ஸ்மார்ட் சிட்டியில் முதலில் சேர்க்க வேண்டியது இதைத்தான்!Sponsoredசமீப காலங்களில் காலநிலை மாற்றங்களின் விளைவுகளின் கோரமுகத்தைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதன் ஓர்  ஆதாரமாகக் கடந்த ஆண்டில் உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட புழுதிப் புயல் நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் காவு வாங்கியது. அந்த அனுபவங்களின் மூலமும் அண்டை நாடான பங்களாதேஷில் வெள்ளப் பேரிடர்களால் அதிகமாகிவரும் சூழலியல் அகதிகள் மற்றும் அவர்களின் இழப்புகளைக் கண்கூடாகப் பார்ப்பதால் கிடைத்த படிப்பினைகளின் மூலமும் இனிவரும் காலங்களில் காலநிலை மாற்றங்களின் விளைவுகளை எதிர்கொள்ளத் தேவையான வழிமுறைகளைப் பற்றிச் சிந்திக்கவேண்டிய தருணத்தில் நாம் இருக்கின்றோம். இந்த உலகில் இன்னமும் கொஞ்சம் ஸ்மார்ட் ஆக வாழ்வது எப்படி என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

காலநிலை மாற்றங்களைச் சந்திக்க இரண்டே வழிகள்தாம் உண்டு. ஒன்று அது நிகழ்வதற்கான காரணங்களை மட்டுப்படுத்துவதும், இதுவரையிலான விளைவுகளைச் சரிசெய்வதும். கார்பன் பயன்பாடுகளைக் குறைப்பதுவோ, அதனால் விளையும் புவி வெப்பமயமாதல் தொடங்கிப் பல்வேறு செயல்களை முற்றிலுமாகத் தடுப்பதுவோ தற்போதைய உலகில் இயலாத காரியம். இன்றிலிருந்து தொடங்கினாலும் சூழலியல் சீர்கேடுகளை முற்றிலுமாகச் சரிசெய்ய அடுத்த 100 ஆண்டுகள்கூட போதாது. அத்தோடு கடந்த 100 ஆண்டுகளில் நாம் ஏற்படுத்திய மாற்றங்களும் இன்னும் பல விளைவுகளைத் தருவதற்காக முன்னமே வரிசையில் நின்று கொண்டிருக்கிறது. இரண்டாவதாக, காலநிலை மாற்றங்களுக்குத் தகுந்தவாறாக நமது வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்வது. அதாவது மாறிவரும் சூழலுக்கு ஏற்றவாறு நம்மைத் தகவமைத்துக் கொள்வது (Adaptation). சுருக்கமாகச் சொன்னால், இரண்டு வழிகள் இவைதாம். ஒன்று, உலகை நாம் ஸ்மார்ட் ஆக மாற்ற வேண்டும்; இரண்டு நாம் இன்னும் கொஞ்சம் ஸ்மார்ட் ஆக வாழ வேண்டும்.

Sponsored


கடந்த மார்ச் மாதம் உலகப் பொருளாதார மன்றம் வெளியிட்ட ஓர் ஆய்வறிக்கையின் படி காலநிலை மாற்றத்தால் அதிகமான அழிவுகளைச் சந்திக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு முக்கியமான இடமுண்டு. அதிலும் மிகக் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் வாழும் பாதுகாப்பற்ற குடியிருப்புகள் மற்றும் கடலோர நகரங்கள்தாம் அதிகளவில் பாதிப்புகளைச் சந்திக்கும். அதாவது 54% மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக வாய்ப்புகள் அதிகம் இருக்கும் சூழலில்தான் வாழ்ந்து வருகிறார்கள். அதில் வடகிழக்கு இந்தியாவில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பேரிடர்களும், வட இந்தியப் பாலைவனங்களில் ஏற்படும் புயல், சூறாவளி மற்றும், கடல் மட்ட உயர்வால் கடலோர மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என அனைத்தும் அடங்கும்.

