25 டன் பிளாஸ்டிக் குப்பையைக் கடலிலிருந்து எடுத்த மீனவர்கள்... கேரளா கேரளாதான்!Sponsoredடந்த 10 மாதங்களாக, இந்தியாவின் தென் கரையோரத்தில் உள்ள கேரளாவில், மீனவர்கள் ஒரு தனித்துவமான பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். தினசரி கடல் பயணங்களில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதோடு மட்டுமில்லாமல், பெரிய அளவிலான பிளாஸ்டிக் கழிவுகளையும் சேகரித்து கரைக்குக் கொண்டு வருகிறார்கள். கிட்டத்தட்ட 600 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையைக் கொண்டது கேரளா. இந்தியாவில் அதிகமான அளவில் மீன் தொழில் செய்யும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியும்கூட. இங்கு ஒரு மில்லியன் மக்களுக்கு மேலாக தங்களின் வாழ்வாதாரங்களுக்காக மீன் தொழிலைச் சார்ந்திருக்கிறார்கள். மீனவர்கள் தினமும் கடலுக்குள் சென்று மீன்பிடிக்கும்போது பல இடர்பாடுகளைச் சந்தித்து வருகிறார்கள். அதில் முக்கியமானது பிளாஸ்டிக் மாசுபாடு. கேரளாவின் கடற்கரை ஓரங்களில் பிளாஸ்டிக் குப்பைகளால் மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதனால் மீன்கள் குறைவான அளவிலேயே கிடைப்பதுடன் சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது.

கடந்த ஆண்டு, கேரளாவின் மீன்வளத்துறை மந்திரி மெர்சிகுட்டி அம்மா (Mercykutty Amma), மீன்பிடித் தொழிலில் ஏற்படும் இடர்பாடுகளைப் போக்க தீவிரமாகச் செயல்பட்டார். அவரது வழிகாட்டுதலின் கீழ் மாநில அரசாங்கம் 'சூசித்வா சாகாரம்' (Suchitwa Sagaram) என்ற பெயரிடப்பட்ட பிரசாரத்தைத் தொடங்கியது. மீன் படகுகளில் இருக்கும் கடல் வலைகளை வைத்து மீன் பிடிக்கும்போது, சேகரமாகும் பிளாஸ்டிக்குகள் வலைகளைத் துண்டித்து விடுகின்றன. மீனவர்கள் மொத்தமாக வலையில் சேகரமாகும் பிளாஸ்டிக்குகளை முன்பெல்லாம் கடலில் கொட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இப்போது அவர்களுக்கு 'சூசித்வா சாகாரம்' திட்டம் மூலம் பயிற்சி கொடுக்கப்பட்டு, சேகரமாகிய பிளாஸ்டிக்குகளைக் கரைக்குக் கொண்டு வருகிறார்கள். கடலில் இருந்து மீனவர்களால் கொண்டுவரப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் மீன்பிடி துறைமுகத்தில் சேகரிக்கப்படுகின்றன. அங்கு பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்யும் இயந்திரம் மூலம் பிளாஸ்டிக் பொருள்கள் சிறு துண்டுகளாக வெட்டி கழிவுப் பொருள்களாக மாற்றப்படுகிறது.

Sponsored


மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகளை வைத்து அதை கேரளாவில் சாலை அமைக்கப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதுபோல இந்தியாவில் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகளால் பல சாலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு இச்செயலைச் செய்து வருகிறது கேரள மீன்வளத்துறை. இத்திட்டத்தின் மூலம் ஐந்து மீன்பிடிப் படகுகள் இந்த வேலையைச் செய்து வருகின்றன. இப்பணியில் 2 பெண்கள் உட்பட மொத்தம் 28 மீனவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். 

Sponsored


``இதுவரை 10 டன் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் 15 டன் கழிவுப்பொருள் வலைகள், பிளாஸ்டிக் கயிறுகள் மற்றும் மற்ற பிளாஸ்டிக் பொருள்கள் ஆகியவற்றைக் கடலில் இருந்து அகற்றப்பட்டுள்ளன." என்கிறார், சுசித்வா திட்டப்பணி அதிகாரி ஜோன்சன் பிரேம் குமார். 

மீனவர்கள் 28 பேர் கொண்ட ஒரு சிறிய குழுவாக இருந்தாலும், 25 டன் பிளாஸ்டிக் கழிவுகளைக் கடலில் இருந்து அகற்றி இருக்கிறார்கள். பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் மற்றும் மற்ற பிளாஸ்டிக்குகள் ஆகியவை எப்போதுமே நீரில் வாழும் உயிரினங்களுக்கும் பிரச்னைகளையே ஏற்படுத்தும். அது கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து கடலின் பன்முகத்தன்மையானது முற்றிலுமாக சிதைந்துபோகும். மீன் மற்றும் பெரும்பாலான கடல் உயிரினங்கள் தங்கள் செதில்கள் மூலம் தண்ணீரை எடுத்துக்கொள்ளும். அப்போது சிறிய பிளாஸ்டிக்குகளை செதில்கள் உள்ளிழுத்துவிடும். 'சூசித்வா சாகாரம்' திட்டத்தின் முயற்சியால், கேரள மீனவர்கள் கடலை சுத்தம் செய்து, தங்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் கடலின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறார்கள். 2050-ம் ஆண்டில் கடலில் இருக்கும் மீன்களின் எண்ணிக்கையைவிட பிளாஸ்டிக்குகளின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும். அதை முன்னரே உணர்ந்திருக்கும் கேரளா அதற்கான தீர்வை நோக்கி தனது பார்வையைத் திருப்பியுள்ளது. இத்திட்டம் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து , அடுத்த சில நாள்களில் அதிகமான மீனவர்களைச் சேர்த்து சுசித்வா சாகாரம் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த இருக்கிறார்கள். Trending Articles

Sponsored