"டோடோவைப் போலச் சாகாதே..!" - அப்பாவி பறவையின் அழிவு #DodoSponsoredடோடோவைப் போலச் சாகாதே (as dead as a dodo) எனும் பழமொழியைக் கேட்டிருக்கிறீர்களா?? அது என்ன டோடோ? அது எப்படி இறந்தது என கேட்கத் தோன்றுகிறதா? உண்மையில் அவை இறக்கவில்லை மனிதர்களால் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. சூழல் குறித்த எந்தப் பார்வையுமின்றி புவியின் பரப்பைத் தங்களாதாக்கிக் கொள்ள சண்டையிட்டுக் கொண்ட மனிதர்களின் காலத்தில் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் மட்டும் முக்கியத்துவம் இருக்குமா என்ன? தனது எதிரியை இனம் காணக்கூடத் தெரியாத டோடோ பறவையை முழுவதுமாக அழித்ததன் விளைவை இன்றும் மொரிஷியஸ் தீவு எதிர்கொண்டு வருகிறது. 

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ளது மொரிஷியஸ், மடகாஸ்கர் தீவுகள். இந்தத் தீவுகளில் அதிகமாகக் காணப்பட்டது டோடோ பறவை இனம். டோடோ அல்லது டூடூ(Dodo) என அழைக்கப்படும் இந்தப் பறவையானது பெயரளவில்தான் பறவை. சிறிய இறக்கைகளுடன் பறக்கும் திறன் இழந்தவை. பறக்கத்தான் முடியவில்லை நெருப்புக்கொழிகளைப் போல வேகமாக ஓடக்கூடியவையாக இருக்கும் என நினைத்தால் அதுவும் கிடையாது. மிக மெதுவாக நடந்து செல்லக்கூடிய பறவை இவை. அதுவே இதன் அழிவுக்குக் காரணமாகவும் இருந்தது. மொரிஷியஸ் தீவில் பெரும்பான்மையானப் பகுதிகளிலும் மடகாஸ்கரின் கிழக்குப் பகுதிகளிலும் இந்தப் பறவைகளின் வாழிடம் இருந்தது. மொரிஷியஸ் தீவில் மனித நடமாட்டமே இல்லாத காலகட்டத்தில் அத்தீவுக்கென்று ஒரு சூழலியல் அமைப்பு இருந்திருக்கிறது. யாருமற்ற அந்தத் தீவில் பாலூட்டிகள் எதுவும் இருந்திருக்கவில்லை. கிபி 1505ல் போர்த்துக்கீசியர்கள் மொரிஷியஸ் தீவிற்குள் நுழைந்து மனித நடமாட்டத்தை ஆரம்பித்து வைத்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் கழித்து கிபி 1507ல்தான் போர்த்துக்கீசியர்கள் டோடோ பறவையை முதன்முறையாகப் பார்த்ததாகச் சில தரவுகள் கூறுகின்றன. அதன்பின் அவற்றின் அழிவுக்கலாம் ஆரம்பித்துவிட்டது. 

Sponsored


15 ஆம் நூற்றாண்டு இறுதியில் இருந்து 16 நூற்றாண்டு முழுவதும் கொலம்பஸ், வாஸ்கோடகாமா போன்ற பல்வேறு நாட்டினரும் பூமியில் புதிய நிலப்பரப்பைத் தேடி அலைந்த காலம். அப்படியான காலத்தில்தான் போர்த்துக்கீசியர்கள் மொரிஷியஸை அடைந்துள்ளனர். அப்போது வந்த கப்பல் மாலுமிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் டோடோ பறவைகள் உணவாக்கப்பட்டது. அவற்றின் மிக மிருதுவான சதைகளுக்காக அதிக அளவில் வேட்டையாடப்பட்டன. நாடு பிடிக்கும் போட்டியில் அதன்பின் டச்சுக்காரர்கள் மொரிஷியஸைக் கைப்பற்றினர். டச்சுக்காரர்கள் இந்தத் தீவை தண்டனை வழங்கும் தீவாக மாற்றினர். தங்களது கப்பல்களில் குற்றவாளிகளுடன் பன்றிகள், குரங்குகள் போன்ற விலங்குகளும் கொண்டு வரப்பட்டன. அதுவரை எந்தப் பாலூட்டிகளும் இல்லாத அந்தத் தீவில் பன்றிகளும் குரங்குகளும் தங்களுக்குரிய இரைகள் இல்லாமல் டோடோ பறவையின் முட்டையைச் சாப்பிட ஆரம்பித்தன. டோடோ பறவையானது நிலத்தில் கூடு கட்டி முட்டையிடக் கூடியவை. அவையால் தனது முட்டைகளையும் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை. இப்படி மனிதனும் மனிதனால் அறிமுகப்படுத்த விலங்குகளும் டோடோவின் ஒட்டுமொத்த இனத்தையும் முற்றிலுமாக அழித்துவிட்டன. டோடோ பறவை மனிதனுக்கு அறிமுகமான 100 - 150 அண்டுகளிலேயே ஒட்டுமொத்த டோடோ இனமுமே அழிக்கப்பட்டுவிட்டது. கிபி 1662 ஆம் ஆண்டு அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட டோடோவின் கடைசி பறவையும் 1681 ஆம் ஆண்டு டோடோ இனத்திலேயே எஞ்சியிருக்கும் கடைசி பறவை எனத் தெரியாமலேயே கொல்லப்பட்டது. 

