அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் புகைப்படம் வைத்து விளம்பரம் செய்யத் தடை!Sponsoredபன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு, இன்று வெளியானது. இதில் அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் புகைப்படங்களைத் தனியார் பள்ளிகள் வெளியிட்டு விளம்பரம் செய்வதற்குத் தடைவிதித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை. 

இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை 9.07 லட்சம் பேர் எழுதினர். இதில் 91.1 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களில் 89.38 சதவிகிதம் பேரும் தனியார் பள்ளிகளில் 98 சதவிகிதம் பேரும் வெற்றி பெற்றுள்ளனர். தேர்வு எழுதியவர்களில் மாணவிகள் 94.1 சதவிகிதம் பேரும் மாணவர்களில் 87.7 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். 

Sponsored


தமிழ்நாட்டில் 6,754 மேல்நிலைப் பள்ளிகளில் 1,907 பள்ளிகளில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 238 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சாதித்துக்காட்டியுள்ளனர். தேர்வு எழுதியவர்களில் 50 மாணவர்களும், 181 மாணவிகளும் 1,180 மதிப்பெண்ணுக்குக் கூடுதலாகப் பெற்றுள்ளனர். 1,150 மதிப்பெண்ணுக்குக் கூடுதலாக 4,847 மாணவ-மாணவிகள் பெற்றுள்ளனர். 1,100 மதிப்பெண்ணுக்கும் கூடுதலாக பெற்றவர்கள் 11,739 பேர். 

Sponsored


இந்த ஆண்டு வணிகவியல் (87.45 சதவிகிதம்) பிரிவைவிட அறிவியல் பிரிவில் (94.29 சதவிகிதம்) படித்தவர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், வணிகவியல் பிரிவில் படித்தவர்களில் 184 பேர் 1,180 மதிப்பெண்ணுக்குக் கூடுதலாக மதிப்பெண் பெற்றுள்ளனர். 1,151 மதிப்பெண்ணுக்குக் கூடுதலாகப் பெற்றவர்களில் 3,022 பேர் வணிகவியல் பிரிவைச் சார்ந்தவர்கள். அரசுப் பள்ளிகளில் திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, திருவாரூர், அரியலுர் மாவட்டத்தில் 80 சதவிகிதத்துக்கு குறைவாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, நாகப்பட்டினம், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளைவிட குறைந்த அளவிலேயே தேர்ச்சி பெற்றுள்ளனர். 

அரசுத் தேர்வுகள் இயக்ககம், `தேர்வு எழுதிய மாணவர்கள், 21.05.2018 பிற்பகல் முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இணையதளத்தின் வழியே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்' என அறிவித்துள்ளது. விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் 17.05.2018 முதல் 19.05.2018 வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வர்கள் தங்களுக்கு விடைத்தாளின் நகல் தேவையா அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பதை முன்னரே தெளிவாக முடிவு செய்துகொண்டு, அதன் பிறகு விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிக்க முடியும். தமிழ் முதல்தாள் மற்றும் ஆங்கிலம் விடைத்தாளின் நகலைப் பெற 550 ரூபாயும் இதர தாள்களைப் பெற 275 ரூபாயும் பெற வேண்டும். மறுகூட்டலுக்கான கட்டணம் உயிரியல் பாடத்துக்கும் மொழிப்பாடத்துக்கும் (இரு தாள்களையும் சேர்த்து) 305 ரூபாய் செலுத்த வேண்டும். ஏனைய பாடங்களுக்கு 205 ரூபாய் செலுத்த வேண்டும். 

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை, விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்தி ஒப்புகைச் சீட்டைப் பெற வேண்டும். இந்த ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே விடைத்தாளின் நகலை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளவும், மறுகூட்டல் முடிவுகளை அறியவும் செய்யலாம். பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும் வருகை புரியாதோருக்கும் சிறப்புத் துணைத்தேர்வு ஜூன் மாத இறுதியில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது, அரசுத் தேர்வுகள் இயக்ககம். 

அதிக மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்களின் புகைப்படத்தைத் தனியார் பள்ளிகள் வெளியிட்டு விளம்பரம் செய்யக் கூடாது என்றும், தடையை மீறி விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை. 

`அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் மதிப்பெண்ணை வைத்து விளம்பரம் செய்யும்போது, குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். இதைத் தவிர்க்கவே இந்த விளம்பரத் தடை' என்கிறது பள்ளிக்கல்வித்துறை. கடந்த ஆண்டு, மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பெற்றவர்களின் விவரத்தை வெளியிடும் முறைக்கு தடைவிதிக்கப்பட்டது. இந்த ஆண்டு, ஒவ்வொரு பள்ளியிலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் புகைப்படத்தை வெளியிட்டு விளம்பரம் செய்ய தடை விதித்திருப்பதை வரவேற்கின்றனர் கல்வியாளர்கள்.Trending Articles

Sponsored