உலகக் கடற்கரைகளின் அபாயம் சுறாக்களும் ஜெல்லி மீன்களும்தான்... ஆனால் மும்பையில்?Sponsoredகடற்கரை எப்பொழுதும் அழகாகத்தான் இருக்கிறது. காலையில் போனால் சூரிய உதயத்தைப் பார்த்து ரசிக்கலாம், மாலையில் அப்படியே கடல் காற்றை அனுபவித்தவாறே மணலில் காலாற நடக்கலாம். இறங்கிக் குளிக்க கூடச் செய்யலாம். இப்படிப்பட்ட கடற்கரைகளைத்தான் நம்மில் பலர் பார்த்திருக்க முடியும். நமது ஊரைச் சுற்றிலும் இதுபோல சூழல் இருக்கக்கூடிய கடற்கரைகள் மட்டுமே அமைந்திருக்கின்றன. ஆனால், உலகிலிருக்கும் சில கடற்கரைகள் அப்படி கிடையாது. சில இடங்களில் ஆபத்தான கடற்கரைகளும் இருக்கின்றன. அங்கேயெல்லாம் போய் கடலில் இறங்குவது என்பது சொந்த செலவில் ஆப்பு வைத்துக்கொள்வதைப் போலத்தான். அப்படி  உலகில் இருக்கும் ஆபத்தான கடற்கரைகளில் சில...

Cape Tribulation

 

Sponsored


ஆஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்து பகுதியில் அமைந்திருக்கிறது இந்த கேப் டிரிபுலேஷன் கடற்கரை. இந்த இடத்தைப் பற்றிய எச்சரிக்கையைத் தனது பெயரிலேயே வைத்திருக்கிறது. இதன் பெயரில் இருக்கும் இரண்டாவது வார்த்தையின் அர்த்தத்தை அறிந்தவர்கள் இந்த இடத்துக்குச் செல்வதற்கு சற்றுத் தயங்குவார்கள். ஒரு புறம் அடர்த்தியாக வளர்ந்து நிற்கும் மரங்கள்; மறுபுறம் தெள்ளத்தெளிவாக இருக்கும் கடல் நீர். இந்த இரண்டுக்கும் இடையில் இருக்கும் வெள்ளை நிற மணல் எனப் பார்த்து ரசிக்க இங்கே அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. சரி அப்படியே கடலில் இறங்கி ஒரு குளியலைப் போடலாம் என்று மட்டும் தப்பித்தவறி நினைத்து விடக்கூடாது. ஏனென்றால் மனிதனுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஜெல்லிமீன்கள் இந்தக் கடல் பகுதியில் அதிகமாக உண்டு. விஷத்தன்மை கொண்ட பாம்புகளும் அவ்வப்போது கண்களில் தென்படும். இவற்றையெல்லாம் விடக் கூடுதலாக முதலைகளும் இந்தப் பகுதியில் உண்டு. இத்தனை ஆபத்துகள் இருக்கின்றன என்பது தெரிந்தும் இங்கே போய் குளிக்க விரும்பினால் போய்வரலாம், அப்படிப்பட்ட தைரியசாலிகளுக்காகவே இங்கே சில ரிசார்ட்களும், ஹோட்டல்களும் உண்டு.

Sponsored


Morecambe Bay, Lancashire, UK
 

இங்கிலாந்திலிருக்கும் லான்சஷைர் (Lancashire) என்ற இடத்திலிருக்கும் Morecambe கடற்கரை இன்னும் மோசம். இங்கே புதைகுழிகள் ஏராளம். ஆற்று நீர் கலக்கும் இடங்களிலும் ஆபத்துகள் அதிகம். ஆனால், மக்கள் இந்தக் கடற்கரையை கடந்தே ஆக வேண்டும். அதற்காக குதிரை வண்டியையும் டிராக்டரையும் பயன்படுத்துகிறார்கள். அப்போதும் ஆபத்துகள் விடுவதில்லை. கவனமாக இல்லையென்றால் ”மெல்லத் திறந்தது கதவு” அமலா போல மூழ்க வேண்டியதுதான்.

