’விபத்தென்றால், உயிரிழப்பு கூடாது!’ வால்வோவின் பாதுகாப்பு அம்சங்கள் என்ன?Sponsoredஸ்டைலுக்கு ரஜினி, நடிப்புக்கு கமல், டான்ஸுக்கு விஜய், ரேஸுக்கு அஜித் என தமிழ்நாட்டில் ஒரு நடிகரைப் பற்றிக் கேட்டால் எப்படிச் சொல்வார்களோ, அதேபோல உலகின் எந்தத் திசைக்குப் போய் கேட்டாலும் `வால்வோ, பாதுகாப்பான கார்' என்று சொல்வார்கள். உண்மையோ, பொய்யோ... இப்படி ஒரு பிம்பம் உருவாவதற்கும், அது 50 ஆண்டுகளைக் கடந்து நிலைப்பதற்கும் ஒரு காரணம் இருக்கும்தானே!

இந்தக் கதை ஆரம்பிக்கும் இடம் ஸ்வீடன், 1950-ம் ஆண்டு. கார்கள், மனித உயிர்க்கொல்லிகள்போல பார்க்கப்பட்ட காலம் அது. ஸ்வீடன், டென்மார்க், நார்வே போன்ற நாடுகளுக்கு மின்சாரம் வழங்கிக்கொண்டிருந்த `வாட்டன்ஃபால்' எனும் நிறுவனம், தங்கள் ஊழியர்கள் தொடர்ந்து உயிரிழப்பதைத் தடுக்கும்வகையில் நிறுவனத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது எப்படி என ஓர் ஆராய்ச்சியைத் தொடங்கியது. இந்த வேலை Bengt Odelgard மற்றும் Per-Olof Weman இருவரிடமும் கொடுக்கப்படுகிறது. இவர்களின் ஆராய்ச்சி முடிவுகள் அனைவருக்குமே ஆச்சர்யமான அதிர்ச்சியைக் கொடுப்பதாக இருந்தது.

Sponsored


`வாட்டன்ஃபால் ஊழியர்கள் அதிகம் இறப்பது, அதிக அழுத்தம்கொண்ட மின்சாரத்தினாலோ, வொயர்கள் ஷார்ட் சர்க்யூட் ஆவதினாலோ அல்ல. வேலைக்கு வரும் வழியிலோ அல்லது வேலை நேரத்திலோ நிகழும் கார் விபத்தினால்தான்' என்பது ஆராய்ச்சியின் முடிவு. அப்படியென்றால், கார்களை இன்னும் பாதுகாப்பானதாக மாற்றினால் இந்த உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என்று அந்த நாட்டு கார் நிறுவனங்களான வால்வோ மற்றும் சாப்-க்கு இருவரும் சில பரிந்துரைகளை அனுப்புகிறார்கள்.

Sponsored


சாப் நிறுவனத்தின் ஏரோஸ்பேஸ் பிரிவில் ஃபிளைட் எஜெக்டர் சீட் தயாரிக்கும் வேலையில் இருந்த நிள்ஸ் போலின், வால்வோ நிறுவனத்தில் இணைந்த காலம் அது. இந்தப் பரிந்துரைகளை ஏற்ற போலின், கார்கள் மூலம் நிகழும் விபத்துகளை ஆராய்ந்தார். அந்தக் காலத்தில் 20 கி.மீ வேகத்தில் மோதினால்கூட மரணம்தான் என்ற நிலையைப் பார்த்து, முதல்முறையாக 3-பாயின்ட் சீட் பெல்ட்டை உருவாக்கி, உலகத்துக்கு அறிமுகப்படுத்தினார். இந்த சீட்பெல்ட் தொழில்நுட்பத்தைத்தான் நாம் இன்று வரை எல்லா கார்களிலுமே பயன்படுத்திவருகிறோம். அதுவரை இருந்த சீட்பெல்ட் அனைத்துமே இதன் அளவுக்கு உபயோகிக்க சுலபமாகவும், எல்லா கார்களிலுமே பொருத்தும்படியாகவும் இல்லை. நிள்ஸ் போலினின் சீட்பெல்ட், 60 கி.மீ வேகத்தில் நடைபெறும் விபத்துகளில்கூட உயிரிழப்புகள் நிகழாமல் பாதுகாத்தது.

