டிஜிட்டல் உலகில் சைக்கோ மனிதர்கள்... டார்க் நெட் பயங்கரம்! #DarkNetSponsoredஉலகம் முழுவதும் இருக்கிற இணையப்பயன்பாட்டில் நாம் பயன்படுத்துவது கண்ணுக்குத் தெரிகிற ``சர்பேஸ் நெட்".  கூகுள், யாஹூ, மொஸில்லா பிரௌசர்கள் எல்லாமே இதில் அடங்கும். இதில் ஏதேனும் குற்றம் நடந்தால் சைபர் க்ரைம் மூலம் பிடித்துவிடலாம். மொத்த இணையப் பயன்பாட்டில் சர்பேஸ் நெட் என்பது 4% மட்டும்தான் உபயோகிக்கப்படுகிறது. மீதமிருந்த 94%  இணையமும் கண்ணுக்குத் தெரியாத ``டீப் வெப், டார்க் நெட்" என்கிற பெயரில் பயன்படுத்தப்படுகிறது. 

ஒரு நாட்டின் அரசு தொடர்புடைய தகவல்கள், ஒரு நிறுவனத்தின் தகவல்கள், மருத்துவத் தகவல்கள், நிதி விவரங்கள், அறிவியல் தொடர்பான தகவல்கள், ராணுவ ரகசியங்கள், தனிமனித ஃபைல்கள், வங்கி விவரங்கள் என எல்லாத் தகவல்களும் பொது வெளியில் இல்லாமல் ப்ரைவேட்டாக  டீப் வெப்பில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். டீப் வெப்பில் இருக்கிற எந்த ஒரு தகவல்களையும் சாதாரண மக்களால் பார்க்கவோ அதற்குள் நுழையவோ முடியாது. அதன் முகவரிகள் மற்றும் அதன் பாஸ்வேர்டு தொடர்புடைய நிறுவனங்களுக்கு மட்டுமே தெரியும். அதற்கென தனி முகவரிகள், பாஸ்வேர்டு, கோடிங் என அதிகக் கட்டுப்பாடுகள் இருக்கும். அப்படியான டீப் வெப்பில் நம்முடைய சாதாரண பிரௌசர்களால் உள்நுழைய முடியாது. அதற்கென தனி பிரௌசர் வேண்டும். அப்படியான மென்பொருளை அமெரிக்கா கண்டுபிடித்தது. 1990 ம் ஆண்டு அமெரிக்கக் கடற்படை டோர் (TOR) என்கிற மென்பொருளை வடிவமைத்தது. தன்னுடைய தகவல்களை ரகசியமாகப் பாதுகாக்கவும், சேமித்து வைக்கவும், உளவு பார்க்கவும்,  தகவல் தொடர்புக்கு டோர் அப்போது பயன்படுத்தப்பட்டது. டோர் பிரௌசரைப் பயன்படுத்தி கண்ணுக்குத் தெரியாமல் டீப் வெப்பில் இருக்கிற பல இணையதளங்களுக்குச் செல்லலாம். அப்படிச் சென்றுவருவதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. எந்த முகவரியிலிருந்து பயன்படுத்தப்பட்டது என்பதையும் கண்டறிய இயலாது. 2004-ல் இந்த கோடிங் பொதுவெளியில் வெளியிடப்பட்டது. அதன்பின்  THE TOR PROJECT, INC  என்ற லாபநோக்கமற்ற நிறுவனம் இந்த சாஃப்ட்வேரை வைத்து ஒரு நெட்வொர்க் உருவாக்கும் முயற்சியில் இறங்கியது. அந்த டோர் இன்றைய டார்க் நெட் உபயோகத்துக்கு நுழைவு வாயிலாக இருக்கிறது.  

Sponsoredஅமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டுக் கால் டாக்ஸி நிறுவனமான `ஊபர்’ உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கால் டாக்ஸிகளை இயக்கி வருகிறது. இந்நிறுவனத்துக்குப் பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளனர். ஊபரின் தகவல்கள் அதனுடைய டீப் வெப்பில் இருக்கிறது. இந்நிலையில் 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அந்நிறுவத்தின் 6 லட்சம் ஓட்டுநர்கள், வாடிக்கையாளர்கள் உள்பட  5.7 கோடி பேரின் மொபைல் எண்கள், இமெயில் முகவரி, உட்படப் பல தகவல்களை ஹேக்கர்கள் ஊபர் இணையதளத்தில் புகுந்து திருடினர். திருடிய தகவல் வெளியே தெரியாமல் இருக்க ஊபர் நிறுவனம் ஹேக்கர்களுக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர்களை வழங்கியிருக்கிறது. அதை ஊபர் நிறுவனமும் ஒத்துக்கொண்டது. இந்தத் திருட்டு டார்க் நெட் வகையைச் சேர்ந்தது. இப்போது வரை ஹேக்கர்ஸ் ராஜாக்களின் தலைமையிடம் டார்க் நெட் வலை பின்னல்கள்தாம். 

