`கருணை என்பது ஞானம்... எப்படி?’ - ஒரு நெகிழ்ச்சிக் கதை! #FeelGoodStory`கருணையைவிடப் பெரிய, எந்த ஞானத்தை உங்களால் அடைந்துவிட முடியும்?’ - என்று கேள்வியெழுப்புகிறார் தத்துவமேதை ரூஸோ. கருணை என்பது ஞானம். அது தியானத்தாலோ, யோகத்தாலோ கிடைப்பதல்ல; அன்பு செய்வதால் கிடைப்பது; ஈ. எறும்பு உள்பட சக உயிர்களை நேசிக்கத் தெரிந்த மனப்பக்குவத்தால் கிடைப்பது; அழும் குழந்தையைத் தூக்க ஓடும் தாய்மை உள்ளம் வாய்க்கப் பெற்றவர்களுக்குக் கிடைப்பது. அப்படிப்பட்ட ஞானம் பெற்றவர்கள் உலகமெங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதிகம் அறியப்படாமல், புகழ் வெளிச்சம் கொஞ்சம்கூடத் தங்கள் மேல்பட விடாமல், ஏதோ ஒரு மூலையில் சத்தமில்லாமல், இந்தச் சமூகத்துக்குத் தங்களால் ஆன சேவையைச் செய்துகொண்டே இருக்கிறார்கள். அந்த அரிய மனிதர்களில் ஒருவரின் உண்மைக் கதை இது.

Sponsored


62 வயதைக் கடந்த அந்த முதியவரின் தோளில் ஓர் ஆறு வயதுக் குழந்தை கிடக்கிறது. மருத்துவமனையால் `இனி பிழைக்காது’ என்று கைவிரிக்கப்பட்ட குழந்தை அது. லட்சக்கணக்கானவர்களில் ஒருவரை பாதிக்கும் மிக மோசமான மூளை பாதிப்பு அந்தக் குழந்தைக்கு ஏற்பட்டிருந்தது. அது, ஒவ்வொரு விநாடியையும் வலியோடு கடக்கவேண்டியிருந்தது. கைகளும் கால்களும் பக்கவாதம் தாக்கிச் செயலிழந்திருந்தன. முதியவர் முகமது பஸீக் (Mohamed Bzeek) குழந்தையைத் தட்டிக்கொடுக்கிறார்; ஆதுரமாக அதன் முதுகைத் தடவிக்கொடுக்கிறார்: கை, கால் விரல்களை அன்போடு வருடிக்கொடுக்கிறார். அவர் எதிர்பார்ப்பெல்லாம், `இந்தக் குழந்தை, வாழ்க்கையில் தான் தனியாக இல்லை என்று உணர வேண்டும். அவ்வளவுதான்.’

Sponsored


Sponsored


`இந்தப் பிஞ்சுக் குழந்தையால பார்க்க முடியாது, கேட்க முடியாதுனு எனக்குத் தெரியும். ஆனாலும் விடாம இதோட பேசிக்கிட்டு இருக்கேன். இவளைத் தூக்கிவெச்சுக்குறேன், விளையாடுறேன், தொட்டுத் தொட்டுப் பேசுறேன். ஏன்னா, இவளுக்கும் உணர்வு இருக்கு; உயிர் இருக்கு. இவ ஒரு மனுஷி...’ என்று குறிப்பிட்டிருக்கிறார் முகமது பஸீக்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலிருக்கும் அஸுசா (Azusa) நகரில் வசிக்கிறார் இந்த முதியவர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடைய முழுநேரத் தொழிலே மருத்துவமனைகளால் கைவிடப்பட்ட, மிக மோசமான நோயால் பாதிக்கப்பட்ட, இறப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் குழந்தைகளுக்குத் தன்னால் இயன்ற ஆதரவைக் கொடுப்பதுதான். லிபியாவிலிருந்து கலிஃபோர்னியாவுக்கு இடம்பெயர்ந்தவர் பஸீக். அங்கே டான் (Dawn) என்ற பெண்ணைச் சந்தித்தார். திருமணமும் செய்துகொண்டார். 80-களின் தொடக்கத்தில் டான் சில குழந்தைகளுக்கு வளர்ப்புத் தாயாக இருந்தார். ஒரு கட்டத்தில் இருவருமே உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவது என்று முடிவு செய்துகொண்டார்கள்.

கலிஃபோர்னியாவிலிருக்கும் ஏதோ ஒரு மருத்துவமனை. யாரோ ஒருவர் போனில் அழைக்கிறார்... `இங்கே ஒரு குழந்தைக்கு மிக மோசமான நோய். அதைப் பார்த்துக்குறதுக்கு ஹோம் ஏதாவது இருக்கா?’ என்று கேட்டால், அவர்களின் நினைவுக்கு வருவது முகமது பஸீக்கின் முகம்தான். மேலை நாடுகளில் குழந்தையை வளர்க்க வளர்ப்புப் பெற்றோர் (Foster Parents) இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் பஸீக்கும் டானும் வகுப்புகள் எடுத்தார்கள். உடல்நலமில்லாத குழந்தையை எப்படிக் கையாள்வது, குழந்தை மரணமடைந்தால் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையெல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள். டான், கலிஃபோர்னியா மாகாணத்தில் `வளர்ப்புப் பெற்றோர்களில் மிக முக்கியமானவர்’ என்கிற பெயரெடுத்தார்.

