ஹலோ... உலகம் அழியப் போகிறது. என்னவெல்லாம் எடுத்துக் கொள்வீர்கள்?Sponsoredஅது 2012-ன் இறுதி. டிசம்பர் 31. இரவு ஒரு போன்கால் வந்தது. அவனை ஒரு பயணத்தில் சந்தித்தது. மீன் பிடித் தொழில் செய்பவன். மரக்காணம் பக்கத்தில் இருக்கும் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்தவன். 

``ண்ணா...இன்னிக்கு நைட்டு உலகம் அழிஞ்சிரும்ன்னு சொல்றாங்களே உண்மையா? நாங்க பசங்க எல்லாரும்...கடலுக்குள்ள தீவுக்குப் போறாம்னா. உலகத்தோட கடைசி இரவு... சந்தோஷமா, நிம்மதியா கடல்லேயே இருக்கலாம்ன்னு போறோம். நீங்களும் வாங்க..." அவன் அதை அவ்வளவு சீரியஸாகச் சொன்னான். 

நான் மெதுவாக சிரித்தபடி...

Sponsored


``அப்படி எல்லாம் உலகம் அழிஞ்சிடாது தம்பி..." என்றேன்.

Sponsored


``என்னமோ ண்ணா...நாங்க கடலுக்குப் போய் கடைசியா சாப்பாடெல்லாம் செஞ்சு கொண்டாடப் போறோம். ஒருவேளை உலகம் அழியாம இருந்தா சந்திப்போம்" என்று சொல்லிவிட்டு போன் வைத்தான். 

``உலகம் அழியப் போகிறது"... இந்த வாக்கியம் நிஜ வாழ்க்கையில் நடக்கும் என்றால் அது மிகப் பெரிய இழப்புகளையும், வலியையும் ஏற்படுத்தக் கூடியது. ஆனால், இந்த வழக்கமான பொதுச் சமூக வாழ்வு நமக்கு ஏற்படுத்தியிருக்கும் சலிப்போ அல்லது மொத்த வாழ்வின் பிரச்னைகளிலிருந்து தப்பிப் பிழைப்பதற்கான வழியோ அல்லது ஹாலிவுட் படங்களின் தாக்கமோ... ஏதோ ஒன்று அந்தக் கற்பனையை நமக்கு சுவாரஸ்யப்படுத்துகிறது. உலக அழிவை ஆங்கிலத்தில் `அபோகலைப்ஸ்' (Apocalypse) என்று சொல்வார்கள். 

ஒரு வேளை அபோகலைப்ஸ் நிகழ்ந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று ஒரு ஹாலிவுட் படத்தையே மண்டையில் ஓடவிட்டபடி இணையத்தில் அது குறித்து சில விஷயங்களைத் தேடிக் கொண்டிருந்தேன். அப்போது குறிப்பாக ஒரு விஷயம் சற்று வித்தியாசமாக கண்ணில்பட்டது. 


 

அபோகலிப்ஸ் நடக்கும்போது நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய பொருள்கள் என ஒரு பட்டியலைக் கொடுத்திருந்தது. உலகம் அழியப்போகிறது. அதற்கு நாம் தயாராக வேண்டும் என்ற கற்பனையோடு இதைப் படித்துப் பாருங்கள்.

அபோகலிப்ஸிற்குத் தேவையான பொருள்களைச் சேகரிக்க முதலில் நமக்கு ஒரு பேக் (Bag) வேண்டும். இதை ஆங்கிலத்தில் 'பக் அவுட் பேக்' (Bug Out Bag) என்று சொல்கிறார்கள். அழிவு நடந்து குறைந்தபட்சம் அடுத்த 72 மணி நேரத்துக்கு உயிர் வாழ்வதற்கான பொருள்களைக் கொண்டிருப்பதுதான் `பக் அவுட் பேக்'. அதன் கொள்ளளவு 75லி. 

தங்கத் தேவை டென்ட்:

நிலநடுக்கத்தினாலோ, சுனாமியினாலோ இன்னும் பல இயற்கை சீற்றங்களினாலோ அல்லது ஹாலிவுட் படங்களில் காட்டப்படுவது போல் ஜாம்பிக்களினாலோ (Zombies) இந்த உலகம் அழியலாம். முதலில், நாம் பாதுகாப்பாக தங்க ஒரு இடம் வேண்டும். அதற்கு அந்த பேக்கில் ஒரு டென்ட்டை நாம் எடுத்துச் செல்ல வேண்டும். அது இருவர் படுக்குமளவுக்கு இருக்க வேண்டும். கூடவே, ஸ்லீப்பிங் பேக் (Sleeping Bag) வைத்திருப்பது அவசியம். இது இரண்டும் இருந்தால், உலகில் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் தப்பித்துச் சென்று, பாதுகாப்பாகத் தங்கலாம். 