Sponsored


இந்தியாவின் கடந்த 70 ஆண்டு கால சாதனைகளை உடைக்கக்கூடிய அளவுக்கு மிகவும் அபாயமானது இதன் விளைவுகள். ஏழை  குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும், டையரியா ( Diarrhoea) போன்ற நோய்கள் மீண்டும் அதிகமாகத் தொடங்கும், சேரிகளும், வீடற்ற மக்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். இதுபோன்ற விளைவுகள் வந்தபிறகு அதற்கான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அளவுக்கு அரசாங்க கஜானாவில் எப்போதுமே போதுமான நிதி இருப்பதில்லை. அதற்கு ஆகும் செலவைவிட முன்னெச்சரிக்கையாகவும், அதைச் சமாளித்து வாழும் வகையிலும் நமது வாழ்வாதாரத்தை அமைத்துக்கொள்வதற்குத் தேவைப்படும் நிதி மிகவும் குறைவு.
காலநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை மட்டுப்படுத்துவதற்கு அதற்குத் தகுந்தவாறு நம்மைத் தகவமைத்துக்கொள்வதே ஏற்புடையதாக இருக்கும். வலி நிவாரண ஏற்பாடுகளைவிட வலிகளே இல்லாத அளவுக்கு நம்மைத் தகவமைத்துக் கொள்ளவேண்டும். அதுவே பாதிப்புகளுக்கான சாத்தியக்கூறுகளைக் குறைக்க வழிவகுக்கும். காலநிலை மாற்றத்தைப் புரிந்து அதற்குத் தகுந்தவாறு நமது வாழ்வுமுறையை அமைத்துக்கொள்வது 65% இழப்புகளை நிச்சயமாகக் குறைக்கும். அதற்குச் சிறந்த உதாரணமாக ஒடிசா மாநிலம் விளங்குகிறது.

1999 ம் ஆண்டு, ஒடிசாவைத் தாக்கிய சூறாவளியால் 9,843 பேர் இறந்தார்கள். அதுவே 14 ஆண்டுகள் கழித்து அதேபோன்ற பலத்த சூறாவளியொன்று ஒடிசா மாநிலத்தைத் துடைத்தெறிந்துவிட்டுச் சென்றது. ஆனால், அதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் 47. இந்த 14 ஆண்டுகளில் அவர்கள் மாநிலப் பேரழிவு மேலாண்மை வாரியம் அமைத்தார்கள். இயற்கைப் பேரிடர்கள் நிகழ்வதை முன்னமே கணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டதோடு, மக்களுக்கு முன்னெச்சரிக்கை செய்வதற்கான வழிமுறைகளையும் வகுத்தார்கள். அத்தோடு சூறாவளி முகாம்களும் கட்டப்பட்டன. கடலோர வாழிடங்களில் தடுப்புச்சுவர்கள் எழுப்பப்பட்டு வெள்ளப் பேரிடர்களில் குடியிருப்புகள் மூழ்காதவாறு ஏற்பாடுகள் செய்தனர். மாநில அரசாங்கத்தின் சுயமான முயற்சிகளால் இவையனைத்தும் செய்யப்பட்டன. இதுபோன்ற முயற்சிகள் தனித்தன்மை வாய்ந்தவை, மத்திய அரசாங்கத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டவை அல்ல.

இதுபோன்ற முயற்சிகளும் அவற்றோடு பேரிடர் சார்ந்த கல்வியும், விழிப்பு உணர்வும், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் சார்ந்த வசதிகளையும் செய்துவிட்டால் மேலும் பயனுள்ளதாக இருக்கும். இதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால், இவை அனைத்தையும் நாடு முழுவதும் செயல்படுத்தத் தேவையான நிதி நம்மிடம் இல்லை. ஆண்டொன்றுக்குச் சுற்றுச்சூழல் பேரிடர்களைச் சரிசெய்வதற்கு மட்டும் சுமாராக 6.2 லட்சம் கோடியைத் தற்போது செலவு செய்துகொண்டிருக்கிறோம். அதுவே, 2030-இல் 24 லட்சம் கோடியாக உயரும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதற்காகவே காலநிலை மாற்றத்திற்கான தேசிய நிதியில் ஸ்திரத் தன்மை நிறைந்த, பாதிப்புகளை எதிர்கொள்ளும் திறனை வளர்த்துக்கொள்ளத் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முனைகின்றனர். அதன் முதல்படியாக இயற்கைப் பேரிடர்களைச் சந்திப்பதில் முக்கியமான மாநிலங்களில் 24 திட்டங்களை 648.9 கோடி மதிப்பில் வெளியிட்டு, அவற்றைச் செயல்படுத்த ஆரம்பகட்டமாக 315 கோடி ரூபாய் நிதியும் வழங்கப்பட்டுவிட்டது. இந்தியா போன்ற பரந்த நிலப்பரப்பில் அது எதிர்கொள்ளும் இயற்கைப் பேரிடர்களின் தன்மையோடு ஒப்பிடும்போது இது மிக மிகச் சிறிய முயற்சியே, குறைந்த நிதியே.

