இரண்டே நாளில் ஒரு சூரியன் காலி..! - அதிசய பிரமாண்ட கருந்துளைSponsoredவானியல் ஆராய்ச்சியாளர்கள் கருந்துளை என்ற பெயரைக் கேட்டால் உற்சாகமாகி விடுவார்கள். கருந்துளை என்பது அவர்களைப் பொறுத்தவரையில் பல ரகசியங்களை தன்னுள்ளே வைத்திருக்கும் ஒரு புதையல். புதையல் என்றாலே அதில் ஆச்சர்யங்களும் இருக்கும், மர்மமும் இருக்கும் என்பதைப் போல இவையும் அமைந்திருக்கின்றன. அவற்றைப் பற்றிய ஆய்வுகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. அதன் மூலம் தினமும் புதிய விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. அப்படித்தான் ஆஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியல் ஆய்வாளர்கள் புதிய கருந்துளை ஒன்றைக்  கண்டுபிடித்திருக்கிறார்கள்.

எதுவுமே தப்ப முடியாது

Sponsored


ஒரு நட்சத்திரம் தனது இறுதிக்காலத்துக்குப் பின்னர் கருந்துளையாக மாற்றமடையும். அப்பொழுது அதன் ஈர்ப்பு விசை அதிகமாகி சுற்றி இருக்கும் பொருள்களை தன்னுள்ளே இழுக்கும். இந்த அண்டம் முழுவதுமே பல மில்லியன் கணக்கில் கருந்துளைகள் இருப்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்திருக்கிறார்கள். அண்டவெளியின் ஒரு பகுதியாக அவை கருதப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் பொழுதெல்லாம் அவை ஆய்வாளர்களுக்கு ஆச்சர்யத்தையும், பிரமிப்பையுமே ஏற்படுத்துகின்றன.

Sponsored


கருந்துளைகளுக்கு ஈர்ப்பு விசை என்பது அதிகமாக இருக்கும். சிறியது, பெரியது என எந்தப் பொருள்களுமே அதன் ஈர்ப்பு விசையிலிருந்து தப்ப முடியாது; ஒளி உட்பட. இந்தப்  பிரபஞ்சத்திற்கு பொதுவானதாகக் கருதப்படும் நேரம் கூட அந்த இடத்தில் செல்லுபடியாகாது என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதனால்தான் காலப்பயணம் செய்வதற்கு அவை உதவக்கூடும் என்ற கருத்தும் ஒருபுறம் நிலவுகிறது. கருந்துளையின் ஈர்ப்பு விசையால் உள்ளே ஈர்க்கப்பட்டு உள்ளே செல்லும். போனால் போனதுதான் அதிலிருந்து மீண்டு வருவது என்பது சாத்தியமில்லாத ஒன்று.

இரண்டு நாள்களுக்கு ஒரு சூரியன் காலி

தற்பொழுது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வானியல் ஆய்வாளர்கள் 12 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் ஒரு புதிய கருந்துளையைக்  கண்டறிந்திருக்கிறார்கள். இந்த மாபெரும் கருந்துளை எப்பொழுதும் போலவே அதன் வேலையைச் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறது. அது அதனைச் சுற்றியிருக்கும் அனைத்தையும் உள்ளே இழுப்பதுதான் என்றாலும்கூட அதன் அளவுதான் ஆராய்ச்சியாளர்களைப் பிரமிக்க வைத்திருக்கிறது. இரண்டு நாள்களுக்கு ஒரு முறை நமது சூரியன் அளவிற்கான நிறையை ஈர்த்துக்கொள்கிறது. ஒரு வேளை நமது சூரியன் இதன் அருகில் இருந்தால் இரண்டே நாள்களில் காணாமல் போய்விடும். 20 பில்லியன் எண்ணிக்கையில் நமது சூரியனை ஒன்று சேர்த்து வைத்தால் எவ்வளவு வெளிச்சம் வருமோ அந்த அளவுக்கு நிறையை கொண்ட பிரமாண்டமான கருந்துளையாக இது கருதப்படுகிறது.  ``இந்தக் கருந்துளை வேகமாக விரிவடைந்து வருகிறது. உள்ளே இழுக்கப்படும் பொருள்களினால் ஏற்படும் உராய்வால் ஏற்படும் வெப்பத்தாலும் வாயுக்களாலும் ஒட்டுமொத்தப் பால்வெளியின் வெளிச்சத்தை விடவும் ஆயிரக்கணக்கான மடங்கு ஒளியை வெளியிடுகிறது" என்கிறார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிறிஸ்டியன் வூல்ஃப்  (Christian Wolf).

ஒரு வேளை நமக்கு ஒரு பெரிய இருக்கை கிடைத்து பால்வெளி மண்டலத்தின் மையத்தில் நாம் உட்கார்ந்திருந்து பார்த்தால் இந்தக் கருந்துளை ஒரு முழு சந்திரனை விடவும் பத்து மடங்கு பிரகாசமாக நம் கண்களுக்குப் புலப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இதுதான் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே அதிவேகத்தில் வளர்ச்சியடையும் கருந்துளையாகக் கருதப்படுகிறது. இது போல பிரம்மாண்டமான அதே நேரத்தில் வெகு வேகமாக வளர்ச்சியடையும் கருந்துளைகள் அரிதானவை. இது போன்ற கருந்துளைகள் பிரபஞ்சம் உருவான போது இருந்த கூறுகளைப் பற்றி அறிந்துகொள்ள உதவும்.Trending Articles

Sponsored