இந்தக் கண்டுபிடிப்பு, வால்வோ கார்களின் விற்பனையை ஏகபோகமாக்கியிருக்கும். ஆனால், பணத்தைவிடப் பாதுகாப்பை மதித்து சீட்பெல்ட்டுக்கான காப்புரிமையை இலவசமாக்கினார்கள். இந்த முடிவால்தான், நாம் இன்று வால்வோவில் மட்டுமல்ல எல்லா கார்களிலுமே பாதுகாப்பாகப் பயணிக்கிறோம். சீட்பெல்ட், 2009-ம் ஆண்டில் மட்டுமே 10 லட்சம் உயிர்களைக் காத்ததாக அமெரிக்காவின் கணிப்பு தெரிவிக்கிறது. உலகம் முழுவதும் பல கோடி உயிரிழப்புகளை நிச்சயம் தடுத்திருக்கும். இதுமட்டுமல்ல, வால்வோவின் இமேஜுக்குக் காரணம் உலகில் உள்ள மற்ற கார் நிறுவனங்களைவிட பயங்கரமானதாக இருக்கும் வால்வோவின் க்ராஷ் டெஸ்ட். எட்டு ஏர்பேக், blindspot camera, 360 டிகிரி கேமரா, டிரைவர் அலெர்ட் கன்ட்ரோல், ரேடார் தொழில்நுட்பம், lane control, EBS போன்ற தொழில்நுட்பங்களை எல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே தனது கார்களில் கட்டாயமாக்கியது வால்வோ. இரண்டு ஏர் பேக்கை எல்லா வேரியன்டிலும் கொடுப்பதற்கே நம் நாட்டு கார் நிறுவனங்கள் தயாராக இல்லை. ஆனால், வால்வோ கார்களில் காரின் மீது மோதும் பாதசாரிக்குகூட அடிபடாமல் இருக்க பானட்டில் ஏர்பேக் வைத்துள்ளார்கள். 

இந்த நிறுவனத்தின் கொள்கையே வால்வோ காரில் பயணிக்கும் யாரும் மரணிக்கக் கூடாது என்பதுதான். 2020-க்குள் இந்த கொள்கையை நிறைவேற்ற பல திட்டங்களுடன் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஸ்வீடனில் ஒரு வால்வோ கார் விபத்தில் சிக்கினால், வால்வோ நிறுவனத்திலிருந்து 24 மணி நேரத்தில் ஒரு குழு வந்து விபத்தான காரைப் பரிசோதித்து, அந்த கார் விபத்தின் தகவல்களை எடுத்துக்கொள்வார்கள். இதை வைத்து அடுத்த தலைமுறை காரை எப்படி இதுபோன்ற விபத்திலிருந்து காப்பது என்று தீர்வை யோசிக்கிறதாம் வால்வோ. வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கும், புதிய அதிவேக கார்களுக்கும் இடையில் வால்வோவின் இந்தப் பிம்பத்தைப் பாதுகாப்பது சாதாரண விஷயமல்ல. ஆனால், இந்தப் பிம்பம்தான் இந்த நிறுவன கார்கள் விற்பனையாவதற்கு மிக முக்கியக் காரணம். உண்மையோ, பொய்யோ, வால்வோவின் இந்தக் பிம்பத்தை உடைப்பதும், இதுபோல ஒன்றை உருவாக்குவதும் எரிமலையைக் குடைந்து வைரம் எடுப்பதற்குச் சமம்!Trending Articles

Sponsored