Sponsored


டார்க் நெட்டில் சட்டவிரோதமான அத்தனை சம்பவங்களும் சர்வ சாதாரணமாக நிகழும். நல்ல விதமாகவும் பயன்படுகிறது. ஆனால் அவை குறைவு. உதாரணமாக இப்போது ஃப்ளிப்கார்ட்டில் மொபைல் வாங்குவதைப் போல டார்க் நெட்டில் போதைப் பொருளிலிருந்து ஆயுதங்கள் வரை வாங்க முடியும். தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள், ஆயுதங்கள், மருந்துகள், போலி பாஸ்போர்ட், அமெரிக்க க்ரீன் கார்டு, திருடப்பட்ட க்ரெடிட் கார்டு தகவல்கள் மற்றும் பாஸ்வேர்டுகள் என எதை வேண்டுமானாலும் நொடியில் வாங்கி விடலாம். இதற்கு வங்கிக் கணக்கைப் பயன்படுத்தவேண்டியதில்லை. மாறாக பிட்காயின் மூலமாகப் பணப்பரிமாற்றம் செய்து கொள்கிறார்கள்.  இதை வாங்குவதற்குப் பயன்படுத்தப்படுகிற இணையதள முகவரிகளை ஒருபோதும் கண்டறியவே முடியாது. டோர் இணையதளத்தில் உள்நுழைந்த பயன்படுத்துபவரின் முகவரி நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கும். எங்கிருந்து பயன்படுத்துகிறார் என்பது டோருக்கு மட்டுமே வெளிச்சம். நொடிக்கு நொடி டோர் இணையதளம் பயன்படுத்துபவரின் முகவரியை மாற்றிக்கொண்டே இருக்கும். டோர் மட்டுமல்லாது. ONION (வெங்காயம்) என்கிற டொமைன் முகவரியைப் பயன்படுத்தியும் உள்நுழைய முடியும். பதினைந்து இலக்க எண்ணை முகவரியாகக் கொண்டிருக்கும் தளங்கள் எல்லாமே. ONION என்றே முடிகின்றன. சட்டவிரோதமான எல்லா இணையதளங்களின் பெயர் பட்டியலும் ஹிட்டன் விக்கி (HIDDEN WIKI ) என்கிற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்த இணையதள முகவரிகளை டோர் பிரௌசரில் தட்டினால் தகவல்கள் வரிசையில் வந்து விழுகின்றன. 


ஒருவருக்குப் பிடிக்காத நபரைக் கொலை செய்யக் கூலிப்படையை பர்ச்சேஸ் செய்வதெல்லாம் டிஜிட்டல் உலகின் உச்சம். மூன்று பேர் கொண்ட கொலை செய்யும் குழுவை குறிப்பிட்ட இணையத்தில் வாங்கிய பிறகு சம்பந்தப்பட்ட நபரின் தகவல்களைக் கொடுக்க வேண்டும். தகவல் கொடுத்த இரண்டு நாள்களில் குழுவில் ஒருவர் தொடர்பு கொள்வார். பிறகு மூன்று வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட டாஸ்க்கை முடித்துக்கொடுக்கிறார்கள். அதில் சில தொழில் நேர்மையைக் கடைப்பிடிக்கிறார்கள். அவர்களின் இணையப்பக்கத்தில் விதிமுறை என்ற ஒன்றைக் குறிப்பிட்டிருக்கிறார்கள் ``NO CHILDREN UNDER 16 AND NO TOP 10 POLITICIANS” இதெல்லாம் டார்க் நெட்டில் சர்வசாதாரணமாக நடக்கும் பர்சேஸ்கள். இதைத் தவிர்த்து யூ டியூபில் வெளியிட முடியாத பல வீடியோக்களும் டீப் நெட்டில் புதைந்து கிடக்கின்றன. சேம்பிளுக்கு ஒன்று.RED ROOM  என்கிற பெயரில் ஒரு குரூர சைக்கோ  வேலையைச் செய்கிறார்கள். பணம், போதை, ஆயுதம் என்பதைத் தவிர்த்து நடக்கிற பயங்கர சம்பவம் அது. குறிப்பிட்ட தேதியைக் குறித்து விட்டு அன்றைய தினம் நேரடியாக ரெட் ரூமில் ஒரு கொடூரக் கொலையை நிகழ்த்தப் போவதாக அறிவிக்கிறார்கள். பல இணையதளவாசிகள் நேரடி தொடர்பில் இருக்க ஒரு தனி மனிதனை சித்ரவதை செய்கிறார்கள். பார்வையாளர்களிடம் எப்படிச் சித்ரவதை செய்யவேண்டுமென நேரடி ஒளிபரப்பில் கேட்கிறார்கள். சைக்கோ வாசிகள் என்னென்ன முறைகளை கமென்டில் சொல்கிறார்களோ அப்படியே சிக்கிக் கொண்டவரைச் சித்ரவதை செய்தே கொலை செய்கிறார்கள். இந்தப் பயங்கரமெல்லாம் டீப் வெப்பில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இதில் அதிர்ச்சியடைய வைக்கிற செய்தியே தமிழகத்தில் பலரும் டோர் பிரௌசரைப் பயன்படுத்துகிறார்கள் என்பதுதான். 

எச்சரிக்கை: மேலே குறிப்பிட்டுள்ள ரூட்டர்களும், டொமைன்களும் சைபர் க்ரைம் பிரிவின் கண்காணிப்பில் இருக்கிற தளங்கள். முயற்சி செய்கிறேன் என்கிற பெயரில் பிளாக் லிஸ்ட்டில் சேர்ந்து விடாதீர்கள். 
 Trending Articles

Sponsored