ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் பின்பக்க டிஸ்க் பிரேக், ஏபிஎஸ்...!Sponsored`2018-ம் ஆண்டு ஏப்ரல்-1 முதல் விற்பனை செய்யப்படும் 125சிசி-க்கும் அதிகமான டூ-வீலர்களில், ஏபிஎஸ் அல்லது சிபிஎஸ் பொருத்தப்பட வேண்டும்' என்ற விதியை, மத்திய அரசாங்கம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிவித்திருந்தது.  ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் டூ-வீலர்களில் ஏபிஎஸ்ஸைப் பொருத்துவதற்காக ஏப்ரல் 1, 2019 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.

அதிக லாபத்தைப் பெறும்நோக்கில், இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் பலர் `2018-ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போ'வில் தங்களின் புதிய தயாரிப்புகளைக் காட்சிப்படுத்திய கையோடு, அவற்றை அப்போதே வரிசையாக அறிமுகப்படுத்திவிட்டனர். 

Sponsored


க்ளாஸிக் 500 சீரிஸில் ஏற்கெனவே பின்பக்க டிஸ்க் பிரேக் உண்டு!

Sponsored


இதில் பங்குபெறாத ராயல் என்ஃபீல்டு நிறுவனம், அந்த நேரத்தில் தண்டர்பேர்டு மற்றும் ஹிமாலயன் பைக்கைத் தொடர்ந்து, க்ளாஸிக் 500 சீரிஸ் பைக்குகளில் பின்பக்க டிஸ்க் பிரேக்கை ஸ்டாண்டர்டு அம்சமாக ஆக்கிவிட்டது. இது க்ளாஸிக் 350 Gunmetal Grey மாடலில் மட்டும் வழங்கப்பட்டாலும், வழக்கமான க்ளாஸிக் 350 மற்றும் புல்லட் சீரிஸில் இந்த வசதி இடம்பெறவில்லை. ஆனால், புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப தனது பைக்குகளை மேம்படுத்தும் பொருட்டு, பின்பக்க டிஸ்க் பிரேக் மற்றும் ஏபிஎஸ் அமைப்பை அவற்றில் சேர்க்க முடிவுசெய்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு. 

எந்தெந்த ராயல் என்ஃபீல்டு மாடல்களில் ஏபிஎஸ் வரும்?

இதன்படி க்ளாஸிக் மற்றும் தண்டர்பேர்டு சீரிஸ் பைக்கில், சிங்கிள் சேனல் ஏபிஎஸ், ஹிமாலயன் மற்றும் புதிய 650 சிசி பைக்குகளில் டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்படலாம் என தகவல்கள் வந்துள்ளன. ஏனெனில், சென்னையை அடுத்த ஒரகடத்தில் அமைந்திருக்கும் தனது தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் க்ளாஸிக் 500 - ஹிமாலயன் - புல்லட் 500 -  கான்டினென்ட்டல் ஜிடி 535 ஆகிய யூரோ-4 பைக்குகளில், டூயல் சேனல் ஏபிஎஸ் ஸ்டாண்டர்டு அம்சமாக இருப்பதை இங்கே சொல்லியாக வேண்டும். எனவே, அந்த வசதியை இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மாடல்களிலும் இந்த நிறுவனம் வழங்கும் நாள், வெகுதொலைவில் இல்லை! 

புல்லட் சீரிஸில் பின்பக்க டிஸ்க் பிரேக்!

பின்னாளில் ஏபிஎஸ்ஸை இணைப்பதற்கு வசதியாக, முதல்கட்டமாக புல்லட் 350 ES மற்றும் புல்லட் 500 ஆகிய பைக்குகளில், பின்பக்க டிஸ்க் பிரேக் சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது. கூடவே சிங்கிள் சேனல் ஏபிஎஸ் சேரும்போது, அது ஈரமான அல்லது மணல் நிறைந்த நிலப்பரப்பில் முன்பக்க வீலின் ரோடு கிரிப் குறைவதைத் தடுக்கும். ஆனால், இது டூயல் சேனல் ஏபிஎஸ்-போல முழுமையாக இருக்காது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். 

இதே பிரிவைச் சேர்ந்த பஜாஜ் டொமினார் D400 மற்றும் ஹோண்டா சிபிஆர் 250R ஆகிய பைக்குகளில் LED ஹெட்லைட் மற்றும் பின்பக்க டிஸ்க் பிரேக் ஸ்டாண்டர்டாகவும், டூயல் சேனல் ஏபிஎஸ் ஆப்ஷனலாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இனிவரும் நாள்களில் ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை தோராயமாக 10 - 20 ஆயிரம் ரூபாய் அதிகரிப்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது. அது, அவற்றின் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது போகப் போகத் தெரியும்!Trending Articles

Sponsored