1991-ம் ஆண்டில் அவர்கள் வளர்த்த ஒரு குழந்தையைப் பறிகொடுத்தார்கள். அப்போதுதான், `இனி மிக அபாயகரமான நிலையிலிருக்கும் குழந்தைகளை மட்டும் அரவணைத்துக்கொள்வது என்ற முடிவுக்கு வந்தார்கள். ஆனால், அந்த வேலை அத்தனை சுலபமாக இல்லை. பெற்றோர்களே `இந்தக் குழந்தை நமக்கு வேண்டாம்’, `நம்மால் இந்தக் குழந்தையைப் பார்த்துக்கொள்ளவே முடியாது’ எனப் புறக்கணிக்கிற குழந்தைகளிடம் வாஞ்சையோடு, பாசத்தைக் கொட்டிச் சீராட்டுவது சாதாரண காரியமில்லை. ஆனால், வருடம் முழுக்க முகமது பஸீக்கின் வீட்டின் கதவு குழந்தைகளுக்காகத் திறந்தே கிடந்தது.

பஸீக் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்... `உங்களை நீங்க எவ்வளவு நேசிக்கிறீங்களோ, அந்த அளவு நேசத்தைக் குழந்தைகிட்ட காட்டணும். அந்தக் குழந்தைகளெல்லாம் கடுமையான நோயால பாதிக்கப்பட்டிருக்காங்கனு எனக்குத் தெரியும். அவங்க சீக்கிரமே இறக்கப் போறாங்கங்கிறதும் தெரியும். ஒரு மனிதப் பிறவியா என்னால என்ன முடியுதோ அதைச் செய்றேன், மற்றதை கடவுள்கிட்ட விட்டுர்றேன்...’

முகமது பஸீக்குக்கும் அவர் மனைவி டானுக்கும் ஆடம் (Adam) என்கிற ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்குப் பிறவியிலேயே எலும்பில் ஒருவிதமான நோய். `ட்வார்ஃபிஸம்’ (Dwarfism) என்றார்கள்; கூடவே வளர்ச்சிக் குறைவும் இருந்தது. எளிதில் உடைந்து போகும் அளவுக்கு பலவீனமாக இருந்தன குழந்தையின் எலும்புகள். எந்த அளவுக்கு என்றால், டயாப்பரை மாற்றினால்கூட எலும்பு முறிந்துவிடும் அளவுக்கு பலவீனம். ஆடமை, அவனின் பலவீனங்களோடு அப்படியே ஏற்றுக்கொண்டார் பஸீக்.

2015-ம் ஆண்டு, டான் உடல்நலக் குறைவால் இறந்து போனார். டானின் இறப்பு பஸீக்கைக் கொஞ்சம் கலங்கவைத்தாலும், அவருடைய சேவையை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. அதோடு தன் மகன் ஆடமையும் அவரே பார்த்துக்கொண்டார். ஓர் ஆண்டுக்கு மிக மோசமான உடல்நிலையோடு குறைந்தது 12 குழந்தைகளாவது பஸீக்கிடம் வருகிறார்கள். அவரும் கனிவோடு, தன் இரு கைகளையும் நீட்டி அவர்களை அரவணைத்துக்கொண்டே இருக்கிறார். இவரின் கதை பத்திரிகைகளில் செய்தியாக வந்த பிறகு, இணையதளத்தில் இவருக்கு உதவுவதற்கென ` GoFundMe’ என்ற பக்கம் உருவாக்கப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் வரை அவருக்கு நன்கொடையாக வந்து சேர்ந்த தொகை 5 லட்சம் டாலர்!

முகமது பஸீக்கிடம் பலரும் கேட்கும் கேள்வி ஒன்று உண்டு. `நீங்க ஏன் இந்த வேலையைச் செய்யணும்?’ அவரிடம் அதற்கு எளிமையான பதில் இருந்தது. `இந்தக் குழந்தைங்க பார்க்கவோ, பேசவோ, மற்றவர்களோட தொடர்புகொள்ளவோ முடியாத நிலையில இருந்தாலும், இவர்களுக்கு உயிர் இருக்கு. இவங்களுக்கு யாரோ ஒருத்தரோட அன்பு தேவைப்படுது. நான் அவங்ககிட்ட, `உங்களுக்கு ஓ.கேன்னா உங்களுக்காக நான் இருக்கேன்’னு சொல்றேன். அவங்க சரின்னு சொல்றாங்க. நாங்க சேர்ந்து வாழுறோம்.’Trending Articles

Sponsored