நீண்ட தூரம் பறக்கும் பறவைகள் ``V" வடிவில் பறப்பதால் என்ன லாபம்?Sponsoredமனிதன், சிறகு முளைத்தபின் அவன் தவழ்ந்த பூமியை விட்டு வீட்டைக் கட்டிக்கொள்கிறான். பறவைகள் கூட்டைவிட்டு பூமியைக் கட்டிக்கொள்கின்றன. அந்தப் பூமியைச் சுற்றிப் பறந்து திரியும் அவை அழகு மட்டும் அல்ல, அறிவியலும் கூட. கடந்த வருடம் சென்ற இடத்திற்கே மீண்டும் செல்வது தொடங்கி, குச்சிகளைக் குறுகிய அலகுகளால் கொத்திக் கொத்திக் கூடுகட்டும் அதன் மேஸ்திரி வேலை வரை எதுவுமே அவற்றுக்குக் கற்றுக்கொடுக்கப் படுவதில்லை. அவைதான் அவற்றுக்கு ஆசான். சுய பாடம் கற்கவேண்டும், புதுப் புது அனுபவங்கள் வேண்டும் என்பதை நொடிக்கொருமுறை தன்னைப் பார்க்கும் அனைவருக்கும் கற்றுக்கொடுக்கும் பறவைகள் நமக்கும் ஆசான். அதைப் பார்த்தே நாமும் பறக்கத் துணிந்தோம் என்பது பழங்கதை. அவை பறப்பதும் மிகப் பழைமையான கதைதான். கண்டம் தாண்டும் பறவைகள் பல சமயங்களில் கடலைக் கடந்து பறக்கவேண்டி வருகிறது. அது எப்படி? பொதுவாகப் பறவைகள் கூட்டமாகப் பறந்தால் V வடிவத்தில் ஓர் ஒழுங்குமுறையோடுதான் பறக்கின்றன. அந்த ஒழுங்குமுறைக்குக் காரணம் என்ன? அது வெறும் ஒழுங்கு தானா? இல்லை; அதில் அவற்றின் பறக்கும் திறனை அதிகப்படுத்தும் ஆற்றல் ஒளிந்திருக்கிறது.

இதைப் பற்றிய ஆய்வுகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் ஹென்றி வெய்மர்ஸ்கிர்ச் என்ற ஒரு பறவையியல் அறிஞர். 2001 ம் ஆண்டு கூழைக்கடா என்ற பறவை பற்றிய ஓர் ஆய்வுக்காக அதன் உடலில் இதயத்துடிப்பை அளக்கும் கருவியைப் பொருத்தினார். அந்தப் பதிவுகள் அவர் கைக்குக் கிடைத்தபோது ஒரு வித்தியாசத்தைக் கண்டார். ஒரு பறவையின் இதயத்துடிப்பை விட மற்றொரு பறவையின் இதயத்துடிப்பு குறைவாக இருந்ததுதான் அது. அனைத்தும் ஒன்றாகவே பறக்கின்றன. சீரான வேகத்தில் செல்கின்றன. பிறகு எப்படி ஒன்றுக்கு ஒன்று மாறுபடும்?

Sponsored


பிறகு ஸ்டீவன் போர்ச்சுகல் என்பவர் இதைப் பற்றி முழுமையாக ஆராய முனைந்தார். லண்டனில் இருந்த ராயல் வெர்ட்டினரி கல்லூரியில் அவரது சகாக்கள் இதற்காகவே பிரத்யேகமாக டேட்டா லாக்கர்களை ( Data Loggers) உருவாக்கினார்கள். அதில் ஒரு சவால் இருந்தது. பறவைகளின் வலசைப் பாதை, வேகம், இருப்பு போன்றவற்றைப் பதிவு செய்யக்கூடிய அளவுக்குத் திறனோடு இருக்கவேண்டும். அதே சமயம் அதைப் பறவைகள் சிரமமின்றிச் சுமந்துசெல்லும் அளவுக்கு எடை குறைவாக இருக்கவேண்டும். அவர்கள் அதைச் சாத்தியப்படுத்தினார்கள்.

