எந்தக் காலமானாலும் நம் உடல் வெப்பநிலை எப்படி சீராக இருக்கிறது?Sponsoredஉலகில் வாழும் உயிரினங்களை அவற்றின் உடல்வெப்பநிலை பராமரிக்கும் தன்மையை அடிப்படையாகக்கொண்டு இரண்டாகப் பிரிக்கலாம். 

1. வெப்ப இரத்த உயிர்கள் - பறவைகள் மற்றும் பாலூட்டிகள் (மனிதன் உட்பட) போன்ற சில உயிரினங்களில் உடலின் வெப்பநிலை ஒரேயளவாகப் பராமரிக்கப்படும். சுற்றுப்புறம் குளிராக இருந்தாலும், வெப்பநிலை அதிகமாக இருந்தாலும் அவற்றின் உடல்வெப்பநிலை ஒன்றாகவே இருக்கும். இவை மாறா வெப்பநிலை விலங்குகள் எனவும் அழைக்கப்படும்.

2. குளிர் இரத்த உயிர்கள் - ஊர்வன மற்றும் நீர்நில வாழ் உயிரினங்களில் உடலின் வெப்பநிலை சுற்றுப்புறத்தைப் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும். குளிர்வான நீரில் இருக்கும்போது குளிர்வாகவும், வெப்ப மண்டலத்தில் இருக்கும்போது அதிக வெப்பநிலையையும் இந்த விலங்குகளின் உடலிலிருக்கும். இவற்றை மாறக்கூடிய வெப்பநிலை உயிர்கள் எனவும் அழைக்கலாம். 

Sponsored


மனிதனின் உடல் வெப்பநிலை குறைவாக இருந்தால் வெப்பம் உற்பத்தி செய்யப்பட்டு தேவையான நிலைக்கு வரும், அதிகமாக இருந்தால் வெப்பம் வெளியேற்றப்பட்டு சமநிலையை அடையும். 

Sponsored


இயல்பான அளவு:
சராசரி மனித உடலின் வெப்ப நிலை,  வெப்பநிலைமானியை கொண்டு அளவிடும்போது 98.6°F ஆகும். எனினும் 96.4°F மற்றும் 99.1°F ஆகியவற்றுக்கிடைபட்ட வெப்ப நிலை உடலின் சமநிலையில் காணப்படும் இயல்பான வெப்ப நிலையாகும். 

உடலில் வெப்பநிலை உருவாகும் முறைகள் :
1. வளர்சிதைமாற்ற வினைகள் - உடலில் உருவாகும் பெரும்பகுதி வெப்பம் வளர்சிதைமாற்ற வினைகளால் தோன்றக்கூடியது. கொழுப்பின் வளர்சிதை மாற்றத்தின்போது ஒரு கிராமுக்கு 9  Kcal வெப்பம் உற்பத்தியாகிறது, கிட்டத்தட்ட 1லிட்ட ஆக்சிஜன் இதற்கு பயன்படுத்தப்படுகிறது. அதேபோல கார்போஹைட்ரேட் வளர்சிதைமாற்றதின்போது 4.7  Kcal/L வெப்பமும், புரதத்தின் வளர்சிதைமாற்றதின்போது 4.5  Kcal/L வெப்பமும் கிடைக்கிறது. வளர்சிதைமாற்ற வினைகளின் மூலமாகக் கிடைக்கும் வெப்பத்தை வளர்சிதை மாற்ற வெப்பம் எனவும் அழைக்கலாம். இந்த வினைகள் பெரும்பாலும் கல்லீரலில் நடைபெறுவதால், அது நமது உடலிலேயே மிகவும் வெப்பமான உறுப்பானது.

2. தசைகளின் இயக்கம் - தசைகளை நாம் பயன்படுத்தும்போது அதனுள் வினைகள் நிறைய நடைபெறும். இவை வெப்பத்தை உற்பத்தி செய்யும். தசைகள் ஓய்விலிருக்கும்போதும் அவற்றின் தன்மையை பராமரிக்க நடைபெறும் வினைகளால் குறைந்தளவு வெப்பம் உற்பத்தியாகும். 

3. ஹார்மோன்கள் - தைராய்டு, அட்ரீனலின் போன்ற ஹார்மோன்கள் வளர்சிதைமாற்றத்தை அதிகப்படுத்துவதால், வெப்பம் உருவாவதை அதிகரிக்கும்.

4. கதிர்வீச்சு - சுற்றுப்புறத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும்போது, கதிர்வீச்சின் மூலமாக வெப்பம் உடலிலுள் இழுக்கப்படும். 

