"கடல் எங்கள் வீடு, சுறா எங்கள் சாமி!" - ஆச்சர்யப்படுத்தும் ஆஸ்திரேலிய பூர்வகுடிகள்Sponsored"மனன்ங்கொரா கொர்பெங்கா, கொர்பெங்கா மனன்ங்கொரா
  யோரோ யோரோ மனன்ங்கொரா...
  மபியிஞாரா, கொலியின்ஜாரா...
 கொலியின்ஜாரா மபியிஞாரா.... " 

கடல் அலைகளின் சத்தத்திற்குப் பின்னணியில் ஓர் உறுதியான ஆண்குரல் இந்தப் பாட்டைப் பாடுகிறது. இந்த வரிகள் 40 ஆயிரம் வருட வரலாற்றைக் கடத்துகிறது. பல ஆயிரம் தலைமுறைகளாக இந்தக் கதை வாய்மொழியாகவே கடத்தப்பட்டு வருகிறது. இதை அவர்கள் "சுறாவின் கனவு" (The Tiger Shark Dreaming) என்றழைக்கிறார்கள். 

Sponsored


Courtesy : Neil Hammerschlag
                                                 

Sponsored


 சுறாவின் கனவு. 

"அந்த (Tiger Shark)சுறாவுக்கு அது மிகவும் மோசமான நாளாக இருந்தது. 

மற்ற சுறாக்களும், இன்னும் பல மீன்களும் அதைத் தொந்தரவு செய்துகொண்டேயிருந்தன. அது மிகவும் பொறுமையாக இருந்தது. குறிப்பாக, அங்கிருந்த ஸ்டிங்க்ரே மீன்கள் அதை வீண் வம்பிற்கு இழுத்துக் கொண்டேயிருந்தன. ஒரு கட்டத்தில் பொறுமை கடந்து, அந்த மீன்களோடு சண்டையிட்டு,  அங்கிருந்து வெளியேறியது அந்த சுறா. 

வழியில் சந்தித்த தன் சகாக்களிடம் தன் வருத்தத்தைப் பகிர்ந்தது. தனக்கான, தன் இனத்திற்கான ஒரு வாழிடத்தை நோக்கிப் போவதாக அது சொன்னது. தங்களுக்கான வீட்டை...நிம்மதி கொடுக்கும் ஒரு வீட்டை உருவாக்கப் போவதாக சொல்லி விடைபெற்றது. அப்படி ஒரு வீட்டை உருவாக்கும் கனவோடு அந்த சுறா அன்று, அங்கிருந்து புறப்பட்டது..." 

இது தான் அந்தக் கதை. 

அப்படி கிளம்பிய அந்த சுறா தான் இந்த வான்டர்லின் தீவுகளை (Vanderlin Island) உருவாக்கியது. இங்கிருக்கும் நன்னீர் ஓடைகளையும், சுனைகளையும், கிணறுகளையும் உருவாக்கியது. தீவு அமைந்திருக்கும் இந்தக் கடல் பரப்பான, கார்பென்டரியா வளைகுடாவை (Gulf of Carpentaria) உருவாக்கியதும் கூட அந்த சுறா தான். அந்தச் சுறாவின் வழி வந்தவர்கள் நாங்கள் என்கிறார்கள் "யன்யுவா" (YanYuwa) பழங்குடியினர். ஆஸ்திரேலிய பூர்வகுடி இனத்தில் ஒன்று யன்யுவா. 

யன்யுவா மக்கள் தங்களை "லி அந்தா விரியரா" (Li - Antha Wirriyara) என்று சொல்லிக் கொள்கிறார்கள். அதாவது, “உப்பு நீரின் மக்கள்” என்பது அதன் அர்த்தம். 

யன்யுவா மொழி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதில் ஆண்களுக்கு என தனி பேச்சு வழக்கும், பெண்களுக்கென தனி பேச்சு வழக்கும் இருக்கிறது. இரண்டு பேச்சு வழக்கிலும் கடலையும், சுறாவையும் குறிக்கும் வகையில் தலா 5 வார்த்தைகள் இருக்கின்றன. இந்த மொழியை,"இயற்கையின் மொழி" என்று வர்ணிக்கிறார்கள் மொழி ஆராய்ச்சியாளர்கள். 

நாற்பதாயிரம் வருடங்களைக் கடந்து வாழ்ந்த இனத்தின் அழிவு 1700களில் தொடங்கியது. அப்போது தான் வெள்ளையர்கள் ஆஸ்திரேலிய மண்ணில் காலடி வைக்கத் தொடங்கினார்கள். ஆஸ்திரேலியா... வெள்ளையர்கள் தேசமாக உருமாறத் தொடங்கியது. பல பூர்வகுடிகளின் வேர்களும் அழிக்கப்பட்டன. அந்தச் சுழலில் யன்யுவாவும் தப்பவில்லை.

யன்யுவா மொழியை இன்று தெரிந்தவர்கள் மிகவும் சொற்பானவர்களே. அவர்கள் இனத்தின் மீது ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்தியது. அது மொழி, கலாசார, பண்பாடுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இருந்தும் யன்யுவா உயிர் பிழைத்திருந்தது. 