அமேசான் கடற்கரைகள், தென் அமெரிக்கா

 அமேசான் காடு, அமேசான்  ஆறு போல அமேசான் கடற்கரைகளும் உண்டு. அமேசான் என்றதும் அனகோண்டா நினைவுக்கு வருகிறதா? உண்மைதான். இங்கே அனகோண்டா பாம்புகள்  அதிகம். கூடவே ஈல்(eel), வேம்பயர் மீன் என பல ஆபத்தான உயிரினங்கள் நம்மை நீச்சலடிக்க விடாமல் செய்யும். இதைத் தவிர வேறொரு ஆபத்தும் இங்குண்டு. அது, தென் அமெரிக்காவின் முக்கிய பிரச்னையான போதை மருந்து கடத்தல்காரர்கள். நிறைய கேங் வார் கடற்கரையில் தான் நடந்திருக்கின்றன. ஆளில்லாத அழகான கடற்கரை என கால் நீட்டி படுத்தால், திடீரென துப்பாக்கிச் சத்தம் உங்களை எழுப்பலாம். ஜாக்கிரதை.

Hanakapiai Beach

ஹவாய் தீவுகளில் ஒன்றான Kauai என்ற இடத்தில் இருக்கிறது இந்தக் கடற்கரை. அலைதான் இந்த இடத்தின் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. சாதாரணமாகக் கடலில் கரையை தொட்டுவிடத் துடிக்கும் அலைகளை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்து ரசிக்கலாம். ஆனால், இங்கே அலைகளின் தன்மையோ வேறு விதமாக இருக்கிறது. இங்கே கடலில் எழும் அலைகள் கரையை தொடும்போது சக்தி வாய்ந்த ஒரு நீர்ச் சுழல்களாக உருவெடுக்கின்றன. இதில் சிக்கினால் அவ்வளவுதான் கரையில் இருப்பது போலத்தான் இருக்கும் அடுத்த நொடியில் கடலுக்குள்ளே இழுத்துச்சென்று விடும். சரி மீண்டும் கரைக்கு வரலாம் என்று நீந்தி கரையின் பக்கமாக வந்தால் சுழல் மீண்டும் கடலுக்குள்ளே இழுத்துச் செல்லும். இதன் வேகத்தில் தாக்குப்பிடிக்க முடியாதவர்கள் என்ன நடக்கிறதென்றே புரியாமல் பின்னர் ஒரு கட்டத்தில் மூழ்கிவிடுவார்கள். இங்கே நீச்சலில் நன்கு திறன் படைத்தவர்கள் கூட சில நேரங்களில் தடுமாறி விடுவார்கள். இங்கே கடற்கரையில் வைக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை பலகைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயங்களில் இரண்டு முக்கியமானவை. ஒன்று நீச்சல் கற்றுக்கொள்ளுங்கள். மற்றொன்று  ஒரு வேளை உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் கடலின் பக்கமாகத் தலை வைத்துக் கூடப் படுக்காதீர்கள்.

Chowpatty Beach

``எல்லாமே வெளிநாட்டுலதான் இருக்கா? நம்ம ஊர்ல எதுவும் இல்லையா?" என்று கேட்பவர்களுக்கு பதில்தான் இந்தக் கடற்கரை. மும்பையின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. மற்ற ஊர்களில் ஏதேதோ காரணம் இருக்க இந்தக் கடற்கரை ஆபத்தானதாகக் கருதப்படுவதற்கு காரணம் சற்று வித்தியாசமானது. அதிகமாக மாசடைந்து இருப்பதுதான் அதற்குக் காரணமாக இருக்கிறது. உலகில் மிக மோசமாக மாசடைந்த கடற்கரைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. மும்பை நகரின் குப்பைகள் இங்கே வந்து சேர்வதுதான் மாசுபாட்டுக்கு முக்கிய காரணம். அவ்வப்போது சுத்தம் செய்யப்பட்டாலும் மீண்டும் குப்பை வந்து சேர்ந்து விடுகிறது. இங்கேயும் கடலில் இறங்கிக் குளிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று.Trending Articles

Sponsored