5. நடுக்கம் - குளிர்நிறைந்த சூழலில் நமது கட்டுப்பாட்டை மீறி நடுக்கம் ஏற்படும். நடுக்கத்தின்போது உடலின் தசைகள் இயங்குவதால் வெப்பம் உருவாகும். நடுக்கங்கள் வெப்பநிலை குறையும்போது சமநிலைக்குக் கொண்டுவரும் உடலின் இயல்பான செயல்பாடு.

6. பழுப்புநிற கொழுப்பு - இவை பிறந்த குழந்தைகளில் வெப்பத்தை உருவாக்கப் பயன்படுபவை. இவ்வகை கொழுப்பின் வழியே இரத்தம் செல்லும்போது நடைபெறும் வினைகள் வெப்பத்தினை வெளிப்படுத்தும். 

உடலிலிருந்து வெப்பம் வெளியேறும் முறைகள்:
1. கடத்துதல் - நமது உடலுடன் தொடர்புகொள்ளும் நாற்காலி, மெத்தை போன்ற பொருட்களுக்கு வெப்பம் கடத்தப்படும். 
2. கதிர்வீச்சு - சுற்றுப்புறக் காற்றின் வெப்பநிலை குறைவாக இருக்கும்போது, அதன்வழியே வெப்பம் வெளியேற்றப்படும்.
3. ஆவியாதல் - நீர் ஆவியாகும்போது, வெப்பத்தை எடுத்துக்கொண்டு குளிர்ச்சியைக் கொடுக்கும். இயல்பாகவே சிறிய அளவில் (50 mL/hour) நுரையீரல் மற்றும் தோல் பகுதிகளில் ஆவியாதல் நடைபெறும். அதிக வெப்பநிலை இருக்கும்போது வியர்வை வெளியேறி அதிகளவு ஆவியாகும், இது அதிக குளிர்ச்சியைத் தரும்.
4. வெப்பச்சலனம் - பெரும்பகுதி வெப்பம் இந்த முறையில் இழக்கப்படுகிறது. முதலில் உடலைச் சுற்றியுள்ள காற்றுக்கு ஒட்டுமொத்த வெப்பமும் கடத்தப்படும். பின்னர் காற்று அந்த வெப்பத்தை மற்ற பகுதிகளுக்கு கடத்தி சென்றுவிடும். 
5. உமிழ்நீர் - வியர்வைச் சுரப்பிகள் இல்லாத விலங்குகளில், குறிப்பாக நாய்களில் எச்சிலின் மூலமாக வெப்பம் இழக்கப்படும். நுரையீரலிலிருந்து வரும் சூடான காற்று உமிழ்நீரை ஆவியாக்குவதால் உடலிலிருந்து வெப்பம் குறையும். 

வெப்பநிலையில் சமநிலை 
உடலில் வெப்ப நிலை இயல்பான மனிதர்களில் சராசரியாக 37°C (98.6°F) என பராமரிக்கப்படுகிறது. மூலையில் உள்ள ஹைபோதலாமஸ் எனும் பகுதி வெப்பநிலையைப் பராமரிக்கும் பணியைச் செய்கிறது. ஹைபோதலாமசின் முன்பகுதி வெப்ப நிலையைப் சரியாக அளந்து, அதிகமாக இருந்தால் வெப்பத்தை வெளியேற்றும் முறைகளை (வியர்த்தல், வளர்சிதைமாற்ற வினைகளை நிறுத்துதல்) ஆரம்பித்து வைக்கும். ஹைபோதலாமசின் பின்பகுதி குளிர்வான சூழலில் நடுக்கங்களைத் தோற்றுவித்து உடலில் வெப்பநிலை அதிகரிக்க உதவிசெய்யும். உடலின் பல்வேறு இடங்களில் (குறிப்பாக தோலில்) இருக்கும் வெப்பநிலை ஏற்பிகள் வெப்பநிலைமானியைப் போலவே வெப்பநிலையை அளந்து ஹைபோதலாமசுக்கு செய்தியை அனுப்பும் (Biological thermometer).

இப்படி உடல் தானாகவே வெப்ப நிலையைச் சமநிலைக்கு கொண்டுவந்தாலும், வளர்சிதைமாற்ற வினைகள் நடைபெற உணவுகளில் இருந்து கிடைக்கும் ஆற்றலும், வியர்வை சுரப்பதற்கு அதிகப்படியான நீர்ச்சத்தும் தேவை. என்னதான் வெப்ப நிலையை உடல் தானாகவே பராமரித்தாலும், அது சரியாக செய்ய நம்மிடமும் கொஞ்சம் வேலை இருக்கே பாஸ்.  Trending Articles

Sponsored