``இங்க மீன் பிடிக்கலாம்... மீன் பிடிக்க கற்கலாம்!" - சென்னை நகருக்குள் ஒரு 16 ஏக்கர் கொடைக்கானல்



கோடை விடுமுறை என்றாலோ அல்லது நீண்ட நாள்கள்  வரும் வார இறுதி விடுமுறை தினங்கள்  என்றாலோ, ஒரு குட்டி வெகேஷன் செல்ல எண்ணினால் ஊட்டி, கொடைக்கானல் செல்ல வேண்டும் என்பதே நம்மில் பலரின் ஆசையாக இருக்கும். அங்கு சென்று இயற்கை காட்சிகளால் கண்ணைக் கவரும் பூங்காக்கள், போட்டிங், சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடத்துக்குச் சென்று வருவோம். அதேபோல், ஒரே நாள் தான் விடுமுறை என்னும்போது பெரும்பாலும் நாம் அனைவரும் வீட்டிலேயே பெட்டிப் பாம்பாய் சுருண்டுவிடுகிறோம். 

அவ்வாறு ஒருநாள் விடுமுறையைக் கழிக்க கொடைக்கானல் போன்று காட்சியளிக்கும் இடம் நம்ம சென்னையிலே இருந்தால் எப்படி இருக்கும்?.. ஆம்.. நமது ஊரிலேயே அப்படி ஒரு இடம் உண்டு என்பதைக் குறைந்த அளவிலான மக்களே அறிந்துள்ளனர். சென்னை என்றாலே, மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, பெரிய பெரிய மால்கள் தான் சுற்றுலாத்தலங்கள் என்று அனைவராலும்  நம்பப்படுகிறது. அதே சென்னையில்தான் இந்த  அமைதிப்  பூங்காவும் இருக்கின்றது. சென்னை நுங்கம்பாக்கத்துக்கு அருகில் உள்ள சேத்துப்பட்டு  ரயில் நிலையம் பக்கத்தில் அமைந்துள்ளது  அந்த 'பசுமைப் பூங்கா'. 

Sponsored


Sponsored


சுமார் 16 ஏக்கர் இடத்தில் உருவாக்கப்பட்டுள்ள  இந்தப் பூங்கா, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2016-ம் ஆண்டு  தொடங்கி வைக்கப்பட்டது. மீன்வளத்துறைக்குச் சொந்தமான இந்த இடத்தைப் புணரமைத்து, தற்போது சிறுவர் பூங்கா, படகு சவாரி, 3D திரையரங்கம் என அமைத்து ஒரு சிறந்த பொழுதுபோக்கு இடமாக மாற்றியுள்ளார்கள். விடுமுறை நாள்களில் பொழுதுபோக்கு இடமாக மட்டுமில்லாமல், தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் மீன் பிடிக்க விரும்புவோர், அதற்கான கட்டணமாக 300 ரூபாய் செலுத்தினால் , மீன் பிடிக்க அனுமதியும் உண்டு. மீன் பிடிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அதற்காகப் பயிற்சியாளர்கள்  மூலம் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

Sponsored


இங்கு வந்த சுற்றுலாப்பயணிகளிடம்  இந்த அனுபவத்தைப் பற்றி கேட்டோம். அதற்கு, ``பெரும்பாலும் வார இறுதி நாள்களில் கடற்கரையிலும்  திரையரங்கிலும் நேரத்தைச் செலவு செய்வோம். இந்த முறை ஒரு மாற்றத்துக்காக இங்கு வந்தோம். சென்னையில் இதுபோன்ற இயற்கை அழகுடன் காட்சியளிக்கும் இடத்தை நான் இப்போது தான் பார்க்கிறேன். இங்குச் சிறுவர்கள் விளையாடப் பூங்காவும் மக்கள்  படகு சவாரி செய்து மகிழவும் ஏற்ற இடமாகவுள்ளது" என்றார்.

இங்கு தினமும் நடைப்பயிற்சிக்காக வரும் ஒரு நபரிடம் பேசினோம். அப்போது பேசிய அவர், ``இந்தப் பசுமையான மரம், செடிகள் நிறைந்து காணப்படும் இடத்தில்  தினமும் நடைப்பயிற்சி  செய்ய மகிழ்ச்சியாக உள்ளது. சுத்தமான காற்று, வழித்தடம் தோறும் செடிகளும் இருப்பதால், இதுவே எங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி தருகிறது" என்றார்.

இங்கு மக்கள் வரத்து எவ்வாறு உள்ளது என்பதை அறிந்துகொள்ளப் பூங்காவில் பணிபுரியும் நபரிடம் பேசினோம். அதற்குப் பதில் அளித்த அவர் ,``இந்தப் பூங்கா காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்திருக்கும். வார நாள்களுடன் ஒப்பிடும்போது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தினங்களில் மக்கள் கூட்டம் சற்று அதிகமாக காணப்படும். பொது விடுமுறை தினங்களிலும் பூங்கா திறந்திருக்கும். எனவே, அந்த நாள்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும். அதேபோல் தினமும் நடைப்பயிற்சி செய்யவும் மக்கள் வருகின்றனர். அதேபோல், மீன் பிடிக்க ஆர்வம் உள்ளவர்கள் இங்கு அதிகமாக தங்கள் நேரத்தைச் செலவிடுகின்றனர். செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் பூங்கா மூடப்படும்." என்றார். மேலும் பேசிய அவர், ``விரைவில் இங்கு மீன்காட்சியகம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது" எனக் கூறினார் 

இப்பூங்காவில் நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு 25 ரூபாயும் 14 வயதுக்கு உட்பட்டோருக்கு 10 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. படகு சவாரி மேற்கொள்ளப்  பெரியவர்களுக்கு தலா  60 ரூபாயும் சிறுவர்களுக்கு 30 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

வாரந்தோறும் நான்கு சுவருக்குள் அமர்ந்து பணிபுரியும்  பெரும்பாலான மக்கள், விடுமுறை நாள்களிலும் நான்கு சுவருக்குள்ளேயே தங்கள்  மகிழ்ச்சியை தேடிக் கொள்கின்றனர். ஆனால், இதுபோன்ற இயற்கை காட்சிகள் நிறைந்த இடத்தில் தங்கள் நேரத்தைச் செலவு செய்தால் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருக்கலாம் என்பது அறிவியல் தத்துவம். இந்தத் தத்துவம் உண்மைதானா  என்று நீங்களும் சோதனை செய்து பாருங்கள்!



Trending Articles

Sponsored