ஓட்டப்பந்தயம்... செல்லப் பிராணி... ரோபோவுக்கே முன்னோடி! - கரப்பான் பூச்சியின் இன்னொரு பக்கம்Sponsoredஇரவில் தனியாக இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். 10மணி வரை தைரியமாக இருந்த உங்களுக்கு 12 மணி தொடங்கியவுடன் பயம் தொற்றிக் கொள்கிறது. உங்களைத் தவிர அந்த அறையில் வேறு எதுவோ இருப்பதாக உணர்கிறீர்கள், உங்கள் உள்ளுணர்வு சரியானதுதான். உங்களைத் தவிர அந்த அறையில் எப்படியேனும் ஒரு கரப்பான் பூச்சி இருக்கும் என்கிறது ஆய்வு.

கரப்பான் என்றவுடன் நம் குளியலறையில் குடும்பம் நடத்தி, குப்பைத் தொட்டியில் தொல்பொருள் ஆய்வு செய்து, உறங்கிக் கொண்டிருக்கும் நம் மேல் நடைபயின்று, டூத்பிரஷில் ஒட்டிக்கொண்டிருக்கும் மிச்ச பற்பசையைத் தின்று, மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் ஓர் உயிரினம் என நினைவுக்கு வரும். உடனே, அந்த இனத்தைச் சேர்ந்த அத்தனை பூச்சிகளையும் அடித்தே கொல்ல வேண்டும் என்ற பெரும்குமுறல் நமக்குள் எழும். 'கரப்பான் என்றாலே நோய்பரப்பும், அருவருக்கத்தக்க உயிரினம்தானா? 'என்றால் இல்லை என்பதே பதில்.

நம் வீடுகளில் பார்க்கும் கரப்பான் பூச்சியின் அறிவியல் பெயர் Americana periplaneta. ஆப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட இவை ,வணிகம் பொருட்டு இடம்பெயர்ந்த மக்களுடன் இணைந்து உலகம் முழுக்கப் பரவியது. 360 மில்லியன் வருடங்கள் பழைமையான கார்பனிஃபெரஸ் எரா (carboniferous) முதல் கரப்பான்கள் உலகில் வாழ்வதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அடுத்த முறை ஜுராசிக் வேர்ல்டு பார்க்கும்போது ஜூம் செய்து கரப்பான் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

Sponsored


Sponsored


மருந்தாக மாறுகிறது கரப்பான்

எவ்வளவு அசுத்தமான இடத்தில் வாழ்ந்தாலும் கரப்பான்களுக்கு மட்டும் நோய்த்தொற்று ஏற்படுவதில்லை. இதை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வின் முடிவுகள் ஆச்சர்யப்படுத்துகின்றன. கரப்பான் பூச்சிகளின் மூளைக்குள் சுரக்கும் ஒரு வகை ரசாயனம் தீமை செய்யும் பாக்டீரியாக்களான E.coli மற்றும் Methicillin-resistant Staphylococcus aureus(MRSA) போன்றவற்றை கட்டுப்படுத்தும் திறன் பெற்றிருக்கிறது. அதனால் ஆன்டிபயாடிக் (antibiotic) உருவாக்கத்தில் இந்தத் திரவம் பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

அதுமட்டுமல்லாமல் Diploptera punctate (Pacific beetle cockroach) வகை கரப்பான்களின் உடலிலிருக்கும் Lili-Mip என்ற புரதம், தாய்ப்பாலில் இருக்கும் புரதத்துக்கு இணையாக நுண்சத்துக்களைப் பெற்றிருப்பதாக 2016 ம் ஆண்டு Institute for Stem Cell Biology and Regenerative Medicine in Bangalore, நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது. வருங்காலத்தின் superfood பட்டியலில் கரப்பான் பூச்சி பால் கட்டாயம் இடம்பெறும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

கரப்பான் பூச்சி பண்ணைகள்

சமீபமாக சீன விவசாயிகள் கரப்பான் வளர்ப்பை அதிக முதலீட்டில் தொடங்கியுள்ளனர். இந்தப் பண்ணைகளில் அறுவடை செய்யப்படும் கரப்பான் பூச்சிகளைப் பெரும் தொகை கொடுத்து வாங்குகின்றனர் சீன மருந்து தயாரிப்பு நிறுவனங்கள். அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பிலும், பாரம்பர்ய சீன மருத்துவத்திலும் கரப்பான்கள் பயன்படுத்தப்படுவதால், கரப்பான் பூச்சிகளுக்கான தேவை சீனாவில் அதிகரித்துள்ளது. ஆசிய நாடுகளான சீனா, தாய்லாந்து மற்றும் பர்மாவின் பாரம்பர்ய உணவுப் பட்டியலில் கரப்பான் இருப்பதால் அவர்கள் பெரிதாக முகம் சுழிப்பதில்லை.

எல்லாக் கரப்பான்களும் தீயவையா?

