`மூச்சுவிடாமல் இருக்க முடியாது... அதேபோலத்தான் எனக்கு நாட்டியமும்'' - மிருணாளினிSponsoredகூகுள், முக்கியதினங்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, டூடுல் என்ற புகைப்படத்தை தன் முகப்புப் படமாக தினமும் வெளியிடும். உலகளவில் மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றிருக்கும் டூடுல் புகைப்படத்தில் இன்று இடம்பெற்றிருப்பவர் இந்தியாவைச் சேர்ந்த பரதக் கலைஞர் மிருணாளினி சாராபாய்.  

picture courtesy: www.uttarpradesh.org

Sponsored


``உங்களால் மூச்சுவிடாமல் இருப்பதைப் பற்றி யோசிக்க முடியுமா... எனக்கு நாட்டியம் அப்படித்தான்'' என்று நாட்டியத்தின் மீதான தன் காதலை வெளிப்படுத்திய மிருணாளினிக்கு இன்று 100 வயது. கேரள மாநிலத்தில் சுதந்திரப் போராட்ட வீரரும் முன்னாள் எம்.பி.யுமான அம்மு சுவாமிநாதனின் மகளாகப்  பிறந்தவர். பாரம்பர்ய குடும்பத்தில் பிறந்தவர் மிருணாளினி. பரதத்துக்கு மிருணாளினி குடும்பத்துக்குமான தூரம் அதிகம் என்றாலும், முதல் முயற்சியாக தன் குழந்தைக்கு நாட்டியம் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்தார் அவரின் தாய்.

Sponsored


இள வயதிலிருந்தே கலைகள் மீது ஆர்வம் காட்டிய மிருணாளினி, வளர்ந்ததும் அமெரிக்காவில் உள்ள நாடக கல்விக்கழகத்தில் இணைந்து அதற்கான பயிற்சியைப் பெற்றார். பின் சுவிட்சர்லாந்து நாட்டில் டால்குரோசு பள்ளியில் மேற்கத்திய நடனம் பயின்றார். மேலும், மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பரதநாட்டியம், தகழி குஞ்சு குரு என்பவரிடம் கதகளி நடனம் மற்றும் கல்யாணக் குட்டியிடம் மோகினி ஆட்டத்தைப் பயின்றார். ரவீந்திரநாத் தாகூரின் ஆளுமையால் ஈர்க்கப்பட்டு, பின்னாளில் தன்னுடைய குரு தாகூரைப் போற்றி வந்ததாகப் பலரிடம் கூறியிருக்கிறார்.

பெங்களூரில் படிக்கும் போது இந்திய விண்வெளியின் தந்தை என அழைக்கப்படும் `விக்ரம் சாராபாயினை' மணந்து கொண்டார். விக்ரம் சாரபாய் போன்று பாரம்பர்ய மிக்க குடும்பத்திலிருந்து வரும் பெண்கள் நாட்டிய நாடகங்களில் பங்கேற்கமாட்டார்கள் என்று  விமர்சித்தவர்களே அசந்து போகுமளவுக்கு நாட்டியத்தாலேயே பதில் தந்தார் மிருணாளினி. வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து கலைச்சேவை ஆற்றிவந்த முதல் நடனக்கலைஞர் என்கிற பாராட்டைப் பெற்றவர். தன் முயற்சியால், "ஓ விக்ரம் சாராபாய் குடும்பமா, அது நடனக் கலைக்குப் பெயர் போன குடும்பமாயிற்றே” என்று மற்றவர்கள் சொல்லுமளவுக்குத் தன் திறமைகளை வளர்த்துக்கொண்டதாகப் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். 

நடனம் மட்டுமல்ல மிருணாளினி கவிதைகள் புனைவதிலும்,சமூக அக்கறை நிறைந்த நாவல்கள், குழந்தைகளுக்கான கதைகள்  எழுதுவதிலும் வல்லவர். பாடல்களை, சமூகப் பிரச்னைகள் குறித்த தன் நாட்டிய நாடகங்களுக்கான விழிப்பு உணர்வை, தன் கவிதைகள் மூலமாக வெளிக்கொண்டு வந்தார். இது அறிந்து அவரிடம் கேட்டபோது, "சமூக உணர்வுகளைப் பிரதிபலிப்பதுதானே கலை. அதைத்தான் நானும் செய்கிறேன். நடனம் என்பது ஒரு கண்ணாடி போன்றது. நான் அந்தக் கண்ணாடி பிரதிபலிக்கும் பிம்பம்தான்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

நடனம் என்பது குறிப்பிட்ட மக்கள் மட்டுமே கற்றுக்கொள்ளும் கலை என்கிற பிம்பத்தை உடைத்தார். நிச்சயம் மேல்தட்டு மக்களுக்கானது மட்டுமில்லை. அவை அனைத்துத் தரப்பினருக்கும் சென்றடைய வேண்டும் என்கிற கருத்தை மக்களிடம் கொண்டு செல்வதில் தீவிரமாக இருந்தார். இதற்காக 1948-ல் அகமதாபாத்தில் தர்பணா என்ற கலைக்கல்லூரி ஒன்றைத் தொடங்கி 18,000 மக்களுக்கு தான் கற்ற கலையான பரதம் ,கதகளி போன்றவற்றை பயிற்றுவித்தார். மக்களின் அன்றாட பிரச்னை, வாழ்க்கை போராட்டம் போன்ற கருத்துகளைக் கதைக்களமாகக் கொண்டு 300க்கும் மேற்பட்ட மேடை நாட்டியங்களை அரங்கேற்றிய மிருணாளினி 2016-ம் ஆண்டு மறைந்தார்.Trending Articles

Sponsored