Sponsored


கருவி தயாராக உள்ளது. ஆனால் பறவை வேண்டுமே. ஏதாவது பறவையைப் பிடித்துப் பொருத்திவிடலாம் என்னும் அளவுக்கு இது எளிமை இல்லை. அவர்கள் பொருத்தும் பறவைகள் எங்கே தங்கள் பயணத்தைத் தொடங்குகின்றன. எங்கே போய்ச்சேரும் என்ற தகவல்கள் வேண்டும். அது தெரிந்தால்தான் அவற்றின் மீது பொருத்தப்படும் கருவியை அங்கே போய் எடுக்க முடியும். அதை எடுத்தால்தான் அவர்களின் கேள்விக்கான விடை கிடைக்கும். அப்போது வந்தவர்தான் ஜோஹன்ஸ் ஃப்ரிட்ஸ். அவர் ஆஸ்திரியாவின் ஒரு பறவைகள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர். வடக்கத்திய ஐபிஸ் பறவைகளை அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்றுவதற்காகப் போராடிக் கொண்டிருந்தார். பிணந்தின்னிக் கழுகுகள் நம் பார்வைக்குக் கொஞ்சம் அழகாகத் தெரியவேண்டுமென்றால் அவற்றைப் பார்த்த பிறகு இதைப் பார்த்தால் போதும். சொட்டைத் தலையுடன், நீண்டு வளைந்து சிவந்திருக்கும் அலகோடும் கறுத்த உடலோடும் இருக்கும் இந்தப் பறவை மத்திய ஐரோப்பாவில் 17 ம் நூற்றாண்டிலேயே முற்றிலுமாக அழிந்துவிட்டது. அதை மீண்டும் அங்கே அறிமுகப்படுத்தத் தேவையான முயற்சிகளைச் செய்துகொண்டிருந்தார்.

அதற்காக ஐபிஸ் பறவைகளில் 14 இளசுகளை நன்றாகப் பழக்கிக்கொண்டு ஒருவர் மட்டும் அமரும் சிறிய விமானத்தில் அவர் முன்செல்ல அவை பின்தொடர்ந்து வருமாறு செய்திருந்தார். இதன்மூலம் அவற்றின் முன்னோர்கள் வலசை வந்துசென்ற பாதையைப் பழக்கமாக்கி மீண்டும் தொடங்க வைக்கமுடியும் என்று நம்பினார். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட ஸ்டீவன் போர்ச்சுகலுக்கு நுனிநாக்குத் தேனாய் இனித்தது. உடனே அவரது குழு ஃப்ரிட்ஸிடம் விரைந்தது. விவரத்தை எடுத்துக்கூறினார்கள். அவரும் ஒப்புக்கொண்டார். பறவைகளோடு ஃப்ரிட்ஸ் வானில் பறப்பது. அவர்களைத் தொடர்ந்து போர்ச்சுகலின் குழு தரைவழியே செல்வது எனத் திட்டம் தயாரானது. 

ஒருவழியாகத் தேவையான தரவுகள் கிடைத்துவிட்டன. இனி நமது கேள்விக்கு விடை காண்போம் என்று அமர்ந்தார்கள். ஐபிஸ்களின் வேகத்தை ஆராய்ந்தபோது சீராகவே இருந்தது. இதயத்துடிப்பு ஹென்றி கண்டதுபோலவே வேறுபட்டது. தற்போது அவை சிறகுகளை அடிக்கும் முறையை ஆராய்ந்தார்கள். முன்னால் செல்லும் பறவை தன் சிறகைக் காற்றில் அடிக்கும்போது அதற்குப் பின்னால் காற்று கீழ்நோக்கிச் செல்லும், பக்கவாட்டுப் பக்கங்களில் காற்று மேல்நோக்கிச் செல்லும். இவ்வாறு தொடர்ச்சியாக ஒரு சுழற்சி முறையில் சுழலும் அந்தக் காற்று அதற்குப் பின்னால் தனது பக்கங்களில் பறக்கும் பறவைக்கு எளிமையானதோர் உந்துவிசையைக் கொடுக்கும். அந்த உந்துவிசை பின்செல்லும் பறவைக்குப் பறப்பதைச் சுலபமாக்கிவிடும். உதாரணமாகத் தன் குழந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு பனிச்சரிவில் முன்னால் தந்தை செல்கிறார். அவரது காலடியைத் தொடர்ந்து குழந்தை செல்கிறது. அது தன் தந்தையின் கால்தடங்களிலேயே கால் வைத்துச் செல்லும்போது அதற்கு நடப்பது எளிதாகிவிடும். ஏனென்றால் அந்த இடத்தில் இருக்கும் பனியைத் தந்தை கால் வைக்கும்போதே விலகிவிடுகிறது. அதேபோல் முன்செல்லும் பறவை தன் முழுத்திறனிலும் காற்றைக் கிழித்துச் செல்வதால் அந்தக் கிழிந்த காற்றால் ஏற்படும் சுழற்சி பக்கங்களில் பறக்கும் பறவைகள் பறப்பதை எளிதாக்கிவிடும். ஆகையால் பின்னால் பறக்கும் பறவை சிரமம் ஏதுமின்றி ஓரளவுக்குப் பறந்தாலே போதும். முன்செல்லும் பறவையே அதன் வேகத்திற்கு இட்டுச்சென்றுவிடும்.
அதுவே பறவைகள் வரிசையாகச் சென்றால் அந்தச் சுழற்சியின் தன்மையை அவற்றால் உணர முடியாது. அவை எப்படி இந்த மாதிரியான காற்றின் சுழற்சியைப் புரிந்துகொள்கின்றன. இறகு நுனியில் படும் காற்று எத்தன்மையது, வேகம் என்ன ஆகியவற்றை உணர்த்திவிடும். பறக்கும் சமயங்களில் பறவைகளின் இறகு நுனி கிட்டத்தட்ட ஒரு சென்சார் போலச் செயல்படும். ஒருவேளை ஏதேனும் பறவை அந்த அமைப்பிலிருந்து பிறழ்ந்து விட்டால் என்ன செய்யும்?