Sponsored


ஆய்வுக்குக் கூட எந்த மாதிரியும் இல்லை. மொரீஷியஸ் பிரிட்டிஷின் காலனியாக இருந்தபோது, ரிச்சர்டு ஓவன் என்னும் பிரிட்டிஷ் உயிரியலாளர், 1865இல் உதிரிஉதிரியாகக் கிடைத்த எலும்புகளை வைத்து டூடூவின் எலும்புக் கூட்டைத் திரும்ப அமைத்தார். அதை வைத்துத்தான் டூடூவின் உருவத்தை ஓரளவு யூகிக்க முடிகிறது. டோடோவானது வான்கோழியை விட பெரியது, மூன்றடியிலிருந்து நான்கடி வரை உயரமாக வளரக் கூடியது. 23செமீ வரை வளரக்கூடிய கருப்பும் சிவப்புமான அலைனை உடையது. 15 லிருந்து 23 கிலோ வரை இதன் எடை இருக்கலாம் என நம்பப்படுகிறது. கிடைத்த உதிரி எலும்புகளை வைத்து டோடோவின் உருவ அமைப்பை உருவாக்க டச்சு ஓவியர் ரோலண்ட் சாவ்ரேவின் டோடோ ஓவியம் உதவியாக இருந்துள்ளது. அந்த ஓவியம் கிபி 1624ல் வரையப்பட்ட ஓவியம்தான் டோடோவைப் பற்றிய முதல் காட்சி வடிவம். அதன் அடிப்படையில் டோடோவின் உடல் நீலமும் சாம்பல் நிறத்திலும் கால்கள் மஞ்சள் நிறத்திலும் உள்ளது. 

ரோலண்ட் சாவ்ரேவின் டோடோ ஓவியம்

டோடோவின் முழு எலும்புக் கூடு எங்கேயும் கிடைக்கவில்லை. அதன் தலை, கால்கள் பிரித்து பல்வேறு அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள டோடோவின் மண்டையோட்டை ஆய்வு செய்த போது அது சுடப்பட்டு இறந்தது தெரியவந்துள்ளது. இப்படி டோடோ பற்றிய பல்வேறு ஆய்வுகள் தற்போதும் நடந்து வருகிறது. வேகமாக அழிக்கப்படும் உயிரினங்களைக் காப்பதற்கு டோடோ பறவையானது ஒரு குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது

டோடோ பறவை அழிக்கப்பட்டது மொரிஷியஸின் சூழலில் சில விளைவை ஏற்படுத்தியுள்ளது. அந்த விளைவை அறிந்துகொள்ளவே 400 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. அது என்னவென்றால் கல்வாரியா மரங்கள் மொரிஷியஸில் மிக அரிதாகவே காணப்படுவதை அறிவியலாளர்கள் கண்டறிந்தனர். கடந்த 300 ஆண்டுகளில் எந்த புதிய கல்வாரி மரமும் உருவாகவில்லை. தற்போது இருக்கும் மரங்கள் கூட 400 ஆண்டுகள் பழமையானவை. 400 ஆண்டுகளுக்கு முன்புதான் டோடோ பறவைகளும் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. இந்த இரண்டையும் பொருத்திப் பார்த்த போதுதான் இயற்கையின் ஆச்சரியங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது. கல்வாரியா மரங்களின் பழங்களின் விதைகள் கடினத்த் தன்மை வாய்ந்தவை. அந்தப் பழங்களை டோடோ பறவைகள் சாப்பிட்டு விதைகளைக் கழிவின் வழியே வெளியேற்றும், அப்போதும் அந்த விதைகள் முளைக்கும் திறனைப் பெறுகின்றன. கடந்த 400 ஆண்டுகளில் டோடோ பறவைகள் இல்லாததால் இந்த மரங்களும் இல்லை. தற்போது வான்கோழி வகையைச் சேர்ந்த ஒரு பறவையை வைத்து கல்வாரியா மரத்தை மீட்டுருவாக்கம் செய்து வருகின்றனர். ஒருவேளை இந்த மரங்கள் அழிந்தால் அதனால் அதனைச் சார்ந்த எதாவது உயிரினங்களும் அழிந்து போகலாம். 

ஒரு செல் உயிரிக்கும் இராட்சச டினோசருக்கும் கூடச் சூழலில் தொடர்பு உண்டு. மனிதனால் புரிந்துகொள்ள முடியாத பல்வேறு ஆச்சரியங்கள் இன்னும் நிறையப் புதைந்து கிடக்கின்றன. அவற்றைப் பற்றித் தெரியாமலேயே சூழல் சமனை நாம் குலைத்து வருகிறோம். மனிதன் இல்லாவிட்டாலும் கரப்பான் பூச்சிகள் வாழும் ஆனால் அவை இல்லாமல் நம்மால் வாழ முடியாது. இதுதான் இயற்கை... அதனைப் புரிந்துகொண்டு காப்போம்..Trending Articles

Sponsored