2008ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், அன்றைய ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் (Kevin Rudd) பாராளுமன்றத்தில் இப்படிச் சொன்னார்...

" பல ஆயிரம் ஆண்டுகளாக இந்தத் தேசத்தின் ஆன்மாவில்  படிந்திருக்கும் கறையை நீக்கி, இந்த மண்ணில் ஆன்மாவின் மனசாட்சிப்படி ஒரு புதிய வரலாறை எழுதிட இங்கு...இன்று கூடியிருக்கிறோம். 

இந்த மண்ணின் பூர்வகுடிகளுக்கு நாங்கள் இழைத்த மன்னிக்க முடியா குற்றங்களுக்கு இன்று நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். திருடப்பட்ட அந்தத் தலைமுறைகளின் வாழ்விற்காக மன்னிப்புக் கேட்கிறேன். பெரும் வலிகளை சுமந்து திரியும் அந்த இனங்களின் தாய்மார்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். 

பெருமை வாய்ந்த மக்களையும், அவர்களின் கலாசாரத்தையும், பண்பாட்டையும் இகழ்ந்து, அழித்தமைக்கு அந்த இனத்தின் தாய்மார்களிடமும், தந்தையர்களிடமும், சகோதர சகோதரிகளிடம், குழந்தைகளிடம் பெரும் மன்னிப்புக் கேட்கிறேன். " என்று கிட்டத்தட்ட 4 நிமிடங்களுக்கும் மேலாக மன்னிப்புக் கோரினார் பிரதமர். 

இது உலக வரலாற்றில் எந்த நாட்டிலும் நடந்திராத ஓர் நிகழ்வு. 

பகிரங்க மன்னிப்புக் கேட்டதோடு மட்டுமல்லாமல், மண்ணின் பூர்வகுடிகளின் வாழ்வை மீண்டும் நிர்மாணிக்க பல முயற்சிகளையும் எடுத்து வந்தது, எடுத்து வருகிறது ஆஸ்திரேலிய அரசு. 

யன்யுவா இனத்திற்கான நில உரிமைகளைப் பல இடங்களில் வழங்கியது. தங்கள் நாட்டின் மலைகளையும், காடுகளையும், கடலையும் பூர்வகுடிகளால் மட்டும் தான் பாதுகாக்க முடியும் என்பதை உணர்ந்து அதற்கான பல முன்னெடுப்புகளையும் செய்கிறது. 
யன்யுவா இனத்தைச் சேர்ந்த மூத்தவரான "கிரஹன் ஃப்ரைடே" (Graham Friday) என்பவரை கடல் பாதுகாவலராக நியமித்துள்ளது. தங்கள் தீவைச் சுற்றியிருக்கும் கடல் பகுதியைப் பாதுகாப்பது, கடல் உயிரினங்களின் எண்ணிக்கைகளை கணக்கில் எடுப்பது, தங்களின் மொழியை இளைய தலைமுறைக்கு சொல்லித் தருவது, தங்கள் பழைய வேட்டையாடும் யுத்திகளை சொல்லித் தருவது என இயங்கி வருகிறார் ஃப்ரைடே. 

கடல் உணவு தான் இவர்களின் பிரதானம். ஆனால், ஒருபோதும் சுறாக்களை இவர்கள் வேட்டையாடுவதில்லை. அதேபோல், தங்கள் தேவைக்கு மீறியும் இவர்கள் வேட்டையாடுவதில்லை. யன்யுவா மொழியை பாதுகாப்பது அதன் கலாசாரத்தைப் பாதுகாப்பது. அது மட்டுமல்லாமல், அது அந்தக் கடலையும், கடல் வாழ் உயிரினங்களையும் பாதுகாப்பதாகும். 

பொதுவாக, சுறாக்கள் இந்தப் பகுதியிலிருந்து வருடத்திற்கு ஒருமுறை பசிபிக் பெருங்கடலை நோக்கி நகரும். ஆனால், சமீபகாலங்களில் சுறாக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துக் கொண்டே வருகிறது. பூமி வெப்பமயமாதலும், பருவநிலை மாற்றமுமே இதற்கான முக்கிய காரணம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். யன்யுவா மக்கள் சுறாக்களை இனி பாதுகாப்பார்கள் என்று அறிவித்துள்ளது ஆஸ்திரேலிய அரசாங்கம். அவர்களால் மட்டும் தான் அது முடியும் என்றும் கூறியுள்ளது. 

"எங்கள் ஆன்மா...வாழும் மற்றும் மூச்சுவிடும் அத்தனையோடும் ஒன்றோடு கலந்திருக்கிறது. 
  எங்கள் ஆன்மா... உயிரல்லாத மற்றும் மூச்சுவிடாத அத்தனையோடும் கூட ஒன்றோடு கலந்திருக்கிறது." 
                                                                                                                                 - முட்ரூரூ. (ஆஸ்திரேலிய பூர்வகுடி கவிஞர்) 
 Trending Articles

Sponsored