காற்றின் தன்மையைப் புரிந்துகொண்டு உடனே அது முன்செல்லும் பறவையின் சிறகு அசைவுகளுக்கு முற்றிலும் எதிர்த்திசையில் அடிக்கத் தொடங்கும். அது காற்றின் வேகத்தால் அமைப்பை விட்டுப் பிரிந்து செல்லாமல் இருக்கவைக்கும். பிறகு தன்னைச் சமாளித்துக்கொண்டு சரிசெய்துகொள்ளும்.

அந்த இளம் பறவைகளுக்கு யார் இதைக் கற்றுக்கொடுத்தது. அவை இப்போதுதான் இவ்வளவு தூரம் பறக்கின்றன. பிறகு எப்படிப் புரிந்துகொண்டன. இந்தக் கேள்விக்கு விடைகாணும்போது ஒன்று புரிந்துவிட்டது. இது மரபுரீதியாக வருவது இல்லை. பொதுவாக இளம் பறவைகள் மூத்த பறவையிடமிருந்து கற்றுக்கொள்ள வாய்ப்புகள் உண்டு. ஆனால், இங்கே பறக்கும் அனைத்துமே ஒத்த வயதுடையவை. சொல்லப்போனால் இவை பறக்கத் தொடங்கியதும் ஆளுக்கொரு விதமாகத்தான் பறக்கத் தொடங்கின. நேரம் போகப் போகக் காற்றின் தன்மையும் இறகுகளின் திறனையும் படிப்படியாகப் புரிந்துகொண்டு அவை சுயமாகக் கற்றுக்கொண்டன. சில மணிநேரத்துக்கு ஒருமுறை அவை தம் இடத்தை மாற்றிக்கொண்டே இருந்தன. முன்னால் வழிநடத்திச் செல்லும் பறவை சோர்வடையும்போது மற்றொரு பறவை முன்வந்துவிட அது பின்னால் சென்றுவிடும். இப்படி மாறி மாறிப் பயணம் செய்து காற்றைத் தனக்குச் சாதகமாக்கிப் பறக்கவே பறவைகள் அந்த அமைப்பில் பறக்கின்றன.

இவ்வாறு தன்னைக் கீழே தள்ளக்கூடிய காற்றைத் தவிர்த்து சாதுர்யமாக மேலே மேலே செல்வதோடு சோர்வின்றிக் கடல் கடந்து பறப்பதற்கும் அவை செய்யும் முயற்சிகள் அபூர்வம். சிறகு பலப்பட்டதும் வானத்தில் பாதைபோட்டுப் பறக்கும் பறவைகள் அந்தப் பாதையில் தன்னையே ஓட்டிக்கொள்ளத் தனித்திறன் கொடுத்திருக்கிறது இயற்கை.Trending Articles

Sponsored