உலகில் இருக்கும் 4500 கரப்பான் இனங்களில் 1% தான் நம்முடன் வாழ்கின்றன. மற்றவை அடர்ந்த காடுகளில் அமைதியாக இயற்கையின் மறு சுழற்சிக்கு உதவிக்கொண்டிருக்கின்றன. நைட்ரஜன் சுழற்சியில் பெரும்பங்காற்றுகின்றன கரப்பான் பூச்சிகள். மகரந்த சேர்க்கையிலும்  உதவி செய்கின்றன. 

கரப்பான்களின் உடலமைப்பு

கரப்பான்களின் உடலமைப்பு அவ்வளவு அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்கிறார் Massachusetts பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Joseph kunk எல். ``தலை துண்டிக்கப்பட்ட கரப்பானால் ஒரு வாரத்துக்கு மேல் உயிர் வாழ முடியும், கரப்பானக்கு முறையான circulatory system கிடையாது, தலையில்லாத கரப்பான் பட்டினியால் மட்டுமே உயிர் விடும். ஒரு கரப்பானால் 40 நிமிடங்கள் மூச்சை அடக்கிக்கொள்ள முடியும் ஒரு மனிதனால் 30 வினாடிகள்தாம் மூச்சை அடக்க முடியும். 8.2 millisecond களில், உங்கள் அசைவை உணர்ந்து விடும் கரப்பான் ஒரு நொடிக்கு 80 செ.மீ., வேகத்தில் ஓடும், இது சிறுத்தையை விட ஐந்து மடங்கு அதிக வேகம்" என்கிறார்.

ரோபோவின் முன்மாதிரி கரப்பான் (biomimicry)

மற்ற ரோபோக்களை விட அதிவேகமாக நகரும் ஆறு கால் கொண்ட ரோபோவை வடிவமைத்த கலிஃபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ராபர்ட் ஃபுல் (Robert full) அந்த ரோபோவின் வடிவமைப்புக்கு உந்துதலாக இருந்தது கரப்பான் என்கிறார். "ஒருமுறை கரப்பான்கள் நகர்வதை உன்னிப்பாகக் கவனித்தேன் நீளமான உருண்டை வடிவம் கொண்ட உடலை ஆறு சுழலும் கால்கள் தாங்கி நிற்கின்றன. கடினமான இடங்களில்கூட அவை நகர்கின்றன. அதுதான் என்னைத் தூண்டியது" என்கிறார்.

டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் மினி கணினியை அறுவை சிகிச்சை மூலம் கரப்பான்களுடன் இணைத்து விடுகிறார்கள். அந்தக் கணினிக்குக் கொடுக்கப்படும் தகவல்படி கரப்பான் நகரும், இதனால் சேதமடைந்த கட்டடங்கள் மனிதர்கள் செல்ல முடியாத குழாய்கள் போன்றவற்றுக்குள் இந்தக் கரப்பான்களை அனுப்பித் தகவல்களைப் பெற்றுக்கொள்கிறார்கள். 

திரைப்படங்களில் தோன்றிய கரப்பான்

2003-ம் ஆண்டு வெளியான Wall-E படத்தில். உயிர்கள் வாழத் தகுதியற்ற பூமியில், 2805 ஆண்டு துப்புறவு செய்யும் பணிக்காக நியமிக்கப்படும் wall-e ரோபோவின், செல்லப் பிராணியாக ஒரு கரப்பான் பூச்சி வரும்.

1997 வெளியான Men in Black படத்தின் பிரதான வில்லனாக வரும் Edgar, ஒரு ஏலியன் கரப்பான் பூச்சியாகச் சித்திரிக்கப்பட்டிருப்பார்.
இதுதவிர Bug (1975), Damnation Alley (1977), The Nest  போன்ற படங்களில் ஆட்கொல்லி பூச்சிகளாகக் கரப்பான்கள் சித்திரிக்கப்பட்டன.

விநோதமான நம்பிக்கைகள்

● ஆஸ்திரேலியாவில் ஜனவரி மாதம் கொண்டாடப்படும் ஆஸ்திரேலிய தினத்தில் கரப்பான்பூச்சி பந்தயம் நடத்தப்படும்.

● New Orleans மாகாணத்தில் கரப்பான் பூச்சி தேநீர், tetanus நோயைக் குணப்படுத்தும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

● கரப்பான் பூச்சிகள் குறித்து பயம் கொண்டவர்களை katsaridaphobes என்றழைக்கிறார்கள்.

● கரப்பான் பூச்சிகள் மனிதர்களைத் தொட்டுவிட்டால், உடனே தங்களைச் சுத்தப்படுத்திக்கொள்ளும் என்று மெக்சிகோவில் நம்பப்படுகிறது.

● செல்லப்பிராணிகளைப் பழக்குவது போல கரப்பான்பூச்சிகளையும் பழக்க முடியும் என்கிறது மற்றோர் ஆய்வு.

இனி 'நோய் பரப்பும் கரப்பான்கள் 'என எல்லாப் பழிகளையும் கரப்பான் பூச்சிகள்மீது மட்டும் சுமத்த வேண்டாம்.Trending Articles

Sponsored