ஆன்லைன் கலந்தாய்வு... வாட்ஸ்அப் மூலம் தனியார் கல்லூரிகள் கொக்கி... உஷார்!Sponsoredஇந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடக்கவிருக்கிறது. நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதுபோல், ஆன்லைன் கலந்தாய்வில் தாங்கள் விரும்பாத கல்லூரியில் இடம் கிடைத்தால் என்னாகும் என மாணவர்களும் பெற்றோர்களும் கவலைப்படுகின்றனர். இதைப் பயன்படுத்தி தனியார் கல்லூரிகள், மாணவர்களை வளைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. 

சமீபத்தில் நடந்த நீட் தேர்வில், தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் பெற்றோர்களும் மாணவர்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். இதற்கு மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ, `ஆன்லைன் மூலமே தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டது’ என விளக்கம் சொன்னது. இதைப்போலவே, அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் ஆன்லைன் கலந்தாய்வில் மாணவர்கள் பாதிக்கப்படுவார்களோ என்ற அச்சம் பெற்றோர்களிடம் இருந்து வருகிறது. 

Sponsored


தற்போது, `பல்வேறு இடங்களில் உதவி மையங்கள் அமைத்திருக்கிறோம். ஆன்லைன் கவுன்சலிங்குக்கு விண்ணப்பிக்க எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்’ என தனியார் பொறியியல் கல்லூரிகள் வாட்ஸ்அப் வழியாக, பல்வேறு தொலைபேசி எண்களை அறிவித்திருக்கின்றன. தனியார் கல்லூரிகளை நம்பி அவர்கள் சொல்லும் முகவரிக்கு மாணவர்கள் செல்லலாமா என்பது குறித்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான செயலாளரும், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியருமான ரைமண்ட் உத்தரிய ராஜுடம் பேசினோம். 

Sponsored


``தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பொறியியல் சேர்க்கைக்கான உதவி மையத்தை அமைத்துள்ளோம். அந்த மையங்களுக்கு மாணவர்கள் சென்று ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனியார் கல்லூரிகளின் உதவி மையங்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை. அந்த மையங்கள் கம்ப்யூட்டர் சென்டர்கள் போல்தான் செயல்பட வாய்ப்புள்ளது. மாணவர்கள் இதுபோன்ற மையங்களை நாடாமல் அரசு அமைத்துள்ள உதவி மையத்தைத் தயக்கமின்றி அணுகலாம். இங்கு விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்வதில் இருந்து ஆன்லைன் கலந்தாய்வுக்குக்கான அனைத்து உதவிகளையும் செய்ய காத்திருக்கின்றனர். 

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு, விண்ணப்பத்தில் பதிவுசெய்த மொபைல் எண், user name, Password குறித்து தகவல் தெரிந்தால் அவர்களுடைய கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் மொபைல் எண், user name, Password போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளக்கூடாது. மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் 044 – 2235 9901 to 20 (20 இணைப்புகள்) என்ற தொலைபேசி எண்களிலும், tnea2018@annauniv.edu என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளலாம்" என்றார். 

கல்வியாளர் நெடுஞ்செழியன், ``அண்ணா பல்கலைக்கழகம் ஆன்லைன் கலந்தாய்வில் சாய்ஸ் முறையைக் கொண்டுவரவுள்ளது. இந்த சாய்ஸ் முறையில், மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் அடிப்படையில் எந்தக் கல்லூரியில் இடம்கிடைக்க வாய்ப்புள்ளது என்ற விவரத்தின் அடிப்படையில் பல கல்லூரிகளையும், அதில் உள்ள படிப்புகளையும் தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் தேர்வு செய்துள்ள பட்டியலில் இருந்தே ஏதேனும் ஒரு கல்லூரியில் சேர வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு தேர்வு செய்யும்போது மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்வது அவசியம். 

கடந்த ஆண்டு 44 கல்லூரிகளைச் சேர்ந்த ஒரு மாணவர்கூட முதல் செமஸ்டரில்  தேர்ச்சி பெறவில்லை. இதுபோன்ற கல்லூரியில் சேர்ந்தால் வாழ்நாள் முழுவதும் போராட வேண்டியதுதான். மாணவர்கள் அடுத்த நிலைக்குச் செல்ல, முதன்மையான கல்வி நிறுவனத்தை தேந்தெடுத்து படிப்பது அவசியம். இதற்காக, கடந்த மூன்று ஆண்டுகளில் கல்லூரிகளில் தேர்ச்சி பெற்ற விவரத்தை வெளியிட உள்ளது அண்ணா பல்கலைக்கழகம். அதனடிப்படையில் கல்லூரிகளைத் தேர்வு செய்யலாம். எக்காரணத்தைக்கொண்டும் பெற்றோர்கள் தங்களுடைய பொருளாதார சக்திக்கு அப்பாற்பட்ட வகையில் கடன் வாங்கி கல்லூரியில் சேர்ப்பதைத் தவிர்த்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளைத் தேர்வு செய்வது நல்லது" என்றார். 

தனியார் கல்லூரிகளின் ஆலோசனையை நம்பி ஏமாறாமல், மாணவர்கள் எச்சரிக்கையுடன் ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்பது அவசியம்.Trending Articles

Sponsored