிகள் இருக்கின்றன. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு, ஏறத் தொடங்கினோம். இந்த இடத்தில் மட்டும் ஏற்கெனவே பலமுறை மலை ஏறியவர்களின் வழிகாட்டுதல் மற்றும் உதவி அவசியம் தேவைப்படும். ஏனென்றால், பாறைகள் எல்லாம் செங்குத்துப்பாறை. 

ஓரிடத்தில், மலைப்பாறையின் பக்கவாட்டுச் சுவர்போல் தோன்றியது. இன்னோர் இடத்தில் இரண்டு பாறைகளுக்கிடையே அகலம் குறைவான தொங்கும் கம்பிப்பாலம்போல் தென்பட்டது. சிறிது தூரம் ஒரு தண்டவாளத்தில் நடப்பதுபோலிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மேலேறிக்கொண்டிருக்கிறோம் என்பதை மட்டும் கால்களும் கண்களும் உணர்ந்தன. மிகவும் கடினமான பாதைகள் தாண்டி வந்து ஓர் இடத்தில் நின்று திரும்பிப் பார்த்தோம். அங்கிருந்து சுற்றிலும் பார்க்கும்போது மலையைச் சுற்றி மேகங்கள் ஓடுவது அழகான காட்சியாக அமைந்தது. மேலிருந்து பார்க்கும்போது ஊரை முழுவதுமாக நாம் வானத்திலிருந்து பார்ப்பதுபோல் அழகாகத் தெரிகிறது. 

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

`இரவில் பார்ப்பதற்கே இப்படி தெரிகிறது என்றால், பகலில் எவ்வளவு அழகாக இருக்கும்?' என்று யோசித்தோம். ஒரு வழியாக மேல வந்துவிட்டோம் என நினைத்தால், கடைசியாக இரண்டு பெரிய பாறைகள் நடுவே ஒரு குறுகிய பாதை. அதில் ஏறி மேலே சென்றால் கான்கிரிட் படிக்கட்டுகள் தென்பட்டன. கடைசியாக உச்சியில் விட்டோபானந்தா ஆசிரமம் மற்றும் கோயில் சுவர் தென்பட்டன. மலை உச்சியை அடைந்துவிட்டோம் என்ற உற்சாகத்தில் எங்கள் உடல் சோர்வு, காணாமல்போனது. பிறகு, கோயிலிலேயே உறங்கிவிட்டு காலையில் இறங்கலாம் என முடிவெடுத்தோம். மெள்ள மெள்ளப் பொழுது விடியும்போதுதான் நாங்கள் கடந்து வந்த பர்வத மலையின் பாதை எவ்வளவு கடினமானது, எத்தகைய இடர் மிகுந்தது என்பது எங்களுக்கு விளங்கியது. வெளிச்சத்தில் பார்க்கும்போது நாங்கள் கடந்து வந்த இடங்கள் யாவும் மிக அழகாகத் தெரிந்தன.  

இயற்கை எழில் கொஞ்சும் காட்சி அது. இந்த அனுபவத்தை மிஸ்பண்ணிடாதீங்க! 

குறிப்பு:

மலை ஏறுவதற்கு முன்னர் எடுத்துக்கொள்ளவேண்டியவை:

1.  2 லிட்டர் தண்ணீர். 
2. எடை குறைவான பை, பழங்கள், பழச்சாறு கொண்டு செல்லவும்.
3.  இரவில் மலை ஏறினால், டார்ச்லைட் அவசியம்.
4.  சாப்பாட்டுப் பொருள்களை வெளியே தெரியாதவாறு கொண்டு செல்லவும். ஏனென்றால், குரங்குகள் அதைப் பிடுங்கிக்கொள்ளும்.
5.  மழைக்காலத்தில் கிரிப் உள்ள காலணிகளை மட்டும் அணிந்து செல்லவும் அல்லது வெறும் கால்களில் நடக்கலாம்.Trending Articles

Sponsored