``1,000 ஆண்டு பழைமையான காற்றாலைகள்... காப்பாற்ற யாராவது வாங்க!" - கடைசிக் காப்பாளனின் கவலைSponsoredடக்கு இரான் எல்லையிலுள்ள சிஸ்டன் புரொவின்ஸ் பகுதியிலுள்ள நஷ்டிபேன் நகரம் அது. அங்கு வசிக்கும் மக்கள் தங்களது தானியங்களைத் தரையில் காய வைப்பது வழக்கம். அந்நகரத்தில் வீசும் காற்றின் வேகம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதிவேகத்தில் வீசும் புயல் போன்ற காற்றினால், மக்கள் எளிதில் தானியங்களைக் காய வைக்க முடியவில்லை. அதனால் காற்று அதிகமாக வீசும் திசைகளை நோக்கி ஒரு தடுப்பு அரண் அமைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தனர். அதற்காகக் காற்றாலைகளை நிறுவும் முடிவுக்கு வந்தனர். அதன்படியே அந்நகரத்தைச் சுற்றிலும் 30 காற்றாலைகளை நிறுவினர், அம்மக்கள். இது நடந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் என்றால் ஆச்சர்யமாகத்தான் இருக்கும். ஆம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட காற்றாலைகள் தாம் இன்று வரை இயங்கிக்கொண்டிருக்கின்றன

உலகிலேயே மிகவும் பழைமையானது இந்தக் காற்றாலைகள்தாம். ஆயிரம் ஆண்டுகள் பயன்பாட்டில் இருக்கும் காற்றாலையானது களிமண், வைக்கோல் மற்றும் மரங்களை வைத்து மட்டுமே கட்டப்பட்டது. இதுதவிர, ஆபத்துகாலங்களில், அதிவேகக் காற்றை வெளியேற்றி, எதிரிகளிடமிருந்து, சுற்றியிருந்த கிராமங்களையும் இப்பழைமையான காற்றாலை பாதுகாத்ததாகவும் சொல்கிறார்கள், அப்பகுதி மக்கள். காற்றாலையின் மொத்த உயரம் 65 அடி. சினம் கொண்டு வீசும் காற்றைக் கூட `கூல்' செய்து அனுப்பும் படி அமைக்கப்பட்டுள்ளது இதன் மற்றொரு சிறப்பு. ஒரு காற்றாலைக்கு 8 சக்கரம் போன்ற அமைப்புகள் இருக்கும். ஒவ்வொரு சக்கரத்திலும் 6 மரத்தாலான செங்குத்துப் பிளேடுகள் அமைக்கப்பட்டிருக்கும். இவைதாம் காற்றின் வேகத்தை அசால்ட்டாக எதிர்கொள்ள உதவுகின்றன. இதற்கு நிஷ் டூபேன் (Nish Toofan) என்று பெயர். இதற்கு உருது மொழியில் `புயல் தடுப்பான்' என்று அர்த்தம். 2002-ம் ஆண்டு இரான் இக்காற்றாலைகளைத் தேசியப் பாரம்பர்ய தளமாக அறிவித்தது. 

Sponsored


Sponsored


முன் காலத்தில் வேகமாகச் சுற்றும் காற்றாலைகளைப் பயன்படுத்தி மக்கள் தானியங்களை அரைத்துக் கொண்டனர். காற்றாலையின் சக்கரம் சுற்றும்போது அதன் அடிப்பகுதியில் தானியங்களை அரைத்துக் கொள்வது போன்று அமைக்கப்பட்டிருக்கும். இன்னும் சில மக்கள் தானியங்களை அரைக்க காற்றாலைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு வருடத்தில் மே மாதம் பாதியிலிருந்து செப்டம்பர் மாதம் பாதி நாள்கள் வரை மொத்தமாக 120 நாள்கள் இக்காற்றாலைகள் இயங்கும். காற்றாலைகள் ஆயிரம் ஆண்டுகள் கடந்து செயல்பட்டு வந்தாலும், இதன் ஆயுட்காலம் இன்னும் சில ஆண்டுகளில் முடிவடைய இருக்கிறது. இவற்றைக் கவனித்துக் கொள்ளும் கடைசிக் கவனிப்பாளர் அலி முகம்மது எடிபரி (Ali Muhammad Etebari). இவருக்குப் பின்னர் இக்காற்றாலைகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்க எந்த ஒரு மனிதரோ அல்லது எந்த ஒரு குடும்பமோ முன்வரவில்லை.

உள்ளூர் மக்களுக்கும் இந்தக் காற்றாலையின் வரலாற்றைக் காப்பதிலும், அதனைப் பற்றி தெரிந்து கொள்வதிலும் விருப்பமில்லாமல் இருக்கின்றனர். இதனைப் பற்றி பேசும் எடிபரி, ``நான் கார் டிரைவராக 28 ஆண்டுகள் வேலை பார்த்தவன். ஒவ்வொரு காற்றாலையையும் ஆறு குடும்பங்கள் ஒன்று சேர்ந்து பாதுகாத்து வந்திருக்கிறார்கள். இன்றைய நிலையில் ஒரு காற்றாலையைப் பாதுகாக்க யாரும் முன்வர மறுக்கிறார்கள். இந்நகரச் சிறுவர்களும், இளைஞர்களும் கற்களை காற்றாலைகளின் மீது எறிந்து சேதப்படுத்துகின்றனர். இதனால் சில காற்றாலைகள் சுற்றாமல் சேதமடைந்து நின்றுகொண்டிருக்கின்றன. கார்கள், பைக்குகள் போன்ற இயந்திரங்களையே இந்நகர மக்கள் அதிகமாக விரும்புகின்றனர். பாரம்பர்ய தளத்தைப் பாதுகாப்பதில் இங்கிருக்கும் யாருக்கும் அக்கறையில்லை. இது இயங்க மின்சாரமோ, வேறு எந்த எரிபொருளோ தேவையில்லை. இதனால் நகருக்கு எந்த மாசுபாடும் ஏற்படவில்லை, எதிர்காலத்தில் ஏற்படப் போவதும் இல்லை" என்று கவலை தெரிவிக்கிறார். 

ஆயிரம் ஆண்டுகள் கடந்த காற்றாலைகளை மேலும் காக்க யாராவது கிடைக்க மாட்டார்களா என்று தேடிக்கொண்டிருக்கிறார், அலி முகம்மது எடிபரி.Trending Articles

Sponsored