உங்கள் பலம் என்ன... உங்களுக்குத் தெரியுமா? - வாழ்க்கைப் பாடம் சொல்லும் கதை! #MotivationStoryஒரு வேலையைச் செய்து முடிக்க ஒருபோதும் குழந்தைக்கு உதவாதீர்கள். ஏனென்றால், `நம்மால் முடியும்’ என்று அந்தக் குழந்தை நினைத்துவிடக்கூடும்.’ - தெளிவாகச் சொல்கிறார் இத்தாலியைச் சேர்ந்த கல்வியாளரும் மருத்துவருமான மரியா மான்டிஸ்ஸோரி (Maria Montessori). குழந்தைக்கு ஏன் உதவி செய்யக் கூடாது? ஏனென்றால், ஒரு வேலையை முழுமையாக, பிறரின் உதவியில்லாமல் செய்ய அந்தக் குழந்தை கற்றுக்கொள்ளாமலேயே போய்விடும். குழந்தைக்குச் சரி... வளர்ந்த பெரியவர்களுக்கு? அவர்களுக்கும் ஒரு பொன்மொழி உண்டு. அது வேறு ரகம்! `ஒரு வேலையைச் செய்து முடிக்க உங்களுடைய எல்லா ஆற்றலையும் பயன்படுத்துங்கள்’ என்கிறது ஒரு பிசினஸ் மேனேஜ்மென்ட் வாசகம். ஒருவர், தன்னுடைய பலமென்ன, தன்னிடம் என்னென்ன ஆற்றல் இருக்கின்றன என்பதைத் தெரிந்துவைத்திருந்தால்தான் இது சாத்தியம். இந்த உண்மையை அழகாக எடுத்துச் சொல்கிறது ஒரு கதை.

Sponsored


அது ஒரு காடு. ஒரு தந்தையும் அவரது மகனும் நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். மகனுக்கு 12 வயதிருக்கலாம். பள்ளி விடுமுறைக் காலம். அதோடு அவன் ஒரு சாகச விரும்பி என்பதால், காட்டுக்குள் ஒரு ரவுண்டு போய் வரலாம் என்று அப்பா அவனை அழைத்து வந்திருந்தார். மரங்கள், பூச்சிகள், விலங்குகள், பறவைகள்... எனப் பார்க்கும் ஒவ்வொன்றைப் பற்றியும் அவன் கேள்வி கேட்டான். அப்பா, பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டு வந்தார். சில கேள்விகளுக்குப் பதில் தெரியாதபோது, `தெரியாது’ என்று உண்மையை ஒப்புக்கொண்டார். காடு அந்தச் சிறுவனுக்கு அதிசயமாக இருந்தது. சதா வீட்டிலும் பள்ளியிலும் மைதானத்திலும் நகர்ந்துகொண்டிருந்த வாழ்க்கை, இந்தக் காட்டுக்கு முன்னால் ஒன்றுமே இல்லை என்று தோன்றியது. இதைச் சொன்னபோது, தந்தை சிரித்தார். `நாம நகரத்துலதானே வாழவேண்டியிருக்கு கண்ணு!’ என்று சொன்னார்.

Sponsored


இருவரும் நடந்தார்கள். வழியில் ஒரு பெரிய மரக்கட்டை கிடந்தது. அப்பா, மகனைப் பார்த்தார். அவனும் அவரைப் பார்த்தான். ``ஏம்ப்பா... இந்த மரக்கட்டை போற வர்றவங்களுக்கு இடைஞ்சல்தானே?’’ என்று கேட்டான்.

Sponsored


``நடந்து போறவங்களுக்கு பிரச்னையில்லை. இதைச் சுத்திக்கிட்டு போயிடலாம். வாகனங்கள் ஏதாவது வந்தால்தான் கஷ்டம்.’’

``வாகனங்கள் இந்தப் பக்கம் வருமா என்ன?’’

``வருமே... வனத்துறையைச் சேர்ந்தவங்களோட ஜீப், டிரக்கெல்லாம் வரும்.’’

``சரிப்பா. அப்படின்னா, நான் வேணும்னா இந்த மரக்கட்டையை நகர்த்திப் போடட்டுமா?’’

``ம்... முயற்சி செய்யேன்.’’

``என்னால இந்தக் கட்டையை நகர்த்திட முடியும்னு நீங்க நினைக்கிறீங்களாப்பா?’’

``உன்னுடைய எல்லா ஆற்றலையும் பயன்படுத்தினா உன்னால முடியும்.’’

சிறுவன் தன்னுடைய தோள் பையைக் கீழே வைத்தான். அந்தக் கட்டையைக் கையைக் கொடுத்து மெள்ள அசைத்துப் பார்த்தான். பிறகு தன் பலத்தையெல்லாம் திரட்டி அதை நகர்த்த முயன்றான். அதை அசைக்கவே அவனால் முடியவில்லை.

ஏமாற்றத்தோடு அவன் சொன்னான்... ``அப்பா நீங்க சொன்னது தப்பு. என்னால இதை அசைக்கவே முடியலை.’’

``மறுபடியும் முயற்சி செஞ்சு பாரேன்...’’ என்று பதிலுக்குச் சொன்னார் தந்தை.

மறுபடியும் அந்தச் சிறுவன் மரக்கட்டையை நகர்த்தப் பார்த்தான். எவ்வளவு முயன்றும் அவனால் அதை நகர்த்த முடியவில்லை.``என்னால முடியலைப்பா’’ என்று பலவீனமான குரலில் சொன்னான்.

அப்பா கடைசியாகச் சொன்னார்... ``மகனே நான் உன்கிட்ட என்ன சொன்னேன்? `உன்னுடைய எல்லா ஆற்றலையும் பயன்படுத்து’னு சொன்னேன் இல்லையா? நீ அதைச் செய்யலை. நீ என்னை உதவிக்குக் கூப்பிடவே இல்லை.’’

குறிப்பு: நமக்குத் தேவைப்படும்போது பிறரின் உதவியையோ, ஆதரவையோ கோருவது பலவீனத்தின் அடையாளமல்ல. ஞானத்தின் அடையாளம். ஒருவரையொருவர் சார்ந்து வாழும் இந்தக் கூட்டு வாழ்க்கையில் மிகப் பெரிய ஆற்றலைப் பெறுவதற்கான அழைப்பு அது. அது எந்த வேலையாகவும் இருக்கட்டும்... அதை உங்களால் மட்டும் முடிக்க முடியவில்லையா... உங்களுடைய எல்லா ஆற்றலையும் பயன்படுத்துங்கள்... திரும்பிப் பார்த்து, சத்தமாக ஆதரவு, உதவி கேளுங்கள்.Trending Articles

Sponsored