சூழலியல் பாதிப்புகளில் அழியாமல் தாக்குப்பிடிக்கும் வகையில் நமது கட்டுமானத் தரத்தை உயர்த்த வேண்டும். அதற்குத் தேவையான மாற்றங்களை அறிவியல் பூர்வமாக முன்னெடுக்காத வரையிலும், நம்மைத் தகவமைத்துக் கொள்வதில் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கிச் செல்வது இயலாத காரியம். `ஸ்மார்ட் சிட்டி' பட்டியலில் இதற்கான முயற்சிகள் எதுவும் இதுவரை சேர்க்கப்படவில்லை. கட்டுமானப் பணிகளில் முன்னேற்றத்தைக் கொண்டுவராமல், இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் நஷ்டங்கள் குறையாதது மட்டுமன்றி 2030 வாக்கில் 21 லட்சம் கோடியாக உயரவும் வாய்ப்புகள் இருப்பதாகத் தேசியச் சுற்றுச்சூழல் ஆணையம் தெரிவித்துள்ளது. சூழலியல் சார்ந்த கட்டுமானங்களை வளர்த்தெடுக்காதது குறித்து அரசாங்கத்தை மட்டுமே குறைகூற முடியாது. தனியார் நிறுவனங்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முயலவே இல்லை. அவர்கள் அபாய அளவிடல்களில் வருங்காலத்தில் ஏற்படக்கூடிய இயற்கைப் பேரிடர்களை கட்டுமானப் பணிக்கான நிதி ஒதுக்கீட்டுக் கணக்கில் எடுப்பதே இல்லை. சூழலியல் பாதிப்புகள் குறித்து கவனம் செலுத்துவதில் தனியார் நிறுவனங்கள் இன்னும் ஆரம்ப கட்டத்தைக்கூட அடையவில்லை என்பதுதான் நிதர்சனம். 1986 ம் ஆண்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தையும் திருத்தியமைத்துக் காலநிலை மாற்றத்தைத் தழுவிச் செய்யவேண்டிய விதிமுறைகளை வகுக்கவேண்டும்.

இரண்டாம் கட்டமாக இந்தச் செயற்பாடுகளுக்கான நிதியைத் திரட்டுவதும் மிக முக்கியமானது. நகரங்கள் அவற்றின் கட்டுமானங்களைப் புனரமைக்கவும், இதுபோன்ற புதிய முயற்சிகளில் ஈடுபட்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பேரிடர்களால் அழியாதவகையில் பாதுகாக்கவும் தேவையான நிதியைச் சுயமாகத் திரட்ட முடியாது. அதற்கு மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியும், சில கடனுதவிகளும் தேவை. தொலைநோக்குப் பார்வையும், முற்போக்கான திட்டமிடலுமே இந்த முயற்சிகளின் முக்கியத்துவத்தையும் அதனால் விளையும் நன்மைகளையும் வருங்காலப் பொருளாதாரச் சமநிலையையும் பற்றிப் புரிந்துகொள்ள வைக்கும். இயற்கைச் சீர்கேடுகளால் பல லட்சம் கோடிகளை ஒவ்வோர் ஆண்டும் வீணாக்குவதைவிட சூழலியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திப் பேரிடர்களையும் கடந்து வாழும் தன்மைக்கு மாறுவதே எதிர்காலத்துக்குப் பயன் தருவதாக இருக்கும்.Trending Articles

Sponsored