தண்ணீர் :

உலகம் அழிந்து, சூழலை உணர சில மணி நேரங்களாவது ஆகும். சமயங்களில் ஒரு நாள் கூட ஆகலாம். சூழலைப் புரிந்து நீர் இருக்கும் இடத்துக்கு ஆபத்துகளைக் கடந்து பத்திரமாக சென்றடைவது சற்று சிரமமாக இருக்கலாம். அதுவரை பிழைத்திருக்க தண்ணீர் அவசியம். தண்ணீர் பாட்டில் ஒன்றோடு சேர்த்து `ஹைட்ரேடிங் பேக்' (Hydrating Bag) அவசியம். நீண்ட தூரம் நடந்துப் போக இருக்கும் சூழலில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

உணவு:

உலகம் அழிந்துவிடும். எல்லா கடைகளும் சூறையாடப்பட்டிருக்கும். முடிந்தால் நாமும் அப்படி சென்று தின்பண்டங்களைச் சேகரித்து, பைகளில் நிரப்பிக் கொள்ளலாம். குறிப்பாக, பதப்படுத்தப்பட்ட உணவுகள்தான் அவசியம். மிட்டாய்களும், இனிப்புகளும் உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும். கூடவே, கையடக்க அடுப்புகளும், சில பாத்திரங்களையும் பையில் வைத்துக்கொள்ளலாம். முதல் சில நாள்களைக் கடந்துவிட்டால், ஏதோ ஓர் தீவிலோ, காட்டிலோ வாழ்கிறோம் என்றால் உணவைச் சேகரித்து சமைக்க அது உதவும். 

நெருப்பு:

ஆதி கால கற்கால மனிதனின் மகத்தான கண்டுபிடிப்பு நெருப்பு. ஆனால், அவனைப் போல் கற்களைக் கொண்டு நெருப்பு கொண்டு வரும் திறன் நமக்கு இருக்குமா என்று தெரியவில்லை. அதனால், முடிந்தால் ஒரு லைட்டர் கூடவே மெக்னீசியம் கட்டி (Magnesium Bar with Striker) போன்றவைகளை எடுத்துக்கொள்ளலாம். 

கூடவே, டார்ச் லைட்டுகள் வெளிச்சத்துக்கு அவசியம். உலகம் அழிகிறது என்றால், இன்று நமக்கு இருக்கும் எந்த நவீன வசதிகளும் நமக்கு இருக்குமா என்பது சந்தேகம்தான். எனவே, சோலார் பேட்டரிகள், சோலார் கொண்டு இயங்கும் விளக்குகள் போன்றவைகளை எடுத்துக் கொள்வது நல்லது. 

பாதுகாப்பு கத்திகள்:

கத்தி. மிகவும் அவசியமான ஒன்று. நம்மை தற்காத்துக் கொள்ளவும், இன்னும் பல உபயோகங்களுக்கும் கத்திகள் கண்டிப்பாகத் தேவைப்படும். கத்தியின் கைப்பிடிகள் சமயங்களில் கண்ணாடிகளை உடைக்க உதவலாம். நல்ல உறுதியான, தரமான கத்தியை எடுத்துக் கொள்வது அவசியம். 

கூடவே, `மல்ட்டி டூல் கிட்' (Multi Tool Kit) எடுத்துச் செல்வதும் அவசியம். சின்ன வயதில் நாம் கல் விட்டு விளையாடியிருப்போமே உண்டிகோல்...அதுவும் முக்கியமானதாக நமக்கு இருக்கும். 

வழிகாட்டும் ஆப்ஸ்:

உலகமே அழிந்தாலும் கண்டிப்பாக மொபைல் போன் குறிப்பிட்ட காலம் வரை அழியாமல் தான் இருக்கும். அதில் சில வழிகாட்டும் ஆப்களை வைத்திருப்பது நல்லது. குறிப்பாக, "Back Country Navigator Topo GPS" (இது ஆன்ட்ராய்ட் போன்களுக்கு), "GAIA GPS" (இது ஐபோன்களுக்கு) போன்ற இன்டெர்நெட் வசதியில்லாமல் இயங்கும் வழிகாட்டும் ஆப்களை உபயோகிக்கலாம். மொபைலை சார்ஜ் செய்ய, சோலாரில் இயங்கும் சில "External Chargers"யை பயன்படுத்தலாம். 

அதே சமயம், ஒரு காம்பஸையும், பேப்பர் மேப்பையும் வைத்துக்கொள்வதும் அவசியம். 

இன்னும், சில கயிறுகள், `டக்ட் டேப்" (Duct Tape), தண்ணீரை வடிகட்ட மெலிதான துணி ஒன்று, `ஃபர்ஸ்ட் எய்ட் கிட்" (First Aid Kit) போன்றவைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். 

அதேபோன்று கண்டிப்பாக செருப்புகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். நல்ல பூட் ஷூக்களை அணிய வேண்டும். வெயிலைத் தவிர வேறு எந்த சீதோஷ்ணத்துக்கும் காட்டன் பயன்படாது என்பதால் காட்டன் உடைகளைத் தவிர்ப்பது நல்லது. மாறாக,சிந்தெட்டிக் உடைகளை அணிவது நல்லது. 

"உலகம் எப்போதும் அழியலாம் என்ற நிலை. அது எப்போது என்பது நமக்குத் தெரியாது. அதனால் அவசரப்படாமல், பிடித்த வாழ்க்கையை வாழுங்கள்." 
                                                                                                              - தாமஸ் மெர்டன் ( அமெரிக்க கவிஞர்) 
 Trending Articles

Sponsored